CSK vs RCB: சென்னை சூப்பர் கிங்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை வீழ்த்தியது - ஐபிஎல் 2020 போட்டியில் வென்ற தோனி அணி

பட மூலாதாரம், BCCI / IPL
சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் முகத்தில் மீண்டும் மகிழ்ச்சி வெளிப்படத் துவங்கியுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக நடத்த டி20 போட்டியில் வெற்றிபெற்றுள்ளது.
இதன் மூலம் பிளே ஆஃப் வாய்ப்பு நூலிழையில் இன்னும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இருக்கிறது.
சென்னை அணிக்கு இன்றைய தினம் இளம் வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட், சாம் கரண், தீபிக் சாகர் போன்றோர் மிகச்சிறப்பாக செயலபட்டனர். எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை அபாரமாக வீழ்த்தியுள்ளது சென்னை. இதன் மூலம் புள்ளிபட்டியலிலும் ஏழாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியுடனான கடந்த போட்டியில் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலுமே மோசமாக செயல்பட்டிருந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.
அந்தப் போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து ஐபிஎல் வரலாற்றில் அந்த அணியின் மிக மோசமான தோல்வியை பதிவு செய்தது. ஆனால் 48 மணிநேரத்துக்குள் சென்னை அணி முற்றிலும் மாறுபட்டு அனைத்து துறையிலும் சிறப்பாக விளையாடியது.
சென்னை அணியின் அனைத்து வீரர்களும் அணிக்கு தேவையான பங்களிப்பை வழங்கினர்.

பட மூலாதாரம், Bcci / ipl
சிக்கனமாக பவர்பிளேவில் பந்துவீசுவது, மிடில் ஓவர்களில் சுழற்பந்து மூலம் ஆதிக்கம் செலுத்துதல், கடைசி ஓவர்களில் முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றுவது, பேட்டிங்கில் நேர்த்தியாக நேர்மறை எண்ணத்துடன் விளையாடுவது என்ற தனது வழக்கமான உத்தியை இந்த போட்டியில் மிகச்சிறப்பாக செயல்படுத்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்.
போன்ற நேர்த்தியான ஆட்டத்தை இந்த ஐபிஎல் சீசனில் மற்ற போட்டிகளில் சென்னை அணி விளையாடவில்லை.
146 ரன்கள் எனும் இலக்கை துரத்திய சென்னை அணிக்கு டுபிளசிஸ் - ருதுராஜ் இணை நல்ல தொடக்கத்தை அளித்தது. டுபிளசிஸ் 13 பந்துகளில் 2 பௌண்டரி, 2 சிக்ஸர்கள் விளாசி 25 ரன்கள் குவித்தார், அம்பாட்டி ராயுடுவும் 27 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 3 பௌண்டரிகள் அடித்து 39 ரன்கள் சேர்த்தார். முந்தைய ஆட்டங்களில் டக் அவுட் ஆன ருதுராஜ் இன்று பொறுப்புடன் விளையாடி அரை சதமடித்து அணி வெற்றி பெற முக்கிய காரணியாக அமைந்தார்.
சிக்ஸர் அடித்து மேட்சை முடித்து வைத்தார். 51 பந்துகளில் 4 பௌண்டரிகள் 3 சிக்ஸர்கள் விளாசி 65 ரன்கள் எடுத்து அசத்தினார். தோனி 3 பௌண்டரிகளோடு ஆட்டமிழக்காமல் 19 ரன்கள் எடுத்தார்,
முன்னதாக டாஸ் வென்ற விராட் கோலி இரண்டாவது இன்னிங்ஸில் மைதானம் மந்தமாகக் கூடும் என கருதுவதாகச் சொல்லி பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார்.
சென்னை அணியின் பந்துவீச்சாளர்கள் ஆரம்பத்தில் இருந்தே ஒவ்வொரு ஓவரையும் கவனமாக வீசினர்.

பட மூலாதாரம், Bcci / ipl
முதல் ஓவரில் 11 ரன்கள் பெங்களூரு அணி எடுத்தது, அதற்கு பிறகு எந்த ஒரு ஓவரிலும் பெரிய அளவில் ரன்கள் விட்டுக்கொடுக்காமல் பார்த்துக்கொண்டனர். இதனால் பெங்களூரு அணிக்கு அழுத்தம் கூடிக்கொண்டே இருந்தது. பின்ச், படிக்கல் விக்கெட்டை இழந்ததும் கோலி - டிவில்லியர்ஸ் அணி இணைந்தது.
உலகத்தின் தலைசிறந்த பேட்ஸ்மேன்கள் ஜோடி என கருதப்படும் விராட் கோலி - ஏபி டிவில்லியர்ஸ் இணை சென்னை அணி வீரர்களின் துல்லியமான பந்துவீச்சு மற்றும் துடிப்பான பீல்டிங்கில் பவுண்டரி, சிக்ஸர்கள் விளாசாமல் ஒன்றிரண்டு ரன்களாக குவித்தது.
ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் ரன்ரேட்டை அதிகரிக்கும் முயற்சியில் டிவில்லியர்ஸ் - கோலி இணைக்கு வெற்றி கிடைக்கவில்லை.
டி வில்லியர்ஸ் 36 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தது அவுட் ஆனார். சாம் கரண் பந்தில் விராட் கோலி அரைசதமடித்த பின்னர் வீழ்ந்தார்.
அவரை ஃபாப் டு பிளசிஸ் ஒரு சிறப்பான கேட்ச் மூலம் அவுட் செய்தார். கோலி 43 பந்துகளில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் உதவியுடன் 50 ரன்கள் எடுத்தார்.
கடைசி 3 ஓவர்களில் பெங்களூரு அணியால் 20 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்தது. சாம் கரண் 3 ஓவர்கள் பந்து வீசி 19 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












