'முதல்வர் வேட்பாளராக பழனிசாமி பெயரை குறிப்பிடாத மோதி' - மதுராந்தகம் பொதுக் கூட்டத்தில் என்ன நடந்தது?

பட மூலாதாரம், @EPSTamilNadu
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், பிரதமர் நரேந்திர மோதி கலந்துகொண்ட மிகப் பெரிய கூட்டத்தை சென்னைக்கு அருகில் உள்ள மதுராந்தகத்தில் நடத்தியிருக்கிறது தேசிய ஜனநாயகக் கூட்டணி.
தி.மு.க. மீது கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ள பிரதமர் மோதி, இரட்டை என்ஜின் அரசு பற்றியும் பேசியிருக்கிறார். ஆனால், முதலமைச்சராக எடப்பாடி கே. பழனிசாமியை குறிப்பிடவில்லை. பிரதமர் கலந்துகொண்ட இந்தக் கூட்டம் தே.ஜ.கூட்டணிக்கு உற்சாகமூட்டியிருக்கிறதா?
எதிரும் புதிருமாக இருந்த அ.தி.மு.கவின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியும் டிடிவி தினகரனும் ஒரே மேடையில் பங்கேற்றது, தி.மு.க.வைக் கடுமையாகத் தாக்கி பிரதமர் பேசியது என கூட்டணிக்கு உற்சாகமூட்டக்கூடிய நிகழ்வுகள் இதில் அரங்கேறியிருக்கின்றன.
ஆனால், தேர்தலில் கடும் போட்டியைக் கொடுக்க இதுமட்டும் போதுமா என்ற கேள்விகளும் இருக்கின்றன.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இதுவரை இணைந்துள்ள கட்சிகள்

பட மூலாதாரம், @narendramodi
அ.தி.மு.கவும் பா.ஜ.கவும் இணைந்து தேர்தலை சந்திக்கப் போவதாக அறிவித்த பிறகும், அந்தக் கூட்டணியில் பெரிய பரபரப்பு இல்லாமலேயே இருந்தது. இந்த நிலையில்தான் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் பிரதமர் நரேந்திர மோதியின் தலைமையில் தமிழ்நாட்டில் பொதுக்கூட்டம் நடக்கவிருக்கும் அறிவிப்பு வெளியானது. இதையடுத்து அரசியல் களத்தில் காட்சிகள் சூடுபிடித்தன. அ.தி.மு.க. கூட்டணிக்கு வரக்கூடிய சாத்தியமுள்ள அனைத்துக் கட்சிகளுடனும் பேச்சு வார்த்தைகள் துவங்கின.
ஒரு கட்டத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சென்னையில் வந்து இறங்கி பேச்சுவார்த்தைகளைத் தீவிரப்படுத்தினார். முடிவில் பா.ம.கவும் டிடிவி தினகரனும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தனர். இவர்கள் தவிர, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதிக் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், புரட்சி பாரதம் ஆகியோரும் இந்தக் கூட்டணியை உறுதிசெய்திருந்தனர்.
2019, 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல்களில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த புதிய தமிழகம் கட்சி தற்போதுவரை இந்தக் கூட்டணியில் இடம்பெறவில்லை.
"2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை அதிகாரபூர்வமாக யாரும் தங்களைக் கூட்டணிக்காக அணுகவில்லை; ஆகவே எந்தக் கூட்டணி என்பதை இன்னும் முடிவுசெய்யவில்லை" என்றும் அக்கட்சியின் தலைவர் கே. கிருஷ்ணசாமி கூறிவிட்டார். அதேபோல, பிரேமலதா விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.கவும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என்பதும் சில நாட்களுக்கு முன்பே தெளிவாகிவிட்டது. ஆகவே மதுராந்தகம் பொதுக்கூட்ட மேடையில் இந்தத் தலைவர்கள் படங்கள் இடம்பெறவில்லை.
இருந்தபோதும் தேசிய ஜனநாயகக் கூட்டணி உற்சாகமடையும் வகையில் சில காட்சிகள் மதுராந்தகம் கூட்டத்தில் நடைபெற்றன.
பியூஷ் கோயலுடன் நடந்த பேச்சுவார்த்தையை அடுத்து தே.ஜ. கூட்டணியில் இணைந்த டி.டி.வி. தினகரன், அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது, "முதல்வர் வேட்பாளர் யார்? என செய்தியாளர்கள் கேட்டனர். "அது யார் என்பது எல்லோருக்கும் தெரியும்" என்று சொல்லி, எடப்பாடி கே. பழனிசாமி பெயரைச் சொல்வதை தவிர்த்தார் டிடிவி.
ஆனால், இந்தப் பொதுக்கூட்டத்தில் இருவருமே மற்றவரின் பெயரை குறிப்பிட்டு பேசியது அங்கிருந்த தொண்டர்களை உற்சாகப்படுத்தியது. டிடிவி தினகரன் பேசும்போது ஒருபடி மேலேபோய், "பங்காளிச் சண்டையை மறந்துவிட்டு கூட்டணிக்கு வந்திருக்கிறாம்" என்று குறிப்பிட்டார்.
பிரதமர் பேசியது என்ன?

பட மூலாதாரம், @narendramodi
கூட்டத்தில் பேசிய எடப்பாடி கே. பழனிசாமி, அன்புமணி ராமதாஸ், பிரதமர் நரேந்திர மோதி என அனைவருமே தி.மு.க. அரசை கடுமையாக தாக்கிப் பேசினர். பிரதமரின் நீண்ட உரையில், தி.மு.க. மீதான ஊழல் குற்றச்சாட்டுகள், தே.ஜ.கூவின் இரட்டை என்ஜின் அரசு, தமிழ்நாட்டில் போதைப் பொருள் நடமாட்டம் ஆகிவற்றுக்கு முக்கியத்துவம் அளித்துப் பேசினார்.
"தி.மு.க. அரசின் கவுன்ட் டவுன் தொடங்கிவிட்டது. ஆட்சி செய்ய நீங்கள் தி.மு.கவுக்கு வாய்ப்பளித்தீர்கள். ஆனால், அவர்கள் தமிழக மக்களுக்கு நம்பிக்கை துரோகம் இழைத்துவிட்டார்கள். தி.மு.க. அரசை மக்கள் சிஎம்சி (CMC) அரசு என அழைக்கிறார்கள். சிஎம்சி என்றால், corruption (ஊழல்), mafia (மாபியா), Crime (க்ரைம்) ஆகியவற்றை ஆதரிக்கும் அரசாங்கம். தமிழக மக்கள் தி.மு.கவையும் சிஎம்சியையும் வேரோடு அகற்ற முடிவெத்துவிட்டார்கள். இங்கு பா.ஜ.க. தே.ஜ.கூவின் இரட்டை என்ஜின் அரசு அமைவது உறுதியாகிவிட்டது" என்று குறிப்பிட்டார் பிரதமர்.
மத்தியில் தே.ஜ.கூ ஆட்சி வந்த பிறகு தமிழகத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் கூடுதல் ரயில் திட்டங்கள் அளிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து தமிழ்நாட்டில் போதைப் பொருள் நடமாட்டம் பெருமளவில் இருப்பதாகவும் பெற்றோரின் கண்களுக்கு முன்பாகவே குழந்தைகள் நாசமாகிக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார் பிரதமர்.
பழனிசாமி- டிடிவி தினகரன் கூட்டணி

பட மூலாதாரம், PTI
பொதுக்கூட்டம் முடிவடைந்து பிரதமர் மோதி புறப்பட்டவுடன், பியூஷ் கோயல், எடப்பாடி கே. பழனிசாமி, அன்புமணி ராமதாஸ், டிடிவி தினகரன் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அ.தி.மு.கவும் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும் ஒரே கூட்டணியில் இடம்பெற்றது குறித்த கேள்விகளுக்கு எடப்பாடி கே. பழனிசாமியும் தினகரனும் அளித்த பதில்கள், இரு கட்சியின் தொண்டர்களுக்கும் உற்சாகம் அளிக்கும் வகையிலேயே இருந்தது.
"இது எங்கள் குடும்பப் பிரச்னை. ஒரு கூட்டுக் குடும்பமாக இருந்தவர்களுக்குள் மனஸ்தாபம் ஏற்பட்டு பிரிந்திருந்தது உண்மை. அமித்ஷா 2021லேயே முயற்சி செய்தார். அப்போது நடக்கவில்லை. இப்போது அமித் ஷாவும் மோதியும் தி.மு.க. அரசை வீட்டிற்கு அனுப்ப எல்லோரும் ஒன்றிணைய வேண்டும் என்று சொன்னார்கள். இதெல்லாம் நடந்து இரண்டு, மூன்று மாதங்களாகிவிட்டன. இதற்கு எடப்பாடி கே. பழனிசாமி ஒப்புதல் அளித்த பிறகுதான் என்னை அழைத்துப் பேசினார்கள். 2017 ஏப்ரல் வரை எப்படியிருந்தோமோ அப்படி ஒன்றிணைந்துவிட்டோம்" என்றார் டிடிவி தினகரன்.
இருதரப்பும் கடுமையாக மோதிக் கொண்டிருந்த காலத்தில் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை மாறிமாறி சுமத்திய நிலையில், அந்த வீடியோக்கள் தற்போதைய பிரசாரத்தில் பயன்படுத்தப்படலாமே என செய்தியாளர்கள் கேட்டபோது, அதற்கு எடப்பாடி கே. பழனிசாமி விரிவாகப் பதிலளித்தார்.
"வைகோ தி.மு.கவைப் பற்றியும் மு.க. ஸ்டாலினைப் பற்றியும் எவ்வளவு மோசமாகப் பேசினார். அதைப் பற்றி நீங்கள் கேட்பதில்லை. அதே வைகோ இப்போது மு.க. ஸ்டாலினோடு இணைந்துவிட்டார். அதற்கடுத்தபடியாக காங்கிரஸ். நெருக்கடி நிலையின்போது மிக மோசமாக சித்ரவதைக்கு உள்ளானோம் என்றது தி.மு.க. மேலும், அறிவாலயத்தின் மேல் தளத்தில் ரெய்டு நடந்தபோது கீழே கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தது. இருந்தபோதும் இருவரும் ஒன்றாக இணைந்துவிட்டார்கள். அந்த அளவுக்கு எங்களுக்குள் எந்த சங்கடமோ, மனவருத்தமோ கிடையாது" என்றார் எடப்பாடி கே. பழனிசாமி.
"எடப்பாடி கே. பழனிசாமிக்கும் டிடிவிக்கும் இடையில் ஏற்பட்டிருக்கும் நல்லுறவு எல்லோருக்குமே ஆச்சரியமளிக்கிறது. அந்த அளவுக்கு வேகமாக எடப்பாடி பழனிசாமி டிடிவியை அரவணைத்துக் கொண்டார். இது உடல் ரீதியாகவும் மொழி ரீதியாகவும் வெளிப்பட்டது. இந்த அரவணைப்பு இரு கட்சியின் தொண்டர்களுக்குமே உற்சாகமளிக்கும்" என்கிறார் மூத்த பத்திரிகையாளர் எஸ். பி. லக்ஷ்மணன்.
'இது ஒரு வழக்கமான கூட்டம் தான்'

பட மூலாதாரம், @narendramodi
இதுபோன்ற தருணங்களைத் தவிர, இது ஒரு வழக்கமான கூட்டம்தான் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
மூத்த பத்திரிகையாளரான ஆர்.கே. ராதாகிருஷ்ணன், "மதுராந்தகம் கூட்டத்தில் பிரதமர் பேசியது ஒரு வழக்கமான பேச்சு. உள்ளடக்கம் குறைவாகவும் முழக்கங்கள் அதிகமாகவும் இருந்தன. பிரதமரின் உரை அங்கே கூடியிருந்த அவர்களுடைய தொண்டர்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஆனால், கூட்டத்திற்கு வெளியில் இருந்தவர்களிடம் எந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெரியவில்லை." என்கிறார்.
"பேச்சு நெடுக, பா.ஜ.க. தலைமையிலான தே.ஜ.கூ. என்றே பிரதமர் குறிப்பிட்டதும் எடப்பாடி கே. பழனிசாமியின் பெயரை ஆரம்பத்தில் சொன்னதைத் தவிர்த்து வேறு எந்த இடத்திலும் சொல்லாததும் கவனிக்கத்தக்கதாக இருந்தது." என்று குறிப்பிடுகிறார் ராதாகிருஷ்ணன்.
அதேபோல, "மதுரையில் கட்டப்பட்டுவரும் எய்ம்ஸ் மருத்துவமனை இன்னமும் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் புறக்கணித்துவிட்டு, எதிர்க்கட்சிகளைக் குற்றம்சாட்டுவது எந்த அளவுக்கு எடுபடும் எனத் தெரியவில்லை" என்கிறார் அவர்.

ஆனால், எஸ்.பி. லக்ஷ்மணனைப் பொறுத்தவரை, பிரதமர் ஒரு நல்வாய்ப்பைத் தவறவிட்டுவிட்டதாகக் குறிப்பிடுகிறார். "இந்தக் கூட்டணியை உருவாக்கியது அமித் ஷா. அதற்குப் பிந்தைய முதல் செய்தியாளர் சந்திப்பில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தமிழ்நாட்டில் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி என்றும் தேசிய அளவில் பிரதமர் நரேந்திர மோதி தலைவர் என்றும் குறிப்பிட்டார். ஆனால், தமிழ்நாட்டில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை அவர் அறிவிக்கவில்லை. இப்போதுவரை அறிவிக்கவில்லை" என்கிறார்.
"தேர்தலுக்கு முன்பாக முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்காமல் இருப்பது தேசிய அளவில் பா.ஜ.கவின் பாணியாக இருக்கலாம். ஆனால், தமிழ்நாட்டில் கூட்டணிக்குத் தலைமை தாங்குவது அ.தி.மு.கதான். ஆகவே, அ.தி.மு.கவின் பாணியைத்தான் பின்பற்றியிருக்க வேண்டும். அப்படிச் செய்யவில்லை. அதைப் பற்றிக் கேட்கும்போது, தேர்தலில் வெற்றிபெறும்போது அ.தி.மு.கவிலிருந்து ஒருவர் முதல்வராவார் என்று தெரிவித்தார்கள். ஆனால், அதற்கு முன்பாகவே தன்னை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தி 120 தொகுதிகளில் எடப்பாடி பிரசாரத்தை முடித்திருந்தார்." என்று கூறுகிறார் எஸ்.பி. லக்ஷ்மணன்.
தொடர்ந்து பேசிய அவர், "இன்று நடந்த பொதுக் கூட்டத்தைப் பொறுத்தவரை, கூட்டணி ஓரளவுக்கு வடிவம் பெற்றுவிட்ட நிலையில் நடந்த முதல் பிரசாரக் கூட்டம். இந்தக் கூட்டத்தில் யாரை வீழ்த்தப் போகிறோம், யாரை ஆட்சியில் அமர்த்தப் போகிறோம் என்பதை பிரதமர் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் அவர் எடப்பாடியின் பெயரையே சொல்லவில்லை. ஏன், அ.தி.மு.கவின் பெயரையே சொல்லவில்லை. தொடர்ந்து பா.ஜ.க - தே.ஜ.கூட்டணி என்றே குறிப்பிட்டார்." என்கிறார்.
இது பா.ஜ.க. தொண்டர்களுக்கு சந்தோஷமளிக்கலாம், ஆனால், அ.தி.மு.க. தொண்டர்களுக்கு அவ்வாறு இருக்காது எனக் குறிப்பிடும் எஸ்.பி. லக்ஷ்மணன், "தமிழ்நாட்டில் கூட்டணிக்கு தலைவர் எடப்பாடிதான். ஆகவே இங்கே அ.திமு.கவுக்குத்தான் முக்கியத்துவம் தர வேண்டும். இந்தப் போக்கை சரிசெய்வது அவசியம்" என்கிறார்.
முதலமைச்சர் கூறியது என்ன?
இதற்கிடையில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் பிரதமரின் பேச்சு குறித்து விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார்.
"ஒன்றிய பா.ஜ.க. அரசு ஏற்படுத்தி வரும் அத்தனை தடைகளையும் தகர்த்தெறிந்துதான் தமிழ்நாடு வரலாறு பேசும் வளர்ச்சியை அடைந்திருக்கிறது. கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க… நீங்கள் சொல்லும் "டபுள் எஞ்சின்" மாநிலங்களான உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம்,பிகாரை விட, தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, கர்நாடகா, மேற்கு வங்கம் என உங்கள் "டப்பா எஞ்சின்" நுழையாத மாநிலங்கள்தான் வளர்ச்சியில் கொடிகட்டிப் பறக்குது. தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பா.ஜ.க. செய்யும் துரோகங்களை, நீங்கள் மறைத்தாலும் தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்" என 'இரட்டை என்ஜின்' என்ற பிரதமரின் முழக்கத்தை விமர்சித்திருக்கிறார் முதலமைச்சர்.
ஆனால், எல்லாவற்றையும் தாண்டி 2026ஆம் ஆண்டின் சட்டமன்றத் தேர்தல் களத்தை இந்தப் பொதுக்கூட்டம் சூடுபிடிக்க வைத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












