மோதி, அமித் ஷாவுக்கு எதிராக முழக்கம் - ஜேஎன்யு வளாகத்தில் நடந்த போராட்டம் சர்ச்சையாவது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜே.என்.யு) பிரதமர் நரேந்திர மோதி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு எதிராக சர்ச்சைக்குரிய முழக்கங்கள் எழுப்பப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து பல்கலைக்கழக நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ள பல்கலைக்கழக நிர்வாகம், அவர்கள் உடனடியாக இடைநீக்கம், நீக்கம் அல்லது பல்கலைக்கழகத்திலிருந்து நிரந்தரமாக தடை செய்யப்படுவார்கள் என்றும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
2020 வடகிழக்கு டெல்லி கலவரச் சதி வழக்கில், உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் ஆகியோரின் பிணை மனுக்களை உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.
இதனைத் தொடர்ந்து, திங்கள்கிழமை இரவு ஜே.என்.யு வளாகத்திற்குள் குழுவாகத் திரண்ட மாணவர்கள் இந்த முழக்கங்களை எழுப்பியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான காணொளி ஒன்றும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
ஏஎன்ஐ செய்தி முகமையின்படி, ஜே.என்.யு-வின் தலைமை பாதுகாப்பு அதிகாரி, இந்தச் சம்பவம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்யக் கோரி வசந்த் குஞ்ச் காவல் நிலையத்தின் தலைமை அதிகாரிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தற்போது, இந்த விவகாரத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஜே.என்.யு நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த விவகாரத்தில் தேவையான நடவடிக்கை எடுக்குமாறு, ஜே.என்.யு தலைமை பாதுகாப்பு அதிகாரி பல்கலைக்கழகத்தின் தலைமை பொறுப்பாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
இதற்கிடையில், கடந்த 2020-ஆம் ஆண்டு பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த வன்முறையைக் கண்டித்து, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 5-ஆம் தேதி மாணவர்கள் போராட்டம் நடத்துவதாக ஜே.என்.யு மாணவர் சங்கத் தலைவர் அதிதி மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக வளாகத்தில் எழுப்பப்பட்டதாகக் கூறப்படும் அந்த முழக்கங்களுக்கு ஆதரவாகவும் அவர் பேசியுள்ளார்.
"'போராட்டத்தில் எழுப்பப்பட்ட அனைத்து முழக்கங்களும் கருத்தியல் சார்ந்தவை, அவை யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்கவில்லை. அவை எவரையும் குறிவைத்தும் எழுப்பப்படவில்லை," என பிடிஐ செய்தி முகமையிடம் அதிதி மிஸ்ரா தெரிவித்தார்.
ஆர்.எஸ்.எஸ் (RSS) உடன் தொடர்புடைய மாணவர் சங்கமான ஏபிவிபி-யின் (ABVP) ஜே.என்.யு பிரிவு துணைத் தலைவர் மணீஷ் சவுதாரி, இந்த சர்ச்சை முழக்கங்கள் குறித்துக் கூறுகையில், "ஜே.என்.யு-வில் இது போன்ற விஷயங்கள் இப்போது சாதாரணமான ஒன்றாக மாறிவிட்டன." என்று தெரிவித்துள்ளார்.
ஜே.என்.யு- வின் அறிக்கை

பட மூலாதாரம், ANI
சர்ச்சைக்குரியதாகக் கூறப்படும் அந்த முழக்கங்கள் தொடர்பாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
"மரியாதைக்குரிய பிரதமர் மற்றும் மரியாதைக்குரிய உள்துறை அமைச்சர் ஆகியோருக்கு எதிராக ஆட்சேபனைக்குரிய முழக்கங்களை எழுப்பிய மாணவர்கள் மீது மிகக்கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக நிர்வாகம் உறுதியளித்துள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது," என அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில் "பல்கலைக்கழகங்கள் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் புதிய கருத்துக்களின் மையங்களாகும். அவை வெறுப்புணர்வின் ஆய்வகங்களாக மாற அனுமதிக்க முடியாது. பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரம் என்பது ஒரு அடிப்படை உரிமையாகும்."
"இருப்பினும், எந்த வடிவத்திலான வன்முறை, சட்டவிரோதச் செயல்கள் அல்லது தேசவிரோத நடவடிக்கைகளும் எந்தச் சூழ்நிலையிலும் பொறுத்துக் கொள்ளப்பட மாட்டாது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மாணவர்கள் மீது உடனடியாகப் பல்கலைக்கழகத்திலிருந்து இடைநீக்கம், நீக்கம் அல்லது நிரந்தரமாகப் பல்கலைக்கழகத்திலிருந்து தடை செய்தல் உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜே.என்.யு பதிவாளர் இந்த விவகாரம் குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், "சபர்மதி வளாகத்தில் நடந்த போராட்டத்தின் காணொளிகளை ஜே.என்.யு நிர்வாகம் மிகவும் தீவிரமாகக் கவனத்தில் கொண்டுள்ளது. இந்த காணொளிகளில், ஜே.என்.யு மாணவர் சங்கத்தைச் சேர்ந்த சில மாணவர்கள் மிகவும் ஆட்சேபனைக்குரிய, ஆத்திரமூட்டும் மற்றும் வன்முறையைத் தூண்டும் முழக்கங்களை எழுப்பியுள்ளனர். உரிய அதிகாரிகள் இந்தச் சம்பவத்தை தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளதுடன், காவல்துறையின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பாதுகாப்புப் பிரிவிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்தகைய முழக்கங்களை எழுப்புவது ஜே.என்.யு ஒழுக்க விதிகளை மீறும் செயலாகும். இது பொது அமைதி, பல்கலைக்கழக வளாகச் சூழல் மற்றும் பல்கலைக்கழகம் மட்டுமல்லாது தேசத்தின் பாதுகாப்பிற்குப் தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.
உச்ச நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

பட மூலாதாரம், ANI
ஜனவரி 5-ஆம் தேதி, டெல்லி கலவரச் சதி வழக்கில் உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் ஆகியோரின் பிணை மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற ஐந்து பேருக்கு நீதிமன்றம் பிணை வழங்கியது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற ஐந்து நபர்களான குல்பிஷா பாத்திமா, மீரான் ஹைதர், ஷிபா-உர்-ரஹ்மான், முகமது சலீம் கான் மற்றும் ஷதாப் அகமது ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கியது.
குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களுடன் ஒப்பிடுகையில், உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் ஆகியோரின் பங்கு வேறுபட்டது என்று நீதிமன்றம் தெரிவித்தது.
நீதிமன்றத்தின் கூற்றுப்படி, சாட்சியங்களின் ஆரம்பகட்ட விசாரணை, உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் கலவரத்தைத் திட்டமிடுவதிலும், அதற்கான வியூகங்களை வகுப்பதிலும் ஈடுபட்டிருந்தனர் என்பதை உணர்த்துகிறது.

எழுப்பப்பட்ட முழக்கங்கள் குறித்த சர்ச்சை
திங்கட்கிழமை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையடுத்து, அன்றிரவு ஜே.என்.யு வளாகத்தில் இந்த முழக்கங்கள் எழுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஜே.என்.யு மாணவர் சங்கத் தலைவர் அதிதி மிஸ்ரா கூற்றுப்படி, கடந்த 2020-ஆம் ஆண்டு பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த வன்முறையைக் கண்டிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 5-ஆம் தேதி இந்த போராட்டம் நடத்தப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், ஏபிவிபி-யின் ஜே.என்.யு பிரிவு துணைத் தலைவர் மணீஷ் சவுதாரி ஏஎன்ஐ செய்தி முகமையிடம் கூறுகையில், 'நாளை ஏபிவிபி மற்றும் ஆர்எஸ்எஸ்-ஸின் கல்லறைகள் தோண்டப்படும் என்பது போன்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டுள்ளன. இது போன்ற முழக்கங்கள் இந்த நாட்களில் ஜே.என்.யு-வில் சகஜமாகிவிட்டன. ஏபிவிபி சங்கத்தில் 60 லட்சத்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர். அந்த 60 லட்சம் மக்களின் கல்லறைகளைத் தோண்டவா அவர்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த விவகாரத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யக் கோரி, ஜே.என்.யு-வின் தலைமை பாதுகாப்பு அதிகாரி வசந்த் குஞ்ச் காவல் நிலையத்தின் தலைமை அதிகாரிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் ஜே.என்.யு (JNU) மாணவர் சங்கத் தலைவர் அதிதி மிஸ்ரா உட்பட ஒன்பது பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும், அந்தச் சம்பவ நடைபெற்றபோது சுமார் 30-35 மாணவர்கள் அங்கு இருந்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"இத்தகைய முழக்கங்களை எழுப்புவது ஜனநாயக ரீதியிலான போராட்டத்திற்கு முற்றிலும் எதிரானது; இது ஜே.என்.யு (JNU) ஒழுக்க விதிகளை மீறுவதோடு, பொது அமைதி, வளாகத்தில் நிலவும் அமைதி மற்றும் பல்கலைக்கழகத்தின் பாதுகாப்புச் சூழலைத் தீவிரமாகச் சீர்குலைக்கக் கூடியது,"
"முழக்கங்கள் தெளிவாகக் கேட்கக்கூடியதாகவும், திட்டமிட்ட ஒன்றாகவும் மற்றும் தொடர்ந்து எழுப்பப்பட்டதாகவும் இருந்தன. இது அந்தச் செயல் தன்னிச்சையானதோ அல்லது உள்நோக்கமற்றதோ அல்ல, மாறாக ஒரு திட்டமிட்ட தவறான செயல் என்பதைக் காட்டுகிறது. இந்தச் செயலானது நிர்வாகத்தின் ஒழுக்கம், நாகரீகமான உரையாடலுக்கான நிறுவப்பட்ட விதிமுறைகள் மற்றும் பல்கலைக்கழக வளாகத்தின் அமைதியான கல்விச் சூழல் ஆகியவற்றை அவமதிப்பதாக உள்ளது." என்று அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, வினீத் ஜிண்டால் என்ற உச்ச நீதிமன்ற வழக்கறிஞர், இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருக்கு எதிராக எழுப்பப்பட்ட ஆத்திரமூட்டும் முழக்கங்கள் தொடர்பாக, டெல்லி காவல்துறை ஆணையரிடம் நான் புகார் அளித்துள்ளேன் என்று அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து அரசியல் கட்சிகள் கூறுவது என்ன?

பட மூலாதாரம், ANI
இந்தச் சம்பவம் தொடர்பாக அரசியல் கட்சிகளும் எதிர்வினையாற்றியுள்ளன. ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் மனோஜ் ஜா தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
ஏஎன்ஐ செய்தி முகமையிடம் பேசிய மனோஜ் ஜா, "நாம் அனைவரும் மனவேதனை அடைந்துள்ளோம். இரண்டு விஷயங்கள் மிகவும் கவலையளிக்கின்றன; எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு நபர் எத்தனை ஆண்டுகள் தான் விசாரணை இன்றி சிறையில் இருக்க முடியும்?' என்று கூறினார்.
"தனிப்பட்ட முறையில், நான் மரணம் குறித்த முழக்கங்களுக்கு எதிரானவன்; எனவே இத்தகைய முழக்கங்களுக்கு ஒரு நாகரீகமான ஜனநாயகத்தில் இடமில்லை. ஆனால், தேர்ந்தெடுக்கப்பட்ட முறையில் கோபமடைவது எதனால்?" என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், டெல்லி அமைச்சர் ஆஷிஷ் சூட் இந்தச் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இத்தகைய முழக்கங்களை எழுப்புபவர்களை எதிர்க்கட்சிகள் ஆதரிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய ஆசிஷ் சூட், "ஷர்ஜீல் இமாம் வடகிழக்கு இந்தியாவை இந்தியாவிலிருந்து பிரிப்பது குறித்துப் பேசினார். உமர் காலித் 'இந்தியா துண்டாக உடையும்' என்பது போன்ற முழக்கங்களை எழுப்பியதுடன், 2020 கலவரத்திலும் தொடர்புடையவராகக் கண்டறியப்பட்டார். இத்தகைய நபர்கள் மீது அனுதாபம் காட்டப்படுகிறது, ஏனெனில் ஷர்ஜீல் இமாமுடன் மேடையைப் பகிர்ந்து கொண்டவர்கள் இந்தச் சட்டமன்றத்திலேயே இருக்கிறார்கள்." என்று கூறினார்.
ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) கட்சியின் தலைவர் கே.சி. தியாகி பிடிஐ செய்தி முகமையிடம் கூறுகையில், "உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் ஆகிய இருவரின் ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது நீதித்துறையின் முடிவாகும். இதில் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை இழுப்பதும், அவர்களுக்கு எதிராக முழக்கங்களை எழுப்புவதும் முறையல்ல"' என்று தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஜே.என்.யு வளாகத்தில் நடந்தது என்ன?
கடந்த 2020-ஆம் ஆண்டு ஜனவரி 5-ஆம் தேதி, முகமூடி அணிந்த நபர்கள் அடங்கிய கும்பல் ஒன்று பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்து, அங்கிருந்த மூன்று விடுதிகளில் மாணவர்களைக் குறிவைத்துத் தாக்கியதில் வன்முறை ஏற்பட்டது.
அந்த கும்பல் தடி, கற்கள் மற்றும் இரும்பு கம்பிகளால் மாணவர்களைத் தாக்கியதோடு, அங்கிருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கிச் சேதப்படுத்தியது.
இந்தச் சம்பவம் பல்கலைக்கழக வளாகத்தில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதில் அப்போதைய ஜே.என்.யு மாணவர் சங்கத் தலைவர் அய்ஷே கோஷ் உட்பட 28 பேர் காயமடைந்தனர்.
வளாகத்திற்குள் முகமூடி கும்பல் வன்முறையில் ஈடுபட்டபோது, அதனைத் தடுக்கத் தவறியதற்காக டெல்லி காவல்துறை விமர்சனத்திற்கு உள்ளானது. குறிப்பாக, வளாகத்தில் நடந்த சேதம் தொடர்பான இரண்டு எஃப்.ஐ.ஆர்-களில், அய்ஷே கோஷ் உள்ளிட்ட மாணவர் சங்கத் தலைவர்களின் பெயர்களைச் சேர்த்ததற்காக அவர்கள் விமர்சிக்கப்பட்டனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












