ஜல்லிக்கட்டு களத்தில் வீரர்களை பதறச் செய்யும் இந்த 6 காளைகள் பற்றி தெரியுமா?

பட மூலாதாரம், shyam
- எழுதியவர், இரா.சிவா
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாட்டில் பொங்கலை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. புகழ் பெற்ற அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் போட்டிகளும் நெருங்கிவிட்டன.
ஜல்லிக்கட்டு என்பதென்ன?
வீரர்களுக்கும் மாடுகளுக்கும் இடையே களத்தில் நடக்கும் 'நீயா… நானா என்ற போட்டி தானே. அந்த மாடுபிடி வீரர்கள் காளையை பற்றி மனம் திறந்து பேசினால் எப்படி இருக்கும்?
ஜல்லிக்கட்டு களத்தில் தாங்கள் வியந்து பார்த்த காளைகளை பற்றி சில வீரர்கள் பிபிசியிடம் பகிர்ந்து கொண்டனர்.
தோட்டா

பட மூலாதாரம், Selvakumar
இது திருப்பரங்குன்றம் முன்னாள் எம்.எல்.ஏ. மறைந்த சீனிவேல் என்பவரது காளை. இந்தக் காளை வந்தால் களமே சற்று நேரம் பதறும் என்கிறார் முன்னாள் ஜல்லிக்கட்டு வீரரும் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு நலச்சங்கம் என்ற அமைப்பின் மாநில நிறுவனத் தலைவருமான முடக்கத்தான் மணி.
''தோட்டா களத்தில் நின்று விளையாடும். இந்த மாட்டை அணைவதே சிரமம். களத்தில் நிற்பவர்களை நேருக்கு நேர் வாடா… என அழைப்பது போல நிற்கும். தோட்டா இறங்கினால் களமே சற்று நேரம் பதறும், காலியாகும்,'' என்கிறார் முடக்கத்தான் மணி.
இதுவரை 40-க்கும் மேற்பட்ட வாடிவாசலில் இந்த மாடு களமிறங்கி உள்ளதாக சீனிவேலுவின் மகன் செல்வகுமார் கூறுகிறார். ஒரு லட்ச ரூபாய் பரிசு, பிடித்தால் மாட்டையே தருகிறோம் என அறிவித்தும் கூட இந்த மாடு பிடிபட்டதில்லை' என்கிறார் செல்வகுமார்.
சௌமி

பட மூலாதாரம், sathish
இது புதுக்கோட்டை மாவட்டம் கைக்குறிச்சி தமிழ்ச்செல்வன் என்பவரது காளை. ஜல்லிக்கட்டு களத்தில் இது ஒரு ஸ்டார் மாடு என்கிறார் ஜல்லிக்கட்டு வீரர் பாரதி.
''மாடு வெளியே வந்ததும் வீரர்கள் பாதுகாப்புக்காக உள்ள கம்பிகளில் ஏறி தொங்குவார்கள். மாடு அப்படியே ஒரு தோரணையாக நிமிர்ந்து பார்க்கும். கீழே இறங்கவே யோசிப்பார்கள். பல பேர் பிடிக்க நினைத்தும் இதுவரை இந்த மாட்டை பிடிக்க முடியவில்லை,'' என்கிறார் பாரதி.
''சௌமி 30-க்கும் மேற்பட்ட வாடிகளில் களமிறங்கி இருக்கிறது. இதுவரை எங்கும் பிடிபட்டதில்லை. பாய்ச்சல் தான் சௌமியின் சிறப்பே. வாடியை விட்டு வெளியே வந்ததும் எந்தப் பக்கம் ஆள் இருந்தாலும் பாய்ந்துவிடும்,'' என்கிறார் காளை உரிமையாளரின் உறவினர் சதீஸ்.
பில்லா

பட மூலாதாரம், shyam
இது மதுரை மாவட்டம் கே.புதூரைச் சேர்ந்த கே.ஆர். ஆனந்தின் காளை. இந்த மாடு வரும் தோரணையே நன்றாக இருக்கும் என்கிறார் ஜல்லிக்கட்டு வீரர் பொதும்பு பிரபா.
''இந்த மாட்டைப் பிடிக்க வேண்டும் என்பது என் ஆசை. ஆனால், கடந்த முறை பாலமேட்டில் முயற்சித்த போது என்னை தூக்கி எறிந்துவிட்டது. வாடிக்குள் இருந்து வருவதே பறந்து வருவது போல இருக்கும். குதிரை மாதிரி கால்களை தூக்கிக் கொண்டு வரும். வெளியே வந்து ஒரு சுற்று சுற்றி விட்டுதான் போகும்.'' என்கிறார் பொதும்பு பிரபா.
''இதுவரை 150-க்கும் மேற்பட்ட வாடிவாசலில் களமிறங்கி உள்ளது. ஒரே ஒருமுறை மட்டும்தான் இந்த மாடு பிடிபட்டிருக்கிறது. வாடியை விட்டு வரும் போதே ஸ்டைலாக வெளியே வரும். களத்தில் ஆக்ரோஷமாக இருந்தாலும் வீட்டில் அமைதியாக இருக்கும்'' என்கிறார் மாட்டின் உரிமையாளரின் சகோதரர் ஷ்யாம்.
ஆண்டிச்சாமி கோவில் காளை

பட மூலாதாரம், Karuppasamy
இது மதுரை மாவட்டம் வெள்ளியங்குன்றத்தை சேர்ந்த கருப்பசாமி என்பவரது காளை. இது ஒரு தரமான காளை என்கிறார் முடக்கத்தான் மணி.
''பிடித்த உடனே ஆளையை பறக்க விட்டுவிடும். போடும் பந்துகள் அனைத்தையும் அடிப்பவர்தான் டாப் பேட்ஸ்மேன், அது போல அணைய வரும் அத்தனை பேரையும் பறக்கவிடும் டாப் காளைதான் இந்தக் காளை. பிடிக்க வருபவர்களை கீழே தள்ளுவது வேறு, உதைத்து தள்ளுவது வேறு, ஆனால், ஆண்டிச்சாமி கோவில் காளை ஆளையே காற்றில் பறக்கவிட்டுவிடும்'' என்கிறார் முடக்கத்தான் மணி.
மற்றொரு ஜல்லிக்கட்டு வீரரான திருப்பரங்குன்றம் கார்த்தியும் இதே காளையை தானும் வியந்து பார்த்ததாக கூறுகிறார்.
''திமிலில் ஒரு நொடிக்கு மேல் ஆளை வைத்திருக்காது. எத்தனை பேர் பிடித்தாலும் தூக்கி எறிந்துவிடும். இன்றைக்கு அனைத்து ஜல்லிக்கட்டிலும் இந்த மாடு களமிறங்குகிறது. ஓய்வு இல்லாமல் விளையாடினாலும் அசராமல் விளையாடுகிறது.'' என்கிறார் திருப்பரங்குன்றம் கார்த்தி.
9 ஆண்டுகளுக்கு மேலாக இந்த மாடு ஜல்லிக்கட்டில் களமிறங்குவதாக உரிமையாளர் கருப்பசாமி கூறுகிறார். ஆரம்ப காலத்தில் ஒரு முறை மட்டும் பிடிபட்டதாகவும், அதன் பிறகு இதுவரை பிடிபடவில்லை என்கிறார் கருப்பசாமி.
கைதி 2

பட மூலாதாரம், PCN Kannan
இது புதுக்கோட்டை மாவட்டம் தாயினிப்பட்டியை சேர்ந்த பிசிஎன் கண்ணன் என்பவரது காளை. கைதி 2 களத்தில் வீரர்கள் நெருங்க முடியாத காளை என்கிறார் பாரதி.
''களத்துக்குள் ஆட்களையே இறங்கவிடாது. நீண்ட தூரம் கூட வராது. கட்டை அருகிலேயேயே இருக்கும். ஒருத்தர் உள்ளே வந்தால் கூட அவர்களை விரட்டிச் சென்று அமுக்கிவிடும். களத்துக்கு அந்த மாடு வருகிறது என்றாலே அதன் பெயரில் ஒரு பரிசை எழுதி வைத்துவிடலாம்'' என்கிறார் பாரதி.
''களத்தில் வீரர்கள் யாராவது தொட்டுவிட்டால் ஆவேசமாகிவிடும். ஆனால், களத்தை விட்டு வெளியே வந்துவிட்டால் அமைதியாகிவிடும். சிறுநீர் கழிக்க வேண்டும் என்றால்கூட கழுத்தில் கட்டி இருக்கும் கயிறு எவ்வளவு தூரம் நீளுமோ அவ்வளவு தூரம் சென்றுதான் சிறுநீர் கழிக்கும். அந்தளவுக்கு புத்திக் கூர்மையான மாடு.'' என்கிறார் உரிமையாளர் கண்ணன்.
பவி

பட மூலாதாரம், Parthasarathy
இது தேனி மாவட்டம் எருமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த வழக்கறிஞர் பார்த்தசாரதி என்பவரது காளை. ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி இந்தக் காளை விளையாடும் என்கிறார் பாரதி.
''விறுவிறுப்பே இல்லாமல் இருக்கும் போது இந்த மாடு வந்தால் களமே மாறிவிடும். அதனுடைய கொம்பும் உடம்பும் அழகாக இருக்கும். களத்துக்கு உள்ளே இருக்கும் வீரர்களை கலங்க வைக்க கூடிய, வெளியே இருக்கும் ரசிகர்களை கவரக்கூடிய காளையாக இது உள்ளது'' என்கிறார் பாரதி.
ரசிகர்களை மட்டுமின்றி வீரர்களையும் கவர்ந்த இந்த 6 காளைகளும் இந்தாண்டும் ஜல்லிக்கட்டில் களமாட காத்திருக்கின்றன. அந்த காளைகளை அணைந்து ரசிகர்களின் புகழ் மாலைகளை சூட வேண்டும் என்று வீரர்கள் விரும்புகின்றனர்.
இந்தக் காளைகளைத் தாண்டியும் எண்ணற்ற சிறந்த ஜல்லிக்கட்டு காளைகள் தமிழ்நாட்டில் உள்ளதாக கூறிய வீரர்கள், ஒவ்வொரு மாடும் ஒவ்வொரு வகையில் தனித்துவமானது என்பதையும் குறிப்பிடத் தவறவில்லை.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












