மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல் ஹாசன்: 'மக்களுடன்தான் கூட்டணி' - கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் அறிவிப்பு
பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்! தேசிய, சர்வதேச மற்றும் தமிழ்நாடு சார்ந்த இன்றைய பல முக்கிய செய்திகளை இங்கே நீங்கள் தெரிந்து கொள்ளலாம். முக்கிய நிகழ்வுகளும், செய்தி முன்னேற்றங்களும் இங்கே பகிரப்படும்.

பட மூலாதாரம், Getty Images
வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்களுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடப் போவதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்திருக்கிறார். கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்காக மக்கள் நீதி மய்யத்தின் மாவட்ட செயலாளர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. கட்சியின் நிர்வாக குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இன்னும் இரண்டு நாட்கள் நடக்கவிருக்கும் இந்தக் கூட்டத்தில் இன்று மேற்கு மாவட்டங்களைச் சேர்ந்த 36 பேர் கலந்துகொண்டனர். கட்சி தேர்தலை அணுக வேண்டிய முறை குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தின் முடிவில் பேசிய கமல்ஹாசன், "கூட்டணி என்பது என் வேலை. எல்லோரும் வெற்றிக்கு உழைக்க வேண்டும். நம் கூட்டணி மக்களுடன்" என்று குறிப்பிட்டதாக அக்கட்சியின் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.
தி.மு.க. போன்ற கட்சிகளுடன் இந்த முறை மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைக்கலாம் எனப் பேச்சுகள் அடிபட்ட நிலையில் இந்த அறிவிப்பை கமல் வெளியிட்டுள்ளார்.


பட மூலாதாரம், Getty Images
லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டால்தான், அத்தகைய குற்றங்கள் சரி செய்யப்படும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய போதுமான கொள்முதல் நிலையங்கள் இல்லை எனவே போதுமான நெல் கொள்முதல் நிலையங்களை அதிகரிக்க உத்தரவிடக்கோரி சென்னையைச் சேர்ந்த சூரிய பிரகாசம் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி கிருபாகரன், புகழேந்தி அமர்வு, வழக்கு குறித்து தமிழக அரசு விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
விசாரணையின் போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் நிர்வாக இயக்குநர் ராதாதேவி தாக்கல் செய்த பதில் மனுவில் 862 கொள்முதல் நிலையங்கள் தமிழ்நாட்டில் உள்ளது என்றும், மேலும் கொள்முதல் நிலையங்கள் அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறியிருந்தார்.
அதேபோல் நெல் கொள்முதல் நிலையங்களில் அதிகாரிகள் லஞ்சம் வாங்குகிறார்கள் என்பது தவறான தகவல் என்றும், அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபடுவதை கண்காணிக்க 6 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு 105 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அறிக்கை தாக்கல் செய்திருந்தார்.
இந்த அறிக்கை படித்த நீதிபதிகள் கோபமடைந்து, "இந்த அறிக்கையில் கொள்முதல் நிலையங்களில் அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது தவறான தகவல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த வரியில் ஊழல் அதிகாரிகளை கண்காணிக்க குழு அமைத்து முறைகேடில் ஈடுபட்ட 105 அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது" என்று சுட்டிக்காட்டினர்.

பட மூலாதாரம், Getty Images
"முறைகேடு நடைபெறவில்லை என்றால் 105 அதிகாரிகள் மீது ஏன்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?" என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இது போன்ற தவறான தகவலை நீதிமன்றத்தில் தெரிவிக்கும் அதிகாரிகள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக நேரிடும் என நீதிபதிகள் எச்சரித்தனர்.
விவசாயிகள் இரவு பகல் என விழித்து பாம்புக்கடி போன்ற வலி வேதனைகளை அனுபவித்து விவசாயம் செய்து நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வந்தால் வாங்குவதற்கு வக்கில்லாமல் விவசாயிகளிடம் லஞ்சம் பெற்று பிச்சை எடுத்து வருகின்றனர்.
லஞ்சம் வாங்குவது சாதாரண விஷயமாகவும் லஞ்சம் வாங்காத அவர்களை சமூகத்தில் பிழைக்கத் தெரியாதவன் என்றும் வேலை தெரியாதவன் என்று கேலி செய்து வருகின்றனர் சமூகத்தில் லஞ்சம் என்பது புற்றுநோயை விட கொடிய நோயாக பரவிக் கொண்டிருக்கின்றது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
மேலும், "இது போன்று லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கு ஏன் தூக்கு தண்டனை விதிக்கக் கூடாது?" என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அத்தகைய தண்டனை விதிக்கப்பட்டால்தான் குற்றம் குறையும். நமது நாட்டில் விவசாயம் அனாதை ஆக்கப்பட்டு வருகிறது. 105 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பதில்மனுவில் குறிப்பிடும் போது கொள்முதல் செய்யப்படும் நெல் மூடை ஒன்றுக்கு 30 முதல் 40 ரூபாய் வரை ஊழியர்கள் லஞ்சம் கேட்கிறார்கள் என்பதை முற்றிலும் தவறான தகவல் என எப்படி கூற முடியும்? இது தவறான தகவலை அளிப்பதாகாதா? என்று நீதிபதிகள் கேட்டனர்.
இவ்வாறு உள்ள சூழலில் தமிழக அரசின் அறிக்கை என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை என்று கூறிய நீதிபதிகள், கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகளில் ஈடுபட்ட 105 அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்? எவ்வளவு பணம் இவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது? எனஅரசின் சார்பாக விரிவான பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த வழக்கின் எதிர் மனுதாரராக வேளாண் துறை செயலாளரை சேர்க்கவும், வேளாண் விஞ்ஞானி சுவாமிநாதன் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறித்தும் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஓய்வு பெற்ற நீதிபதி ராஜன் தலைமையில் அமைக்கபட்ட குழு, அரசு துறைகளில் லஞ்ச ஒழிப்பு குறித்து ஆய்வு செய்து தாக்கல் செய்த அறிக்கை அடிப்படையில் தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறித்தும் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 9ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

ஒசாமா பின்லேடனை மூன்று முறை நேர்காணல் செய்த மூத்த பத்திரிகையாளர் காலமானார்

பட மூலாதாரம், Reuters
ஒசாமா பின்லேடனை மூன்று முறை நேர்காணல் செய்த மூத்த பத்திரிகையாளர் ராபர்ட் ஃபிஸ்க் காலமானார். அவருக்கு வயது 74.
உடல்நலக்குறைவால் வெள்ளிக்கிழமை டப்லினில் உள்ள புனித வின்செண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்ததாக ஐரிஷ் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
1970 ஆம் ஆண்டு முதல் மத்திய கிழக்கு நாடுகள் குறித்த செய்திகளை தொடர்ந்து வழங்கி வரும் ஃபிஸ்க் ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார்.
மேற்கத்திய நாடுகளின் வெளியுறவு கொள்கைகளையும், அமெரிக்கா இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளையும் தொடர்ந்து விமர்சித்து வந்ததால் சர்ச்சைக்கு உள்ளானார்.

பட மூலாதாரம், Getty Images
மத்திய கிழக்கு, பால்கன், வட ஆஃப்ரிக்க நாடுகளின் போர் குறித்த செய்திகளைக் கடந்த ஐம்பது ஆண்டுகளாக அவர் வழங்கி வருகிறார்.
பிரிட்டனின் பிரபலமான வெளிநாட்டு செய்தியாளர் என 2005ஆம் ஆண்டு நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் குறிப்பிட்டது.
இங்கிலாந்து கெண்டில் உள்ள மெய்ட்ஸ்டோன் பகுதியில் 1946ஆம் ஆண்டு பிறந்த இவர், பின்னர் அயர்லாந்து குடியுரிமையைப் பெற்றார்.
கூச்ச சுபாவம் கொண்டவர்
90களில் ஒசாமா பின்லேடனை மூன்று முறை பேட்டி எடுத்திருக்கிறார்.
ஒசாமாவை ஒரு கட்டுரையில் இவர் `கூச்ச சுபாவம்' உடையவர் என்று குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க, இஸ்ரேல், பிரிட்டன் வெளியுறவுக் கொள்கைகளை இவர் தொடர்ந்து விமர்சித்து வந்தார்.
பிபிசி மத்திய கிழக்கு ஆசிரியர் ஜெரமி பொவென் உள்ளிட்ட பல ஊடகவியலாளர்கள் ஃபிஸ்க்கின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தனிமைப்படுத்திக் கொண்ட உலக சுகாதார அமைப்பின் தலைவர்

பட மூலாதாரம், Getty Images
கொரோனா தொற்றுள்ள நபருடன் தொடர்பு ஏற்பட்ட நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானம் கேப்ரேயேசூஸ் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன்
இது தொடர்பாக அவர் தமது ட்விட்டர் பக்கத்தில், "என்னுடன் தொடர்பில் இருந்தவருக்கு கொரோனா பாசிட்டிவ் என தெரியவந்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் விதிகளின்படி நான் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். நான் நலமுடன் உள்ளேன். எனக்கு எந்த கொரோனா அறிகுறியும் இல்லை. வீட்டில் இருந்தே பணிபுரிகிறேன்," என கூறியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
சர்வதேச அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46,437,615 ஆக உள்ளது, பலியானவர்களின் எண்ணிக்கை 1,199,693 ஆக உள்ளது.

அமெரிக்கா முழுமையாக மாற வேண்டும் - தலைமை சுகாதார அதிகாரி

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்க தேர்தல் நடக்க இருக்கும் ஒரு நாளுக்கு முன்பு தொற்று நோய் நிபுணர் ஆன்டனி ஃபெளட்சி மீது கோபம் கொண்டுள்ளது வெள்ளை மாளிகை.
அவர் வாஷிங்டன் போஸ்ட்டுக்கு அண்மையில் ஒரு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறிய விஷயங்களே இந்த கோபத்துக்கு காரணம்.
என்ன சொன்னார்?
வெள்ளை மாளிகை சினம் கொள்ளும் அளவுக்கு அப்படி அவர் சொன்னார்?
கொரோனா தொற்று விஷயத்தை டொனால்ட் டிரம்பும், ஜோ பைடனும் எப்படி பார்க்கிறார்கள் என கேள்வி எழுப்பபட்டது. இதற்கு பதில் அளித்த ஃபெளசி, "சுகாதார பார்வையில் இதனை தீவிரமாக பைடன் எடுத்துக் கொள்கிறார். டிரம்ப் இதனை பொருளாதார கண்ணோட்டத்திலேயே பார்க்கிறார். நாட்டை எப்போது முழுமையாக திறந்துவிடுவது என்பதுதான் அவரது பார்வையாக இருக்கிறது," என்று கூறினார்.
மேலும் அவர், "சுகாதார விஷயத்தில் அமெரிக்கா முழுமையாக மாற வேண்டும்," என்றும் அவர் கூறினார்.
வெள்ளை மாளிகையின் பதில்
ஃபெளட்சியின் இந்த கருத்தை விமர்சித்துள்ள வெள்ளை மாளிகை, "ஏற்றுக்கொள்ள முடியாத, விதிகளை மீறிய விஷயம்," என அவர் கூறி உள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
கொரோனா வைரஸை எதிர்கொள்ளும் குழுவின் உறுப்பினரான ஃபெளட்சி, தனது கடமையை செய்யாமல், அமெரிக்க அதிபரை விமர்சிக்கிறார் என வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜுட் டீர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கொரோனா
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கபட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் இருக்கிறது.
ஜான்ஸ் ஹாஃப்கின்ஸ் பல்கலைக்கழகம் தரும் தகவல்களின்படி, இப்போது வரை அங்கு 91 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 230,934 பேர் பலியாகி உள்ளனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












