ஒரே மேடையில் தோன்றிய எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் பேசியது என்ன?

நரேந்திர மோதி, எடப்பாடி பழனிசாமி

பட மூலாதாரம், Narendra Modi/ Youtube

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் பிரதமர் மோதி, எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன், அன்புமணி ராமதாஸ் போன்ற கூட்டணி கட்சி தலைவர்கள் ஒரே மேடையில் தோன்றி பேசினர்.

கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலை தனித்தனியே கூட்டணி அமைத்து சந்தித்த அதிமுகவும் பாஜகவும் அதன் பிறகு மீண்டும் இணைந்தன. இரு கட்சிகளும் இணைந்தே வரும் சட்டமன்ற தேர்தலை சந்திக்கப் போவதாக, கடந்தாண்டு ஏப்ரல் மாதமே மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா அறிவித்தார்.

இதையடுத்து, பெரிதாக வேறெந்த கட்சிகளும் இந்த கூட்டணியில் இணையாத நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இக்கூட்டணியில் இணைந்தார்.

இந்நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தைகளுக்காக சமீபத்தில் தமிழகம் வந்திருந்தார் மத்திய அமைச்சரும் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல். இவருடைய முன்னிலையில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஜனவரி 21 அன்று அக்கூட்டணியில் இணைந்தார்.

"எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கும் கூட்டணியில் தான் இருக்க மாட்டேன்" என தொடர்ந்து கூறிவந்த டிடிவி தினகரன் அதிமுக-பாஜக கூட்டணியில் இணைந்தார்.

இந்த நிலையில்தான், தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

காணொளிக் குறிப்பு,

மோதி பேசியது என்ன?

இந்த பொது கூட்டத்தில் பிரதமர் மோதி பேசுகையில், "தமிழ்நாடு இப்போது மாற்றத்துக்கு தயாராகிவிட்டது. தமிழ்நாடு இப்போது திமுகவின் மோசமான ஆட்சியிலிருந்து விடுபட துடிக்கிறது. தமிழ்நாட்டை ஊழலற்ற மாநிலமாக மாற்ற வேண்டும். திமுகவின் முடிவுரைக்கான 'கவுன்ட்டவுன்' தொடங்கிவிட்டது.'' என்றார்

மேலும் ''ஊழல், குற்றவாளிக் குழுக்கள், குற்றங்கள் ஆகியவற்றை ஆதரிக்கும் அரசாங்கம் திமுக அரசாங்கம். தமிழ்நாட்டில் அதிமுக-பாஜகவின் இரட்டை எஞ்சின் அரசாங்கம் அமைவது உறுதியாகிவிட்டது." என்றார்.

" ஒரேயொரு குடும்பத்திற்காக மட்டும் திமுக இயங்கிக்கொண்டிருக்கிறது. வம்சாவழி பாதை, ஊழல் பாதை, பெண்களை வசைபாடுவது, நமது கலாசாரத்தை வசைபாடுவது ஆகியவற்றின் மூலமே திமுகவில் முன்னேற முடியும். ஆனால், இதன் பாதிப்பை தமிழக மக்கள் சுமக்க வேண்டியுள்ளது." என்றார்.

தேசிய ஜனநாயக அரசாங்கம் கடந்த 11 ஆண்டுகளில் வரலாறு காணாத அளவுக்கு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பங்காற்றியிருக்கிறது என்றார் மோதி.

''திமுக-காங்கிரஸ் அரசை விட ரயில் திட்டங்களுக்கு தேசிய ஜனநாயக அரசாங்கம் 7 மடங்கு அதிக நிதியளித்துள்ளது.''

''இளைஞர்களை போதைப்பழக்கத்திலுருந்து மீட்டாக வேண்டும். நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் அதற்கான வழியாக இருக்கும். மக்களின் உடல்நலத்தில் இந்த கூட்டணி கண்ணும்கருத்துமாக உள்ளது.'' என்றார்

மத்திய அரசு செயலாற்றும் பல்வேறு திட்டங்களையும் அவர் பட்டியலிட்டார்.

மேலும் பேசிய மோதி, "குற்றங்களை கட்டுப்படுத்துவதில் ஜெயலலிதா சிறப்பாக செயலாற்றினார். பெண்களுக்கு இந்த ஆட்சியில் பாதுகாப்பற்ற நிலை உள்ளது. காசி தொகுதியின் எம்.பி. நான். அங்குள்ள பனாரஸ் பல்கலைக்கழகத்தில் பாரதி பெயரில் இருக்கை அமைத்துள்ளோம். முருகனுக்கு தீபம் ஏற்றுவது (திருப்பரங்குன்றம் தீப விவகாரம்) விவாதமானபோது நமது தலைவர்கள் அதற்காக குரல் கொடுத்தனர். தமிழ் கலாசாரத்தின் எதிரி திமுக." என்றார்.

ஷார்ட் வீடியோ
காணொளிக் குறிப்பு, "சண்டையிட்டது உண்மை" - எடப்பாடி பழனிசாமியை குறிப்பிட்டு டிடிவி தினகரன் பேசியது என்ன?

டிடிவி தினகரன் எடப்பாடி பழனிசாமி பற்றி கூறியது என்ன?

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பொதுக்கூட்டத்தில் பேசுகையில், "தமிழ்நாட்டில் நடைபெறும் மக்கள் விரோத, குடும்ப ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்துக்காக இந்த கூட்டணியில் நாங்கள் வரவேண்டும் என பிரதமர் மோதி விரும்பினார். எடப்பாடி பழனிசாமியை முழு மனதுடன் ஏற்றுக்கொண்டு இந்த கூட்டணிக்கு வந்திருக்கிறோம்.'' என்றார்.

மேலும்,'' நாங்கள் ஜெயலலிதாவின் தொண்டர்கள், எம்ஜிஆர் வழிவந்தவர்கள். எங்களுக்குள் சண்டை, சச்சரவு இருந்தது உண்மைதான். மனதில் இருந்த கோபங்களை விட்டுவிட்டு, 2021-ல் அமைக்க முடியாமல் போன ஜெயலலிதா ஆட்சியை தமிழகத்தில் உருவாக்கிட எந்தவொரு தயக்கமும் இன்றி, எந்த அழுத்தமும் இன்றி அமமுக இந்த கூட்டணியில் இணைந்துள்ளது. ''என்றார்

''அமமுகவின் தொண்டர்கள் இதற்காக பாடுபடுவார்கள். இந்த உறுதியை மோதிக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் அளிக்கிறேன். (அதிமுகவுடன்) எங்களுக்குள் இருந்த சண்டையால் பிரிந்திருந்தோம் என்பது உண்மைதான். ஆனால், அவற்றை தூக்கியெறிந்துவிட்டு, ஜெயலலிதா-எம்எஜிஆர் ஆட்சியை அமைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஒன்றிணைந்துள்ளோம்." என்றார்.

அன்புமணி ராமதாஸ்

பட மூலாதாரம், Narendra Modi/ Youtube

அன்புமணி ராமதாஸ் பேசியது என்ன?

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், "திமுக ஆட்சியின் முடிவுக்கு இன்று ஒரு தொடக்கம். தகுதியில்லாத, நேர்மையில்லாத திமுக அரசை விரட்டியடிக்க வேண்டும். திமுக தேர்தல் அறிக்கையில் அளித்த 13% வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றியுள்ளது. நகைக்கடன் தள்ளுபடி, கல்விக்கடன் தள்ளுபடி என திமுக அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை." என்றார்.

ஷார்ட் வீடியோ
காணொளிக் குறிப்பு, மோதி முன்னிலையில் உதயநிதி குறித்து எடப்பாடி பழனிசாமி பேசியது என்ன?

'குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி' - எடப்பாடி பழனிசாமி

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், "இந்த ஆட்சியில் திமுக மக்களுக்கு கொடுத்தது வேதனைதான். ஒரு குடும்பம் வாழ எட்டு கோடி மக்களை சுரண்டுவது நியாயமா? கருணாநிதி முதலமைச்சராக இருந்தார். இப்போது ஸ்டாலின் முதலமைச்சராக இருக்கிறார். பின்னர், உதயநிதி ஸ்டாலின் வர வேண்டும் என ஸ்டாலின் எண்ணுகிறார். கருணாநிதி குடும்பத்தை சேர்ந்தவர்களுக்குதான் கட்சியிலும் ஆட்சியிலும் இடம். எந்தவொரு தகுதியும் இல்லாத உதயநிதி எம்எல்ஏ ஆனார், பிறகு அமைச்சர், இப்போது துணை முதல்வர் ஆக்கப்பட்டிருக்கிறார். இந்த தேர்தல்தான் திமுகவுக்கு இறுதி தேர்தல்.'' என்றார்

எடப்பாடி பழனிசாமி

பட மூலாதாரம், Narendra Modi/ Youtube

மேலும், ''இந்த கூட்டணி வலிமையான கூட்டணி. கூட்டணி கட்சி தொண்டர்கள் சுறுசுறுப்பாக பணியாற்றி வெற்றிக்கொடி நாட்டுவோம். குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல் இது. இக்கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமையும். அதிமுக ஆட்சிக் காலத்தில் நாங்கள் கேட்ட திட்டங்களை மத்திய பாஜக அரசு நிறைவேற்றிக் கொடுத்தது.

அதிமுக ஆட்சியில் ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. இது இந்தியாவில் வேறெங்கும் நடக்காதது. நாங்கள் மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தோம். கேட்ட திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியது. திமுக ஆட்சியாளர்கள் வேண்டுமென்றே மத்திய அரசை குறை கூறுகிறது.'' என தெரிவித்தார் எடப்பாடி பழனிசாமி.

செய்தியாளர் சந்திப்பில் தினகரன், இபிஎஸ் பேசியது என்ன?

செய்தியாளர் சந்திப்பில் தினகரன், இபிஎஸ் பேசியது என்ன?

பட மூலாதாரம், PTI

பொதுக்கூட்டத்திற்கு பின்னர் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

இதில், எடப்பாடி பழனிசாமி பேசுகையில், "தமிழகத்தில் வலிமையான கூட்டணி அமைத்துள்ள கட்சி அதிமுக. இன்னும் சில கட்சிகள் எங்கள் கூட்டணியில் இணையவிருக்கின்றன. நாங்கள் ஒன்றாக இணைந்து செயல்படுகிறோம்." என்றார்.

டிடிவி தினகரன் கூட்டணியில் இணைந்தது குறித்து கேள்விக்கு பதிலளித்த அவர், "எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தன. எப்போது இணைந்தோமோ, அப்போதே அவையெல்லாம் கலைந்துவிட்டன. ஒத்த கருத்துடைய கட்சிகள் இணைந்திருக்கிறோம்." என தெரிவித்தார்.

இதையடுத்து, இருவரும் பிரிந்திருந்தபோது பேசியவற்றை எதிர்க்கட்சிகள் பயன்படுத்துவார்களே என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.

அதற்கு பதிலளித்த டிடிவி தினகரன், "2021 சட்டமன்ற தேர்தலில் வாக்குறுதிகள் பலவற்றை திமுக கூறியது. ஆனால், அதில் 95 சதவிகித வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இதை நாங்கள் மக்கள் மத்தியில் கொண்டு செல்வோம். இது எங்கள் குடும்பப் பிரச்னை. கூட்டுக் குடும்பமாக இருந்த எங்களுக்குள் பிரச்னை இருந்தது, மனஸ்தாபத்தால் பிரிந்திருந்தது உண்மை. ஆனால் அமித்ஷா 2021 தேர்தலிலேயே ஒன்றாக இணைய வேண்டும் என முயற்சி செய்தார். அப்போது நடக்கவில்லை.

2026 தேர்தலில் நாங்கள் ஒன்றாக இருக்க வேண்டும் என, அமித் ஷா என்னிடம் பேசும்போது, பழனிசாமியும் நானும் ஒன்றாக இணைந்து, திமுகவை வீட்டுக்கு அனுப்ப உதவி செய்ய வேண்டும் என கூறினார்.

நாங்கள் சேர்ந்ததன் பின்னணியில் எவ்வித அச்சுறுத்தலும் அழுத்தமும் யாருக்கும் இல்லை. 2017 ஏப்ரல் மாதம் வரை எப்படி ஒன்றாக இருந்தோமோ அப்படித்தான் இருக்கிறோம். ஒன்றாக பரப்புரை செய்வோம். கடந்த காலத்தை மறந்துவிட்டோம்." என்றார்.

அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, "வைகோ ஸ்டாலினை எந்தளவுக்கு விமர்சனம் செய்தார்? அந்த வைகோ ஸ்டாலினுடன் இணைந்தார். காங்கிரஸ் கொண்டு வந்த அவசரநிலை காலத்தில் மிசா கொடுமையை அனுபவித்ததாக திமுகவினர் கூறினர். ஆனால், பின்னர் காங்கிரஸுடன் திமுக இணைந்தது. எங்களுக்குள் எந்தவித சங்கடமோ மன வருத்தமோ இல்லை." என்றார்.

ஸ்டாலின் கூறியது என்ன?

மு.க. ஸ்டாலின்

பட மூலாதாரம், FACEBOOK

தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், "பிரதமர் சொல்லும் "டபுள் எஞ்சின்" எனும் "டப்பா எஞ்சின்" தமிழ்நாட்டில் ஓடாது!

ஒன்றிய பா.ஜ.க. அரசு ஏற்படுத்தி வரும் அத்தனை தடைகளையும் தகர்த்தெறிந்துதான் தமிழ்நாடு வரலாறு பேசும் வளர்ச்சியை அடைந்திருக்கிறது.

நீங்கள் சொல்லும் "டபுள் எஞ்சின்" மாநிலங்களான உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், பிகாரைவிட, தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, கர்நாடகா, மேற்கு வங்கம் என உங்கள் "டப்பா எஞ்சின்" நுழையாத மாநிலங்கள்தான் வளர்ச்சியில் கொடிகட்டிப் பறக்குது." என பதிவிட்டுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு