அமெரிக்க அதிபர் தேர்தல்: டிரம்பின் காற்று மாசு கருத்தால் கொந்தளிக்கும் இந்தியர்கள்

பட மூலாதாரம், Reuters
இன்று நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தல் விவாதத்தில் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியதை ஆதரிக்கும் வகையில் பேசிய டொனால்டு டிரம்ப், இந்தியா, சீனா மற்றும் ரஷ்யாவில் காற்று "அசுத்தமாக" உள்ளது என தெரிவித்துள்ளார்.
அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3ஆம் தேதி நடைபெறும் சூழலில் வியாழனன்று மாலை இந்த விவாதம் நடைபெற்றது.
90 நிமிடங்கள் நடைபெற்ற இந்த விவாதத்தில் கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கு பொது முடக்கத்தை கொண்டு வருவதிலிருந்து பருவ நிலை மாற்றம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் விதத்தில் எரிபொருள் தொழிற்சாலைகளை மூடுவது வரை என அனைத்தும் விவாதிக்கப்பட்டது.
ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தினாலும், முந்தைய விவாதத்தைக்காட்டிலும் ஓரளவு அமைதியான விவாதமாக இது அமைந்தது என்றே கூறலாம்.
`இந்தியா அசுத்தமாகவுள்ளது`
விவாதத்தின் நடுவரான க்ரிஸ்டன் வெல்கர் டிரம்பிடம் பருவநிலை மாற்றத்தை எவ்வாறு கையாளுவீர்கள் அதே சமயத்தில் வேலை வாய்ப்புகளை எவ்வாறு பெருக்குவீர்கள் என்று கேட்டார். அதற்கு பதிலளித்த டிரம்ப், "கடந்த 35 வருடங்களில் அமெரிக்கா வெளியிடும் கார்பன் எண்ணிக்கை சரியானதாக உள்ளது. சீனாவை பாருங்கள் அவ்வளவு அசுத்தமாக உள்ளது, ரஷ்யாவை பாருங்கள் எவ்வளவு அசுத்தமாக உள்ளது. இந்தியாவை பாருங்கள், அசுத்தமாக உள்ளது; அதன் காற்று அசுத்தமாக உள்ளது. பாரிஸ் ஒப்பந்தத்தால் மில்லியன் கணக்கான வேலை வாய்ப்புகளை, நிறுவனங்களையும் நான் இழக்க விரும்பவில்லை. இது மிகவும் நியாயமற்றது." என தெரிவித்தார்.
"நாம் டிரில்லியன் கணக்கான டாலர்களை மீட்க வேண்டியிருந்ததால், நான் பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறினேன். நாம் மிகவும் நியாயமற்ற முறையில் நடத்தப்பட்டோம்" என்று ஜோ பைடனுக்கு எதிரான விவாதத்தின்போது டிரம்ப் குற்றஞ்சாட்டினார்.
இந்தியர்கள் எதிர்வினை
டிரம்பின் இந்த கருத்தை ஆராய்ந்து பலர் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
இந்த கருத்துகள் பலருக்கும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, இது உள்நோக்கம் உள்ளதாக சிலர் கருதுகின்றனர். இதனை கவனத்தில் எடுத்துக்கொள்ளும்படி பலரும் பிரதமர் மோதியிடம் சிலர் வலியுறுத்தியுள்ளனர்.
அதே சமயத்தில் உலகத்திலேயே மிகவும் மோசமான காற்று உள்ள நகரம் டெல்லி என்பதையும் ஒப்புக்கொள்கின்றனர்.
இதனையடுத்து வெள்ளிக்கிழமை காலை டிரம்ப் பேசியதை அடுத்து, ட்விட்டரில் "filthy" மற்றும் "Howdy! Modi" போன்ற ஹேஷ்டேகுகள் ட்ரெண்டாக தொடங்கின.
டிரம்பின் கருத்துகள் குறித்து பேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கபில் சிபல், இருநாட்டு தலைவர்களுக்கு இடையே உள்ள தோழைமை இதுதானா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த பிப்ரவரியில் இந்தியாவுக்கு வருகை தந்தார் டிரம்ப். அப்போது இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நிகழ்ச்சி நடத்திய மோதி, டிரம்புக்கு மிகப்பெரிய வரவேற்பு அளித்து கொண்டாட்டங்கள் நடைபெற்றதை பலரும் குறிப்பிட்டனர்.
டிரம்ப் கூறியது சீனாவை பொறுத்தவரை முற்றிலும் உண்மையில்லாமல் இருக்கலாம். ஆனால், இந்தியாவில் இது உண்மையாக இருக்கலாம் என்று பலரும் உணர்கின்றனர்.
இந்தியாவில் காற்று மாசு

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவின் பல நகரங்களில் காற்று மாசு அதிகமாக இருக்கிறது, அதுவும் குறிப்பாக நவம்பர் முதல் ஜனவரி வரையிலான குளிர்காலத்தில்.
இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கிறது. விவசாய நிலங்களை எரிப்பது, வாகனம் மற்றும் தொழிற்சாலையில் இருந்து ஏற்படும் மாசு, பட்டாசுகள் போன்றவை இந்த நச்ச மிகுந்த வாயுக்கள் வெளியேற காரணமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
சமீபத்திய வாரங்களில் டெல்லியில் காற்றுமாசு அதிகரிப்பதாகவும், இதனால் பலருக்கும் மூச்சுத்திணறல் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்த வண்ணம் உள்ளது.
காற்று மாசுவின் தரம் மிகவும் மோசமாகியுள்ளது. உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்த அளவை விட 12 மடங்கு டெல்லியில் காற்று மாசு அதிகமாகி இருக்கிறது.
கோவிட் - 19 குறித்த விவாதம்

பட மூலாதாரம், Reuters
இந்த விவாதத்தில் வெளிநாட்டு கொள்கை குறித்து அதிகம் பேசப்பட வேண்டும் என டிரம்ப் தரப்பு வலியுறுத்தியது ஆனால் கோவிட் - 19 - ஐ மையமாக வைத்து விவாதம் நடைபெற்றது.
எனவே இதன்மூலம் அமெரிக்க மக்கள் அதிகம் அக்கறை கொண்டுள்ள ஒரு விஷயம் தொடர்பாக இந்த விவாதம் நடைபெற்று வருகிறது.
சில வாரங்களில் தயாராகும் என டிரம்ப் குறிப்பிட்ட தடுப்பு மருந்து குறித்து அவர் பேசினார்.
கொரோனா தொற்று சிகிச்சையில் இடம்பெற்றுள்ள புதிய மருந்துகள் குறித்து டிரம்ப் தனது அனுபவத்தை பகிர்ந்து, தற்போது தான் நோய் எதிர்ப்பு சக்தியுடன் இருப்பதாக தெரிவித்தார்.
இது குறித்து தனது தாக்குதல் வாதத்தை எடுத்து வைத்த பைடன், டிரம்ப் இந்த தொற்று தானாக மறைந்துவிடும் என தெரிவித்து வருவது குறித்து கடுமையாக சாடினார். மேலும் 2 லட்சத்து 20 ஆயிரம் அமெரிக்கர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இந்த வருடத்தின் இறுதியில் 2 லட்சம் பேர் உயிரிழக்கக்கூடும் என பைடன் தெரிவித்தார்.
இரு வேட்பாளர்களுக்கும் தொடர்ந்து நடைபெற்ற விவாதத்தில் டிரம்ப் தொடர்ந்து நிலைமை சரியாகி வருவதாக தெரிவித்தார். ஒரு கட்டத்தில் மக்கள் கொரோனாவுடன் வாழப் பழகி கொண்டனர் என டிரம்ப் தெரிவிக்க, மக்கள் அதனுடன் வாழப் பழகவில்லை அதனால் மரணிப்பதை பழகிக் கொண்டு வருகின்றனர் என பைடன் தெரிவித்தார்.
பருவநிலை மாற்றம்

பட மூலாதாரம், Getty Images
இரு வேட்பாளர்களுக்கு இடையிலான இந்த கடைசி விவாதத்தின்போது சில முக்கிய விவகாரங்களில் இருவருக்குமிடையே கருத்து மோதல் ஏற்பட்டது.
குறிப்பாக, டொனால்டு டிரம்ப் தனது சக போட்டியாளர் ஜோ பைடனை நோக்கி, "நீங்கள் எண்ணெய் உற்பத்தித்துறையை மூடிவிடுவீர்களா?" என்று கேட்டார்.
அதற்கு பதிலளித்த பைடன், "எண்ணெய் உற்பத்தித்துறை கடுமையான மாசுபாட்டை ஏற்படுத்துவதால் நான் அதை சீர்மாற்றம் செய்வேன்" என்று கூறினார்.
மேலும், பெரிய எண்ணெய் தொழில்கள் காலப்போக்கில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலால் மாற்றப்பட வேண்டும் என்று பைடன் மேலும் கூறினார்.
"அடிப்படையில் எண்ணெய் தொழிற்துறையை அழிக்கப் போவதாக அவர் கூறுகிறார். டெக்சாஸ், அதை நினைவில் கொள்வீர்களா? பென்சில்வேனியா, ஓக்லஹோமா, ஓஹியோ மக்களே இதை நினைவில் கொள்வீர்களா?" என்று டிரம்ப் கூறினார்.
எல்லையில் குடும்பங்கள் பிரிக்கப்படும் விவகாரம்
அமெரிக்காவின் தெற்கு எல்லையில் ஆவணமில்லாமல் புலம்பெயர்ந்தவர்களிடமிருந்து குழந்தைகளை பிரிக்கும் கொள்கை குறித்து டிரம்பிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த டிரம்ப், ஒபாமா நிர்வாகத்திலும் இதுபோன்ற நடைமுறை இருந்ததாக குறிப்பிட்டார்.
மேலும், "கூண்டுகளை கட்டியது யார்? பைடன்," என்று ஒபாமா - ஜோ பைடன் நிர்வாகத்தில் கையாளப்பட்ட நடைமுறையை சுட்டிக்காட்டும் வகையில் டிரம்ப் கேள்வியெழுப்பினார்.
அதற்கு பதிலளித்த ஜோ பைடன், டிரம்ப் நிர்வாகம் அதற்கும் ஓரடி மேலே சென்று, குடும்பங்களை பிரிக்கும் கொடூரமான, சட்டத்தை மீறிய குற்றச் செயலில் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டினார்.
தேர்தல் எப்போது? யார் யார் வேட்பாளர்கள்?

அமெரிக்க தேர்தல் ஒவ்வொரு முறையும் நவம்பர் மாதத்தின் முதல் செவ்வாய்க் கிழமையில் நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி அமெரிக்க தேர்தல் நடைபெற இருக்கிறது.
பல நாடுகளைப் போல அமெரிக்க அரசியல் அமைப்பிலும் இரு பெரிய கட்சிகளே செல்வாக்கு செலுத்துகின்றன.
அதில் ஏதேனும் ஒரு கட்சியிலிருந்து அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவார்.
ஒன்று அமெரிக்காவின் பழமைவாத அரசியல் கட்சியான குடியரசு கட்சி. தற்போது அதிபராக இருக்கும் டொனால்டு டிரம்ப்தான், இந்த முறையும் இக்கட்சியின் அதிபர் வேட்பாளர்.
தாராளவாத கட்சியான ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பைடன் அதிபர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். மிகவும் அனுபவம் வாய்ந்த அரசியல்வாதியான ஜோ பைடன், முன்னாள் அதிபர் பாரக் ஒபாமாவின் ஆட்சியில் 8 ஆண்டுகள் துணை அதிபராகப் பதவி வகித்தவர்.
இந்த இரு அதிபர் வேட்பாளர்களுமே 70 வயதைக் கடந்தவர்கள். டொனால்டு டிரம்புக்கு 74 வயது. ஜோ பைடன் இந்த முறை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், அமெரிக்க வரலாற்றில் மிகவும் வயதான அதிபரபாக அவர் இருப்பார். அவருக்கு வயது 78.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












