மந்தீப் சிங்: தந்தை இறந்த சோகத்திலும், தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கியதுக்கு குவியும் பாராட்டுக்கள்

மந்தீப் சிங்

பட மூலாதாரம், INSTAGRAM

படக்குறிப்பு, மந்தீப் சிங்

முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

"ஐபிஎல் 2020: தந்தை மரணம் அடைந்தாலும், தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய மந்தீப் சிங்"

மந்தீப் சிங்கின் தந்தை நேற்று முன்தினம் மரணமடைந்த நிலையிலும், நேற்று (சனிக்கிழமை) கிங்ஸ் வெலன் பஞ்சாப் அணிக்காகத் தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கியிருப்பது அவரது அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

ஐபிஎல் தொடரில் நேற்று (சனிக்கிழமை) நடந்த 2-வது ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடின. பஞ்சாப் அணியில் மயங்க் அகர்வாலுக்குப் பதில் மந்தீப் சிங் சேர்க்கப்பட்டார். இதனால், அகர்வாலின் இடத்தில் தொடக்க ஆட்டக்காரராக மந்தீப் களமிறக்கப்பட்டார்.

போட்டிக்கு முந்தைய நாள் தந்தை மரணமடைந்தபோதிலும், தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி விளையாடியது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. நேற்றைய ஆட்டத்தில் அவர் 14 பந்துகளில் 17 ரன்கள் எடுத்தார்.

ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக மந்தீப் சிங் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வரும் சமயத்திலேயே அவரது தந்தை உடல்நலக் குறைவு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Presentational grey line

'வங்கி கடனுக்கு வட்டிக்கு வட்டி கிடையாது' - மத்திய அரசு முறைப்படி அறிவிப்பு

வட்டிக்கு வட்டி

பட மூலாதாரம், Getty Images

கொரோனா காலத்தில் வங்கியில் கடன் பெற்று தவணையைச் செலுத்த முடியாமல் ஒத்திவைப்புச் சலுகை பெற்றவர்களுக்குக் கூட்டு வட்டி விதிக்கும் முடிவை மத்திய அரசு கைவிட்டுள்ளதாக இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

"இதன்படி இரண்டு கோடி ரூபாய் வரை வங்கியில் கடன் பெற்றவர்களுக்குக் கூட்டு வட்டி வசூலிக்கப்படாது என்று மத்திய அரசு நேற்று (சனிக்கிழமை) இரவு வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

Banner image reading 'more about coronavirus'
Banner

இந்த அறிவிப்பால் வங்கியில் வீட்டுக் கடன் பெற்றவர்கள், கிரெடிட் கார்டு கடன் பெற்றோர், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் பெற்ற கடன், நுகர்வோர் கடன், கல்விக் கடன், வாகனக் கடன் என இரண்டு கோடி ரூபாய் வரை கடன் பெற்றிருந்தால் அவர்களுக்குக் கூட்டு வட்டி விதிக்கப்படாது.

அதேசமயம் கடன் ஒத்திவைப்புச் சலுகையைப் பெறாமல், கடன் தவணையைக் கொரோனா காலத்திலும் முறையாக செலுத்தியவர்களுக்கு அவர்கள் வங்கிக் கணக்கில் வட்டித்தொகை திரும்பச் செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Presentational grey line

"அரசு அலுவலகங்கள் இனி வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே இயங்கும்"

அரசு அலுவலகங்கள்

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் இனி வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே இயங்கும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

"தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் சனிக்கிழமை உள்பட வாரத்தில் 6 நாட்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அது மாற்றப்பட்டு, அரசு அலுவலகங்கள் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே இயங்கும் என்று புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதேவேளையில், கொரோனா தொற்றுப் பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதுவரை அரசு அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அது மாற்றப்பட்டு 100 சதவீத ஊழியர்களுடன் இயங்கும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது."

Presentational grey line

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: