kxip vs kkr ipl 2020: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப்

IPL 2020: Kings XI Punjab Kolkata Knight Riders sixth defeat

பட மூலாதாரம், Bcci / ipl

ஐபிஎல் தொடரில் நேற்று (திங்கட்கிழமை) ஷார்ஜாவில் நடந்த 46-ஆவது போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை வீழ்த்தியது.

இதன் மூலம், தொடர்ந்து ஐந்தாவது வெற்றியை பதிவுசெய்த பஞ்சாப் அணி, புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இந்த போட்டியில் அதிரடியாக விளையாடி 29 பந்துகளில் 51 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வித்திட்ட கிறிஸ் கெயிலுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச தீர்மானித்தது. இதையடுத்து, கொல்கத்தா அணியின் ஷுப்மன் கில் - நிதீஷ் ராணா ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஏற்கனவே தொடர்ந்து நான்கு போட்டிகளில் வென்ற உற்சாகத்தோடு விளையாடும் பஞ்சாப் அணிக்கெதிராக பெரிய ஸ்கோரை கொல்கத்தா அடிக்கும் என்று கருதப்பட்ட நிலையில், போட்டியின் 2-ஆவது பந்திலேயே டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார் ராணா.

அடுத்து களமிறங்கிய ராகுல் திரிபாதி வந்த வேகத்தில் ஒரு சிக்ஸர் உள்பட ஏழு ரன்களை அடித்து அவுட்டாக, சமீபத்தில் தனது கேப்டன் பதவியை துறந்த தினேஷ் கார்த்திக்கும் 2 பந்துகளே சந்தித்த நிலையில் டக் அவுட்டானாகி அடுத்தடுத்து ஏமாற்றமளித்தனர்.

முன்வரிசை ஆட்டக்காரர்கள் சோபிக்க தவறியதால் 10 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது கொல்கத்தா.

மறுமுனையில் ஷுப்மன் கில் நிலைத்து களத்தில் நிற்க அடுத்து வந்த கேப்டன் இயான் மோர்கன் ஆகியோர் சேர்ந்து 4ஆவது விக்கெட்டுக்கு 81 ரன்கள் சேர்த்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். ஆனால், 10வது ஓவரிலேயே 5 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 40 ரன்கள் சேர்த்திருந்த மோர்கன் ரவி பிஷ்னோய் பந்துவீச்சில் முருகன் அஸ்வினிடம் கேட்சானார்.

IPL 2020: Kings XI Punjab Kolkata Knight Riders sixth defeat

பட மூலாதாரம், Bcci / ipl

அடுத்து களமிறங்கிய சுனில் நரைன் கமலேஷ் நாகர்கோடி பேட் கம்மின்ஸ் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இதையடுத்து, கொல்கத்தா அணியின் பேட்டிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷுப்மன் கில் 3 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் உள்பட 57 ரன்கள் அடித்திருந்தபோது, ஷமி வீசிய 19ஆவது ஓவரில் நிகோலஸ் பூரனிடம் கேட்சானார்.

அடுத்து வந்த வருண் சக்கரவர்த்தி கடைசி விக்கெட்டாக இரண்டு ரன்கள் எடுத்து, கிறிஸ் ஜோர்டான் பந்துவீச்சில் கடைசி ஓவரில் ஆட்டமிழந்த நிலையில், லாக்கி ஃபெர்குசன் இரண்டு பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உள்பட 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர்களின் முடிவில் ஒன்பது விக்கெட்டுகள் இழப்பிற்கு 149 ரன்களை கொல்கத்தா குவித்திருந்தது.

பஞ்சாப் அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை, முகமது ஷமி 3, கிறிஸ் ஜோர்டான், ரவி பிஷ்னோய் தலா 2, கிளென் மேக்ஸ்வெல், முருகன் அஸ்வின் தலா ஒரு விக்கெட் வீழ்த்திருந்தனர்.

இதையடுத்து, 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலகுக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கே.எல். ராகுல் மந்தீப் சிங் இணை 7.6 ஓவர்களில் முதல் விக்கெட்டுக்கு 47 அடித்து சற்றே வலுவான தொடக்கத்தை அளித்தனர்.

kxip vs kkr ipl 2020: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப்

பட மூலாதாரம், Bcci /ipl

வருண் சக்கரவர்த்தி வீசிய 8ஆவது ஓவரில் கே.எல். ராகுல் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்து 28 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார்.

மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான மந்தீப் சிங் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த, அடுத்து களமிறங்கிய கிறிஸ் கெயில் கொல்கத்தா அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார்.

இந்த இணை 2ஆவது விக்கெட்டுக்கு சரியாக 100 ரன்களை சேர்ந்திருந்த நிலையில், 19ஆவது ஓவரில் ஃபெர்குசன் பந்துவீச்சில் கிருஷ்ணாவிடம் கேட்சானார் கிறிஸ் கெயில். ஐந்து சிக்ஸர்கள், இரண்டு பவுண்டர்களுடன் 29 பந்துகளில் 51 ரன்கள் அடித்திருந்தார் அவர்.

11 பந்துகளில் இன்னும் மூன்று ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், கைகோர்த்த மந்தீப் சிங் - நிகோலஸ் பூரன் இணை 18.5 ஓவரிலேயே இலக்கை எட்டியது.

கடைசிவரை நிலைத்து நின்று விளையாடிய மந்தீப் சிங் 56 பந்துகளில் 8 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 66 ரன்கள் குவித்திருந்தார். பூரன் 2 ரன்கள் அடித்திருந்தார்.

கொல்கத்தா அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை, வருண் சக்கரவர்த்தி மற்றும் ஃபெர்குசன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியிருந்தனர்.

போட்டியில் அதிக ரன்களை மந்தீப் சிங் அடித்திருந்தாலும், அதிரடியாக விளையாடி, குறைவான பந்துகளில் அரை சதத்தை கடந்த கிறிஸ் கெயிலுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இதையடுத்து, புள்ளிப்பட்டியலில் மும்பை, டெல்லி, பெங்களூரு அணிகளுக்கு அடுத்து நான்காவது இடத்துக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முன்னேறியுள்ளது.

ipl 2020 time table

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: