நீட் தேர்வு: நரேந்திர மோதி அரசை பகைத்துக்கொள்ள அதிமுக அரசு விரும்பவில்லையா?

எடப்பாடி பழனிசாமி

பட மூலாதாரம், Facebook

    • எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
    • பதவி, பிபிசி தமிழ்

மருத்துவ படிப்பிற்கான கட்டாய நுழைவுத் தேர்வான நீட் ஏற்படுத்திய அச்சத்தால், கடந்த 10 நாட்களில் மூன்று தமிழக மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில், இந்தியா முழுவதும் 10 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வை இன்று எதிர்கொள்கிறார்கள்.

முந்தைய ஆண்டுகளை காட்டிலும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் நுழைவு தேர்வு எழுத செல்லும் மாணவர்கள் தேர்வுக்கு மட்டும் தயாராகவில்லை. தடுப்பு மருந்து கண்டறியப்படாத கொரோனா தொற்றின் பரவலுக்கு ஆளாக வாய்ப்புள்ள நேரத்தில் இந்த தேர்வை எழுதுகிறார்கள்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனிதா தொடங்கி பல மாணவர்களின் தன்னம்பிக்கையை குலைக்க காரணமானது வெறும் தேர்வு பயம் மட்டுமே என்ற கேள்வி எழுந்துள்ளது. 12ம் வகுப்பு வரை பல தேர்வுகளை எதிர்கொண்டுள்ள மாணவர்கள் இந்த நுழைவுத் தேர்வை எதிர்கொள்ள அச்சப்பட காரணம் என்ன, ஒவ்வோர் ஆண்டும் தேர்வு குறித்த குழப்பங்கள் ஏன் தொடர்கதையாக நீடிப்பது ஏன் என்ற கேள்விகள் எழுகின்றன.

Banner image reading 'more about coronavirus'
Banner

இந்தியாவில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு மாணவர் தற்கொலை செய்துகொள்வதாக மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் கூறுவதை சுட்டிக்காட்டுகிறார் சென்னையைச் சேர்ந்த மருத்துவ உளவியல் நிபுணர் சுனில் குமார்.

''தேர்வு பயம் என்பது தேர்வுக்கு தயாராகவில்லை என்பது மட்டுமே காரணமல்ல. தேர்வு எழுத அதிக தயாரிப்புகளை செய்த மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளதைதான் நாம் சமீப காலங்களில் பார்க்கிறோம். தோல்வி பயம் என்பது ஒரு காரணி மட்டுமே. தற்கொலை எண்ணம் ஏற்பட அந்த மாணவர் மட்டுமே காரணமல்ல. ஒரு சில குழந்தைகள் நாள்பட்ட அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொள்வார்கள். ஒரு சில குழந்தைகள் திடீரென தற்கொலை முடிவுகளை எடுப்பத்துண்டு,''என்கிறார் சுனில் குமார்.

நீட் தேர்வை பொறுத்தவரை சமூக அழுத்தம் பல மாணவர்களை காவு வாங்கியுள்ளது என்கிறார் சுனில் குமார். '

''நீட் தேர்வு குறித்த தீர்க்கமான முடிவை மத்திய மாநில அரசாங்கம் வெளியிடவில்லை. முதலில் பிற பொது தேர்வுகளை ரத்து செய்கிறார்கள். பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பதற்கு அறிவிப்பு வரவில்லை. இதுபோன்ற காரணங்களால் இந்த ஆண்டு தேர்வு நடக்காது என்ற எண்ணம் ஆழமாக மாணவர்கள் மத்தியில் பதிந்துவிட்டது.''

''ஒரு சிலர் தேர்வு தள்ளிப்போகும் என்றும் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். ஆனால் குறுகிய காலத்தில், அதுவும் நோய் தொற்று அதிகரித்துள்ள நேரத்தில் தேர்வு எழுதவேண்டும், அதில் வெற்றி பெறவில்லை என்றால் ஏமாற்றம் அடைவோம் என்ற எண்ணம் மாணவர்களிடம் தற்கொலை எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது,'' என்கிறார் சுனில் குமார்.

தொடரும் நீட் தற்கொலைகள்

2013ஆம் ஆண்டு முதல் முறையாக நீட் தேர்வு தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, கேரளா உட்பட பல மாநிலங்கள் நீட் தேர்விற்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தன. கல்வி இணக்கப் பட்டியலில் ( Concurrent List) வருவதால் தங்கள் அதிகார வரம்பில் தலையிடுவது போன்று ஆகும் என சில மாநிலங்கள் வாதிட்டன. 2016ல் தான் ஆட்சிக்கு வந்தால் நீட்டிற்கு எதிரான சட்டம் கொண்டு வரப்படும் என தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்த ஜெயலலிதா, நீட்டிற்கு எதிராக பிரதமர் நரேந்திர மோதிக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.

பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் 2017 மே மாதம் நீட் தேர்வு நடைபெற்றது. இதில் மாணவ மாணவியர் கடும் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர் என சர்ச்சைகள் கிளம்பின. தேர்வு மையங்கள் மாணவர்களின் சொந்த ஊரில் இருந்து வேறு மாநிலங்களில் அமைக்கப்பட்டிருந்தது, கேள்வி தாளில் இருந்த பிழைகள், கேள்வி தாளில் மொழிமாற்ற பிழைகள் என பல்வேறு குளறுபடிகள் நிறைந்த தேர்வாக நீட் அமைந்தது.

2017 ஜூன் மாதம் நீட் முறையில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வகை செய்யும் தமிழக அரசின் சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறு டெல்லியில் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார். ஆனால் நீட் தேர்வு கட்டாயம் என உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வந்தது. 2017 செப்டம்பர் மாதம் அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார். அடுத்து விழுப்புரம் மாவட்ட மாணவி பிரதீபா, அரியலூர் மாணவர் விக்னேஷ், மதுரை மாணவி ஜோதி ஸ்ரீ துர்க்கா என பட்டியல் நீளுகிறது.

மாணவர்களின் தற்கொலைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளபோது, நீட் தேர்வு ரத்தை நோக்கி பணியாற்றுவதாக கூறினாலும், தனது எதிர்ப்பை அதிமுக வலுவாக முன்வைப்பதில்லை என்ற குற்றசாட்டை எதிர்க்கட்சிகள் வைக்கின்றன.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

பல சிக்கல்களுடன் நடத்தப்படும் தேர்வு முறை மாணவர்களுக்கு உளைச்சலை ஏற்படுத்துகிறது என ஆசிரியர் மற்றும் பால் சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தளாரான ஆயிஷா நடராஜன் கூறுகிறார். ''வெவ்வேறு பாட திட்டங்களை படித்தவர்கள், தேர்வுக்காக பயிற்சி வகுப்புக்கு செல்லமுடியாதவர்கள், பணம் கட்டி பயிற்சி பெற்றவர்கள் என சமூக பின்னணியில் வித்தியாசங்களை கொண்ட குழந்தைகளை ஒரு தேர்வு முறையை எதிர்கொள்ள வேண்டும் என்ற கட்டாயம்தான் தற்கொலைக்கு காரணம். நீட் தேர்வுக்காக பெற்றோர் பணம் செலுத்தியுள்ளார்கள் என்பது எப்படி அழுத்தத்தை ஏற்படுத்துகிறதோ, பயிற்சி வகுப்புகளை நாம் படிக்கவில்லை என்ற எண்ணமும் சம அளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது,'' என்கிறார் நடராஜன்.

நீட்

பட மூலாதாரம், Getty Images

கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழக அரசு நீட் தேர்வு ரத்து செய்வது குறித்து பேசியதைவிட நீட் தேர்வை மாணவர்கள் எப்படி எதிர்கொள்ளவேண்டும் என்று பேசியதுதான் அதிகம் என்கிறார் நடராஜன்.

''ஆட்சியில் உள்ள அதிமுக அரசுக்கு நீட் தேர்வுக்கு எதிரான உறுதியான நிலைப்பாடு இல்லை. மத்திய அரசை பகைத்துக்கொள்ளக்கூடாது என்பதற்காக நடவடிக்கை எடுக்கிறார்கள். மாணவர்களுக்கு உறுதுணையாக இருப்போம் என அவர்கள் எண்ணியதாக தெரியவில்லை. பாஜக ஆளாத மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் ஒன்றாக நின்று உச்சநீதிமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக வழக்கு தொடுத்த போது, தமிழக அரசின் குரல் மிக தாமதமாக ஒலித்தது. கொரோனா தொற்று அதிகரித்துள்ள நேரத்தில் தேர்வை நடத்த முடியாது என மாநில அரசு உறுதியான முடிவை எடுத்து, உச்சநீதிமன்றத்தில் வாதாடியிருக்கலாம்.''

''இந்தியாவில் அதிக தொற்று ஏற்பட்டுள்ள மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் இருப்பதால் மாணவர்களின் நலன் கருதி தேர்வை நடத்துவதை தள்ளிப்போடுங்கள் என கோரலாம். வாய்ப்புகள் இருந்தும் வாய்பேசாமல் இருந்தது தமிழக அரசுதான்,''என்கிறார் நடராஜன்.

மேலும் அவர், ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்கிறார் என்பதை அறிந்துள்ள அரசாங்கம் குறைந்தபட்சம் கொரோனா காலத்திலாவது மாணவர்களுக்கு இலவச மனநல ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்திருக்கலாம் என்கிறார்.

''மாணவர்களுக்கு உதவ மனநல ஆலோசனை வசதியை அளித்திருந்தால், குறைந்தபட்சம் இறப்புகளை குறைத்திருக்கலாம். அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி சட்டமன்றத்தில் மேலும் ஒரு முறை நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானத்தை அங்கீகரித்து தனது எதிர்ப்பை வெளியிடலாம். பல வழிகளில் எதிர்ப்புகளைத் தெரிவிக்கலாம்,'' என்கிறார் நடராஜன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: