அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்து 500 சொற்களில் தெரிந்து கொள்ளுங்கள்

us presidential election 2020

போர், உலகத் தொற்று மற்றும் பருவநிலை மாற்றம் போன்ற சர்வதேச நெருக்கடிகளுக்கு இந்த உலகம் எவ்வாறு எதிர்வினையாற்றுகிறது என்பதில் ஒரு பெரிய தாக்கம் செலுத்தும் பதவி அமெரிக்க அதிபர் பதவி.

அதனால் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை அமெரிக்கத் தேர்தல் வரும்போது அதில் உலக மக்களுக்கு ஆர்வம் அதிகமாக இருக்கும்.

அமெரிக்க தேர்தல் எப்படி நடைபெறும் என்பது குறித்து சற்று விரிவாக எளிய முறையில் பார்க்கலாம்.

தேர்தல் எப்போது? யார் யார் வேட்பாளர்கள்?

அமெரிக்க தேர்தல் ஒவ்வொரு முறையும் நவம்பர் மாதத்தின் முதல் தேதிக்கு அடுத்து வரும் செவ்வாய்க் கிழமையில் நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி அமெரிக்க தேர்தல் நடைபெற இருக்கிறது.

பல நாடுகளைப் போல அமெரிக்க அரசியல் அமைப்பிலும் இரு பெரிய கட்சிகளே செல்வாக்கு செலுத்துகின்றன.

அதில் ஏதேனும் ஒரு கட்சியிலிருந்து அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவார்.

ஒன்று அமெரிக்காவின் பழமைவாத அரசியல் கட்சியான குடியரசு கட்சி. தற்போது அதிபராக இருக்கும் டொனால்டு டிரம்ப்தான், இந்த முறையும் இக்கட்சியின் அதிபர் வேட்பாளர்.

தாராளவாத கட்சியான ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பைடன் அதிபர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். மிகவும் அனுபவம் வாய்ந்த அரசியல்வாதியான ஜோ பைடன், முன்னாள் அதிபர் பாரக் ஒபாமாவின் ஆட்சியில் 8 ஆண்டுகள் துணை அதிபராகப் பதவி வகித்தவர்.

who is the democratic candidate for the us presidential election going to be held in november 2020

பட மூலாதாரம், Patrick Smith / Getty

படக்குறிப்பு, முன்னாள் அதிபர் பாரக் ஒபாமாவின் ஆட்சியில் 8 ஆண்டுகள் துணை அதிபராக பதவி வகித்தவர் ஜோ பைடன்

இந்த இரு அதிபர் வேட்பாளர்களுமே 70 வயதைக் கடந்தவர்கள். டொனால்டு டிரம்புக்கு 74 வயது. ஜோ பைடன் இந்த முறை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், அமெரிக்க வரலாற்றில் மிகவும் வயதான அதிபரபாக அவர் இருப்பார். அவருக்கு வயது 78.

வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்படுவது எவ்வாறு?

தேசிய அளவில் அதிக வாக்குகளை பெறும் வேட்பாளர்தான் வெற்றியாளராக இருக்கவேண்டும் என்பது இல்லை.

us presidential polls

எடுத்துக்காட்டாக, 2016ஆம் ஆண்டு போட்டியிட்டுத் தோற்ற ஹிலரி கிளின்டனை எடுத்துக்கொள்ளலாம்.

'எலக்டோரல் காலேஜ்' வாக்குகள் எனப்படும் வாக்காளர் தொகுதிகள் எத்தனையை ஒருவர் கைப்பற்றுகிறார் என்பதை வைத்தே அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒவ்வொரு மாகாணமும் மக்கள் தொகைக்கு ஏற்ப, குறிப்பிட்ட எலக்டோரல் காலேஜ் வாக்குகளைப் பெற்றிருக்கும். மொத்தம் உள்ள 538 எலக்டோரல் காலேஜ் வாக்குகளில் , 270 அல்லது அதற்கும் மேலான வாக்குகளைப் பெறும் வேட்பாளர்தான் வெற்றியாளர்.

யாரெல்லாம் வாக்களிக்க முடியும்? வாக்களிப்பது எப்படி?

US election 2020:

அமெரிக்க குடியுரிமை பெற்ற ஒருவருக்கு 18 வயது முடிந்திருந்தால் அதிபர் தேர்தலில் அவரால் வாக்களிக்க முடியும்.

எனினும் பல மாகாணங்கள் வாக்களிக்கும் முன்னர் வாக்காளர்கள் தங்கள் அடையாளத்தை நிரூபிக்கக்கூடிய ஆவணங்களை கொண்டு வரவேண்டும் என சட்டம் இயற்றியுள்ளன.

வாக்காளர் மோசடியை தடுப்பதற்கு இவற்றை கொண்டு வருவது அவசியமாகிறது என குடியரசுக் கட்சியினர் கூறுகின்றனர். ஆனால் இதை வாக்காளர்களை ஒடுக்கும் செயல் என, குறிப்பாக ஓட்டுனர் உரிமம் போன்ற அடையாள அட்டை இல்லாத ஏழை மற்றும் சிறுபான்மையின வாக்காளர்களை ஒடுக்கும் செயல் என ஜனநாயக கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர்.

சிறைக்கைதிகள் வாக்களிக்கலாமா வேண்டாமா என்பது குறித்து ஒவ்வொரு மாகாணமும் வெவ்வேறு விதிகள் வைத்துள்ளன.

பெரும்பாலும் சிறை தண்டனை பெற்ற கைதிகள் வாக்களிக்கும் உரிமையை இழப்பார்கள். தண்டனை காலம் முடிந்த பிறகு வாக்களிக்கும் உரிமை அவர்களுக்கு மீண்டும் கிடைக்கும்.

தேர்தல் நாளன்று வாக்குச்சாவடிக்கு சென்று மக்கள் வாக்களிப்பார்கள். ஆனால் சமீப ஆண்டுகளில் வேறு சில முறைகளும் கொண்டுவரப்பட்டன. 2016ஆம் ஆண்டு 21 சதவீத மக்கள் தபால் வழியாக தங்கள் வாக்குகளை செலுத்தினர்.

இந்த ஆண்டு கொரோனா உலகத் தொற்று காரணமாக மக்கள் எப்படி வாக்களிப்பார்கள் என்ற விவகாரம் ஒரு சர்ச்சையாக எழுந்துள்ளது. அஞ்சல் வாக்கு சீட்டுகளை பரவலாக பயன்படுத்த வேண்டும் என அரசியல்வாதிகள் கூறுகின்றனர். ஆனால் இது வாக்காளர் மோசடியை அதிகரிக்கும் என அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டுகிறார்

இந்த தேர்தல் அதிபரை தேர்ந்தெடுக்க மட்டுமா?

இல்லை. அனைவரின் கவனமும் அதிபர் வேட்பாளர்களான டிரம்ப் மற்றும் பைடன் மீதுதான் இருக்கும்.

democratic candidate for us presidential election 2020

ஆனால் வாக்காளர்கள் காங்கிரஸின் புதிய உறுப்பினர்களையும் இத்தேர்தலில் தேர்ந்தெடுப்பார்கள்.

நாடாளுமன்றம் ஏற்கனவே ஜனநாயக கட்சியினர் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில் தற்போது செனட் சபையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர கவனம் அவர்கள் கவனம் செலுத்துவார்கள்.

இரு அவைகளிலும் அவர்களுக்கு பெரும்பான்மை இருந்தால் மீண்டும் டிரம்ப் அதிபர் ஆனால்கூட, அவருடைய திட்டங்களை தடுக்கவும் தாமதப்படுத்தவும் ஜனநாயக கட்சியினரால் முடியும்.

முடிவுகள் எப்போது தெரிய வரும்?

வாக்கு எண்ணிக்கை முடிய பல நாட்கள் ஆகும். ஆனால் தேர்தல் முடிந்த மறுநாள் காலை யார் வெற்றியாளர் என்பதை கணித்து விட முடியும்.

2016ஆம் ஆண்டு அதிகாலை 3 மணிக்கு நியூயார்க்கில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் முன்பு தனது வெற்றி உரையை ஆற்றினார் அதிபர் டிரம்ப்.

ஆனால் இந்த ஆண்டு தபால் வாக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் வெற்றியாளர் யார் என்பதை தெரிந்துகொள்ள சில நாட்கள் ஆகலாம் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

வெற்றியாளர் அதிபர் பொறுப்பு ஏற்றுக் கொள்வது எப்போது?

us president election 2020 american election 2020 result date

ஒருவேளை வரும் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றால் டிரம்பின் இடத்திற்கு அவர் உடனடியாக வரமாட்டார். புதிய அமைச்சர்களை நியமனம் செய்யவும், திட்டம் தீட்டவும், அவருக்கு சிறிது காலம் வழங்கப்படும்.

வாஷிங்டன் டிசியில் உள்ள கேபிடல் கட்டடத்தில் ஜனவரி 20ஆம் தேதியன்று புதிய அதிபர் அதிகாரபூர்வமாக பதவி ஏற்றுக்கொள்வார்.

அதனைத் தொடர்ந்து தனது நான்கு ஆண்டு காலப் பணியைத் தொடங்க புதிய அதிபர் வெள்ளை மாளிகைக்கு செல்வார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: