விபிஎஃப் பிரச்சனை: தமிழக அரசு அனுமதித்தாலும் நவம்பர் 10 முதல் திரையரங்கங்கள் இயங்குமா?

சூரரைப் போற்று

டிஜிட்டல் புரொஜெக்ஷன் நிறுவனங்களுக்கு தயாரிப்பாளர்கள் கட்டணம் செலுத்த வேண்டியிருப்பது குறித்த பிரச்சனைக்கு முடிவு வரும்வரை புதிய படங்களை ரிலீஸ் செய்யப்போவதில்லை என நடப்பு தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.

இதனால், அரசு அறிவித்துள்ள தேதியில் திரையரங்கங்கள் இயங்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

கொரோனா பரவலைத் தடுப்பதற்காக தமிழ்நாட்டில் மார்ச் மாத மத்தியிலிருந்து திரையரங்குகள் மூடப்பட்டன. கிட்டத்தட்ட ஏழரை மாதங்களுக்கும் மேலாக திரையரங்குகள் ஏதும் தமிழ்நாட்டில் இயங்கவில்லை. இந்த நிலையில், வரும் நவம்பர் 10ஆம் தேதி முதல் திரையரங்குகளைத் திறக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

50 சதவீதம் இருக்கைளை மட்டும் நிரப்பும் வகையில் திரையரங்குகளைத் திறக்கலாம் என தமிழக அரசு உத்தரவிட்டிருப்பது திரையரங்க உரிமையாளர்களையும் தயாரிப்பாளர்களையும் ஒரு பக்கம் சங்கடத்தில் ஆழ்த்தியிருக்கிறது. கொரோனாவுக்கு பிந்தைய காலகட்டத்தில் தியேட்டருக்கு போதுமான கூட்டம் வருமா என்ற சந்தேகம் எழுந்திருக்கும் நிலையில், இந்தக் கட்டுப்பாடு இன்னும் ஒரு நெருக்கடியாக வந்திருக்கிறது.

இந்தப் பிரச்சனை ஒரு புறமிருக்க இயக்குநர் பாரதிராஜா தலைமையிலான நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையின்படி, க்யூப், பிரசாத், யுஎஃப்ஓ போன்ற டிஜிட்டல் திரையிடும் நிறுவனங்கள் ஒவ்வொரு படத்தின் தயாரிப்பாளரிடமும் வாராவாரம் வசூலிக்கும் கட்டணத்தை தர முடியாது எனவும் மாஸ்டரிங், க்ளோனிங், டெலிவரி, ஒரு முறைக்கான சேவைக் கட்டணம் ஆகியவற்றை மட்டுமே தர முடியும் என்றும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளில் டிஜிட்டல் முறையில் படங்களை விநியோகம் செய்யும் சேவையை க்யூப், யுஎஃப்ஓ, பிரசாத் உள்ளிட்ட நிறுவனங்கள் செய்துவருகின்றன. இதில் விபிஎஃப் எனப்படும் "Virtual Print Fee"ஐ வாராவாரம் தயாரிப்பாளர்கள் இந்த நிறுவனங்களுக்கு தர வேண்டும்.

@TRIALOFCHICAGO7

பட மூலாதாரம், @TRIALOFCHICAGO7

இந்தத் தொகை படத்திற்குப் படம் வேறுபடும். ஆனால், ஒரே விர்ச்சுவல் பிரிண்டைத் திரையிட வாராவாரம் எதற்காக இந்தக் கட்டணத்தைத் தயாரிப்பாளர்கள் அளிக்க வேண்டுமென சில மாதங்களுக்கு தயாரிப்பாளர்கள் மத்தியில் குரல்கள் எழுந்தன.

இந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் துவங்கியவுடன், இந்தக் கட்டணத்தைத் தர முடியாது என டிஜிட்டல் புரொஜக்ஷன் நிறுவனங்களுக்கும் திரையரங்க உரிமையாளர் சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டது.

ஆனால், இந்தக் கோரிக்கைகளை ஏற்க முடியாது என திரையரங்க உரிமையாளர்களும் டிஜிட்டல் புரொஜக்ஷன் நிறுவனங்களும் தெரிவித்துவிட்டன.

இந்த நிலையில், இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காணப்படும்வரை, புதிய திரைப்படங்களை வெளியிடப் போவதில்லையென நடப்பு தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது. புதிய படங்களின் வெளியீட்டுத் தேதியை தங்களைக் கலந்தாலோசித்து நிர்ணயிக்கும்படியும் நடப்பு தயாரிப்பாளர் சங்கம் கூறியுள்ளது.

இதையடுத்து இந்த விவகாரம் குறித்து விவாதிக்க திரையரங்க உரிமையளர்களின் சங்கக் கூட்டம் இன்று கூட்டப்பட்டது. அதில் விபிஎஃப் கட்டணத்தை திரையரங்கு தரப்பு ஏற்பது குறித்த பேச்சக்கே இடமில்லையென திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இருந்தபோதும் தயாரிப்பாளர்களுடன் ஒரு பேச்சுவார்த்தையை நடத்த அவர்கள் விரும்புகின்றனர்.

இது குறித்து பிபிசியிடம் பேசிய திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம், "தயாரிப்பாளர்களுடன் புதன் கிழமையோ, வியாழக்கிழமையோ ஒரு கூட்டம் நடத்துவதற்குக் கேட்டிருக்கிறோம். தயாரிப்பாளர்களுக்கு முடிந்த அளவு டிஜிட்டல் நிறுவனங்களிடமிருந்து சலுகைகளைப் பெற்றுத்தர முயல்வோம். அந்த குறைந்த பட்ச சலுகைகளுடன் 6 மாதங்கள் திரையரங்குகள் இயங்கட்டும். அதற்குப் பிறகு பார்க்கலாம் என எங்கள் தரப்பில் முடிவெடுத்திருக்கிறோம்" என்று தெரிவித்தார்.

ஆனால் தயாரிப்பாளர்கள் விபிஎஃப் கட்டணத்தைக் கட்டுவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். "ஒவ்வொரு படத்திற்கும் 25 லட்சத்தில் ஆரம்பித்து பல லட்சங்களுக்கு விபிஎஃப் கட்டணம் செல்கிறது. இனிமேல் அதை நாங்கள் கட்ட முடியாது. திரையரங்குகளுக்கு படத்தைக் கொடுப்போம். அங்கே உள்ள டிஜிட்டல் புரொஜெக்டருக்கான லீஸ் கட்டணத்தை நாங்கள் ஏன் செலுத்த வேண்டும்?" எனக் கேள்வி எழுப்புகிறார் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் துணைத் தலைவர் ஜி. தனஞ்சயன்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

ஒவ்வொரு திரையரங்கிலும் புரொஜெக்டர்களை வைத்திருக்க வேண்டியது அந்தந்த திரையரங்கின் கடமை. அந்த புரொஜெக்டர்களை வைத்து படம் வெளியிடுவதற்காகத்தான் திரையரங்குகளுக்கு வசூலில் பங்கு செல்கிறது. ஆனால், அந்த புரொஜெக்டருக்கும் தயாரிப்பாளர்கள் பணம் செலுத்த வேண்டுமென்றால் எப்படி என்கிறார் தனஞ்சயன்.

எத்தனை முறை பேச்சுவார்த்தை நடத்தினாலும் விபிஎஃப் கட்டணத்தைக் கட்டமாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கிறோம் என்கிறார் அவர். அதனால், இந்த ஆண்டு தீபாவளிக்கு படங்கள் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

பல திரைப்படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியாவதற்கு ஏற்கனவே பல திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், இந்த விவகாரமும் தற்போது சேர்ந்துகொண்டிருக்கிறது.

விபிஎஃப் கட்டணம் என்றால் என்ன?

ஒரு படத்தை திரையரங்கில் டிஜிட்டல் முறையில் திரையிடும்போது, திரையரங்கில் உள்ள டிஜிட்டல் புரொஜெக்டருக்கான கட்டணமாக தயாரிப்பாளர்களால் கொடுக்கப்பட வேண்டிய கட்டணமே விபிஎஃப்.

க்யூப், பிரசாத், யுஎஃப்ஓ போன்ற நிறுவனங்கள், தங்களிடம் வாடிக்கையாளராக உள்ள திரையரங்குகளில் தங்கள் சார்பில் விலை உயர்ந்த டிஜிட்டல் புரொஜெக்டரை நிறுவுகின்றன. இந்த புரொஜெக்டருக்கான குத்தகைக் கட்டணமாகவே விபிஎஃப் வசூலிக்கப்படுகிறது. இந்தக் கட்டணம் முதல் வாரத்தில் அதிகமாகவும் அடுத்தடுத்த வாரங்களில் குறைவாகவும் இருக்கும்.

ஒரு முறை நிறுவப்படும் புரொஜெக்டர்களுக்கு ஒவ்வொரு படத்திற்கும் ஏன் பணம் தர வேண்டுமென கேள்வியெழுப்பினால், புரொஜெக்டரை தொழில்நுட்ப ரீதியாக அடிக்கடி தாங்கள் மேம்படுத்துவதால் இந்தக் கட்டணங்கள் செலுத்தப்பட வேண்டும் என்கின்றன டிஜிட்டல் புரொஜெக்ஷன் நிறுவனங்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: