பாபர் மசூதி இடிந்த கதை தெரியுமா? எங்கோ தொடங்கி எங்கோ சென்ற வரலாறு

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சரோஜ் சிங்
- பதவி, பிபிசி செய்தியாளர்
பாபர் மசூதி இடிப்பு தொடர்பான 28 ஆண்டு கால வழக்கில் வரும் 30ஆம் தேதி லக்னெளவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கவுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்டோர் குற்றம்சாட்டப்பட்டுள்ள அந்த வழக்கின் தீர்ப்பு, இந்திய தேசிய அரசியலில் முக்கியத்துவம் பெறும் நிலையில், வரலாற்றில் பதிவான மசூதி இடிப்பு சம்பவத்தின் நிகழ்வுகளை பல தொடர்களாக பிபிசி வழங்குகிறது. அதில் முதலாவது கட்டுரை இது.
1992ஆம் ஆண்டு, டிசம்பர் 6 ஆம் தேதி. விஸ்வ இந்து பரிஷத்தின் (வி.எச்.பி) ஆர்வலர்கள் மற்றும் பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதனுடன் இணைந்த அமைப்புகளின் சில தலைவர்கள் சர்ச்சைக்குரிய இடத்தில் ஒரு பேரணிக்கு ஏற்பாடு செய்தனர். இதில் ஒன்றரை லட்சம் தொண்டர்கள் (கர சேவகர்கள்) கலந்து கொண்டனர்.
பேரணி பின்னர் வன்முறையாக மாறியது மற்றும் கும்பல் அந்த பகுதியின் பாதுகாப்பை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து, 16ஆம் நூற்றாண்டின் பாபர் மசூதியை இடித்தது.
அப்போதைய குடியரசு தலைவர் சங்கர் தயாள் சர்மா, உத்தர பிரதேசத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்தி, சட்டசபையை கலைத்தார்.
மத்திய அரசு 1993இல் ஒரு அவசர சட்டத்தை பிறப்பித்து, சர்ச்சைக்குரிய நிலத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. கட்டுப்பாட்டில் உள்ள நிலம் 67.7 ஏக்கர் ஆகும்.
பின்னர், இந்த இடிப்பு சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது, இந்த வழக்கில், 68 பேர் தான் இதற்குக்காரணம் என்று கண்டறியப்பட்டது, இதில் பல பாஜக மற்றும் விஎச்பி தலைவர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. இந்த வழக்கு இன்னும் நடந்து கொண்டிருக்கிறது.
பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, கல்யாண் சிங், வினய் கட்டியார், உமா பாரதி மற்றும் பல தலைவர்கள் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பங்கு வகித்ததாக குற்றம்சாட்டப்பட்டிருப்பதை அடுத்து, சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தால் தற்போது விசாரிக்கப்படுகிறார்கள்.
ஆனால் ஒரே நாளில் பலர் அங்கு தற்செயலாக கூடினார்களா அல்லது 1990இல், எல்.கே. அத்வானி யாத்திரை நடத்தியபோது இது முடிவு செய்யப்பட்டதா? 1990ஆம் ஆண்டு நடந்த அத்வானியின் ரத யாத்திரைக்கு இதனுடன் தொடர்பு இருப்பதாக, சம்பவத்தை நேரில் கண்ட பல சாட்சிகள் கருதுகின்றனர்.
1949 ஆம் ஆண்டில் மசூதிக்குள் சிலை முதன்முதலில் நிறுவப்பட்டபோதே, அதன் இடிப்புக்கு அடித்தளம் அமைக்கப்பட்டுவிட்டதாக மேலும் சிலர் கூறுகின்றனர். .
பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு என்ன நிகழ்வுகள் காரணமாக அமைந்தன என்பதை இந்த அறிக்கையின் மூலம், புரிந்து கொள்ள முயற்சி செய்வோம்.
பாபர் மசூதி இடிப்பு கதையின் ஐந்து மிக முக்கியமான கட்டங்களை பார்க்கலாம்.
1949: மசூதிக்குள் சிலைகள்
1949 ஆம் ஆண்டு - இந்தியாவின் சுதந்திரத்திற்கும் அரசியலமைப்பை அமல்படுத்துவதற்கும் இடையிலான காலகட்டம். மத்தியில் பிரதமராக ஜவாஹர்லால் நேருவும், உத்தர பிரதேசத்தில் முதல்வராக கோவிந்த் வல்லப பந்தும் இருந்தனர்.
காங்கிரசுக்கும் சோஷியலிஸ்டுகளுக்கும் இடையிலான பிளவு காரணமாக அந்த ஆண்டு அயோத்தியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் இந்து சமூக துறவி பாபா ராகவ் தாஸ் வெற்றி பெற்றார். அவர் சட்டப்பேரவை உறுப்பினர் ஆனவுடன் இந்து சமூகம் ஊக்கமடைந்தது. பாபர் மசூதி வழக்கு அப்போதுவரை சட்ட வழியிலேயே நடைபெற்றுவந்தது. அந்த நேரத்தில் இந்த விஷயத்தின் அரசியல்மயமாக்கல் தொடங்கவில்லை.

பாபா ராகவ் தாஸின் வெற்றி கோயில் ஆதரவாளர்களை ஊக்குவித்தது. அவர்கள் கோயில் கட்ட அனுமதி கோரி உத்தரபிரதேச அரசுக்கு 1949 ஜூலையில் கடிதம் எழுதினர். 1949 ஜூலை 20 ஆம் தேதி, உத்தர பிரதேச அரசின் துணைச் செயலர் கெஹர் சிங், ஃபைசாபாத் துணை ஆணையர் கே.கே.நாயர், இந்த நிலம் குத்தகை நிலமா அல்லது நகராட்சி நிலமா என்று விரைந்து அறிக்கை அளிக்குமாறு கூறினார்.
நகர மாஜிஸ்ட்ரேட் குருதத் சிங் அக்டோபர் 10 ம் தேதி தனது அறிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்தார், அதில் மசூதியின் பக்கத்தில் ஒரு சிறிய கோயில் உள்ளது என்று கூறினார்.
இந்து சமூகம், இதை ராமரின் பிறப்பிடமாகக் கருதி, அழகான மற்றும் பிரமாண்டமான கோவிலைக் கட்ட விரும்புகிறது. இது குத்தகை நிலம் என்றும் கோயில் கட்ட அனுமதிப்பதில் எந்த தடையும் இல்லை என்றும் நகர மாஜிஸ்ட்ரேட் பரிந்துரைத்தார்.
இந்து சமயத்தினர் சிலர், நவம்பர் 24 முதல் மசூதிக்கு முன்னால் உள்ள கல்லறையை சுத்தம் செய்து அங்கு ஒரு யாகம் மற்றும் ராமாயண பாராயணத்தைத் தொடங்கினர், அதில் ஏராளமான மக்கள் கூடினர். பிரச்சனை அதிகரிப்பதைக் கண்டு ஒரு காவல்துறை சாவடி அமைக்கப்பட்டு, பாதுகாப்பிற்காக மாநில போலீஸ் ஆயுதப்படை அங்கு நிறுத்தப்பட்டது.
பிஏசி நிலைநிறுத்தப்பட்ட போதிலும், 1949 டிசம்பர் 22-23 இரவு, அபய் ராம்தாஸும் அவரது தோழர்களும் சுவர் ஏறி குதித்து, ராம்-ஜானகி மற்றும் லக்ஷ்மன் சிலைகளை மசூதிக்குள் வைத்து, ராமர் அங்கே தோன்றி தனது சொந்த இடத்திற்கு திரும்பிவிட்டதாக பிரசாரம் செய்தனர்.
நீதிமன்றத்தில் இதுவரையில் இருந்த இந்த விவகாரம், சிலை நிறுவப்பட்டதன் காரணமாக, சர்ச்சைக்குரிய விஷயமாக மாறியது. சாதுக்களால் அன்று எடுக்கப்பட்ட கோயில் கட்டுவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றும் நடவடிக்கை படிப்படியாக முன்னேறியது.

பட மூலாதாரம், Getty Images
அடுத்த வெள்ளிக்கிழமை, முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் காலை தொழுகைக்காக வந்தனர். ஆனால் நிர்வாகம் சில நாட்கள் ஒத்திவைப்பு கேட்டுக் கொண்டு அவர்களை திருப்பி அனுப்பியது.
அபய் ராமின் இந்த திட்டத்தை கலெக்டர் நய்யர் ரகசியமாக ஆதரித்ததாக கூறப்படுகிறது. அவர் காலையில் இந்த சந்தர்ப்பத்தில் வந்தபோதும், ஆக்கிரமிப்பை அகற்ற முயற்சிக்கவில்லை. ஆனால் இந்த ஆக்கிரமிப்பை பதிவில் கொண்டு வந்து, அதை உறுதிப்படுத்திவிட்டார்.
முழு சர்ச்சையும் உண்மையில் இங்கிருந்துதான் தொடங்கியது என்று பலர் நம்புகிறார்கள். இது குறித்து இந்தியப் பிரதமர் அறிந்ததும், அவர் முதல்வர் பந்திற்கு ஒரு தந்தி அனுப்பினார். "அயோத்தியில் நடந்த சம்பவத்தால் நான் மிகவும் அதிர்ச்சி கவலை அடைந்துள்ளேன். இந்த விஷயத்தில் நீங்கள் தனிப்பட்ட அக்கறை எடுப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். ஒரு ஆபத்தான முன் உதாரணம் அமைக்கப்பட்டுள்ளது, இதன் விளைவுகள் மோசமாக இருக்கும்,"என்று அதில் நேரு குறிப்பிட்டிருந்தார்.
இதன் பின்னர், உத்தரபிரதேச அரசின் தலைமைச் செயலர், ஃபைசாபாத் ஆணையரை லக்னெளவுக்கு அழைத்து, நிர்வாகம் ஏன் இந்த சம்பவத்தை நிறுத்தவில்லை, பின்னர் காலையில் சிலைகளை ஏன் அகற்றவில்லை என்று கேட்டு கண்டித்தார்.
இதைக் குறிப்பிட்டு மாவட்ட ஆட்சியர் நாயர், தலைமைச் செயலருக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதினார். இந்த பிரச்சனைக்கு பரவலான மக்கள் ஆதரவு இருப்பதாகவும், நிர்வாகத்தில் இருக்கும் சிலரால் அவர்களை தடுக்க முடியாது என்றும் கூறினார். இந்து தலைவர்கள் கைது செய்யப்பட்டிருந்தால் நிலைமை இன்னும் மோசமடைந்திருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
நாயர் ஜன்சங் கட்சியுடன் தொடர்புடையவர் என்று பின்னர் தெரியவந்தது. பின்பு அவர் மக்களவை தேர்தலில் ஜன்சங் சார்பாக போட்டியிட்டார்.
எண்பதுகளில் இருந்து பாபர் மசூதி இடிப்பு மற்றும் ராம ஜன்மபூமி இயக்கம் ஆகியவற்றைப் பற்றி விரிவாக எழுதும் பத்திரிகையாளர் நீர்ஜா சவுத்ரி, முழு இயக்கத்திலும் இதுவே மிக முக்கியமான நாள் என்று நம்புகிறார்.
இந்த சிலைகள் உடனடியாக அகற்றப்பட்டிருந்தால், சர்ச்சை இவ்வளவு காலம் இழுக்கப்பட்டிருக்காது என்று பின்னர் உயர்நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போதும் கூறப்பட்டது.
சர்ச்சை அதிகரிப்பதைக் கண்டு, இந்த முழு நிலமும் இணைக்கப்பட்டது.
1984: வி.எச்.பி வளர்ச்சி மற்றும் விரிவாக்கம்
1949 முதல் 1984 வரையிலான முப்பத்தைந்து ஆண்டுகள் ஒரு சில சம்பவங்களைத் தவிர அமைதியானவை, ஆனால் 1984 ஆம் ஆண்டில் ராமர் கோவில் இயக்கத்திற்கு அடித்தளம் அமைத்த பல சம்பவங்கள் ஒரே நேரத்தில் நடந்தன என்று " அயோத்தி சர்ச்சை: ஒரு பத்திரிகையாளரின் நாட்குறிப்பு" எழுதிய அரவிந்த்குமார் சிங் கூறுகிறார்.
வி.எச்.பி அறுபதுகளில் உருவாக்கப்பட்டிருந்தாலும், அதன் வளர்ச்சியும் விரிவாக்கமும் இந்த ஆண்டு மேலும் அதிகரித்தன. அதே ஆண்டில், வி.எச்.பி ஒரு மாநாட்டை நடத்தியது. அதில் ராம ஜன்மபூமியை விடுவிக்க வேண்டும் என்று உறுதிமொழி எடுக்கப்பட்டது.
வி.எச்.பி பெருமுயற்சி செய்தபோதிலும்கூட, 1984 வரை, பெரிய நிலையிலான சங்கராச்சாரியார் ஒருவர் கூட, ராம ஜன்ம பூமியின் இயக்கத்தில் சேரவில்லை. அஷோக் சிங்கல் இவர்களை தொடர்ந்து சந்தித்தபோதிலும், அது பலனளிக்கவில்லை.
பத்திரிகையாளர் அரவிந்த்குமார் சிங் கூறுகையில், முன்னதாக பாபர் மசூதி தகராறு நீதிமன்றங்களில் விவாதிக்கப்பட்டுவந்தது . உள்ளூர்வாசிகள் மட்டுமே இந்த வழக்கை நடத்தி வந்தனர். வி.எச்.பி வந்த பிறகு, வெளியில் இருந்து வந்தவர்கள் இந்த இயக்கத்தில் சேரத் தொடங்கினர்.
ராமர் ஜானகி ரத யாத்திரையும் அந்த ஆண்டு நடத்தப்பட்டது. ராம ஜன்ம பூமி முக்தி சமிதி, 1984 ஜூலை 27 ஆம் தேதி அமைக்கப்பட்டது. ஒரு மோட்டார் தேர் கட்டப்பட்டது. அதில் ராமர்-ஜானகியின் சிலைகள் சிறையில் அடைக்கப்பட்டது போல வைக்கப்பட்டன. செப்டம்பர் 25 ஆம் தேதி இந்த தேர், பிஹாரில் சீதாமாரியில் இருந்து புறப்பட்டது. அக்டோபர் 8 ஆம் தேதி அயோத்தி வந்ததும், தாங்கள் வழிபடும் தெய்வங்களின் இந்த அனுதாபகர நிலைமையைக்கண்ட இந்து சமூக மக்களிடையே, கோபமும் அனுதாபமும் ஏற்பட்டன. மசூதியின் பூட்டைத் திறந்து, கோவிலின் கட்டுமானத்திற்காக இந்துக்களுக்கு அந்த நிலம் வழங்க வேண்டும் என்பதே பிரதான கோரிக்கையாக இருந்தது. இதற்காக, சாதுக்கள் மற்றும் புனிதர்களின் ராம ஜன்ம பூமி அறக்கட்டளை உருவாக்கப்பட்டது.
இந்த யாத்திரை, அக்டோபர் 31 அன்று லக்னெள வழியாக டெல்லியை அடைந்தது. அதே நாளில் இந்திரா காந்தியின் படுகொலை நிகழ்ந்த காரணத்தால், நவம்பர் 2 ஆம் தேதி நடத்த உத்தேசிக்கப்பட்டிருந்த இந்து மாநாடு மற்றும் மேலதிக நிகழ்ச்சிகளையும் ஒத்திவைக்க வேண்டியதாயிற்று.
இதற்கிடையில், 1984 அக்டோபர் 8 அன்று அயோத்தியில் நிறுவப்பட்டது. பஜ்ரங் தளத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, "ஸ்ரீ ராம் ஜானகி ரத யாத்திரை" அயோத்தியில் இருந்து புறப்பட்ட நேரத்தில், அப்போதைய அரசு, பாதுகாப்பு வழங்க மறுத்துவிட்டது. அந்த நேரத்தில் விஸ்வ இந்து பரிஷத், புனிதர்களின் அழைப்பின் பேரில் அங்குள்ள இளைஞர்களுக்கு யாத்திரையை பாதுகாக்கும் பொறுப்பை வழங்கியது. ஸ்ரீராமின் பணிகளுக்கு அனுமன் எப்போதுமே முன் நிற்பார். அதேபோல் இன்றைய சகாப்தத்திலும், ஸ்ரீராமரின் பணிக்காக இந்த "பஜ்ரங் தளம்" குழுவாக செயல்படும் என்று கூறப்பட்டது. அப்படியே நடக்கவும் செய்தது.
1992 டிசம்பர் 6 அன்று பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, பஜ்ரங் தள செயல்பாட்டாளர்கள் 'முன்னணியில்' இருந்தனர்.

பட மூலாதாரம், Getty Images
அதன் தேசிய ஒருங்கிணைப்பாளராக வினய் கட்டியார் நியமிக்கப்பட்டார். வினய் கட்டியார் கான்பூரைச் சேர்ந்தவர் என்பதால், ராமர் கோயில் இயக்கத்தின் போது பஜ்ரங் தளம் கான்பூரில் மிகவும் செழித்தது. இளைஞர்கள் தொடர்ந்து அதனுடன் இணைந்திருந்தனர். சேவை, பாதுகாப்பு மற்றும் கலாசாரம் என்பது தான் பஜ்ரங் தளத்தின் அடிப்படை முழக்கம்.
ஸ்ரீ ராம ஜன்மபூமி இயக்கத்தின் பல்வேறு கட்டங்கள் அறிவிக்கப்பட்டன. பஜ்ரங் தள் தொடர்ந்து இவற்றை வெற்றிகரமாக நடத்தியது. அவை, ராமர் சிலை பூஜை, பாதுகை சரண பூஜை, ராம ஜோதி யாத்திரை, கரசேவை(தொண்டு சேவை) , அடிக்கல் நாட்டல் போன்றவை. 1990 ஆம் ஆண்டின் கரசேவை அல்லது 1992 இன் கரசேவை எதுவாக இருந்தாலும், பஜ்ரங் தளம், இதில் தீவிரமாக பங்கேற்றது.
1987 வாக்கில் , வி.எச்.பி , நாட்டில் ராம ஜன்மபூமி சிலைக் குழுக்களை அமைக்கத் தொடங்கியது. பின்னர் உத்தரபிரதேச அரசு அதைத் தடை செய்தது.
அதே ஆண்டு, 1984 அக்டோபர் 14 அன்று, சாதுக்கள் குழு, முதல்வரைச் சந்தித்து, கோவில் பூட்டைத் திறந்து கோயில் கட்ட அனுமதி கோரியது. அந்த நேரத்தில் உத்தர பிரதேச முதல்வர் நாராயண் தத் திவாரி. அசோக் சிங்கல், மஹந்த் அவைத்யநாத், ராம் சந்திர தாஸ் பரம் ஹன்ஸ், கோவிலைக் கோரிய சாதுக்கள் குழுவில் இருந்தனர்.
1984 முதல் 1986 வரை வி.எச்.பியின் முன்முயற்சி காரணமாக, பிற அமைப்புகளும் கோவில் இயக்கத்தில் இணைந்தன. அவற்றில் பஜ்ரங் தளம், சாதுக்களின் அமைப்பு, அகில இந்திய சந்த் சமிதி முக்கியமானவை. இதன் காரணமாக, இந்த இயக்கம் நல்ல பலனை பெற்றது. சொற்பொழிவுகள் மூலம் இது பற்றி தெரிந்துகொண்ட மக்களும், இதில் இணையத்தொடங்கினர். எனவே இந்த இயக்கம் பற்றிய விவரங்களை வீடு வீடாக பரப்புவதில், இந்த கட்டம் மிகவும் முக்கியமானது. கும்பமேளா மற்றும் பிற மத சடங்குகள் மூலம் சந்த் சமாஜ் இந்த வேலையை சிறப்பாக செய்தது.
1980இல் பாஜக உருவான பின்னர், 1984 ல் நடந்த முதல் பொதுத் தேர்தலில் ,கட்சி போட்டியிட்டது. அந்த நேரத்தில், பாஜக இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. பின்னர் பாஜக, இந்த இயக்கத்தில் இணைந்தது.
1986இல் கோவிலின் பூட்டு திறக்கப்பட்டது. இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட பின்னர் நடைபெற்ற பொதுத் தேர்தலுக்குப்பிறகு ராஜிவ் காந்தி பிரதமரானார்.
1986 பிப்ரவரி 1 ஆம் தேதி, மாவட்ட நீதிபதி கே.எம். பாண்டே, ஒரு நாள் முன்னதாக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்தபோது, 37 ஆண்டுகளாக மூடியிருந்த பாபர் மசூதியின் கதவை திறக்க உத்தரவிட்டார்.
இந்த மனு ஃபைசாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞர் உமேஷ் சந்திர பாண்டே என்பவரால் தாக்கல் செய்யப்பட்டது. அங்கு நிலுவையில் உள்ள வழக்குகளுடன் அவருக்கு எந்த தொடர்பும் இல்லை. மாவட்ட ஆட்சியர் மற்றும் போலீஸ் மேலதிகாரி ஆகியோர் மாவட்ட நீதிபதி நீதிமன்றத்தில் ஆஜராகி, பூட்டைத் திறப்பதால் அமைதி மற்றும் ஒழுங்கைப் பேணுவதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது என்று கூறினார்கள். இந்த அறிக்கையின் அடிப்படையில், மாவட்ட நீதிபதி கே.எம். பாண்டே பூட்டை திறக்க உத்தரவிட்டார்.
இதன் பின்னணியில் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தியின் கை இருப்பதாக பல இடங்களில் செய்திகள் வந்தன. ஆனால் இதற்கு வலுவான சான்றுகள் எதுவும் இல்லை.
எண்பதுகளில் இருந்து இந்த இயக்கங்களை பற்றி விரிவாக எழுதிவரும் பத்திரிகையாளர் நீராஜா சவுத்ரி, ஷா பானோ வழக்குக்கும் கோயில் பூட்டு நிகழ்வுகளுக்கும் தொடர்பு இருப்பதாக நம்புகிறார்.
கோயிலில் பூட்டு திறக்கப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள், அது குறித்த செய்தி தூர்தர்ஷனிலும் ஒளிபரப்பப்பட்டது. இதன் பின்னணியில் ஏதோ ஆதரவு இருப்பதான தோற்றத்தை இது அளித்தது. இதற்குப் பிறகுதான், அயோத்தியில் உள்ள கோவில்-மசூதி தகராறு குறித்து இந்தியாவும் உலகமும் முழுமையாக அறிந்தன. இதற்கு பதிலளிக்கும் விதமாக, முஸ்லிம் சமூகம், பாபர் மசூதி பாதுகாப்பிற்காக, முகமது ஆஸம் கான் மற்றும் ஜஃப்ரியாப் ஜிலானி ஆகியோரின் தலைமையில், பாபர் மசூதி போராட்டக் குழுவை ( பாப்ரி மஸ்ஜித் சங்கர்ஷ் சமிதி) உருவாக்கி, எதிர் இயக்கத்தைத் தொடங்கியது.
இந்த ஆண்டு பிப்ரவரியில் பாபர் மசூதி செயல் குழுவும் அமைக்கப்பட்டது. அதாவது, பூட்டு திறப்பதற்கு முன்பு, முஸ்லிம் அரசியல், கோயிலைச் சுற்றி அவ்வளவு ஆக்ரோஷமாக இருக்கவில்லை. இந்த சம்பவத்திற்குப் பிறகு, அந்த அமைதியான அரசியல் கூட சூடானது.
இதற்கிடையில், விவாகரத்து செய்யப்பட்ட முஸ்லிம் பெண் ஷா பானோவுக்கு ஜீவனாம்சம் வழங்க உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நாடாளுமன்றத்தில் சட்டத்தை இயற்றி ரத்து செய்ய வேண்டும் என்று முஸ்லிம் தனிநபர் சட்ட வாரிய தலைவர்கள் ராஜிவ் காந்திக்கு நெருக்குதல் கொடுத்தனர். இந்த நீதிமன்ற உத்தரவை மாற்றியமைக்க ராஜீவ் காந்தி அரசு, ஒரு சட்டத்தை நிறைவேற்றியது. இந்த முடிவு கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

பட மூலாதாரம், PrAVEEN JAIN
இருப்பினும், இந்த இரண்டு வழக்குகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்று முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி வஜாஹத் அபிபுல்லா நினைக்கவில்லை.
"ராஜிவ் காந்தியின் வேண்டுகோளின் பேரில் பாபர் மசூதி பூட்டு திறக்கப்பட்டதை, ஷா பானோ வழக்கிற்காக பயன்படுத்துவது ஒரு அப்பட்டமான பொய். உண்மை என்னவென்றால், 1986 பிப்ரவரி 1 தேதி அயோத்தியில் என்ன நடந்தது என்பது குறித்து முன்னாள் பிரதமருக்கு எதுவுமே தெரியாது. அருண் நேரு அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கு இதுவே காரணம்," என்று பிபிசியிடம் பேசிய அவர் தெரிவித்தார்.
ராஜிவ் காந்தியின் பிரதமர் அலுவலகத்தில் (பி.எம்.ஓ) அப்போதைய இணை செயலராகவும், டூன் பள்ளியில் அவரது ஜூனியராகவும் வஜாஹத் அபிபுல்லா இருந்தார். சமீபத்தில், அவர் தனது 'ராஜீவ் காந்தியுடன் எனது ஆண்டுகள், வெற்றி மற்றும் சோகம்' (My years with Rajiv Gandhi, triumph and tragedy) புத்தகத்திலும் இதைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு, இரு தரப்பிலிருந்தும் நல்லிணக்க உடன்படிக்கை பற்றிய பேச்சுவார்த்தைகளும் இந்த காலகட்டத்தில் தொடங்கின. இந்துக்கள் மசூதியை விட்டு வெளியேறி, ராமர் மேடைக்கு முன்னால் காலியாக உள்ள நிலத்தில் கோயில் கட்டச்செய்வதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் சங் பரிவார், இவற்றை புறந்தள்ளியது.
இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு இடையே நாடு முழுவதும் இன பிரித்தாளல் அரசியல் இயங்குகிறது. கோவில் இயக்கத்துடன் பாஜக வெளிப்படையாக இணைந்தது.
1989: மக்களவைத் தேர்தல் மற்றும் கோவில் பிரச்சனை
1989 நவம்பரில் மக்களவைத் தேர்தல் நடைபெற இருந்தது. அரசியல் கட்சிகள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தேர்தலுக்கு தயாராகத்தொடங்கின. வெவ்வேறு கட்சிகள் மற்றும் சாதுக்களின் அமைப்புகள் ஆற்றிய உரைகள் காரணமாக, இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்தது. வெறுப்பு மற்றும் விரோத சூழல் நிலவ ஆரம்பித்தது. ஆனால் நல்ல விஷயம் என்னவென்றால், அயோத்தி - ஃபைசாபாத் பகுதியில், கோயில்-மசூதி பிரச்சனையில் இரு சமூகங்களுக்கிடையில் அதிக மோதல்கள் இருக்கவில்லை. ஒரு வருடம் முன்பு, சர்ச்சைக்குரிய இடத்தில் தொழுகை நடத்தப்போவதாக பாபர் மசூதி செயல் குழு அறிவித்தது. ஆனால் அரசின் தலையீட்டிற்குப் பிறகு அதன் முடிவை திரும்ப பெற்றுக்கொண்டது.
1989ல் அலகாபாத்தில் கும்பமேளாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சாதுக்கள், புனிதர்கள் ஏராளமானோர் அங்கு கூடியிருந்தனர். வி.எச்.பி , ஒரு மாநாட்டிற்கு ஏற்பாடு செய்தது. 1989 நவம்பர் 9 ஆம் தேதி, ராமர் ஆலய அடிக்கல் நாட்டலுக்கான முதல் தேதி முடிவு செய்யப்பட்டது.
இதன் பின்னர், மே மாதத்தில், 11 மாகாணங்களைச் சேர்ந்த சாதுக்கள் ஹரித்வாரில் சந்தித்து கோவில் கட்டுவதற்கு நிதி திரட்டுவது பற்றி பேசினார்கள்.
1989 ஆம் ஆண்டு ஜூன் 11 ஆம் தேதி, பாரதிய ஜனதா கட்சி , பாலம்பூர் செயற்குழு கூட்டத்தில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அதன்படி, இந்த விவகாரத்தை நீதிமன்றம் தீர்மானிக்க முடியாது என்றும் அரசு ஒப்புதல் அல்லது நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றி, ராம ஜன்ம பூமியை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டது.
இதன் பின்னர், இது ஒரு தேசிய அரசியல் பிரச்சனையாக மாறியுள்ளது என்றும் இது அடுத்த மக்களவைத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் பொதுமக்கள் உணர்ந்தனர்.

பட மூலாதாரம், Pti
உத்தர பிரதேசின் காங்கிரஸ் அரசு , உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தது. ஃபைசாபாத் இல் நடக்கும் நான்கு வழக்குகளையும் தன்னிடம் கொண்டுவந்து விரைவில் தீர்ப்பை வழங்குமாறு, அது உயர்நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுத்தது. 1989 ஜூலை 10 அன்று உயர் நீதிமன்றம் இதற்கான உத்தரவை பிறப்பித்தது. தீர்ப்பு வரும்வரை, மசூதி மற்றும் தாவாவுக்கு உட்பட்ட நிலத்தின் தற்போதைய நிலையில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்று ஆகஸ்ட் 14 ம் தேதி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்த சந்தர்ப்பத்தில், அளவிடலின்போது தாவாவுக்கு உட்பட்ட பகுதிக்கு வெளியே இருக்கும்படி கூறி நவம்பர் 9 ம் தேதி உத்தரபிரதேச அரசு அடிக்கல் நாட்ட அனுமதி அளித்தது.
1989 ஆம் ஆண்டில், காங்கிரஸை விட்டு வெளியேறிய வி.பி.சிங் தலைமையில் ஜனதா தளம் , அடுத்த அரசை மத்தியில் அமைத்தது. காங்கிரஸ் தேர்தலில் தோல்வியடைந்தது. பாஜக மற்றும் இடதுசாரி கட்சிகளின் ஆதரவுடன் வி.பி. சிங் பிரதமரானார்.
வி.பி.சிங் மற்றும் ஜனதா தளத்தின் போக்கு முஸ்லிம்களுக்கு ஆதரவாக இருந்தது தெளிவாக காணப்பட்டது. அந்த நேரத்தில், சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் யாதவ் , உத்தரபிரதேசத்தின் முதல்வராக இருந்தார். இதற்கு முன்னர் விஸ்வ இந்து பரிஷத்தின் அயோத்தி இயக்கத்தை எதிர்த்தவர் அவர் .
1989இல், அயோத்தி பிரச்சினையை தீர்க்க உதவுவதாக உறுதியளித்த ஒரு அரசை பாஜக ஆதரித்தது. ஆனால் பிரதமராக இருந்த வி.பி.சிங், மதுரா பேரணியில் பாஜகவுடன் மேடையை பகிர்ந்து கொள்ள மறுத்துவிட்டார். இதைக்கொண்டு பார்க்கும்போது இந்த ஆண்டும் , பாபர் மசூதி இடிப்பு கதையில் ஒரு முக்கியமான கட்டமாக கருதப்படுகிறது.
1990: லால் கிருஷ்ண அத்வானியின் ரத யாத்திரை
இந்த நேரத்திற்குள், ராமர் கோவில் இயக்கத்தை பாஜக பகிரங்கமாக தன் வசம் எடுத்துக் கொண்டது. அத்வானி அப்போது பாஜக தலைவராக இருந்தார். வி.பி. சிங் நாட்டின் பிரதமராக இருந்தார். 1990 பிப்ரவரியில் அவர் சாதுக்கள் குழுவை அமைத்து 4 மாதங்களில் பிரச்சினையை தீர்க்கச் சொன்னார். ஆனால் இதில் கால தாமதம் ஏற்பட்டதால் கர் சேவை குழுக்களின் உருவாக்கம் தொடங்கியது மற்றும் கோயிலின் கல் செதுக்குதல் 1990 ஆகஸ்ட் முதல் அயோத்தியில் தொடங்கியது. இது இன்று வரை தொடர்கிறது.
1990 ஆம் ஆண்டில், ராம் சந்திர தாஸ் பரம் ஹான்ஸ் 40 ஆண்டுகளுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்ட வழக்கை திரும்பப் பெற்றார். நீதிமன்றத்திடமிருந்து நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை என்று காரணம் கூறப்பட்டது. அதற்குள் அவர் ராம ஜன்மபூமி அறக்கட்டளையின் தலைவரானார்.
அத்வானியின் ரத யாத்திரை தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னதாக 1990 செப்டெம்பரில் ஒரு பெரிய சம்பவம் நடந்தது. ஆகஸ்டில், பிரதமர் வி.பி. சிங், இதர பின்தங்கிய வகுப்பினருக்கு இடஒதுக்கீட்டை பரிந்துரைத்த மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்செய்வதாக அறிவித்தார். பத்து ஆண்டுகளாக தூசுபிடித்து வந்த பிபி மண்டலின் அறிக்கை, அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வி.பி. சிங்கின் தேசிய முன்னணி அரசுக்கு, இரண்டு பக்கங்களில் இருந்து ஆதரவு கிடைத்துவந்தது. ஒருபுறம், இடது சாரி கட்சிகள் மறுபுறம் பாரதிய ஜனதா கட்சி. இரண்டுமே அரசிற்கு வெளியில் இருந்து ஆதரவளித்தன.
மண்டல் கமிஷனின் பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கான வி.பி.சிங்கின் அறிவிப்பு , பாஜகவை குழப்பத்தில் ஆழ்த்தியது, ராஜிவ் காந்தி, மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகளை கடுமையாக எதிர்த்தார். வி.பி. சிங்கை ஜின்னாவுடன் அவர் ஒப்பிட்டார். ஆனால் ராஜிவ் காந்தியைப் போல பாஜக உடனடியாக பதிலளிக்கவில்லை.
மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகளின் நீண்டகால அரசியல் தாக்கத்தை குறைப்பதற்காக பாஜக , இந்து ஒற்றுமை என்ற முழக்கத்துடன் ராமர் கோவில் இயக்கத்தை தீவிரப்படுத்தியது. 1990 ஆம் ஆண்டின் கடைசி நான்கு மாதங்களில், மண்டல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கோவில் கிளர்ச்சியால் முழு நாட்டின் அரசியல் சூழலும் சூடானது.
1990 ,செப்டம்பர் 25 அன்று, அத்வானி, நாடு முழுவதும் ஒரு சூழ்நிலையை உருவாக்க சோம்நாத் கோயிலிலிருந்து ஒரு ரத யாத்திரை புறப்பட்டார். ரத யாத்திரை அக்டோபர் 30 க்குள் அயோத்தியை அடைய இருந்தது. மக்களிடமிருந்து இதுபோன்ற வரவேற்பு கிடைக்கும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்று அவரே குறிப்பிட்டுள்ளார். அந்த நேரத்தில் மக்கள் வந்து அவரது தேரை வணங்கினர். கால்களைத் தொட்டனர். இதை அவரே எதிர்பார்க்கவில்லை.

பட மூலாதாரம், Getty Images
எல்.கே. அத்வானியின் ரத யாத்திரை சோம்நாத் வழியாக பிகாரில் நுழைந்தபோது, அவர் தன்பாத், ராஞ்சி, ஹசாரிபாக், நவாடா வழியாக பாட்னாவை அடைந்தார். அவர் ஆற்றிய உரையை கேட்க பாட்னாவின் காந்தி மைதானத்தில் சுமார் மூன்று லட்சம் பேர் திரண்டனர். மக்கள் ஜெய் ஸ்ரீ ராம் என்று முழக்கமிட்டு, ராமர் மீது சத்தியம் எடுத்துக்கொண்டனர். அதே இடத்தில் கோவில் கட்டுவோம் என்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த கூட்டத்திற்குப் பிறகு, அத்வானி சமஸ்திபூரை அடைந்தார். அங்குள்ள மக்களிடையே உரையாற்றினார். ஜெய் ஸ்ரீ ராமின் கோஷங்கள் அங்கேயும் எழுப்பப்பட்டன. அவருடன் சமஸ்திபூரில் சுமார் 50 ஆயிரம் பேர் கொண்ட கூட்டம் இருந்தது.
இவ்வளவு பெரிய மக்கள் ஆதரவு இருந்தபோதிலும், அத்வானியின் ரத யாத்திரையை நிறுத்தி அவரை கைது செய்ய பிகார் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் திட்டமிட்டார்.
வன்முறை ஏதும் இல்லாமல் அவரை கைது செய்வது ஒரு பெரிய சவாலாக இருந்தது. முதல்வர் லாலு யாதவின் உத்தரவின் பேரில், அத்வானி பிகாரில் அக்டோபர் 23 அன்று கைது செய்யப்பட்டு அவரது ரத யாத்திரை நிறுத்தப்பட்டது.
கைது செய்யப்படுவதற்கு சற்று முன்னர், அத்வானி ஒரு சாதாரண காகிதத்தில், குடியரசுத்தலைவருக்கு ஒரு கடிதம் எழுதினார். அவரது கட்சி, விஸ்வநாத் பிரதாப் சிங்கின் அரசுக்கு அளிக்கும் ஆதரவை திரும்ப பெறுவதாக அதில் அவர் எழுதினார். கடிதத்தை பாட்னாவுக்கு அனுப்புமாறு தன்னை கைது செய்ய வந்த அதிகாரிகளிடம் அத்வானி கேட்டுக்கொண்டார். அந்த கடிதத்தை பாட்னாவுக்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதன் பிறகு வி.பி.சிங் அரசு விழுந்தது.
மறுபுறம், முலாயம் அரசின் அனைத்து கட்டுப்பாடுகளையும் மீறி, லட்சக்கணக்கான கர் சேவகர்கள் அக்டோபர் 30 அன்று அயோத்தியை அடைந்தனர். தடியடி மற்றும் துப்பாக்கிச்சூட்டிற்கு இடையே சில கர்சேவகர்கள், மசூதியின் குவிமாடதில் ஏறினர். ஆனால் இறுதியில் காவல்துறையினரின் கை ஓங்கியது. நிர்வாகம் , கர் சேவகர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் பதினாறு பேர் கொல்லப்பட்டனர். ஆனால் நூற்றுக்கணக்கான கர் சேவகர்கள் இறந்து, சரயு நதி சிவப்பாக மாறியதாக, இந்தி செய்தித்தாளின் சிறப்பு பதிப்பு கூறியது.

பட மூலாதாரம், Praveen Jain
முலாயம் சிங், முல்லா முலாயம் என்று அழைக்கப்பட்டார். அவர் இந்துக்களிடையே பிரபலத்தை இழந்தார். அடுத்த சட்டமன்றத் தேர்தலில் அவர் மோசமாக தோற்கடிக்கப்பட்டார். கோபமடைந்த பாஜக மத்திய அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்றது, அரசு சரிந்தது.
பின்னர் 1992 டிசம்பர் 6 ஆம் தேதி என்ன நடந்தது என்பது அனைவரும் அறிந்ததே. அந்த நேரத்தில் மாநிலத்தில் கல்யாண் சிங் முதல்வராகவும், நரசிம்மராவ் மத்தியில் பிரதமராகவும் இருந்தார்.
நேருவின் ஆட்சிக் காலத்தில் சிலை நிறுவப்பட்டது அல்லது ராஜீவ் காந்தியின் காலத்தில் பூட்டு திறக்கப்பட்டது அல்லது நரசிம்மராவ் காலத்தில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது ஆகிய மூன்றுமே காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்தன என்று மூத்த பத்திரிகையாளர் நீர்ஜா சவுத்ரி கூறுகிறார் காங்கிரஸின் தவறுகள் இவை . இந்த மூன்றுக்கும் காங்கிரஸ் தான் காரணம் என்று அவர் கூறுகிறார்.
அவரைப் பொருத்தவரை, ஆர்.எஸ்.எஸ், விஸ்வ இந்து பரிஷத் மற்றும் பாஜக ஆகியோரிடமிருந்து இயக்கத்திற்கு கிடைத்த ஆதரவு இரண்டாவது காரணம். இதன் காரணமாகவே இந்த இயக்கம் பல ஆண்டுகளாக நடைபெற்றது மற்றும் மசூதி இடிக்கப்பட்டது. முலாயம் சிங் யாதவ் மற்றும் வி.பி.சிங் ஆகியோரின் சகாப்தத்தில் 1990 ல் நடந்ததை, இடிப்பதைத் தடுக்கும் முயற்சியாக நீர்ஜா கருதுகிறார். அவரது கருத்துபடி, மாநில நிர்வாகத்தின் கண்டிப்பு காரணமாகவே, அங்கு பெரிய சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை. 1992 ன் சம்பவம், 1990 ல் நடந்திருக்கக்கூடும். ஆனால் மத்திய மற்றும் மாநில அரசுகள் காரணமாகவே இது நிகழவில்லை என்று அவர் கூறுகிறார். மூத்த பத்திரிகையாளர் அரவிந்த் சிங்கும் நீரஜாவின் கருத்தை ஏற்றுக்கொள்கிறார்.
( குறிப்பு: இந்த அறிக்கை, நான்கு மூத்த பத்திரிக்கையாளர்களின் உரையாடலின் அடிப்படையில் அமைந்தது. நீரஜா செளத்ரி, அரவிந்த் குமார் சிங், சஞ்சய் கான் மற்றும் ராம் தத் திரிபாதி )
பிற செய்திகள்:
- நீட் விவகாரம் தொடர்பாக சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை இல்லை - உயர் நீதிமன்றம்
- இலங்கையில் ஒரு கிலோ மஞ்சள் ரூ.4500 வரை விற்கப்படுவதற்கான காரணம் என்ன?
- இந்தியாவில் கொரோனா வைரஸ் நாம் நினைப்பதை விட பெரிய பிரச்சனையாக உருவெடுக்கிறதா?
- “வணக்கம். நான் இறந்தவன் பேசுகிறேன்” – இறுதிச் சடங்குகளில் வருமானம் ஈட்டும் நபர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












