கொரோனா வைரஸ் முடக்கநிலைக்கு பிறகு இந்திய பொருளாதாரம் சரியுமா? மீளுமா?

indian economy

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்திய அரசின் பொருளாதார உதவித் தொகுப்பு குறித்த விவரங்களை மே மாதம் வெளியிட்டார்.

இரண்டு மாத ஊரடங்கிற்கு பிறகு, பல தொழில்களை மீண்டும் திறக்க இந்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால், லட்சக்கணக்கான சில்லறை விற்பனையாளர்கள், சிறு தொழில் நடத்துபவர்களுக்கு நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.

இது குறித்து விரிவாக எழுதுகிறார் பிபிசி செய்தியாளர் நிகில் இனாம்தார்.

கொரோனா வைரஸ் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கால் பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அதில் இருந்து மீள்வது ஒரு நீண்டகால போராட்டமாக இருக்கப்போகிறது.

"கடைத்தெருக்களில் ஸ்மார்ட்ஃபோன் விற்கும் கடைகளில் குறைந்தது 20 சதவீத கடைகள் மொத்தமாக மூடப்படலாம்" என்கிறார் இந்திய மொபைல் சில்லறை விற்பானையாளர் அமைப்பின் தலைவர் அரவிந்தர் குரானா.

இதற்கு பல காரணங்கள் உள்ளன. ஒன்று கடை உரிமையாளர்கள் அவர்கள் கடை வைத்திருந்த நகரங்களை காலி செய்துவிட்டு தங்கள் ஊர்களுக்கு போய் இன்னும் திரும்பாமல் இருக்கலாம். மற்றொரு பக்கம் வேலையை விட்டு நீக்குவது அதிகமாகி வருகிறது. மேலும் கடன் வழங்க வங்கிகளும் தயங்குவதால், உயர் ரக ஸ்மார்ட் போன்களுக்கான தேவையும் குறைவாக இருக்கிறது.

மே மாதத்தில் என்ன நிலை?

அத்தியாவசிய பொருட்கள் அல்லாத துணிமணிகள், மின்னணு சாதனங்கள், மரச்சாமான் பொருட்கள் போன்றவற்றின் விற்பனை மே மாதத்தில் 80 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக இந்திய சில்லறை விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

மளிகை பொருட்கள் மற்றும் மருந்து பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விற்பனையும் 40 சதவீதத்துக்கு மேல் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் இந்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

கடந்த வாரத்தில் தொடர்ந்து பல நாட்களாக கொரோனா தொற்று எண்ணிக்கையில் புதிய உச்சத்தை அடைந்த இந்தியாவில் இதுவரை 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், எதிர்காலம் குறித்து தெளிவாக எதுவும் புலப்படவில்லை.

விற்பனை இனி அதிகரிக்குமா?

ஆனால், தொழில் நிறுவனங்கள் பலவும் மீண்டும் துவங்கவுள்ள நிலையில், இவற்றுக்கான செயல்திட்டம் மற்றும் நெறிமுறைகள் குறித்து அரசு இன்னமும் அறிவிக்கவில்லை.

பெரும் அங்காடிகள், மால்கள் போன்றவை அடுத்த வாரத்தில் திறக்கவுள்ள நிலையில் அவற்றிலும் விற்பனை வீழ்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து தொழில்களும் ஊரடங்கின்போது முடங்கியிருக்கவில்லை. விவசாய பொருட்கள், உணவு பொருட்கள் மற்றும் உடல்நலன் தொடர்பான பொருட்கள் உள்ளிட்ட பல தொழில் நிறுவனங்களும் செயல்பாட்டில் இருந்தன. மே மாத ஆரம்பத்தில் மேலும் சில நிறுவனங்கள் இயங்க அனுமதிக்கப்பட்டது.

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

ஆனால், பொருளின் தேவை குறைந்ததாலும், பணியாளர்கள் இல்லாதது, ஏற்றுமதி வீழ்ச்சி, கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்ட சமூக இடைவெளி போன்ற கட்டுப்பாடுகள் உள்ளிட்டவை தொழில் நிறுவனங்களை சிக்கலில் ஆழ்த்தியுள்ளன.

அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், அரசிடம் இருந்து இது தொடர்பாக போதுமான விளக்கம் இல்லை என உலகின் பெரிய வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்தார்.

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் தலைமை இயக்குநரான ராஜீவ் பஜாஜ் கூறுகையில், ''முடக்கநிலையில் இருந்து சாதாரண இயல்பு நிலைக்கு செல்லும் விதத்தில் சுமூக சூழல் எதையும் நான் காணவில்லை'' என்று தெரிவித்துள்ளார்.

முடக்கநிலை அறிவிப்பை தீவிரமாக எதிர்ப்பவரான ராஜீவ் பஜாஜ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியிடம் பேசியபோது, ''சீரமைக்கப்பட்ட அணுகுமுறை என்பதே தேவை. மீண்டும் தொழில்களை துவக்குவது, பழைய செயல்பாட்டுக்கு வருவது ஆகியவை மிகவும் கடினமான சவால் அளிக்கும் செயல்'' என்று கூறினார்.

பஞ்சாப் மாநிலம், லூதியானா நகரில் ஜவுளி ஆலை ஒன்றின் உரிமையாளரான ஷீட்டிஜ் காய் கூறுகையில்,'' உற்பத்தி 50 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், பொருளின் தேவை சந்தையில் மிகவும் பலவீனமாக உள்ளது''என்றார்.

Banner image reading 'more about coronavirus'
Banner

தனது தொழிலை மீண்டும் வழக்கமான செயல்பாட்டுக்கு தற்போதைய சூழலில் கொண்டு வரமுடியவில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.

''கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் நான் அனுப்பிய பொருட்களுக்கு இன்னமும் பணம் வரவில்லை. வாங்கியவர்களிடம் கேட்கவும் முடியாது, அவர்களுக்கு எந்த விற்பனையும் நடந்திருக்காது என்று எனக்கு தெரியும்'' என்றார் அவர்.

ஆனால், அதேவேளையில் கிருமி நாசினிகள், தொழிலாளர்களுக்கு முகக்கவசம், கையுறை என பல வகையாக செலவுகள் மட்டும் தொடர்கிறது.

மேலும் முடக்கநிலையால் நாட்டின் பல பெரு நகரங்களில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு புலம்பெயர் தொழிலாளர்கள் பலர் சென்றுவிட்ட நிலையில், பணியாளர்களுக்கும் சில நிறுவனங்களில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில், நாட்டின் மிகப்பெரிய கட்டுமான நிறுவனங்களில் ஒன்றான ரஹேஜா பில்டர்ஸ் நிறுவனம் சார்பாக நடக்கும் ஒரு கட்டுமான பணியில் 40 சதவீதம் குறைவான தொழிலாளர்களே பணியில் இருந்தனர்.

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

''ஆனால் டெல்லி மற்றும் குர்கானில் உள்ள மற்ற பல கட்டுமான நிறுவன பணிகளை விட எவ்வளவோ பரவாயில்லை'' என்றார் இந்நிறுவனத்தின் செயல் இயக்குநரான நயன் ரஹேஜா.

ஆனால், இந்த சூழல் தங்களின் பணிகளை, திட்டங்களை தாமதப்படுத்தக்கூடும் என்றார் அவர்.

இருண்ட எதிர்காலம்

ஏற்கனவே பொருளாதார மந்தநிலையை இந்தியா சந்தித்து வரும் நிலையில், இவ்வாறான சூழல்கள் விரைவான பொருளாதார முன்னேற்றத்துக்கு வழிவகுக்க வாய்ப்பில்லை என்ற எண்ணத்தையே ஏற்படுத்தும்.

கடந்த வாரத்தில் அரசு வெளியிட்ட தரவின்படி, 2019-20 நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 4.2 என்ற மிக மெதுவான வளர்ச்சியையே பெற்றதாக கூறப்பட்டது.

கடந்த ஒரு தசாப்தத்தில் இதுவே மிக குறைந்த வளர்ச்சி சதவீதம் ஆகும்.

இந்த ஆண்டின் முதல் 3 மாதங்களில் (கடைசி வாரம் முடக்கநிலை காலகட்டத்தில் உள்ளடங்கும்) நாட்டின் ஜிடிபி 3.1 என்ற மிக குறைந்த சதவீதமே ஆகும்.

2020-21 நிதியாண்டில் இந்தியாவில் ஜிடிபி மைனஸ் 7-இல் இருந்து பூஜ்யம் வரையிலான அளவில் மேலும் வெகு மோசமாக வீழ்ச்சியடைய கூடும் என்று பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

தற்போது முடக்கநிலையில் இருந்து பல கட்டுப்பாடுகளை தளர்த்தி அரசு அறிவிப்பு வெளியிட்ட நிலையில், இவற்றால் கொரோனா தொற்றுக்கு முந்தைய பொருளாதார நிலையில் பாதியை எட்ட 3 மாதங்கள் ஆகலாம் என பொருளாதார நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஆனால், நாளும் அதிகரிக்கும் கொரோனா தொற்று எண்ணிக்கை நரேந்திர மோதி அரசுக்கு பெரும் சவால் அளிப்பதாக உள்ளது.

மேலும் கொரோனா வைரஸ் முடக்கநிலை சரிவை சமாளிக்க அரசு அறிவித்த பொருளாதார சலுகைகள் மற்றும் திட்டங்கள் தொடர்பாக பல பொருளாதார நிபுணர்களும் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

பற்றாக்குறையை, பொருளாதார மந்தநிலையை சமாளிக்க ஜிடிபியில் இருந்து 0.8 முதல் 1 சதவீதம் வரை பயன்படுத்தப்படலாம் என பல கணிப்புகள் நிலவிவரும் நிலையில், இது போதுமானதாக இருக்காது என்ற கருத்து உள்ளது.

பொருளாதார மதிப்பீடுகளுக்கு மிக பிரபலமான மூடிஸ் நிறுவனம், 22 ஆண்டுகளில் முதல் முறையாக இருப்பதிலேயே குறைவான தரமதிப்பை இந்தியாவுக்கு வழங்கியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: