ரஜினிகாந்த் அரசியல் நுழைவு: சமூக ஊடகத்தில் பரவும் அறிக்கை பற்றி என்ன சொல்கிறார்?

ரஜினி

பட மூலாதாரம், Getty Images

தாம் அரசியலில் ஈடுபடுவதை தவிர்க்கவேண்டும் என்று மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினார்கள் என்று ரஜினிகாந்த் கூறுவதுபோன்ற ஒரு அறிக்கை சமூக ஊடகங்களிலும், செய்தி ஊடகங்கள் சிலவற்றிலும் வலம் வருகின்றன.

அதில் "கொரோனா தொற்று எப்போது முடியும் என தெரியாத இந்த தருணத்தில் எனது அரசியல் பிரவேசம் குறித்து எனக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களிடம் ஆலோசனை நடத்தினேன். அதற்கு மருத்துவர்கள் கொரோனாவிற்கு ஒரே தீர்வு தடுப்பூசி. அது எப்போது வரும் என்று தெரியாது. வந்தாலும் அந்த தடுப்பூசியை உங்களுக்கு செலுத்தினால் அதை உங்கள் உடல்நிலை ஏற்றுக்கொள்ளுமா என்பது அந்த மருந்து வந்த பிறகுதான் தெரியும். இப்போது உங்களுக்கு வயது 70. மேலும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்திருப்பதால் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவு எனவே கொரோனா காலத்தில் மக்களை தொடர்பு கொண்டு அரசியலில் ஈடுபடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்," என ரஜினி கூறியது போல சமூக ஊடகங்களில் பரவும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்த செய்தி குறித்து ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.

"என் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைத் தளங்களிலும் ஊடகங்களிலும் தீவிரமாகப் பரவிக் கொண்டு வருகிறது. அது என்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும் அதில் வந்திருக்கும் என் உடல்நிலை மற்றும் எனக்கு மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை. இதைப் பற்றி தகுந்த நேரத்தில் என் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டைப் பற்றி மக்களுக்குத் தெரிவிப்பேன்." என ரஜினிகாந்த் தற்போது தெரிவித்துள்ளார்.

ரஜினியின் அரசியல் பிரவேசம்

ரஜினியின் அரசியல் பிரவேசம் என்பது தமிழகத்தில் தொடர்ந்து ஒரு பேசுப் பொருளாகவே இருந்து வருகிறது. இதுவரை அரசியல் கட்சி எப்போது தொடங்கப்படும் என்றும், முழு நேர அரசியல் பிரவேசம் குறித்தும் ரஜினி எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

இந்நிலையில் 2017 டிசம்பர் 31 ஆம் தேதி ரஜினி தான் அரசியல் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்தார்.

"எனது அரசியல் பிரவேசம் உறுதி. இது காலத்தின் தேவை" என்று அந்த அறிவிப்பின்போது அவர் பேசி இருந்தார்

அதற்குப் பிறகும் கட்சி தொடங்குவது குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாத நிலையில் இந்த ஆண்டு மார்ச் மாதம், சென்னை லீலா பேலஸ் நட்சத்திர விடுதியில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி தனது அரசியல் நிலைப்பாடு குறித்து விளக்கம் ஒன்றை அளித்திருந்தார்.

"என் அரசியல் குறித்து நிலவும் வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கவும், எனது வருங்கால அரசியல் எப்படி இருக்கும் என்று விளக்கவுமே இந்த சந்திப்பு," என்று அப்போது அவர் தெரிவித்தார்.

தமிழக மக்களிடம் ஓர் அரசியல் எழுச்சி ஏற்பட வேண்டும் அப்போதுதான் அரசியலுக்கு வருவேன் என்றும் ரஜினி தெரிவித்திருந்தார்.

அதை தொடர்ந்து கொரோனா பொதுமுடக்கம் தொடங்கியது இருப்பினும் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து அவ்வப்போது கருத்துகள் வெளியாகி வந்த நிலையில்தான், கொரோனா காலத்தில் தமது உடல்நிலை வெளியே வந்து மக்களை சந்திக்கும் வகையில் இல்லை என மருத்துவர்கள் கூறியதாக ரஜினியே தெரிவிப்பது போல சமூக ஊடகங்களில் செய்திகள் பரவின.

காலத்தைக் கடந்த நாயகன் அரசியலில் சாதிப்பது சாத்தியமா?

ரஜினிகாந்த் கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேலாக ஒரு சிறந்த, வெற்றிகரமான திரைப்படக் கலைஞராக நிலைத்து நிற்கிறார். சிறிய சிறிய மாற்றங்களோடு தன்னைப் புதுப்பித்தும் வருகிறார்.

அவர் வெற்றிகரமான நடிகராகத் தொடரப் போகிறாரா அல்லது போட்டி மிகுந்த அரசியல் களத்தில் எதிர்நீச்சல் போடப்போகிறாரா? என விமர்சகர்கள் அவ்வப்போது கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

70 வயதை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்த், ஆசியாவின் அதிக ஊதியம் பெறும் நடிகர்களில் ஒருவர். 1975ல் துவங்கி விரைவில் வெளியாகவிருக்கும் `அண்ணாத்த` வரை சுமார் 165க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து முடித்திருக்கும் ரஜினிகாந்த், மூன்று தசாப்தங்களுக்கு மேலாக தமிழ் சினிமா உலகின் மீது பெரும் ஆதிக்கம் செலுத்துகிறவர்.

ரஜினிகாந்த்: 68 சுவாரஸ்ய தகவல்கள்

அபூர்வ ராகங்கள் படத்திற்கான நடிகர்கள் தேர்வில் கலந்து கொண்ட ரஜினிகாந்த், சிவாஜி கணேசனை போல நடித்துக் காண்பித்தார். அதனைப் பார்த்த கே.பாலச்சந்தர் ரஜினியை தமிழ் கற்றுக் கொள்ளும்படி கூறினார்.

கே.பாலச்சந்தர்தான் தன்னுடைய வழிகாட்டி என அடிக்கடி கூறுவார் ரஜினி. எனினும், அவரது பாணி மற்றும் சினிமா வாழ்க்கையை மாற்றியமைத்தது இயக்குநர் எஸ்.பி. முத்துராமன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :