திருமாவளவனை விமர்சிக்கும் குஷ்பு: 'மனுநீதியை பாஜக ஆதரித்து பேசவில்லை' - தமிழக அரசியலில் கருத்து மோதல்

பட மூலாதாரம், @KHUSHSUNDAR
- எழுதியவர், அ.தா. பாலசுப்ரமணியன்
- பதவி, பிபிசி தமிழ்
மனுநீதிக்கு எதிராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போராட்டம் நடத்தியுள்ள நிலையில், பாஜக மனு நீதிக்கு ஆதரவாக கருத்து எதையும் இப்போது தெரிவிக்கவில்லை என்றும், யாரும் மனு நீதியைப் பற்றி பேசாத நிலையில் திடீரென்று திருமாவளவன் ஏன் நடைமுறையில் இல்லாத விஷயங்களைப் பற்றி கிளப்பவேண்டும் என்றும் கேட்டுள்ளார் பாரதிய ஜனதா கட்சியில் சமீபத்தில் இணைந்த குஷ்பு.
பிபிசிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் குஷ்பு மனு நீதிக்கு ஆதரவாக கருத்து எதையும் தெரிவிக்காதபோதும், நடைமுறையில் இல்லாத விஷயங்களை எடுத்துக்கொண்டு ஒரு மதத்தை விமர்சித்து ஏன் கருத்துக் கூறவேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.
முன்னதாக மனு ஸ்மிருதியை தடை செய்யக்கோரி சென்னையில் சனிக்கிழமை நடந்த போராட்டத்தில் பேசிய திருமாவளவன், சனாதனிகள் திமுக கூட்டணியை சிதறடிக்கவேண்டும் என்பதற்காக தன்னை இலக்குவைத்து அபாண்டமாக பழி சுமத்துவதாக கூறினார்.
"பெண்களையும், மனிதகுலத்தையும் இழிவுபடுத்தும் மனுதர்ம நூலை தடை செய்ய வேண்டும்" என்ற கோரிக்கையோடு இந்தப் போராட்டம் நடந்தது. மனு ஸ்மிருதி நூலை தடை செய்ய வேண்டும் என்று கோரி 100 ஆண்டுகளுக்கு பின்னரும் போராடவேண்டிய நிலை இருப்பதாக தெரிவித்தார் திருமாவளவன்.
ஒரு மாதத்திற்கு முன்னதாக இணைய வழியாக பேசிய தாம் பேசிய உரையின் ஒரு பகுதியை துண்டித்து, சங் பரிவார் அமைப்புகள் தனது கருத்தை திரித்து கூறுவதாக திருமாவளவன் தெரிவித்தார்.
போராட்டத்தில் பேசிய திருமாவளவன், ''செப்டம்பர் 27ம் தேதி ஐரோப்பிய வாழ் பெரியாரிய உணர்வாளர்கள் இணையவழி கருத்தரங்கம் ஒன்றை நடத்தினர். பெரியார் மற்றும் இந்திய அரசியல் என்ற தலைப்பில் நான் பேசினேன். 40 நிமிடங்கள் பேசினேன். அதில் 40 நொடிகளை எனது உரையில் இருந்து துண்டித்து ஒட்டுமொத்தமாக தாய்க்குலத்தை நான் இழிவு செய்கிறேன் என அவதூறு பரப்புகிறார்கள். எனது மொத்த உரையை பெண்கள் கேட்கவேண்டும் என்று நான் வேண்டுகோள்விடுக்கிறேன். 1920ல் பெரியார் மனு நூலை எரித்தார். அதேபோல எம்.சி ராஜா மற்றும் அம்பேத்கர் போன்ற தலைவர்கள் இந்த நூலை எரித்திருக்கிறார்கள். தற்போது இந்த நூலை தடை செய்யவேண்டும் என நான் கேட்கிறேன். 100 ஆண்டுகளுக்கு பின்னரும் இந்த நூலில் உள்ள கருத்துக்கு எதிராக போராடவேண்டிய சூழல் உள்ளது என்பதை இந்த போராட்டம் உணர்த்துகிறது,'' என்றார்.

பட மூலாதாரம், THIRUMAOFFICIAL
''பெண்களின் நிலை என்ன என மனு நூலில் உள்ளதைத்தான் நான் சுட்டிக்காட்டினேன். பாஜகவில் உள்ள தலைவர்கள் பலரும் பெண்களை இழிவாக பேசியுள்ளார்கள். என் மீதான வழக்கை நீதிமன்றத்தில் சந்திக்க தயாராக இருக்கிறேன். ஆனால் பெண்களை இழிவாக பேசிய பாஜக தலைவர்கள் மீது தமிழக அரசு இதுவரை வழக்கு போட்டதா?,'' என்று கேட்டார் திருமாவளவன்.
நடைமுறையில் இல்லாத மனுஸ்மிருதியை எதிர்ப்பதேன்? - குஷ்பு
மனு நீதி என்று அழைக்கப்படும் மனுஸ்மிருதி நூலை இப்போது யாரும் பின்பற்றுவதில்லை. அதைப் பற்றி இப்போது யாரும் பேசவும் இல்லை. அப்படி இருக்கும்போது, பழங்காலத்தில் எழுதப்பட்ட அந்த நூலைப் பற்றி இப்போது திருமாவளவன் விமர்சித்துப் பேசுவதற்கு என்ன தேவை வந்தது என்று கேட்கிறார் பாஜக-வில் சமீபத்தில் இணைந்த நடிகர் குஷ்பு.
மனு ஸ்மிருதியில் பெண்கள் வருணிக்கப்பட்டிருக்கும் விதம் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேசிய காணொளி தற்போது சர்ச்சையாகியுள்ளது. அந்தக் காணொளியில் பெண்களை அவர் இழிவாகப் பேசியதாக குஷ்பு வெள்ளிக்கிழமை நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் விமர்சித்தார்.
ஆனால், பெண்களைப் பற்றி மனுஸ்மிருதியில் கூறப்பட்டிருக்கும் கருத்தைத்தான் அவர் எடுத்துக் காட்டிப் பேசினார் என்று விடுதலைச் சிறுத்தைகள் தரப்பில் விளக்கம் சொல்லப்பட்டுவிட்டது.
இந்நிலையில், இந்த சர்ச்சை குறித்தும், மனுஸ்மிருதி நூல் குறித்தும் குஷ்புவின் கருத்தை அறிவதற்காக அவரிடம் பேசியது பிபிசி தமிழ்.
அவரது பேட்டியில் இருந்து:
கேள்வி: மனுஸ்மிருதியில் பெண்களைப் பற்றி கூறியிருப்பதை திருமாவளவன் எடுத்துக்காட்டிப் பேசியதாக கருதுகிறீர்களா அல்லது பெண்களைப் பற்றி திருமாவளவனே விமர்சித்துப் பேசியதாக கருதுகிறீர்களா?
பதில்: அந்த நூலைப் பற்றி பாஜகவோ அல்லது வேறு யாருமோ எடுத்துப் பேசவில்லை. அதைப் பற்றி பேச்சே வரவில்லை. அந்த நூலைப் பின்பற்றியும் இங்கே யாரும் வாழவில்லை. அதைப் போல பார்த்தால், பழங்காலத்தில் எழுதப்பட்ட எத்தனையோ நூல்கள் உள்ளன. முஸ்லிம் மதத்தில்கூட முத்தலாக் கொடுக்கும் நடைமுறை இருந்தது.
நீதிமன்றம் அதற்குத் தடை விதித்துள்ளது. அப்படி இருக்கும்போது இப்போது நடைமுறையில் இல்லாத ஒன்றை ஏன் திருமாவளவன் கிளப்பவேண்டும்? பேசுவதென்றால் உங்கள் கொள்கையைப் பற்றி பேசுங்கள். வளர்ச்சியைப் பற்றி பேசுங்கள்.
கேள்வி: திருமாவளவன் இதைப் பேசுவதால் பாஜகவுக்கு பாதிப்பு என்று கருதுகிறீர்களா?
பதில்:பாஜகவுக்கு பாதிப்பு ஏதும் இல்லை. பாஜக இப்போது மனு நீதியை ஆதரித்து எங்கும் பேசவில்லை. யாருமே பேசாதபோது இப்போது அதைப் பற்றி திருமாவளவன் பேசுவதற்கான தேவை என்ன வந்தது என்பதுதான் கேள்வி.
கேள்வி: உங்களை நீங்கள் பெரியாரிஸ்ட் என்று குறிப்பிடுகிறீர்கள். பெண்ணுரிமை தொடர்பான முற்போக்கான கருத்துகளை பேசியுள்ளீர்கள். மனுஸ்மிருதி தொடர்பாக உங்கள் கருத்து என்ன?
பதில்: வெவ்வேறு மதத்துக்கும் மாறுபட்டப் பார்வைகள் உள்ளன. ஆனால், மனங்கள் மாறிக் கொண்டிருக்கின்றன. குழந்தைப் பருவத்தில் திருமணம் செய்யவேண்டும் என்றோ, விதவைகள் தனியாக இருக்கவேண்டும் என்றோ இப்போது யாரும் பேசுவதில்லை. பல விஷயங்கள் மாறிவிட்டன.
மனு ஸ்மிருதியில் உள்ள பெண்களைப் பற்றிய பார்வையை ஆதரித்து பாஜக எங்கும் பேசவில்லை. முஸ்லிமாகப் பிறந்த நான், பக்தியும், மத நம்பிக்கையும் உள்ள ஓர் இந்து குடும்பத்தில் திருமணம் செய்துகொண்டுள்ளேன். பெண்களுக்கும், ஒடுக்கப்பட்டோருக்கும், பிற்படுத்தப்பட்டோருக்கும் ஆதரவான பார்வையைக் கொண்டுள்ளேன்.
கேள்வி: இந்தியாவில் தொன்றுதொட்டு தத்துவ விவகாரங்களைப் பற்றி உரையாடுகிற விவாதப் பண்பாடு உள்ளது. திருமாவளவன் பேசிய ஒரு கூட்டத்தில் அதற்குத் தொடர்புடைய விஷயத்தை அவர் பேசியிருக்கலாம். அப்படி விவாதிப்பது தவறு என்று கருதுகிறீர்களா?
பதில்: விவாதம் என்பது ஆரோக்கியமானது. மாறுபட்ட கருத்துகள் இருக்கலாம். ஆனால் தேவையற்ற, நடைமுறைக்குப் பொருத்தமற்ற, விஷயங்களை ஏன் கிளப்பவேண்டும்? தேவை ஏதும் இல்லாதபோது ஏன் குறிப்பிட்ட மதத்தை விமர்சித்துப் பேசவேண்டும்?
(பிரமிளா கிருஷ்ணன் அளித்த உள்ளீடுகளுடன்.)
பிற செய்திகள்:
- 'அமெரிக்காவில்தான் தூய்மையான காற்று, தண்ணீர்' - டிரம்ப் கூறியது உண்மையா?
- நேபாள பிரதமரை 'ரகசியமாக' சந்தித்த இந்திய உளவு பிரிவின் தலைவர் - வெடித்தது புதிய சர்ச்சை
- 'கடவுள் துகள்கள்' என்றால் என்ன? அப்பெயரை விஞ்ஞானிகள் தவிர்ப்பது ஏன்?
- நர்த்தகி நடராஜ்: தடைகளைத் தகர்த்த நாட்டிய கலைஞர் - சாதித்த கதை
- நெதர்லாந்தில் உள்ள ராஜேந்திர சோழனின் செப்பேடுகள் தமிழ்நாட்டுக்குத் திரும்புமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












