ஏழு மாதங்களுக்கு பிறகு மெக்காவில் வெளிநாட்டு யாத்ரீகர்களுக்கு அனுமதி
பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்!தேசிய, சர்வதேச மற்றும் தமிழ்நாடு சார்ந்த இன்றைய பல முக்கிய செய்திகளை இங்கே நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.முக்கிய நிகழ்வுகளும், செய்தி முன்னேற்றங்களும் இங்கே பகிரப்படும்.

பட மூலாதாரம், Reuters
கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்த பின்னர், அதாவது சுமார் ஏழு மாதங்களுக்குப் பிறகு முதல் முறையாக மெக்காவில் உள்ள கிராண்ட் மசூதிக்குள் வெளிநாடுகளை சேர்ந்த முஸ்லிம்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டு யாத்ரீகர்களுக்கு அனுமதியளிக்கப்பட்ட முதல் நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை), பல்வேறு நாடுகளை சேர்ந்த சுமார் 10,000 யாத்ரீகர்கள் உம்ரா யாத்திரை செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

பட மூலாதாரம், Reuters

பட மூலாதாரம், Reuters
கிராண்ட் மசூதியின் மையத்தில் உள்ள இஸ்லாத்தின் புனிதமான தலமான காபாவைச் சுற்றிவர அனுமதிக்கப்படுவதற்கு முன்பு, வெளிநாட்டு யாத்ரீகர்கள் சௌதி அரேபியாவுக்கு வந்த பின்னர் மூன்று நாட்கள் தங்களை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, சௌதி அரேபியாவை சேர்ந்தவர்கள் கடந்த அக்டோபர் மாதம் முதல் மெக்காவில் அனுமதிக்கப்பட்டனர். சௌதியில் படிப்படியாக பொது முடக்க கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருவதை தொடர்ந்து அந்த நாடு அரசாங்கம் படிப்படியாக அங்குள்ள மசூதிகளையும் திறந்து வருகிறது.
சௌதி அரேபியாவில் இதுவரை 3,47,282 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 5,402 பேர் உயிரிழந்துள்ளனர்.

2021இல் சென்னை அணிக்காக களமிறங்குவதை உறுதிசெய்த தோனி

பட மூலாதாரம், IPL/CSK
இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரிலிருந்து இந்த ஆண்டுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஓய்வுபெற உள்ளதாக எழுந்த கேள்விக்கு அவரே முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான அபுதாபியில் நடைபெற்று வரும் இன்றைய போட்டியில் டாஸ் போடப்படும்போது, வர்ணனையாளர் டேனி மோரிசன், டோனியிடம் இது நீங்கள் சென்னை அணிக்காக களமிறங்கும் கடைசி போட்டியா என்று நேரடியாக கேட்டார். அதற்கு துளியும் யோசிக்காத தோனி, "கண்டிப்பாக இல்லை" என்று பதிலளித்தார்.
ஐபிஎல் தொடரின் வரலாற்றிலேயே முதல் முறையாக இந்த ஆண்டுதான் பிளே ஆஃப் சுற்றுக்கு கூட சென்னை அணியால் தகுதிபெற முடியவில்லை. இதுவரை 13 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி வெறும் ஐந்து போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்று புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
சென்னை அணியின் மோசமான ஆட்டத்தை தொடர்ந்து அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் கேப்டனாக தோனி நீடிப்பாரா என்று கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
பஞ்சாப் அணியுடனான இன்றைய போட்டியே இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணி விளையாடும் கடைசி போட்டியாகும். இந்த சமயத்திலேயே தனது ஓய்வு குறித்த விவாதத்துக்கு தோனி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் தோனியின் ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.
முன்னதாக, இந்த போட்டியில் டாஸ் வென்ற தோனி பந்துவீசுவதாக தெரிவித்தார். இதையடுத்து பேட்டிங் செய்து வரும் பஞ்சாப் அணி 9.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 63 ரன்களை எடுத்துள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












