மனுஸ்மிருதி Vs திருமாவளவன்: பாஜக புகார்; சென்னை காவல்துறை வழக்குப்பதிவு

குஷ்பு

பட மூலாதாரம், facebook

பெண்கள் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்தை திரும்பப்பெற வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியில் சமீபத்தில் இணைந்த திரைப்பட கலைஞர் குஷ்பு வலியுறுத்தியிருக்கிறார்.

ஆனால், இதே விவகாரத்தில் பெண்களையும், ஆதி குடிகளையும், பிற்படுத்தப்பட்டோரையும் சிறுமைப்படுத்தும் வகையிலும் இழிவுபடுத்தும் வகையிலும் மனுஸ்மிருதி எனும் சனாதன நூலை மத்திய, மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி சனிக்கிழமை (அக்டோபர் 24) விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருக்கிறார் தொல். திருமாவளவன்.

இந்த விவகாரத்தில் வலைதளத்தில் திருமாவளவன் பெண்கள் தொடர்பாக இழிவாக பேசியதாக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த அஸ்வத்தாமன் பதிவு செய்த ஆன்லைன் புகார் அடிப்படையில், திருமாவளவன் மீது சென்னை குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

முன்னதாக, திருமாவளவன் தமது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அறிக்கையில், மனு ஸ்மிருதி நூலை தடை செய்ய வலியுறுத்துவதற்கான காரணத்தை வெளியிட்டிருக்கிறார்.

அதில் அவர், சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டதாகக் கூறப்படும் மனுஸ்மிருதி, அனைத்துத் தரப்பு உழைக்கும் மக்களையும் மிகக் கேவலமாக இழிவுபடுத்துகிறது. அதுமட்டுமின்றி அவர்களுக்கு எதிராக வன்முறைகளைத் தூண்டுகிறது. அவர்களைக் கொலைசெய்வதையும் நியாயப்படுத்துகிறது என்று கூறியுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

"குறிப்பாக, பெண்கள் அனைவரையும் மிக மிகக் கேவலமாக சித்தரிக்கிறது. ஒரு குறிப்பிட்ட வர்ணம் அல்லது சாதியைத்தவிர மற்ற எவரும் இந்த நாட்டில் வாழத் தகுதியற்றவர்கள் என்பதாகப் பேசுகிறது. அதன் காரணமாகவே புரட்சியாளர் அம்பேத்கர் 1927ஆம் ஆண்டிலேயே அதைத் தீயிட்டுக் கொளுத்தினார்.

அத்துடன், அவருடைய நூல்கள் பலவற்றிலும் மனுஸ்மிருதியின் மனிதகுல விரோத கருத்துக்களை அம்பலப்படுத்தியுள்ளார். அதுபோலவே தமிழ்நாட்டில் தந்தைபெரியார் அவர்களும் மனுஸ்மிருதியை எரித்துள்ளார்" என்று திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

"பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில்தான் மனுஸ்மிருதி இந்த நாட்டின் சட்டம் என்ற நிலையை இழந்தது. அதன் பிறகுதான் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற நிலை ஏற்பட்டது. தற்போது ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள சனாதன சக்திகள் மீண்டும் மனுஸ்மிருதியின் அடிப்படையில் இந்நாட்டின் ஆட்சி முறையை மாற்றி அமைக்க முயற்சிக்கிறார்கள். அதன் காரணமாகவே இன்றைய சனாதனிகளின் ஆட்சிக் காலத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பெருகுகின்றன. இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலினத்தவரின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன," என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

"தற்போது இந்தியாவை ஆட்சி செய்வது புரட்சியாளர் அம்பேத்கர் இயற்றிய அரசியலமைப்புச் சட்டமா? அல்லது மனுஸ்மிருதியா? என்னும் கேள்வி எழுந்துள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரிப்பதற்கு மனுஸ்மிருதியை தர்ம நூலாக ஏற்றுக்கொண்ட சனாதனிகள் ஆட்சி நடத்துவதே காரணம். மனுஸ்மிருதி என்ற ஒரு நூல் நாட்டில் இருக்கும் வரை இந்த சனாதனிகளின் மனிதகுல விரோத வெறுப்புப் பிரசாரத்தை நிறுத்தவே முடியாது," என்றும் அறிக்கையில் கூறியுள்ளார்.

"எனவே, வெறுப்புப் பிரச்சாரத்தின் ஊற்றுக் கண்ணாகவும், பெண்களை மிகக் கேவலமாக இழிவுபடுத்தும் நூலாகவும் விளங்குகின்ற மனுஸ்மிருதி என்னும் சனாதன நூலைத் தடைசெய்ய வேண்டும் என்று மீண்டும் குரலெழுப்ப வேண்டியது அனைத்து ஜனநாயக சக்திகளின் கடமையாகும்."

"புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோரின் வழியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முன்னெடுக்கும் 'மனுநூலைத் தடைசெய்!' என்ற இந்த அறப்போராட்டத்திற்கு சமூகநீதி மற்றும் சமத்துவத்தின் மீது அக்கறையுள்ள அனைவரும் ஒருங்கிணைய வேண்டும்" என்றும் திருமாவளன் கூறியுள்ளார்.

இவரது இந்த கருத்துகளுக்கு சமூக ஊடகங்களில் பரவலாக விமர்சனங்கள் காணப்படுகின்றன.

குஷ்பு மூலம் எதிர்வினையாற்றும் பாஜக

இந்த நிலையில், திருமாவளவனின் இந்த கருத்து வெளிவந்த சில நிமிடங்களிலேயே, பெண்கள் குறித்த கருத்துக்காக அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் அவரது கருத்துக் குறித்து கூட்டணிக் கட்சிகள் பதில் சொல்ல வேண்டும் என்றும் குஷ்பு தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக சென்னையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, "பெண்கள் குறித்து திருமாவளவன் தெரிவித்த கருத்துக்கு, அவர்களது கூட்டணிக் கட்சியான தி.மு.க. ஏன் பதில் சொல்லவில்லை? காங்கிரஸ் ஏன் பதில் சொல்லவில்லை? பெண்களை விபச்சாரி என்று சொல்வதுதான் உங்கள் கொள்கையா? பெண்களிடம் மன்னிப்பு கேட்காவிட்டால் அவர்கள் ஓட்டு போடுவார்களா?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.

காங்கிரசிலிருந்து வெளிவரும்போது, ஒரு பெண்ணாக தான் அவமானப்படுத்தப்பட்டதாகவும், இப்போது திருமாவளவன் பெண்களைப் பற்றிப் பேசியதற்கும் பதில் சொல்லாமல் இருப்பதாகவும் குஷ்பு குற்றம்சாட்டினார்.

இந்த விவகாரத்தில் திமுக எம்.பி கனிமொழி ஏன் இதுவரை பதில் சொல்லவில்லை அல்லது கண்டிக்கவில்லை என்று குஷ்பு கேள்வி எழுப்பினார்.

மனு தர்மத்தில் பெண்கள் பற்றி குறிப்பிடப்பட்டிருந்ததைத்தானே திருமாவளவன் சுட்டிக்காட்டினார் என்று குஷ்புவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, அதில் பெண்களைக் கேவலப்படுத்தும் அளவுக்கு ஏதும் இல்லை. ஒரு கட்சித் தலைவர் அதை புரிந்துகொண்டு பேசியிருக்க வேண்டும் என்று பதிலளித்தார் குஷ்பு.

மனு தர்மத்தைத் தடைசெய்யக்கோரி திருமாவளவன் சனிக்கிழமை போராட்டம் அறிவித்திருப்பது குறித்துக் கேட்டபோது, நாங்கள் இந்த விவகாரத்தைக் கையில் எடுக்கப்போகிறோம் என்றவுடன் திருமாவளவன் பிரச்னையை திசைதிருப்புகிறார் என்று குஷ்பு தெரிவித்தார்.

திராவிடக் கொள்கை பற்றி பேசுபவர்கள், முதலில் அவர்களின் அந்தக் கொள்கையை தங்களுடைய வீட்டிலிருப்பவர்களிடம் பின் தொடரச் சொல்லுங்கள். அது முடியாவிட்டால், மக்களுக்கு அது பற்றி உபதேசிக்கக்கூடாது என்றும் குஷ்பு தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக திருமாவளவன் மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லாவிட்டால் அடுத்து என்ன செய்வோம் என்பதை விரைவில் அறிவிப்போம் என்றும் குஷ்பு தெரிவித்தார்.

மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இடங்களை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அளிக்கும் மசோதாவுக்கு அனுமதி அளிப்பது குறித்து முடிவெடுக்க 4 வாரங்கள் ஆகும் என ஆளுநர் சொல்லியிருப்பது குறித்து கேட்டபோது, அதன் சட்ட அம்சங்களை ஆலோசிக்க நேரம் ஆகும்; ஆகவே அந்த அவகாசத்தை அளிக்கவேண்டும் என குஷ்பு கூறினார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு தமிழர்களின் விடுதலையில் மத்திய அரசு முடிவெடுக்காதது குறித்து கேட்டபோது, அதை என்னிடம் கேட்காதீர்கள், காங்கிரசிடம் கேளுங்கள் என்று குஷ்பு பதில் அளித்தார்.

வரைபடம்

உலகம் முழுவதும் உறுதி செய்யப்பட்ட தொற்றுகள்

Group 4

முழுமையாக பார்க்க பிரௌசரை அப்டேட் செய்யுங்கள்

ஆதாரம்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், தேசிய பொது சுகாதார முகமைகள்

கடைசியாக பதிவு செய்யப்பட்டது 5 ஜூலை, 2022, பிற்பகல் 1:29 IST

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: