குடும்ப நல வழக்கு: கணவருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க மனைவிக்கு நீதிமன்றம் உத்தரவு

நீதிமன்றம்

பட மூலாதாரம், Getty Images

முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

கணவருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க மனைவிக்கு நீதிமன்றம் உத்தரவு

உத்தரப்பிரதேசத்தில் குடும்ப நல வழக்கொன்றில், பிரிந்து வாழ்ந்து வரும் கணவருக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்க வேண்டுமென அரசாங்க ஓய்வூதியம் பெறும் மனைவிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

"உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த கணவன் - மனைவி தம்பதி பல ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மனைவி அரசாங்க ஊழியர் என்பதால் அவருக்கு ஓய்வூதியம் வருகிறது.

இந்த நிலையில், பராமரிப்பு செலவுக்காக மனைவியிடம் இருந்து மாதந்தோறும் பணம் பெற்றுத் தருமாறு கணவர், இந்து திருமணச் சட்டம் 1955-இன் கீழ் குடும்ப நல நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

Banner image reading 'more about coronavirus'
Banner

இந்த வழக்கில் நீதிபதி, மனுதாரரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, ஓய்வுபெற்ற அரசு ஊழியராக இருந்ததாலும், மாதத்திற்கு 12,000 ரூபாய் ஓய்வூதியம் பெறுவதாலும் அந்த பெண், தனது கணவருக்கு பராமரிப்பு கொடுப்பனவாக மாதத்திற்கு 1,000 ரூபாய் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Presentational grey line

இந்தியாவில் அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்து இலவசம்?

கொரோனா தடுப்பு மருந்து

பட மூலாதாரம், Getty Images

கொரோனா தடுப்பு மருந்துக்கு இந்திய அரசு 51 ஆயிரம் கோடி ரூபாயை தயாராக வைத்துள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிப்பதாக இந்து தமிழ் திசை செய்தி வெளியிட்டுள்ளது.

"தடுப்பு மருந்து தயாரானவுடன் நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பு மருந்து போடப்படுவதை மத்திய அரசு உறுதி செய்யும் என்று பிரதமர் நரேந்திர மோதி கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு 700 கோடி டாலர் (சுமார் ரூ.51 ஆயிரம் கோடி) ஒதுக்கியுள்ளது. இத்தொகை வரும் மார்ச் 31-ம் தேதியுடன் முடியும் நடப்பு நிதியாண்டிலேயே ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகைக்கு பிறகும் ஏற்படும் கூடுதல் செலவுக்கு நிதி ஒதுக்குவதில் அரசுக்கு எவ்வித பிரச்சனையும் இருக்காது. 130 கோடி மக்களுக்கும் தடுப்பூசி அளிப்பது உறுதி செய்யப்படும்.

கொரோனா தடுப்பு மருந்துக்காக ஒரு நபருக்கு அனைத்து செலவும் சேர்த்து 6 முதல் 7 டாலர் வரை (சுமார் 450 ரூபாய் முதல் 550 ரூபாய் வரை) செலவிட வேண்டியிருக்கும் என மத்திய அரசு கணக்கிட்டுள்ளது. முதல் டோஸ் மற்றும் பூஸ்டர் டோஸ் என ஒருவருக்கு 2 முறை தடுப்பு மருந்து போடப்படும். இதன்படி தடுப்பு மருந்துக்கான செலவு மட்டும் ஒரு நபருக்கு 2 டாலர் (150 ரூபாய்) செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதுதவிர அதனை இருப்பு வைத்தல், போக்குவரத்து, கட்டமைப்பு மற்றும் பிற தேவைகளுக்காக ஒரு நபருக்கு 4 முதல் 5 டாலர் வரை செலவிட வேண்டியிருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது" என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Presentational grey line

'கோவேக்சின்' தடுப்பு மருந்து: 3-ஆம் கட்ட மருத்துவ பரிசோதனைக்கு அனுமதி

கோவேக்சின்

பட மூலாதாரம், BHARAT BIOTECH

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து பாரத் பயோ டெக் நிறுவனம் கண்டுபிடித்த 'கோவேக்சின்' தடுப்பு மருந்து 3ஆம் கட்ட பரிசோதனை தொடங்க உள்ளது. இதற்கான அனுமதியை இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு வழங்கியுள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

மூன்றாவது கட்ட பரிசோதனை 28,500 பேரிடம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டின் 10 மாநிலங்களில் டெல்லி, மும்பை, பாட்னா, லக்னோ உள்ளிட்ட 19 நகரங்களில் பரிசோதனை நடைபெற உள்ளது. இதுதவிர ஜைடெஸ் கெடில்லா நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்து தற்போது இரண்டாம் கட்ட பரிசோதனையிலும், சீரம் நிறுவனத்தின் தயாரிப்பான அஸ்ட்ராஜெனக்கா மருந்து 2 மற்றும் 3-ம் கட்ட பரிசோதனையிலும் உள்ளன" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Presentational grey line

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: