இரானில் தூக்கிலிடப்பட்டார் கொலை குற்றம் சுமத்தப்பட்ட மல்யுத்த வீரர் மற்றும் பிற செய்திகள்

பட மூலாதாரம், Twitter
கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட இளம் மல்யுத்த வீரர் ஒருவரை விடுவிக்க வேண்டுமென்ற சர்வதேச நாடுகளின் கோரிக்கையை நிராகரித்த இரான் அவருக்கு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
2018இல் அரசாங்கத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது பாதுகாப்புக் காவலர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 27 வயதான நவீத் அஃப்காரிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்க வைப்பதற்காக தான் சித்திரவதை செய்யப்பட்டதாக அவர் கூறி வந்தார்.
இந்த நிலையில், அஃப்காரிக்கு நிறைவேற்றப்பட்டுள்ள மரண தண்டனையை "நீதியின் பரிதாப நிலை" என்று சர்வதேச மனித உரிமை அமைப்பான அம்னஸ்டி இன்டர்நேஷனல் குறிப்பிட்டுள்ளது.
மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்பு அஃப்காரி பேசிய பதிவு ஒன்று கசிந்துள்ளது. அதில், "ஒருவேளை நான் தூக்கிலிடப்பட்டால், நான் ஓர் அப்பாவி என்பதையும், இதற்கு எதிராக முழு பலத்தோடு போராடிய போதிலும், தூக்கிலிடப்பட்டேன் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ள விரும்புகிறேன்" என்று அஃப்காரி கூறியுள்ளார்.
இரானின் தெற்குப்பகுதியிலுள்ள நகரமான ஷிராஸில் அஃப்காரி தூக்கிலிடப்பட்டார் என்று அந்த நாட்டின் அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தூக்கிலிடப்படுவதற்கு முன்னர் தனது குடும்பத்தினரை சந்திக்க இரானின் சட்டம் அனுமதியளித்துள்ள போதிலும், அஃப்காரிக்கு அந்த உரிமை மறுக்கப்பட்டதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Reuters
"நவீத் அஃப்காரி தனது குடும்பத்தினரை கடைசியாக ஒருமுறை சந்திக்க கூட அனுமதிக்காமல் இவ்வளவு அவசரமாக அவரை தூக்கிலிட்டது ஏன்?" என்று அவரது வழக்கறிஞரான ஹசன் யூனெசி ட்விட்டரில் கேள்வியெழுப்பியுள்ளார்.
முன்னதாக, உலகெங்கிலும் 85,000 விளையாட்டு வீரர்களை உறுப்பினர்களாக கொண்ட தொழிற்சங்கம் உட்பட, நவீத் அஃப்காரிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறுத்த பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்தன.
போராட்டங்களில் பங்கேற்றதற்காக அவர் "அநியாயமாக குறிவைக்கப்பட்டார்" என்றும் மரண தண்டனையை நிறைவேற்றினால் இரான் உலக விளையாட்டிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்றும் உலக வீரர்கள் சங்கம் கருத்துத் தெரிவித்திருந்தது.
"அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தில் மட்டுமே மல்யுத்த வீரர் பங்கேற்றார்" என்று கூறிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் இவருக்கு கருணை கோரியிருந்தார்.
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐ.ஓ.சி) அஃப்காரிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது "மிகவும் சோகமான செய்தி" என்று கூறியதுடன், அவரது எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் இருப்பதாக தெரிவித்துள்ளது.
இதே வழக்கில் அஃப்காரியின் சகோதரர்களான வாஹித் மற்றும் ஹபீப் ஆகியோருக்கு முறையே 54 மற்றும் 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக இரானை சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
இரானில் தேசிய அளவிலான எண்ணற்ற மல்யுத்த போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்றவரான அஃப்காரி, அந்த நாடு முழுவதும் மிகவும் நன்றாக அறியப்பட்ட விளையாட்டு வீரராக விளங்கி வந்தார்.

தடுப்பு மருந்து பரிசோதனை மீண்டும் தொடங்கியது

பட மூலாதாரம், Getty Images
பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ராசெனிகா நிறுவனம் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பு மருந்தின் பரிசோதனை மீண்டும் தொடங்கியுள்ளது.
முன்னதாக தடுப்பூசி பரிசோதனை செய்யப்பட்ட ஒருவருக்கு அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தியதால் தடுப்பு மருந்து பரிசோதனை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
விரிவாகப் படிக்க: ஆக்ஸ்ஃபோர்டு-ஆஸ்ட்ராசெனிகா கொரோனா தடுப்பூசி பரிசோதனை மீண்டும் தொடங்கியது

நீட் தேர்வு: தமிழகத்தில் ஒரே நாளில் மூன்று பேர் தற்கொலை

பட மூலாதாரம், Artur Borzecki Photography
நீட் தேர்வு நாடு முழுவதும் இன்று நடக்க இருக்கும் நிலையில், அச்சம் காரணமாக தமிழகத்தில் நேற்று (12.09.20) மட்டும் இரண்டு பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
தருமபுரியை சேர்ந்த 20 வயதான ஆதித்யா, மற்றும் மதுரையை சேர்ந்த ஜோதி துர்கா ஆகியோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்நிலையில் இன்று நீட் தேர்வு எழுத இருந்த மாணவர் மோதிலால் என்பவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் மோதிலால், மூன்றாவது முறையாக நீட் தேர்வு எழுத இருந்த நிலையில், தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
விரிவாகப் படிக்க: நீட் தேர்வு அச்சத்தால் தமிழகத்தில் தொடர்கதையாகும் தற்கொலை சம்பவங்கள்

கொரோனா வைரஸால் யாருக்கு பாதிப்பு? - பிபிசி கருத்துக்கணிப்பு

பட மூலாதாரம், Getty Images
உலகின் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், கொரோனா பெருந்தொற்றால் ஏழை நாடுகள்தான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. அதன் விளைவாக சமத்துவமின்மை அதிகரித்துள்ளதாக பிபிசி கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.
கொரோனா பரவல் தொடங்கி ஆறு மாதங்கள் ஆன நிலையில், உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த சுமார் 30 ஆயிரம் மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.
விரிவாகப் படிக்க: கொரோனா நெருக்கடியால் பொருளாதார ரீதியாக அதிகம் பாதிக்கப்பட்டது யார்? - பிபிசி கருத்துக்கணிப்பு

சென்னையில் நதிகளை காக்க என்ன வழி?

பட மூலாதாரம், Arun Shankar/ Getty images
சென்னையில் ஓடும் அடையாறு, கூவம் நதிகளில் கழிவு நீர் கலப்பதாலேயே கடல் நீர் மாசுபடுவதாகத் தெரிவித்துள்ள தேசியப் பசுமைத் தீர்ப்பாயம், அவற்றைக் கட்டுப்படுத்த உத்தரவிட்டுள்ளது. ஆனால், அது சாத்தியமா?
விரிவாகப் படிக்க: மெரினாவில் கலக்கும் கழிவுகள்: சென்னை நதிகளை காக்க என்ன வழி?


சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












