ஆக்ஸ்ஃபோர்டு கொரோனா தடுப்பூசி: இளைஞர்கள் - வயோதிகர்களின் எதிர்ப்பணுக்கள் மேம்படுவதாக தகவல்

பட மூலாதாரம், Getty Images
கொரோனா வைரஸ் எனப்படும் கோவிட்-19 வைரஸுக்கு எதிரான எதிர்ப்பணு ஆற்றல் இளைஞர்களிடமும் வயோதிகர்களிடமும் தூண்ட சமீபத்திய பரிசோதனை மருந்து உதவி வருவதாக ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களுடன் சேர்ந்து, வைரஸ் தடுப்பூசி பரிசோதனையில் ஈடுபட்டுள்ள பிரிட்டிஷ் நிறுவனமான அஸ்ட்ராசெனிகா தெரிவித்துள்ளது.
வைரஸ் எதிர்ப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பல்வேறு நாடுகளின் முயற்சியில் இந்த தடுப்பூசி மருந்து திருப்பத்தை ஏற்படுத்தலாம் என அந்த நிறுவனம் கூறுகிறது.
உலக அளவில் இதுவரை 11.50 லட்சம் பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர். பல வல்லரசுகளின் பொருளாதாரத்தை புரட்டிப்போட்டுள்ள இந்த வைரஸுக்கு எதிரான தடுப்பூசி தயாரிப்புப் பணியில் நூற்று ஐம்பதுக்கும் அதிகமான நாடுகள் ஈடுபட்டிருந்தாலும், ஒரு சில மட்டுமே பயன் தரும் வகையில் முன்னேற்றம் கண்டு வருகின்றன.
இந்த நிலையில், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக ஆய்வக ஆராய்ச்சியாளர்களுடன் சேர்ந்து வைரஸ் தடுப்பூசி தயாரிப்புக்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள அஸ்ட்ராசெனிகா நிறுவனம், கொரோனா வைரஸ் தாக்கம் உள்ளவர்களில் இளைஞர்களிடம் எதிர்ப்பணுக்கள் அதிகரிப்பதைப் போலவே, வயோதிகர்களிடமும் எதிர்ப்பணுக்களை தூண்ட, சமீபத்திய பரிசோதனை மருந்து உதவி வருவதாக அஸ்ட்ராசெனிகா நிறுவன செய்தி்ததொடர்பாளர் கூறினார்.
இதுவரை இளைஞர்களின் எதிர்ப்பணுக்கள் மட்டுமே அதிகரிக்கப்படுவதாக கருதப்பட்டு வந்த வேளையில், வயோதிகர்களின் எதிர்ப்பணுக்களும் மேம்படுவது விரைவில் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிப்பில் சாதகமானதாக கருதப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில், பிரிட்டிஷ் சுகாதாரத்துறைச் செயலாளர் மேட் ஹான்காக் கூறும்போது, "இதுவரை கொரோனா வைரஸ் தடுப்பூசி மருந்து தயாராக இல்லாவிட்டாலும், அது அடுத்த ஆண்டு மத்தியில் மக்களுக்கு விநியோகம் செய்யப்படும் என்ற அனுமானத்தில், அதற்கான விநியோக கட்டமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன" என்று கூறினார்.
மெஹ்பூபா முஃப்தியின் சர்ச்சை கருத்து: கட்சியில் இருந்து வெளியேறிய 3 தலைவர்கள்

பட மூலாதாரம், Getty Images
தேசப்பற்று மற்றும் தேசிய மூவர்ண கொடி தொடர்பாக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெஹ்பூபா முஃப்தி ஊடகங்களிடம் கடந்த வாரம் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு அதிருப்தி தெரிவித்து, அக்கட்சியில் இருந்து வெளியேறுவதாக அதன் மூன்று முக்கிய தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பிடிபி கட்சித் தலைவர்கள் டி.எஸ். பாஜ்வா, வேத் மகாஜன், ஹுசேன் ஏ. வஃப்ஃபா ஆகியோர் மெஹ்பூபா முஃப்திக்கு எழுதிய கடிதத்தில், தேசப்பற்று தொடர்பான உங்களுடைய கருத்துகள் எங்களுக்கு அசெளர்யத்தையும் காயத்தையும் ஏற்படுத்தியிருப்பதாக தெரிவித்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்து வந்த இந்திய அரசியமைப்பின் 370ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கையாக அம்மாநிலத்தைச் சேர்ந்த பல தலைவர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் வீட்டுக் காவலிலும் சிறைகளிலும் அடைக்கப்பட்டனர்.
அவர்களில் பலர் சமீபத்திய மாதங்களாக விடுவிக்கப்பட்டு வருகின்றனர். இந்த வரிசையில் சமீபத்தில் வீட்டுக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட மெஹ்பூபா முஃப்தி, கடந்த வாரம் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், ஜம்மு காஷ்மீரில் அதன் கொடியை ஏற்றுவது சட்டப்பூர்வமற்றதாக கருதப்படும் நிலையை, பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான மத்திய அரசு உருவாக்கியிருக்கிறது. அந்த உரிமை எப்போது ஜம்மு காஷ்மீருக்கு கிடைக்கிறதோ அதுவரை இந்திய தேசிய மூவர்ண கொடியை ஏற்றப்போவதில்லை என்று மெஹ்பூபா அறிவித்தார். அவரது இந்த கருத்து, சட்டவிரோதமானது மட்டுமின்றி இந்திய இறையாண்மைக்கு எதிரானதாக கருதப்பட வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், அவரது கட்சியைச் சேர்ந்த மூன்று தலைவர்கள் அக்கட்சியில் இருந்து விலகியிருக்கிறார்கள். இது தொடர்பாக அவர்கள் கட்சி மேலிடத்துக்கு எழுதிய கடிதத்தில், விரிவான விவாதங்கள், ஆலோசனைகள் மூலம் தீர்க்கப்பட வேண்டிய விஷயத்தில், தேச உணர்வை பாதிக்கும் வகையிலான கருத்துகளை சில சக்திகள் வெளியிடுவது மன்னிக்க முடியாத செயல் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை மீட்டெடுக்கும் நோக்கத்துடன் ஏழு கட்சிகள் சேர்ந்து, "குப்கார் பிரகடனத்துக்கான மக்கள் கூட்டணி" என்ற பெயரில் ஒரு அணியை உருவாக்கியுள்ளன. இதில் மெஹ்பூபா முஃப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி, முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவின் தேசிய மாநாடு கட்சி உள்ளிட்டோரின் கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
கொரோனா வைரஸ்: காற்று மாசுபாட்டால் பலவீனமடையும் எதிர்ப்பு நடவடிக்கைகள்

பட மூலாதாரம், Getty Images
காற்று மாசுபாட்டால் இந்தியாவில் கொரோனா வைரஸுக்கு எதிரான நடவடிக்கைகள் பலவீனமடையலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் இது தொடர்பான ஆய்வை மேற்கொண்டனர். அதில், கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் இந்திய தலைநகர் டெல்லியில் இந்த பாதிப்பு அதிகம் காணப்படுவதாக அவர்கள் கூறியுள்ளனர்.
காற்றில் மிதக்கும் தன்மை வாய்ந்த கொரோனா வைரஸ், காற்று மாசுபாடு காரணமாக அதிக நிமிடங்களுக்கு காற்றில் மிதக்கக் கூடும் என்பதால் அதன் பாதிப்பை மக்கள் சந்திக்க நேரலாம் என அவர்கள் கூறியுள்ளனர். குறிப்பாக நுரையீரல் தொற்றுக்கு இது காரணமாகலாம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் தற்போது பண்டிகை காலம் மற்றும் வட மாநிலங்களில் பரவலாக அறுவடை முடிந்து வயல் வெளிகளை எரிக்கும் வழக்கம் அதிகமாக காணப்படுகிறது. இத்துடன் தசரா பண்டிகையைத் தொடர்ந்து எதிர்வரும் தீபாவளி பண்டிகையின்போது பல மாநிலங்களில் பட்டாசுகள் வெடிப்பதும் தொடரலாம் என்பதால் இந்த பாதிப்பு மேலும் அதிகரிக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் அஞ்சுகிறார்கள்.
கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் தனியாக மேற்கொண்ட மற்றொரு ஆய்விலும், இங்கிலாந்தில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு கொரோனா வைரஸ் பரவலை தீவிரமாக்கியிருப்பதை போல இந்திய நகரங்களிலும் தாக்கம் ஏற்படலாம் என்று கூறியுள்ளனர்.
கேரள தங்க கடத்தல் வழக்கு: தேடப்பட்ட சந்தேக நபர் கொச்சியில் கைது

பட மூலாதாரம், Getty Images
கேரளாவில் தங்க கடத்தல் வழக்கில் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டிருந்த ராபின்ஸ் கே. ஹமீது (42) துபையில் இருந்து கொச்சிக்கு வந்தபோது, விமான நிலையத்திலேயே அவரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் கைது செய்தனர்.
கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி திருவனந்தபுரம் சுங்கத்துறைக்கான சரக்ககத்தில் 30 கிலோ எடையுள்ள ரூ. 14.82 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் இருந்த உடைமை பறிமுதல் செய்யப்பட்டது.
அந்த உடைமை, இந்தியாவில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகத்துக்கானது என்ற போர்வையில் வந்த நிலையில், அது ராஜீய உடைமை அல்ல என்பது விசாரணையில் தெரிய வந்தது. இந்த வழக்கில் ஏற்கெனவே கேரள முதல்வர் அலுவலகத்தில் பணியாற்றி வந்த ஸ்வப்னா என்ற பெண் உள்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், அதே வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த கே.டி. ரமீஸ், ஏ.எம். ஜலால் ஆகியோருடன் சேர்ந்து துபையில் தங்கம் வாங்க உதவியதாக ரபீன்ஸ் கே. ஹமீது மீது சந்தேகம் எழுந்தது. விசாரணைக்கு ஆஜராகுமாறு என்ஐஏ அனுப்பிய பல அழைப்பாணைகளுக்கு அவர் பதில் தராத நிலையில், அவரை தேடப்படும் நபராக இந்திய அரசு அறிவித்தது.
இந்த நிலையில், துபையில் இருந்து கொச்சி வந்த அவரை அதிகாரிகள் திங்கட்கிழமை கைது செய்துள்ளனர். நீதிமன்ற்த்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவரை காவலில் எடுத்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
உத்தவ் தாக்கரே: "அரசுகளை கவிழ்க்க முயலாமல் பொருளாதார முன்னேற்றத்தில் கவனம் செலுத்தவும்"

பட மூலாதாரம், Getty Images
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை குறுக்கு வழியில் கவிழ்க்க முயலாமல், பொருளாதாரத்தை முன்னேற்றும் நடவடிக்கையில் கவனம் செலுத்துமாறு மத்தியில் ஆளும் நரேந்திர மோதி தலைமையிலான கூட்டணி அரசுக்கும் அந்த கூட்டணிக்கு தலைமை தாங்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் அறிவுறுத்தியிருக்கிறார், மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே.
தசரா பண்டிகையையொட்டி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், "ஒட்டுமொத்த தேசமும் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், மாநிலங்களில் உள்ள சூழலை பலவீனப்படுத்தி அரசியல் செய்ய எப்படி ஒரு கட்சியால் முடிகிறது?" என்று கேள்வி எழுப்பினார்.
"மகாராஷ்டிராவின் முதல்வராக நான் பதவியேற்றது முதல் எனது தலைமையிலான அரசை கவிழ்க்க பாஜக சதி செய்து வருகிறது. ஆட்சியை கலைக்க தேதி குறித்து விட்டதாகவும் பேசப்படுகிறது. உண்மையிலேயே துணிச்சல் இருந்தால் அதை செய்து காட்டுங்கள் பார்க்கலாம்" என்றார் உத்தவ் தாக்கரே.
பிரதமர் நரேந்திர மோதியின் பெயரைக் குறிப்பிடாமல் பேசிய உத்தவ் தாக்கரே, "ஒருவர் நட்பாகப்பேசுவார், அதே சமயம் நெருங்கிப் பழகியவர்களின் முதுகில் குத்தவும் அவர் தயங்க மாட்டார். பிஹார் சட்டமன்ற தேர்தலிலும் அப்படித்தான் நடக்கப்போகிறது. நிதிஷ் குமாருக்கு அந்த காலம் வெகுதூரத்தில் இல்லை" என்று உத்தவ் தாக்கரே பேசினார்
பிற செய்திகள்:
- அரசு பள்ளி மாணவர்களுக்கு ஏன் இடஒதுக்கீடு தேவை?
- பிரான்ஸ் பொருட்களை புறக்கணிக்கும் மத்திய கிழக்கு நாடுகள் - என்ன நடக்கிறது?
- பிகார் தேர்தல் 2020: சாதிகள் Vs பாஜகவின் இந்துத்துவ கொள்கைகள் - வரலாறு உணர்த்தும் குறிப்புகள்
- முஸ்லிம் நாடுகள் முதல் சீனா வரை: டிரம்ப் நிகழ்த்திய மாற்றங்கள் என்ன?
- சீனாவின் நட்பு நாடான மியான்மருக்கு இந்தியா வழங்கிய நீர்மூழ்கி கப்பல்
- மனு நீதி என்றால் என்ன? அது என்ன சொல்கிறது, ஏன் வந்தது?
- உங்கள் ஆபாச படம் சமூக ஊடகங்களில் பரவினால் எப்படி நீக்குவது?
- சமஸ்கிருதம் கணிப்பொறிக்கு ஏற்ற மொழி என்பது எந்த அளவு உண்மை?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












