திருமாவளவன் எதிர்ப்பு போராட்டம்: குஷ்பு உள்ளிட்ட பாஜகவினர் விடுவிப்பு

kushboosundar

பட மூலாதாரம், kushboosundar facebook page

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனுக்கு எதிராக சிதம்பரத்தில் போராட்டம் நடத்த, பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நடிகை குஷ்பு உள்ளிட்டோர் சென்றபோது சென்னைக்கு அருகே காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து விடுதியொன்றில் சில மணி நேரம் வைக்கப்பட்டிரு்நத அவர்கள் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

மநுதர்ம சாஸ்திரத்தில் பெண்களைப் பற்றிக் கூறப்பட்டுள்ளதாகக் கூறி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறிய கருத்துகளுக்கு பா.ஜ.கவினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். அவரது கருத்தைக் கண்டித்து, மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்போவதாக பா.ஜ.க. அறிவித்திருந்தது.

ஆனால், சிதம்பரத்தில் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது. இந்த நிலையில், அங்கு போராட்டம் நடத்துவதற்காக சமீபத்தில் பா.ஜ.கவில் இணைந்த குஷ்பு சென்னையிலிருந்து சிதம்பரம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தார்.

அவரை முட்டுக்காடு அருகே வழிமறித்து காவல்துறையினர் கைது செய்தனர். அதேபோல, போராட்டத்தில் கலந்துகொள்ளச் சென்றுகொண்டிருந்த பா.ஜ.கவின் மாநிலப் பொதுச்செயலாளர் கே.டி. ராகவனை ஆத்தூர் சுங்கச்சாவடியில் காவல்துறை கைது செய்துள்ளது.

"பெண்களின் கண்ணியத்திற்காக இறுதிவரை போராடுவோம். பிரதமர் நரேந்திர மோதி எப்போதும் பெண்களின் பாதுகாப்பு குறித்துத்தான் பேசுவார். நாங்கள் அவர் பாதையில் செல்கிறோம். சில சக்திகளின் அராஜகங்களுக்கு அடிபணிய மாட்டோம்" என குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

thol tirumavalavan manu smiriti

பட மூலாதாரம், Thirumaofficial

மேலும் "வி.சி.க. கோழைகள். மகிழ்ச்சியடையாதீர்கள். இது உங்கள் தோல்வி. நாங்கள் எதிர்கொள்ள வேண்டிய சக்தி என்பதால்தான் கைது செய்யப்பட்டுள்ளோம். நாங்கள் அடிபணிய மாட்டோம்" என்று கூறியிருக்கிறார்.

தங்களை கைது செய்திருப்பது அரசின் கையாலாகாத தனம் என கே.டி. ராகவன் கூறியிருக்கிறார். "இந்து மதத்தை இழிவு படுத்திய திருமாவளவன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத தமிழக அரசு ஜனநாயக ரீதியில் ஆர்ப்பாட்டம் செய்ய சிதம்பரம் செல்லும் குஷ்பூ அவர்களையும், என்னையும் கைது செய்திருப்பது அரசின் கையாலாகாத்தனத்தை காட்டுகிறது." என அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

சிதம்பரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பா.ஜ.க., வி.சி.க.வைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: