ஷேன் வாட்சன்: அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்! தேசிய, சர்வதேச மற்றும் தமிழ்நாடு சார்ந்த இன்றைய பல முக்கிய செய்திகளை இங்கே நீங்கள் தெரிந்து கொள்ளலாம். முக்கிய நிகழ்வுகளும், செய்தி முன்னேற்றங்களும் இங்கே பகிரப்படும்.

வாட்சன்

பட மூலாதாரம், Getty Images

அனைத்து கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சன் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

தற்போது சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்காக விளையாடி வரும் வாட்சன், அனைத்து கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவிக்கப்போகிறார் என்ற தகவல் ஊடகங்களில் நேற்று வெளியான நிலையில் இன்று அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ஷேன் வாட்சன்.

"ஐந்து வயது இருக்கும்போது டெஸ்ட் போட்டி ஒன்றை பார்த்துவிட்டு நான் ஆஸ்திரேலியாவுக்காக கிரிக்கெட் விளையாட விரும்புகிறேன் என்று எனது தாயிடம் கூறியதில் தொடங்கியது எனது இந்த பயணம். தற்போது நான் அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுகிறேன்," எனத் தனது யூட்யூப் சேனலில் தெரிவித்துள்ளார் வாட்சன்.

"கடந்த மூன்று வருடங்களாக என்னிடம் அன்பு காட்டிய சிஎஸ்கே அணிக்காக நான் விளையாடியதுதான் எனது கடைசி போட்டி என்று தெரிந்து, இது சரியான நேரம் என்று எனக்கு தோன்றியது." என்றும் அவர் தெரிவித்தார்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

ஆஸ்திரேலிய அணியின் ஆல் ரவுண்டரான ஷேன் வாட்சன் 2015ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த பின், 2016ஆம் ஆண்டு அனைத்துவித சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுப் பெறுவதாக அறிவித்திருந்தார்.

அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளிலும் சதம் அடித்துள்ள ஆஸ்திரேலிய வீரர் என்ற சிறப்பையும் பெற்றுள்ளார் ஷேன் வாட்சன்.

சென்ற வருட ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டத்தில் சிஸ்கே அணியில் விளையாடிய ஷேன் வாட்சன் 59 பந்துகளில் 80 ரன்கள் எடுத்தார். அவரின் சிறப்பான ஆட்டத்தால் சிஸ்கே அணியின் வெற்றி வாய்ப்பு அதிகரித்தது. ஆனால் ஆட்டத்தின் முடிவில் சிஸ்கே அணி 1 ரன் வித்தியாசத்தில் தோற்றது.

சிஸ்கே அணி தோல்வியுற்றாலும் கால்களில் ரத்த காயத்துடன் வாட்சன் விளையாடியது சமூக வலைதளங்களில் பெரிதும் பகிரப்பட்டு, ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டை பெற்றார் வாட்சன். குறிப்பாக சென்னை அணி ரசிகர்கள் அவரை வெகுவாக பாராட்டியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Presentational grey line

நியூஸிலாந்து அமைச்சரான சென்னை பெண்

பிரியங்கா

பட மூலாதாரம், PRIYANCA RADHAKRISHNAN MP FB

நியூஸிலாந்து பிரதமர் ஜெசிண்டா ஆர்டெர்ன் அமைச்சரவையில் சென்னையில் பிறந்தவரும் கேரளாவை பூர்விகமாகக் கொண்டவருமான பிரியங்கா ராதாகிருஷ்ணன் (41) அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அந்நாட்டில் அமைச்சர் பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

அமைச்சரான தகவலை தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பிரியங்கா பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார். அதில் அவர், "இன்று நம்பமுடியாத சிறப்பான நாளாக இருந்தது. நமது அரசாங்கத்தின் ஒரு பகுதியாக மாறுவதற்கான சலுகை உணர்வு உட்பட, நான் பல விஷயங்களை உணர்கிறேன். எனக்காக வாழ்த்துச் செய்திகள் / செய்தி அனுப்ப / அழைப்பு / செய்தி அனுப்ப நேரம் ஒதுக்கிய அனைவருக்கும் மிகப்பெரிய நன்றி. மிகவும் சிரம் தாழ்ந்து இந்த பணியை ஏற்றுக் கொள்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

தனது புதிய அமைச்சரவையில் ஐந்து பேருக்கு ஜெசிண்டா ஆர்டெர்ன் வாய்ப்பு வழங்கியிருக்கிறார். பிரியங்கா ராதாகிருஷ்ணன், சென்னையி்ல் பிறந்தவர். ஆனால், இவரது குடும்ப பூர்விகம் கேரளா.. மாதவன் பரம்பு ராதாகிருஷ்ணனுக்கும் உஷாவுக்கும் பிறந்த இவர், சிங்கப்பூரில் பள்ளிக்கல்வியை முடித்தார். இவரது பெற்றோர் சென்னையில்தான் வசித்து வருகின்றனர்.

Presentational grey line
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு: நீதிமன்ற விசாரணை எப்போது?

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த வழக்கின் விசாரணை நவம்பர் 11ஆம் தேதி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் தொடங்குகிறது என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஐ தெரிவித்துள்ளது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ் மற்றும் காவலர் முருகன் ஜாமீன் வழங்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

அதில்," சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பெனிக்ஸ் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தற்போது வரை சிறையில் இருக்கிறோம் உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின்படி சிபிசிஐடி காவல்துறையினர் வழக்கை விசாரித்த நிலையில் தற்போது சிபிஐ காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். வழக்கு தொடர்பான ஆவணங்களை ஏற்கெனவே தடய அறிவியல் துறை அதிகாரிகள் சேகரித்து விட்ட நிலையில் விசாரணை முடிவடைந்து உள்ளது.

எங்களுக்கு ஜாமின் வழங்கும் பட்சத்தில் தலைமறைவாக மாட்டோம். நீதிமன்றம் வகுக்கும் கட்டுப்பாடுகளுக்கு உடன்படுவோம். ஆகவே, இந்த வழக்கில் ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட வேண்டும்" என கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

இந்த மனுக்கள் இன்று நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது, விசாரணையின்போது மனுதாரர்கள் தரப்பில் நீதிமன்றம் விதிக்கும் அனைத்து நிபந்தனைகளுக்கும் கட்டுப்படும் என்றும் வழக்கு கைது செய்யப்பட்டு 130 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது.

இதற்கு ஆட்சேபம் தெரிவித்த சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கின் முக்கிய குற்றம்சாட்டப்பட்ட நபர்களாக ரகு கணேஷ் மற்றும் காவலர் முருகன் பார்க்கப்படுகின்றனர். இவர்கள்தான் தந்தை மகன் இருவரையும் மிருகத்தனமான தாக்கியதில் முக்கிய பங்கு வகித்தவர்கள். மேலும் காவலர் ரேவதி கொடுத்த வாக்குமூலத்தில் இவர்களின் பங்கு முக்கியமாக பார்க்கப்படுகிறது மேலும் சிபிஐ விசாரணையில் விசாரணையிலும் ஆவணங்களின் அடிப்படையிலும் இவர்கள் இருவரும் முக்கிய குற்றவாளிகளாக பார்க்கப்படுகின்றனர். எனவே இவர்களுக்கு ஜாமீன் வழங்கினால் வழக்கு விசாரணை பாதிக்கப்படும். குறிப்பாக இந்த வழக்கின் நீதிமன்ற விசாரணை வருகின்ற நவம்பர் 11ஆம் தேதி மதுரை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் தொடங்க உள்ளது. எனவே இருவரையும் ஜாமீனில் விடுவிக்க உத்தரவிடக் கூடாது என வாதிட்டார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் இருவரது ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து அவற்றின் மீதான விசாரணையை முடித்து வைத்தனர்.

Presentational grey line

பிஹார் சட்டமன்ற தேர்தல்: 94 தொகுதிகளில் தொடங்கியது வாக்குப்பதிவு

பிஹார்

பட மூலாதாரம், Getty Images

பிஹார் மாநில சட்டமன்றத்துக்கு இரண்டாம் கட்ட தேர்தல் செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்த தேர்தல் 17 மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை தேர்தல் நடைபெறும்.

பிஹாரில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளுக்கான தேர்தல் மூன்று கட்டமாக நடக்கிறது. இதில் முதலாம் கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 28ஆம் தேதி 16 மாவட்டங்களில் உள்ள 71 தொகுதிகளுக்கு நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து செவ்வாய்க்கிழமை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 17 மாவட்டங்களில் உள்ள 94 தொகுதிகளுக்கு நடக்கிறது. மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 7ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதில் 15 மாவட்டங்களில் உள்ள 78 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறும்.

இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் நவம்பர் 10ஆம் தேதி எண்ணப்படும்.

இரண்டாம் கட்ட தேர்தலில் 1,463 வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார்கள். எதிர்கட்சிகள் முன்னிறுத்திய முதல்வர் வேட்பாளர் தேஜாஸ்வி யாதவ், அவரது மூத்த சகோதரர் தேஜ் பிரதாப் யாதவ் உள்ளிட்ட பல முக்கிய அரசியல் பிரபலங்களின் தலைவிதியை இந்த வாக்குப்பதிவே தீர்மானிக்கவுள்ளது.

2015ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்ற தேர்தலின்போது ராஷ்ட்ரிய ஜனதா தளம், தனிப்பெரும்பான்மையுடன் தற்போது தேர்தல் நடக்கும் 94 இடங்களில் விளங்கியது. இந்த தொகுதிகளில் மட்டும் அந்த கட்சியின் வாக்குகள் சதவீதம் 45.3 ஆகும். இந்த தொகுதிகள் அனைத்தும் பின்தங்கியவை. 2015 தேர்தலில், ஆர்ஜேடி 33, ஜேடியு 30, பாஜக 20, காங்கிரஸ் 7, லோக் ஜன சக்தி 2, மற்றவர்கள் 2 என்ற வகையில் வெற்றி பெற்றனர்.

அந்த தேர்தலின்போது லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் ஐக்கிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி மேற்கொண்டு மகா கூட்டணி என்ற பெயரில் தேர்தலை சந்தித்தது. ஆனால், 2017இல் அந்த கூட்டணியை முறித்த முதல்வர் நிதிஷ் குமார், 53 உறுப்பினர்களைக் கொண்டிருந்த பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சியை தக்க வைத்தார்.

இம்முறை நடக்கும் தேர்தலில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், பாஜகவுடன் கூட்டணி சேர்ந்துள்ளது. அதற்கு எதிரான களத்தில் ஆர்ஜேடி மொத்தம் 144 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் 70 தொகுதிகளிலும், இடதுசாரிகள் 29 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

செவ்வாய்க்கிழமை நடக்கும் இரண்டாம் கட்ட தேர்தலில் 2.86 கோடி வாக்காளர்கள் வாக்குரிமை செலுத்த தகுதி பெற்றுள்ளனர்.

பிஹாரைத் தவிர இந்தியாவின் 10 பிற மாநிலங்களில் 54 இடங்களுக்கான இடைத்தேர்தலும் இன்று நடந்து வருகிறது.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் முதலாவதாக சட்டமன்ற தேர்தல் பிஹாரில்தான் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Presentational grey line

வியன்னா துப்பாக்கி சூடு: 6 இடங்களில் திடீர் தாக்குதல் - என்ன நடந்தது?

தாக்குதல்

பட மூலாதாரம், Reuters

ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் ஆறு வெவ்வேறு இடங்களில் ஆயுததாரிகள் துப்பாக்கியுடன் வந்து தாக்குதல் நடத்தினார்கள். நடந்த சம்பவத்தில் தாக்குதலில் ஈடுபட்ட குழுவைச் சேர்ந்த ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

ஆஸ்திரியா ஆட்சித்துறைத் தலைவர் செபாஸ்டியன் குர்ஸ், "இந்த சம்பவத்தை வெறுப்பூட்டும் தீவிரவாத தாக்குதல்" என்று அழைத்துள்ளார். இந்த சம்பவத்தில் ஒரு துப்பாக்கிதாரி கொல்லப்பட்டதாகவும் அவர் கூறினார்.

அந்த நகரில் பெரும்பாலான பகுதிகள் காவல்துறையால் சீல் வைக்கப்பட்டு மற்ற துப்பாக்கிதாரிகளை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

வியன்னா நகர மேயர் இந்த சம்பவம் பற்றி கூறும்போது, இதுவரை 15 பேர் காயம் அடைந்ததாகவும் அதில் ஏழு பேர் கவலைக்கிடமாக உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

நகரின் மையப்பகுதியில் உள்ள தேவாலயத்துக்கு அருகே தாக்குதல் நடந்துள்ளது. ஆனால், துப்பாக்கிதாரிகள் அந்த ஆலயத்தை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த வந்தார்களா என்பது இன்னும் தெளிவாகவில்லை.

ஆஸ்திரியாவில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் கடுமையானதையடுத்து, அங்கு தேசிய அளவிலான கட்டுப்பாடுகள் நவம்பர் 2ஆம் தேதி அமலுக்கு வந்தன. இம்மாத இறுதிவரை அங்கு கட்டுப்பாடுகள் தொடரும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் அங்கு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நடந்த தாக்குதலை ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் கடுமையாக கண்டித்துள்ளனர். செக் குடியரசு நாட்டை இணைக்கும் ஆஸ்திரியா எல்லையிலும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.

Presentational grey line

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: