வாட்சாப் மூலம் போலி சலான் மோசடி - குஜராத் கும்பல் வளையில் கோவை முதியவர் சிக்கியது எப்படி?

போலி இ-சலான் அனுப்பி பணமோசடி: குஜராத்தைச் சேர்ந்தவர்கள் கோவை போலீஸிடம் சிக்கியது எப்படி?

பட மூலாதாரம், TN POLICE

    • எழுதியவர், சேவியர் செல்வகுமார்
    • பதவி, பிபிசி தமிழ்

சாலைப் போக்குவரத்து விதிகளை மீறியதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக வாட்ஸ்ஆப்பில் வந்த தகவலை உண்மையென நம்பி, ஏபிகே (apk) ஃபைலை பதிவிறக்கம் செய்த கோவை முதியவரின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.16.5 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான புகாரை விசாரித்த கோவை சைபர் குற்ற காவல்துறையினர் குஜராத் சென்று, இதில் தொடர்புடையதாக 10 பேரை கைது செய்து, 311 கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள், 10 மொபைல் போன்கள், ரூ.3.5 லட்சம் பணத்தைக் கைப்பற்றியுள்ளனர்.

இதுபோன்று போக்குவரத்து விதிகளை மீறியதற்கு அபராதம் விதிக்கப்படுவதாக வாட்ஸ் ஆப்பில் லிங்க், ஏபிகே ஃபைல் வந்தால் அதைத் திறக்க வேண்டாமென்று காவல்துறை மற்றும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.

உண்மையான தகவலுக்கும், போலியான இ-சலானுக்கும் உள்ள வித்தியாசங்களையும் விளக்கினர்

மொபைலில் வந்த தகவல்

கோவை கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த சாமுவேல் சந்திரபோஸ் என்பவருக்கு கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதியன்று, அவருடைய வாட்ஸ்ஆப்க்கு ஒரு தகவல் வந்துள்ளது.

அதில் அவருடைய வாகனம் போக்குவரத்து விதிகளை மீறியதற்காக அபராதம் செலுத்த வேண்டுமென்ற தகவலுடன ஒரு ஏபிகே ஃபைல் வந்துள்ளது.

அந்த தகவல் உண்மையென்று கருதிய சாமுவேல், தனது வாகனத்திற்கு அபராதம் வந்துள்ளதா என அறிவதற்காக ஃபைலை பதிவிறக்கம் செய்துள்ளார். உடனடியாக அவருடைய மொபைல் போன் ஹேக் செய்யப்பட்டு அதைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதை அவர் கண்டுகொள்ளாமல் இருந்த நிலையில், அதற்கு அடுத்த நாளில் அவருடைய மொபைல் எண்ணுக்கு தொடர்ந்து ஒடிபி எண்கள் வந்து கொண்டே இருந்துள்ளன என்கிறது காவல்துறை.

அதன் தொடர்ச்சியாக, அவர் வங்கியில் வைத்திருந்த நிரந்தர வைப்புத் தொகை எடுக்கப்பட்டுவிட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது.

வங்கிக்கு நேரில் சென்று வங்கிக் கணக்கை அவர் சரி பார்த்தபோது நிரந்தர வைப்புத்தொகையாக அவர் வைத்திருந்த 16,49,961 ரூபாய், ஆன்லைனில் மோசடியாக எடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

சாமுவேல் சந்திரபோஸ் கோவை மாநகர சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

''சாமுவேலின் வங்கிக்கணக்கில் அணுகலுக்கான ரிமேர்ட் கட்டுப்பாடு மோசடி நபர்களின் கைகளுக்குச் சென்றபிறகு நிரந்தர வைப்புத் தொகையில் இருந்து பணத்தை எடுத்து பல்வேறு கிரெடிட் கார்டுகளுக்கான நிலுவை பேமெண்டை செலுத்தியுள்ளனர்,'' என்கிறது காவல்துறை.

சைபர் கிரைம் காவல்துறையினர், அந்த கிரெடிட் கார்டுகள் எங்கெங்கு எப்படி பயன்படுத்தப்படுகின்றன, அவை எந்த முகவரி கொடுத்து பெறப்பட்டன என்பதை விரிவாக விசாரித்தபோது, அனைத்து கிரெடிட் கார்டுகளும் குஜராத் மாநிலம் சூரத் நகரில் பயன்பாட்டில் இருப்பது தெரியவந்துள்ளது.

அதன்பின், கோவை மாநகர சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் அழகுராஜ் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் சுகன்யா, பிரவீன்குமார் மற்றும் 11 காவல் ஆளிநர்கள் கொண்ட தனிப்படை சூரத் நகருக்குச் சென்றுள்ளது.

அங்கு ஐந்து, ஆறு நாட்கள் தங்கி, அந்த கிரெடிட் கார்டுகள் எங்கே பயன்படுத்தப்படுகிறது என்பதை வைத்து, மோசடி நபர்களை இருப்பிடத்தைக் கண்டறிந்ததாக காவல்துறை கூறுகிறது.

''அவர்களை தொடர்ந்து கண்காணித்தபோது, அவர்கள் எல்லோரும் ஒரே குழுவாக செயல்பட்டு வந்தது தெரியவந்து, குஜராத் காவல்துறையினரின் உதவியுடன் இதில் தொடர்புடைய 10 பேரை கைது செய்தோம்,'' என்கிறது காவல்துறை.

போலி இ-சலான் அனுப்பி பணமோசடி: குஜராத்தைச் சேர்ந்தவர்கள் கோவை போலீஸிடம் சிக்கியது எப்படி?

பட மூலாதாரம், TN POLICE

அந்த 10 பேரிடமிருந்தும் மூன்றரை லட்ச ரூபாய் ரொக்கம், 311 கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள், 10 மொபைல் போன்கள், ஒரு ஸ்வைப்பிங் மெஷின் மற்றும் ஒரு காசோலை புத்தகம் ஆகியவற்றையும் கோவை மாநகர காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

சாமுவேலின் வங்கிக் கணக்கிலிருந்து மோசடி நபர்களின் வங்கி கணக்குக்கு மாற்றப்பட்ட 6,39,000 ரூபாய் பணத்தையும் முடக்கி, நீதிமன்றம் மூலமாகப் பெறுவதற்கும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த கைது நடவடிக்கை குறித்து பிபிசி தமிழிடம் விளக்கிய சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் அழகுராஜ், ''சாமுவேலின் நிரந்தர வைப்புத்தொகை 'க்ளோஸ்' செய்து எடுத்த தொகை, மூலம் கிரெடிட் கார்டுகளுக்கான பேமெண்டை செலுத்தியுள்ளனர். அவற்றில் பல போலி முகவரி கொடுத்து வாங்கப்பட்டிருந்தது. அதனால் அவை எங்கே பயன்படுத்தப்படுகிறது என்பதைக் கண்காணித்து வந்தோம். அதை வைத்தே குஜராத் மாநிலம் சூரத் நகருக்குச் செல்ல முடிவெடுத்தோம்.'' என்றார்.

போலி இ-சலான் அனுப்பி பணமோசடி: குஜராத்தை சேர்ந்தவர்கள் கோவை போலீஸிடம் சிக்கியது எப்படி?

பட மூலாதாரம், TN POLICE

கிரெடிட் கார்டுகள் வைத்து மோசடி

''முதலில் முழு விபரத்தையும் குஜராத் போலீசிடம் சொல்லாமல், கைது செய்யும்போது, அவர்களின் உதவியுடன் அந்த நபர்களை சுற்றிவளைத்துக் கைது செய்தோம். மொத்தம் 2 மணி நேரத்திற்குள் தகவல் வேறு எங்கும் பரவுவதற்கு முன்பு, கைது செய்துவிட்டதால் பெரிதாக பிரச்னை எழவில்லை. குஜராத் காவல்துறையினர் பெரிதும் உதவினர்.'' என்றார் காவல் ஆய்வாளர் அழகுராஜ்.

போலீஸாரின் கூற்றுப்படி, வாட்ஸ்ஆப் மூலமாக அனுப்பப்பட்ட ஏபிகே ஃபைலை சாமுவேல் திறந்தவுடன் மொபைலை அவர்கள் ஹேக் செய்துள்ளனர். அதன்பின், அவருடைய வங்கிக்கணக்கின் பாஸ்வேர்டையும் மாற்றியுள்ளனர்.

மேலும், கிரெடிட் கார்டுகளை வைத்து பொருட்களை வாங்கி அதனை குறைந்த விலைக்கு மற்றவர்களிடம் விற்றுள்ளனர் என்கிறது காவல்துறை

''கைதாகியுள்ள 6 பேர் பெயர்களில் கிரெடிட் கார்டுகள் இருந்தன. அவர்களுள் ஒருவர் ஒரு ஹோட்டலில் மனித வள மேம்பாட்டு அலுவலராக வேலை பார்த்துள்ளார். ஒருவர் சேலை வணிகம் செய்து வருகிறார். படித்துவிட்டு வேலையில்லாமல் இருவர் இவர்களுடன் சேர்ந்து இந்த மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு சைபர் மோசடிகளைச் செய்வதற்கு உதவிய சில ஏஜென்ட்டுகளையும் பிடித்து விசாரித்து வருகிறோம்.'' என்றனர்.

சாமுவேலைப் போன்று பலரிடமும் இதுபோன்று இ-சலான் பெயரிலான மோசடியைச் செய்திருப்பதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

போலி இ-சலான் அனுப்பி பணமோசடி: குஜராத்தை சேர்ந்தவர்கள் கோவை போலீஸிடம் சிக்கியது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

அரசு அனுப்பும் சலானுக்கும் போலி சலானுக்கும் உள்ள வித்தியாசம்

சாமுவேலுக்கு இ-சலான் அபராதம் போன்று தகவல் அனுப்பி பண மோசடி செய்ததைப் போலவே, சமீபகாலமாக பலருக்கும் இத்தகைய தகவல்கள் வருவதாகவும் தகவல் கூறும் போக்குவரத்து காவல்துறையினர், இதில் மக்கள் விழிப்போடு இருக்க வேண்டுமென்று வலியுறுத்துகின்றனர்.

முதலில் போக்குவரத்து போலீசார் அனுப்பும் அபராதம் குறித்த தகவலுக்கும், போலி தகவல்களுக்கும் உள்ள வித்தியாசத்தை உணர வேண்டுமென்கின்றனர்.

இதுபற்றி, பிபிசி தமிழிடம் விளக்கிய கோவை மாநகர காவல் துணை ஆணையர் (போக்குவரத்து) அசோக் குமார், ''போக்குவரத்து விதிகளை மீறியதற்காக காவல்துறையால் மெசேஜ் மட்டுமே அனுப்பப்படும். அதில் இ-சலான் பரிவாகன் போன்ற பெயர்களுடன் gov.in விபரம் இருக்கும். போலி இ-சலான்களில் இவை எதுவும் இருக்காது. அரசு அனுப்பும் சலான்களில் உள்ள லிங்க்கில் அபராதத்தைச் செலுத்தலாம். ஆனால், இதுபோன்ற எந்தத் தகவலும் வாட்ஸ்ஆப்பில் அனுப்பப்படாது. குறுஞ்செய்தி ஆக மட்டுமே அபராத விபரங்கள் அனுப்பப்படும். '' என்றார்.

வழக்கமாக, ஒரு வாகனம் போக்குவரத்து விதிமீறல் செய்தது கண்டறியப்பட்டால், அதற்கான சான்றுகளுடன் 80 நாட்களுக்கு பல்வேறு நினைவூட்டல் குறுஞ்செய்திகள் வரும். அதற்குப் பின் அந்த மெசேஜ் வராது என்று கூறும் போக்குவரத்து காவல்துறையினர், அந்த அபராதம் செலுத்தப்படாதபட்சத்தில், வாகனத்தை விற்கும்போது, போக்குவரத்துத் துறையிடம் எந்த ஆவணத்தையும் மாற்ற முடியாது என்றனர்.

போக்குவரத்து காவல்துறை அனுப்பும் சலான், போலி சலான் இரண்டுக்குமான வித்தியாசங்களையும் படங்களுடன் பகிர்ந்தனர்.

''ஒவ்வொரு வாகனத்திற்கும் ஆர்.சி. புத்தகம் பதிவு செய்யும்போது, சம்பந்தப்பட்டவரின் மொபைல் எண்ணும் பதிவாகிவிடும் என்பதால், போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதம் சார்ந்த குறுஞ்செய்தி அந்த எண்ணுக்குச் செல்லும். இதுபோன்று அபராதம் விதிக்கப்படும் வாகனங்களின் எண்களைக் கண்டறியும் சைபர் குற்றவாளிகள், அவர்களுக்கு போலி தகவல்களை அனுப்பி மோசடியில் ஈடுபடுகின்றனர்.'' என்றனர் போலீசார்.

பிபிசி தமிழிடம் பேசிய கோவை மண்டல போக்குவரத்து இணை ஆணையர் அழகர் ராஜா, ''ஒரு வாகனத்தின் ஆர்.சி. பெயர் மாற்றம், வாகனம் புதுப்பிப்புச் சான்று போன்றவற்றுக்கு வரும்போது, அந்த வாகனத்தால் நடந்த போக்குவரத்து விதிமீறல்கள் சார்ந்து விதிக்கப்பட்ட அபராதத் தொகையை மொத்தமாகச் செலுத்திவிட்டு வந்தால் மட்டுமே அந்த வாகனம் தொடர்பான எந்த ஆவணமும் போக்குவரத்துத் துறையில் கையாளப்படும். இல்லாவிட்டால், அதற்கான எந்த ஆவணத்திலும் பெயர் மாற்றம், புதுப்பிப்பு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.'' என்றார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

''போக்குவரத்து விதிமீறல் சார்ந்து தங்களுடைய வாகன எண்களைக் குறிப்பிட்டே தகவல் வந்தாலும் அது அரசு தரப்பிலிருந்து வந்ததா என்பதை உறுதிப்படுத்திக்கொள்வது அவசியம். இதுபோன்று மோசடி பைல்கள் வந்து அதை திறந்துவிட்டால் மொபைல் சூடாகும், செயல்படாது. அதையறிந்து உடனே அலர்ட் ஆனால் ஏமாற வாய்ப்பில்லை.'' என்றார் காவல் ஆய்வாளர் அழகுராஜ்.

இந்த மோசடியில் பாதிக்கப்பட்ட சாமுவேல் சந்திரபோஸ், ''நான் மிகவும் கஷ்டப்பட்டு சம்பாதித்த தொகை மொத்தமாகப் போனதில் முழுமையாக மனம் உடைந்து போயிருந்தேன். என் நிலையை காவல் துறையிடம் தெளிவாக விளக்கினேன். சைபர் கிரைம் போலீசார் எடுத்துள்ள நடவடிக்கையில் எனது பணம் மீண்டும் கிடைக்குமென்ற நம்பிக்கை பிறந்துள்ளது. இதுபோல வேறு யாரும் ஏமாறக்கூடாது.'' என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு