அமித் ஷா டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீர் அனுமதி

பட மூலாதாரம், Getty Images
இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்றிரவு (சனிக்கிழமை) மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்பு மருத்துவ பரிசோதனை செய்யப்படுவதற்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார் என எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவாசக் கோளாறு காரணமாக அவர் சனிக்கிழமை இரவு மருத்துவமனை அழைத்துச்செல்லப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மூச்சு விடுவதில் சிரமம் இருந்ததால் அவர் மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டதாக அமித் ஷாவின் குடும்ப நண்பர்கள் பிபிசியிடம் உறுதிப்படுத்தியுள்ளனர்.


கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கோவிட்-19 தொற்றில் இருந்து மீண்ட பின்பு கொரோனாவுக்குப் பிந்தைய சிகிச்சைக்காக இரண்டு வாரங்களுக்கு முன்பு ஏற்கனவே எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
ஆகஸ்ட் 2ஆம் தேதி இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
``கொரோனா தொடக்க அறிகுறிகள் தென்பட்டதால் , பரிசோதனை செய்யப்பட்டது. முடிவு பாசிட்டிவ் என வந்துள்ளது. எனது உடல்நிலை தற்போது சீராக உள்ளது. ஆனால் மருத்துவர்கள் அறிவுரைக்கேற்ப மருத்துவமனையில் சேர்ந்துள்ளேன். கடந்த சில நாட்களாக என்னை சந்தித்தவர்கள் தனிமைப்படுத்திக்கொண்டு, பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்`` என அமித் ஷா அப்போது ட்வீட் செய்திருந்தார்.
இரு வார சிகிச்சைக்குப் பிறகு அவரது பரிசோதனை முடிவில், வைரஸ் தொற்று இல்லை என்று கண்டறியப்பட்டதால், வீடு திரும்பினார். எனினும், மருத்துவர்களின் அறிவுரைப்படி இரு வாரம் வீட்டுத்தனிமையில் அவர் ஓய்வெடுத்து வந்தார்.
பின்னர் ஆகஸ்டு 18 அன்று, அதிகாலை 2.30 மணியளவில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீரென்று சேர்க்கப்பட்டார்.
கோவிட்-19 வைரஸ் பரிசோதனை முடிவுகள் நெகட்டிவ் ஆக வந்த நிலையில், உடல் சோர்வு, மற்றும் உடல் வலி இருப்பதாக அமைச்சர் அமித்ஷா கூறி வந்ததை அடுத்து, அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக கூறப்பட்டது.
13 நாட்கள் சிகிச்சைக்கு பின்பு அமித் ஷா ஆகஸ்டு 31 அன்று வீடு திரும்பினார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












