மனைவி மீது தாக்குதல் தொடுத்த சுறா: அடித்து விரட்டிய கணவர் மற்றும் பிற செய்திகள்

பட மூலாதாரம், Barcroft Media
தனது மனைவியை சுறாமீன் ஒன்று தாக்கிக் கொண்டிருப்பதை பார்த்த அலைச்சறுக்கு வீரர் ஒருவர் சுறா மீது பாய்ந்து அதை அங்கிருந்து விரட்டும் வரை கைகளால் குத்தி தனது மனைவியை காப்பாற்றியதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
35 வயதான சாண்டெல்லே டாய்ல் என்ற பெண், ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாகாணத்திலுள்ள ஷெல்லி கடற்கரையில் தனது கணவருடன் அலைச்சறுக்கில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
அப்போது, சுறாமீன் ஒன்று அவரைத் தாக்கத் தொடங்கியது. அதைக் கண்ட அவரது கணவர், அலைச்சறுக்கு பலகையிலிருந்து சுறா மீது தாவி குதித்து அது சாண்டெல்லாவை விடுவிக்கும் வரை தொடர்ந்து கடுமையாக தாக்கிக்கொண்டே இருந்தார்.
சுறாமீன் அங்கிருந்து விலகிச் சென்றதும் தனது மனைவியை கடற்கரைக்கு பத்திரமாக திரும்ப அழைத்து வந்துள்ளார்.
சுறா மீன் தாக்கியதில் வலது காலில் கடுமையான காயம் ஏற்பட்ட அவர் உடனடியாக வானூர்தி மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்த நிலையில், சாண்டெல்லேவை சுமார் 10 அடி நீளம் கொண்ட இளம் வெள்ளை சுறா ஒன்று தாக்கியிருக்கக் கூடும் என்று வல்லுநர்கள் கூறுவதாக போர்ட் மேக்வாரி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில், அதிவேகமாக செயல்பட்டு தன் மனைவியை காப்பாற்றிய கணவருக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. அவரது பெயர் மார்க் ரேப்லே என்று ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ்: உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ் : இதுவே கடைசி கொள்ளை நோய் அல்ல
- கொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன?

"இவர் அலைச்சறுக்கு பலகையிலிருந்து சுறா மீது தாவி குதித்து, அதை அடித்தே விரட்டியதுடன் தன் மனைவியை அங்கிருந்து கடற்கரைக்கு திரும்ப அழைத்து வந்துள்ளார். இது உண்மையிலேயே ஒரு வீரதீர செயல்தான்" என்று சர்ப் லைஃப் சேவிங் என்.எஸ்.டபிள்யூ என்ற அலைச்சறுக்கு வீரர்கள் பாதுகாப்பு அமைப்பின் தலைமை நிர்வாகியான ஸ்டீவன் பியர்ஸ் கருத்துத் தெரிவித்துள்ளதாக சிட்னி மார்னிங் செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த பகுதியில் கடந்த சில மாதங்களில் நடக்கும் மூன்றாவது பயங்கரமான சுறா மீன் தாக்குதல் சம்பவம் இது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, சுறாவிடமிருந்து தனது கணவரால் காப்பாற்றப்பட்ட சாண்டெல்லே டாய்ல்ஸுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து மகேந்திர சிங் தோனி ஓய்வு

பட மூலாதாரம், Getty Images
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து மகேந்திர சிங் தோனி ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
கடந்த 2014-ம் ஆண்டு இறுதியிலேயே தோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக ஓய்வு பெற்றுள்ளார்.
விரிவாக படிக்க: சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து மகேந்திர சிங் தோனி ஓய்வு

கேரளா மூணாறு நிலச்சரிவு: களநிலவரம் என்ன?

பட மூலாதாரம், SEBINSTER FRANCIS
"உடன் இருந்த அண்ணன், தம்பி, தெரிந்தவர்கள் என அனைவரையும் பறிகொடுத்து விட்டு நிற்கிறோம். இறந்தவர்களின் உடலை அடையாளம் காண இறைவன் என்னை உயிருடன் வைத்துள்ளான்" என்கிறார் மூணாறு நிலச்சரிவில் தனக்கு நெருக்கமானவர்களை இழந்த முருகன்.
மூணாறு நிலச்சரிவில் சிக்கிய நபர்களின் உடல்களைத் தேடும் பணி 9ஆவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
விரிவாக படிக்க: மூணாறு நிலச்சரிவு: “சொந்தமும் இல்லை, எதிர்காலமும் இல்லை” - இதுதான் கள நிலவரம் #GroundReport

பாகிஸ்தானிடமிருந்து செளதி அரேபியாவை பறித்துக்கொண்டதா இந்தியா?

பட மூலாதாரம், Getty Images
இஸ்ரேலுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையே வியாழக்கிழமை ஒரு முக்கிய ஒப்பந்தம் எட்டப்பட்டது, அதன்படி மேற்குகரையின் பெரும் பகுதிகளை இணைத்துக்கொள்ளும் தனது திட்டங்களை இஸ்ரேல் நிறுத்திவைப்பதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளையும் தொடங்கவுள்ளது.
வளைகுடாவின் அரபு நாடுகளுடன் இஸ்ரேலுக்கு இதுவரை இராஜதந்திர உறவுகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.
விரிவாக படிக்க: பாகிஸ்தானிடமிருந்து செளதி அரேபியாவை பறித்துக்கொண்டதா இந்தியா?

இலங்கை யுத்த காலத்தில் காணாமல் போன இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள் நிலை என்ன?

பட மூலாதாரம், Getty Images
யுத்தக் காலத்தில் காணாமல் போன இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள் தொடர்பில் ஆராய தான் நடவடிக்கை எடுப்பதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவிக்கின்றார்.
வடக்கு கிழக்கு பகுதிகளில் வாழும் இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு தான் உதவிகளை வழங்க தயாராகவே உள்ளதாகவும் அவர் கூறினார்.


சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












