7.5% இடஒதுக்கீடு: அரசு பள்ளி மாணவர்களுக்கு சலுகையா? "மெட்ரிக்" நந்தகுமார் சிறப்புப்பேட்டி

மருத்துவப் படிப்புகளில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குங்கள் - பா,ஜ.க நந்தக்குமார் பேட்டி

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்திருக்கும் நிலையில், தனியார் பள்ளிகளில் தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கும் அந்த இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்இ பள்ளிகளின் சங்க பொதுச் செயலாளரான நந்தகுமார் கோரிக்கை விடுத்திருக்கிறார். அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் ஒதுக்கீடு அளிப்பது சரியல்லை என்கிறார் அவர். பிபிசிக்கு நந்தகுமார் அளித்த பேட்டியிலிருந்து:

கே. மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றியிருக்கும் நிலையில், தனியார் பள்ளிகளின் கருத்து என்ன?

ப. இந்த இட ஒதுக்கீடு வரவேற்க வேண்டிய விஷயம் என முதல் நாளே சொல்லியிருக்கிறோம். ஆனால், அதே நேரத்தில் தனியார் பள்ளிகளில் தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கும் இந்த இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும். இது தொடர்பாக ஆளுநருக்கு ஒரு கோரிக்கை மனுவை அனுப்பியிருக்கிறோம். அதில், அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அளிக்கும் சலுகைகள் அனைத்தையும் தமிழ் வழியில் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் என கேட்டிருக்கிறோம். ஏனென்றால், தனியார் பள்ளிகளில் தமிழ் வழியில் படிக்கும் மாணவர்கள், அரசு சொல்லும் சமச்சீர் கல்வியைத்தான் கற்கிறார்கள். 

மருத்துவப் படிப்புகளில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குங்கள் - பா,ஜ.க நந்தக்குமார் பேட்டி

பட மூலாதாரம், Facebook

கே. நீட் தேர்வு வந்த பிறகு அரசு பள்ளி மாணவர்களால் மருத்துவ கல்லூரிகளில் போதுமான இடங்களைப் பெற முடியவில்லை என்றுதான் அரசு இந்த இட ஒதுக்கீட்டை அமல்படுத்துகிறது. சில இடங்களைத் தவிர, எல்லா இடங்களையும் நிரப்பும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் இதே இடஒதுக்கீட்டை கேட்பது சரியா?

ப. பள்ளிக் கல்விக்காக 30,000 கோடி ரூபாயை அரசு ஒதுக்குகிறது. அதை ஆசிரியர்கள் சம்பளமாக வாங்குகிறார்கள். அதே பாடத்தைத்தான் 20 -30 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கிக்கொண்டு எங்கள் ஆசிரியர்கள் நடத்துகிறார்கள். அங்கிருந்துதான் இரண்டாயிரம் - மூன்றாயிரம் மருத்துவ மாணவர்கள் வருகிறார்கள். ஆனால், 30 ஆயிரம் கோடி ரூபாயை செலவழிக்கும் அரசுப் பள்ளிகளில் இருந்து, வெறும் ஒன்றிரண்டு பேர்தான் மருத்துவ கல்லூரியில் சேருகிறார்கள் என்றால் வேதனையாக இருக்கிறது. இதை சரிசெய்ய இட ஒதுக்கீடு கொடுக்கக்கூடாது. தரமான கல்வியைத் தர வேண்டும். இடஒதுக்கீடு அடிப்படையில் கொடுத்தால், அந்த மாணவன் எத்தனை உயிரைக் கொல்வான் என்பதைப் பார்க்க வேண்டும். 

மாற்றப்பட்ட பாடத்திட்டத்தில் இருந்துதான் நீட் தேர்வில் பெருமளவு கேள்விகளைக் கேட்டிருக்கிறார்கள். அப்படியும் மாணவர்கள் மதிப்பெண்களை வாங்கவில்லையென்றால் அதற்கு யார் காரணம்? ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும். மாணவர்கள் படிக்கும் சூழலை உருவாக்க வேண்டும். மாணவர்கள் படிக்கவில்லையென்றால் அதற்கு அரசு பள்ளிகள்தான் காரணம். நீட் தேர்வு அமலுக்கு வந்து ஐந்தாண்டுகளாகிறது. அப்படியிருந்தும் 180 மாணவர்கள்தான் அரசு பள்ளிகளில் இருந்து மருத்துவ கல்லூரிகளுக்கு சென்றிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. அப்படியானால் அதற்கு யார் காரணம்? அதற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அவர்கள் தங்களைத் திருத்திக்கொண்டு பாடம் நடத்த வேண்டும்.

 அதை விட்டுவிட்டு தனியார் பள்ளி மாணவர்களே மருத்துவ கல்லூரிகளுக்கு வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டை இன்னும் எத்தனை நாட்களுக்கு சொல்லிக்கொண்டு இருப்போம்? தரத்தை உயர்த்தாமல் இட ஒதுக்கீடு தருவது சரியல்ல. அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் இட ஒதுக்கீடு கொடுத்தால், தனியார் பள்ளிகளின் கதி என்ன ஆவது?

கே. ஏற்கெனவே மருத்துவ கல்லூரிகளில் தனியார் பள்ளி மாணவர்கள்தானே படிக்கிறார்கள். அவர்களுக்குக் கூடுதலாக எப்படி ஒதுக்கீடு கேட்கிறீர்கள்?

ப. அவர்களுக்கும் இந்த வாய்ப்பை கொடுங்கள் என்று சொல்கிறோம். தமிழ்நாட்டில் தமிழ் வழியில் யார் படித்தாலும், அவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுங்கள் என்கிறோம். அரசுக்கு செலவே இல்லாமல் நல்ல கல்வியைக் கொடுக்கிறோம். ஆகவே தனியார் பள்ளிகளிலும் தமிழில் படிக்கும் மாணவர்களுக்கும் இந்த வாய்ப்பைக் கொடுங்கள் என்கிறேன். 

கே. நீட் தேர்வு வந்த பிறகுதான் அரசு பள்ளி மாணவர்களுக்கு இடம் கிடைக்கவில்லைன்பதால் இந்த முடிவை அரசு எடுத்திருக்கிறது. அந்தத் தேர்வு வருவதற்கு முன்பாக அரசு பள்ளியில் படித்து பல மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார்கள். உங்கள் கூற்றுப்படி அவர்கள் எல்லாம் தரமில்லாதவர்களா?

ப. நீங்கள் வேண்டுமானால் புள்ளிவிவரங்களை எடுத்துப் பாருங்கள். அப்போதும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள்தான் கூடுதல் இடங்களைப் பெற்றார்கள். அப்போதும் தனியார் பள்ளிகளைக் குறை சொன்னார்கள். மனப்பாடம் செய்ய வைத்து மதிப்பெண்களை எடுக்க வைப்பதாக சொன்னார்கள். ஆகவே பாடத்திட்டத்தை மாற்றுவோம் என்றார்கள். அதை நாங்களும் வரவேற்றோம். 

இப்போது நாங்கள் ஆங்கில வழியில் படிப்பவர்களுக்கு இட ஒதுக்கீடு கேட்கவில்லை. தமிழ் வழியில் படிப்பவர்களுக்கு மட்டும்தான் கேட்கிறோம்.

மருத்துவப் படிப்புகளில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குங்கள் - பா,ஜ.க நந்தக்குமார் பேட்டி

பட மூலாதாரம், Getty Images

கே. தனியார் பள்ளிகளில் படித்து, பிறகு தனியார் பயிற்சிப் பள்ளிகளில் படித்த பிறகே, நீட் தேர்வில் மருத்துவ கல்லூரிகளில் சேரும் அளவுக்கு மதிப்பெண்களைப் பெற முடிகிறது. இந்நிலையில் அரசு பள்ளி மாணவர்களை குறை சொல்வது சரியா?

ப. எல்லோரும் படித்து மருத்துவர் ஆக வேண்டு என்பதுதான் ஆசை. இதுபோல படிக்காமல், தகுதி இல்லாதவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்துக் கொண்டே போனால் அவர்கள் எத்தனை பேரைக் கொல்வார்கள் எனத் தெரியாது.

கே. தமிழ்நாட்டில் பெரும்பான்மை மாணவர்கள் அரசு பள்ளியில்தான் படிக்கிறார்கள். நீங்கள் அவர்களை தரமில்லாதவர்கள் என்று குறிப்பிடுகிறீர்களே...

ப. அவர்களை இன்னும் தரப்படுத்துங்கள் என்று சொல்கிறேன். நல்ல ஆசிரியர்களைக் கொடுங்கள். நல்ல வகுப்பறைகளை உருவாக்குங்கள். ஆய்வகங்களைக் கொடுங்கள் என்கிறேன். எல்லோருக்கும் பாஸ் போட்டால் படிப்பு எப்படி வரும்? எல்லோரும் படிப்பதை உறுதி செய்யுங்கள்.

கே. திரும்பத் திரும்ப அரசு பள்ளியில் மாணவர்கள் படிப்பதில்லை, தனியார் பள்ளியில் மாணவர்கள் படிக்கிறார்கள் என்கிறீர்களே.. இது சரியா?

ப. இங்கே பெற்றோர்கள் ஒத்துழைக்கிறார்கள், ஆசிரியர்கள் சரியாக பாடம் நடத்துகிறார்கள், மாணவர்கள் படிக்கிறார்கள். நான் தைரியமாகவே சொல்வேன், அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் கூடுதல் கடமை உணர்ச்சியோடு சொல்லித்தர வேண்டும். அங்கே மாணவர்கள் ஒத்துழைப்பதில்லை. ரவுடித்தனம் செய்கிறார்கள். பள்ளிக்கூடத்திற்கும் வருவதில்லை. யாரும் எவர் பேச்சையும் கேட்பதுமில்லை. மாணவர்கள் படிக்கிறார்களா, இல்லையா என்பதை கல்வித் துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். இலவசங்களைக் கொடுப்பதால் மட்டுமே எல்லாம் நடந்துவிடும் என நினைக்கக்கூடாது. அதைவிட, மாணவர்களுக்கு கல்வி கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும். 

கே. அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கினால், தனியார் பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் சேருவது குறைந்துவிடும் என்பதால் எதிர்க்கிறீர்களா?

ப. அது ஒரு காரணமில்லை. நாங்கள் ஆங்கில வழி வகுப்புகளைத்தான் பெரும்பாலும் நடத்துகிறோம். ஒரு 30 சதவீதம் பேர் கூடவே, தமிழ் வழியில் பாடம் நடத்துகிறார்கள். அவர்களுக்கும் அந்த வாய்ப்பை கொடுங்கள் என்கிறோம். கோரிக்கை வைப்பது தவறா? உங்களால் முடியவில்லை என்றால் அரசு பள்ளிகளுக்கு ஆகும் செலவில் 50 சதவீதத்தை எங்களிடம் கொடுங்கள். அந்த மாணவர்களை மருத்துவர்களாக்கிக் காட்டுகிறோம். ஒரு ஐந்து வருடத்திற்கு தனியார் பள்ளிகளிடம் பிளஸ் டூ மாணவர்களைக் கொடுத்துப் பாருங்கள். நாங்கள் மருத்துவர்களாக்கிக் காட்டுகிறோமா இல்லையா என்று பார்க்கலாம். 

கே. நீங்கள் பாரதிய ஜனதா கட்சியில் இருக்கிறீர்கள். அந்தக் கட்சியின் சார்பில்தான் கேட்கிறீர்களா..

ப. இல்லை. கட்சிக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. கட்சியில் இப்போதுதான் மாநில கல்வியாளர் பிரிவின் செயலாளர் ஆகியிருக்கிறேன். பாரதிய ஜனதா கட்சி 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை ஆதரிக்கிறது. அது கட்சியின் நிலைப்பாடு. எங்களைப் பொறுத்தவரை, தமிழ் வழியில் படிக்கும் எல்லா மாணவர்களுக்கும் இந்த இட ஒதுக்கீட்டை அளிக்க வேண்டும் என்பதை எங்கள் தனியார் பள்ளிகள் சங்கத்தின் சார்பின் முன்வைத்திருக்கிறோம். நான் கட்சி பெயரையோ, பதவியையோ, லெட்டர் பேடையோ இந்த விவகாரத்தில் பயன்படுத்தவில்லை.

கே. "நாங்கள் லஞ்சம் கொடுத்துத்தான் அங்கீகாரம் வாங்கியிருக்கிறோம். சம்பாதிக்கத்தான் செய்வோம்" என்று நீங்கள் பேசியதாக செய்திகள் வெளிவந்தனவே...

ப. அது வேறு விவகாரம். அந்த காலத்தில் காசு கொடுத்தால்தான் வேலை நடந்தது என்பதால் அதை கொடுத்தோம். விஏஓ, தாலுகா அலுவலகங்களில் எதுவும் சும்மா கிடைக்காது. கொடுப்பதைக் கொடுத்தால்தான் எதையும் பெற முடியும் என்பது தமிழ்நாட்டில் எழுதப்படாத விதி. எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தானே இது. ஆனால், அதற்கும் இந்த விவகாரத்திற்கும் தொடர்பில்லை. 

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :