ஐபிஎல் 2020 CSKvKXIP: பஞ்சாப் அணியின் பிளே ஆஃப் கனவை தகர்த்தது சென்னை அணி - 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

பட மூலாதாரம், BCCI/IPL
முதலில் பெங்களூரு அணி எளிதில் பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பை தடுத்த சென்னை அணி, பின்னர் கொல்கத்தாவின் பிளே ஆஃப் வாய்ப்பையும் சிக்கலாக்கிய நிலையில், இன்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பிளே ஆஃப் கனவை தவிடுபொடியாக்கியிருக்கிறது தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
மேலும், தொடர் சொதப்பல்களைச் சந்தித்து வந்த ருதுராஜ் கெய்க்வாட், தற்போது ஹாட்ரிக் அரைசதம் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவாக்கியிருக்கிறார்.
டாஸ் வென்று பீலடிங்கை தேர்ந்தெடுத்த சென்னை அணி பஞ்சாப் நிர்ணயித்த 154 ரன்கள் எனும் இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்து இந்த ஐபிஎல் சீசனில் தனது ஆறாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.
அபுதாபியில் நடந்த இந்த போட்டியில், பஞ்சாப் அணியில் இன்று அதிரடி மாற்றமாக மேக்ஸ்வெல் நீக்கப்பட்டு ஜேம்ஸ் நீஷம் சேர்க்கப்பட்டிருந்தார். சென்னை அணியில் டுபிளசிஸ், தாஹீர் உள்ளிட்டோர் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டனர்.
முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியின் வீரர்கள் சென்னை அணியின் லுங்கி நிங்கிடியின் முதல் மூன்று ஓவர்களில் சரணடைந்தனர்.
மறுபுறம் தாஹீர் எதிரணியின் அதிரடி ஆட்டக்காரனான கிறிஸ் கெயில் விக்கெட்டை வீழ்த்தினார்.
சென்னை அணியின் பேட்டிங்கை பொறுத்தவரை, ருதுராஜ் கெய்க்வாட் அபாரமாக விளையாடி அரைசதம் அடித்தார். ஃபாப் டு பிளசிஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் அரைசதத்தை தவறவிட்டார். பின்னர் ராயுடு - ருதுராஜ் இணை மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டு அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது.

பட மூலாதாரம், BCCI/IPL
சென்னை அணி தனது லீக் சுற்றில் ஏற்கனவே பஞ்சாப் அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது, தற்போது 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது.
ஒரு சுவாரஸ்யாமான விஷயம் என்னவென்றால், இந்த ஐபிஎல் சீசனில் அதிக முறை சேசிங்கில் வெற்றிபெற்ற மூன்று அணிகள் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மட்டுமே. இந்த மூன்று அணிகளுமே தலா ஐந்து முறை சேசிங்கில் வென்றுள்ளன.
என்ன சொல்கிறார் தோனி?
போட்டி முடிந்தபிறகு பேசிய தோனி, "இது எங்களுக்கு கடினமான தொடராக அமைந்தது, நாங்கள் முழு ஆற்றலையும் செலவிட்டு விளையாடினோம் என நான் நினைக்கவில்லை. 6-7 போட்டிகள் மிக கடினமாக அமைந்தன. அடுத்த ஆண்டு ஐபிஎல் ஏலம் குறித்து பிசிசிஐ என்ன முடிவெடுக்கிறது என பார்க்க வேண்டும். அடுத்த 10 ஆண்டுகளை கணக்கில் கொண்டு அணியில் சிறிது மாற்றம் செய்யவேண்டும். ஐபிஎல்லின் தொடக்கத்தில் நாங்கள் ஒரு அணியை உருவாக்கினோம். அது நன்றாக செயல்பட்டது. தற்போது அடுத்த தலைமுறைக்கு கொஞ்சம் கொஞ்சமாக அணியை ஒப்படைக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது" என்று கூறினார்.

பட மூலாதாரம், BCCI/IPL
"ருதுராஜை பொறுத்தவரை அவர் சிறப்பாக விளையாடினார். அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் குணமாகி 20 நாட்கள் கழித்தும் அவர் உடல்திறன் முழுமையாக சரியாகவில்லை. அவருக்கு போதிய பயிற்சி செய்யும் வாய்ப்பு கூட கிடைக்கவில்லை. அதனால் தான் வாட்சன் மற்றும் டு பிளஸிஸுடன் நாங்கள் விளையாட வேண்டியதாக இருந்தது. ஆனால் அது சரியாக அமையவில்லை. ரசிகர்களுக்கு சொல்லும் செய்தி என்னவெனில் நாங்கள் மீண்டும் வலுவாக திரும்பி வருவோம், அதற்குத் தான் நாங்கள் பெயர்பெற்றவர்கள்."
"இந்த ஆண்டு கடினமாக இருந்தது. நிறைய அணிகள் நன்றாக விளையாடிய ஒரு சீசன் இது. மும்பை அணி அபாரமாக விளையாடியது. நாங்கள் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறோம். ஆனால் 14 புள்ளிகள் எடுத்திருந்தால் பிளே ஆஃபுக்கு தகுதி பெற்றிருப்போம்" என்று தோனி மேலும் கூறினார்.
நூலிழையில் தவறிய வாய்ப்பு
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு வழியாக இந்த ஐபிஎல் சீசனில் வெற்றிக்கான சூத்திரத்தை கண்டறிந்தது. முதல் 12 போட்டிகளில் ஒருமுறை கூட தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளை வெல்ல முடியாமல் தவித்த சென்னை அணி, ஐபிஎல் லீக் சுற்றின் கடைசி மூன்று போட்டிகளையும் வென்று அசத்தியிருக்கிறது.
அடுத்தடுத்து வென்றாலும் நூலிழையில் பிளே ஆஃப் வாய்ப்பை சென்னை சூப்பர் கிங்ஸ் தவறவிட்டிருக்கிறது என்பதே உண்மை. இந்த ஐபிஎல் சீசனில் குறைந்தது இரண்டு அணிகள் 14 புள்ளிகளோடு பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழையும் சூழல் உருவாகியுள்ளது. சென்னை அணி 12 புள்ளிகள் எடுத்திருந்தபோதிலும் கொல்கத்தா - ராஜஸ்தான் போட்டிக்கு முந்தைய சூழல் வரை புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது.
இந்த தொடரில் கிட்டத்தட்ட மூன்று போட்டிகளில் கடைசி கட்டத்தில் தோல்வியைத் தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. ஐதராபாத் அணியுடனான ஒரு போட்டியில் மிடில் ஓவர்களில் மந்தமாக விளையாடியதால் கடைசி கட்ட ஓவர்களில் அதிரடி காட்டியபோதும் ஏழு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. அதே போல கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் முக்கியமான சூழலில் தோனி மற்றும் சாம் கரண் விக்கெட்டை இழந்ததால் வெறும் 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

பட மூலாதாரம், IPL/CSK
டெல்லி அணியுடனான போட்டி ஒன்றில் கடைசி ஓவரில் 17 ரன்கள் எடுக்க வேண்டிய சூழலில் இருந்தது டெல்லி. பிராவோ காயம் காரணமாக பெவிலியன் திரும்பியதால் ஜடேஜாவை கடைசி ஓவர் வீசச் சொன்னார் தோனி. அக்சர் படேலின் மூன்று அபாரமான சிக்ஸர்களில் வெற்றி வாய்ப்பை இழந்தது தோனி அணி.
இந்த மூன்று போட்டிகளில் ஏதாவது ஒன்றில் வென்றிருந்தால் கூட சென்னை தற்போது பிளே ஆஃப் வாய்ப்பை பெற்றிருக்கும். ஒருவேளை இரண்டில் வென்றிருந்தால் இந்நேரம் நேரடியாக குவாலிபயர் 1 சுற்றில் மும்பை அணியுடன் மோதும் வாய்ப்பு கூட கிடைத்திருக்கக்கூடும்.
தோனி இந்த ஐபிஎல் சீசனில் தங்கள் பக்கம் அதிர்ஷ்ட காற்று சுத்தமாக வீசவில்லை என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. மற்ற எந்த ஐபிஎல் அணிகளுக்கும் கிடைக்காத ஒரு பெருமையாக விளையாடிய அனைத்து சீசன்களிலும் ஐபிஎல் பிளே ஆஃபுக்கு தகுதிபெற்ற ஒரே அணி ஆக சென்னை இருந்தது. ஆனால் இந்த சீசனில் பிளே வாய்ப்பு மட்டுமின்றி புள்ளிப்பட்டியலில் கடைசி இரு இடங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் இடம்பிடிக்கும் சூழல் உருவாகிவிட்டது.
பஞ்சாப் அணியுடனான இன்றைய போட்டிக்கும் முன்னர் டேனி மாரிசன் தோனியிடம் இதுதான் நீங்கள் மஞ்சள் ஜெர்சியில் விளையாடும் கடைசி போட்டியா என கேட்டார்? அதற்கு தோனி அளித்த பதில் "நிச்சயமாக இல்லை".
ஆகவே அடுத்த சீசனிலும் சென்னை அணியை தோனியே வழிநடத்தக்கூடும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












