கொரோனா வைரஸ் மிதமான அறிகுறிகள்: கோவிட்-19 அறிகுறி எப்போது வெளிப்படும்? 'அசிம்ப்டமேடிக்' தொற்றாளர்கள் மூலம் பரவுமா?

mild symptoms of novel coronavirus are

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இருமல் மற்றும் தும்மலின்போது கைக்குட்டை, கைகளைவிட பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் டிஸ்யூ பேப்பரை வைத்து வாய், மூக்கை மூடுவது சிறந்தது.

கொரோனா வைரஸ் தொற்று பரவலின் இரண்டாவது அலை ஏற்பட்டுள்ளதன் காரணமாக பல ஐரோப்பிய நாடுகள் கடுமையான முடக்கநிலை விதிகளை மீண்டும் அமல்படுத்தி உள்ளன.

அமெரிக்காவிலும் தினந்தோறும் புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்படுபவர்களின் எண்ணிக்கையும் சமீப நாட்களில் சுமார் ஒரு லட்சமாக இருக்கிறது.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் மிகவும் குறைவாக இருப்பதாக கருதப்பட்ட இலங்கையிலும் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அங்கும் கடுமையான முடக்கநிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.

தினசரி கண்டறியப்படும் கோவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை இந்தியாவில் கடந்த இரண்டு மாதங்களில் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.

எனினும், பள்ளி மற்றும் கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள், திரையரங்குகள் உள்ளிட்டவை திறக்கப்பட்டுள்ளன. பொதுப் போக்குவரத்து மீண்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் குளிர்காலம் தொடங்கியுள்ளது. வட இந்தியாவில் ஏற்பட்டுள்ள காற்று மாசு கொரோனா பரவுவதற்கு உகந்த சூழலை உண்டாக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள். இதனால் இந்தியாவில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று ஒருவருக்கு உண்டானால் ஏற்படும் அறிகுறிகள் குறித்த சில முக்கிய தகவல்களை பார்ப்போம்.

ஒருவருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் அந்த அறிகுறிகள் தென்பட சராசரியாக ஐந்து நாட்கள் ஆகும் என்று அமெரிக்காவில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் செய்யப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

காய்ச்சல், சளி, சுவாசக் கோளாறுகள் ஆகியவை கோவிட்-19 தொற்றின் முக்கிய அறிகுறிகளாக உள்ளன.

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ள நாடுகளில் தொற்று ஏற்படும் தரவுகளைக் கொண்டு அமெரிக்காவில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் இந்த ஆய்வை மேற்கொண்டது.

இதில் தொற்று ஏற்பட்டவர்களுக்கு ஐந்தாவது நாள் அல்லது அதற்கு மிகவும் நெருக்கமான காலப்பகுதியில் அறிகுறிகள் வெளிப்பட தொடங்குகிறது என்று தெரியவந்துள்ளது.

தொடர்ந்து 12 நாட்கள் வரையிலும் கூட ஒருவருக்கு அறிகுறிகள் தென்படாமல் இருக்கலாம்.

அப்படி 12வது நாள் வரை அறிகுறிகள் தென்படாதவருக்கு, அதற்குப் பின்னர் கொரோனா அறிகுறிகள் தெரிவதற்கான வாய்ப்புகள் அதிகம் இல்லை.

ஆனாலும் அவர்கள் மூலமாக பிறருக்கு கோவிட்-19 தொற்று பரவுவதற்கான சாத்தியமுண்டு.

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் செய்த ஆய்வுக்கு தலைமை வகித்த பேராசிரியர் ஜஸ்டின் லெஸ்லர் தங்கள் ஆய்வு 181 நபர்களின் தரவுகளைக் கொண்டு நடத்தப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் கோவிட்-19 தொற்று ஏற்பட்டு உள்ளவர்களில் எத்தனை பேருக்கு அறிகுறிகள் உண்டாகும், எத்தனை பேருக்கு அறிகுறிகள் தென்படாமல் போகும் என்பது குறித்து இந்த ஆய்வு எதையும் பரிசோதிக்கவில்லை.

Banner image reading 'more about coronavirus'
Banner

கொரோனா தனிமைப்படுத்தல் காலம் செய்யும் நன்மை என்ன?

கொரோனா வைரஸ் அறிகுறிகள் தென்பட்டாலும், தென்படாவிட்டாலும் தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருக்கக் கூடியவர்கள் தொடர்ந்து 14 நாட்கள் தங்களைத் தாங்களே தனிமைப் படுத்திக் கொள்வது, அவர்களால் பிறருக்கு வைரஸ் பாதிப்பு உண்டாவதை தவிர்க்க உதவும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

தொடர்ந்து 14 நாட்கள் தனிமைப்படுத்தப் பட்டிருக்கும் நபர்களில் நூற்றில் ஒருவருக்கே அந்த தனிமைப்படுத்தல் காலம் முடிந்த பின்பும் அறிகுறிகள் தென்படத் தொடங்கும் என்று ஏனல் ஆஃப் இன்டர்னல் மெடிசின் எனும் மருத்துவ சஞ்சிகை தெரிவிக்கிறது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான பலருக்கும் மிகவும் மிதமான நோய் பாதிப்பு இருக்கும் என்று வல்லுநர்கள் கருதுகிறார்கள்.

நாட்டிங்காம் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் நச்சு உயிரியல் வல்லுநருமான ஜோனதன் பால் இந்த வைரஸ் உடலுக்குள் பாதிப்பை ஏற்படுத்தி அறிகுறிகளை வெளிப்படுத்துவதற்கு 14 நாட்கள் வரை ஆகும் என்று கூறுகிறார்.

அறிகுறிகள் தென்படாமல் இருப்பவர்கள் மூலம் கோவிட்-19 பரவுவதற்கான ஆதாரங்கள் இருந்தாலும் அவை குறைவானதாகவே இருக்கின்றன என்று அவர் கூறுகிறார்.

காய்ச்சல், சளி போன்ற மிகவும் வெளிப்படையான அறிகுறிகள் இருப்பவர்கள் மூலமாகவே மிகவும் அதிக அளவில் ஒருவரிடமிருந்து ஒருவருக்கு வைரஸ் தொற்று பரவுவதாக கருதப்படுகிறது.

அறிகுறிகள் இல்லாதவர்கள் மூலமாகவும் வைரஸ் கிருமி பரவும் என்றாலும், கொரோனா பரவலுக்கான முக்கியக் காரணமாக அவர்கள் இல்லை.

கொரோனா வைரஸ் - உங்களுக்கு தொற்றாமல், பிறருக்கு பரவாமல் தடுப்பது எப்படி?

கீழ்க்கண்டவற்றை தீவிரமாக பின்பற்றுவதன் மூலம் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உண்டாவதையும், தொற்று உண்டான ஒருவரிடமிருந்து பிறருக்கு கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தவும் முடியும்.

கொரோனா வைரஸ்
  • உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளவர்களிடம் மிகவும் நெருக்கமான தொடர்பை தவிர்க்க வேண்டும்.
  • கைகளைக் கழுவாமல் கண், மூக்கு, வாய் ஆகியவற்றைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும்.
  • கைக்குட்டை, கைகள் ஆகியவற்றைவிட இருமல் மற்றும் தும்மலின் போது டிஷ்யூ பேப்பரை பயன்படுத்த வேண்டும்.
  • அதன்பின்பு டிஷ்யூ பேப்பரை உடனடியாக குப்பையில் வீசிவிட்டு கைகளைக் கழுவ வேண்டும்.
  • சோப் அல்லது சேனிடைசர்கொண்டு கைகளை தொடர்ந்து தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: