ஒட்டக பாலில் டீ கேட்டு கடை ஊழியர்களைத் தாக்கிய புதுச்சேரி இளைஞர்கள் கைது
பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்!! தேசிய, சர்வதேச மற்றும் தமிழ்நாடு சார்ந்த இன்றைய பல முக்கிய செய்திகளை இங்கே நீங்கள் தெரிந்து கொள்ளலாம். முக்கிய நிகழ்வுகளும், செய்தி முன்னேற்றங்களும் இங்கே பகிரப்படும்.

பட மூலாதாரம், Getty Images
புதுச்சேரியில் மது போதையில் ஒட்டகப்பாலில் டீ கேட்டு கடை ஊழியர்களைத் தாக்கிய மூன்று இளைஞர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் நாராயணன், இவர் அரியாங்குப்பத்தில் கடலூர் - புதுச்சேரி பிரதான சாலையில் பேக்கரி மற்றும் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு நேற்று இரவு வந்த 3 பேர், ஒட்டகப் பாலில் டீ கேட்டுள்ளனர்.
அதற்கு ஒட்டகப் பால் இல்லை என்று ஊழியர்கள் தெரிவித்த பின்னர், ஏன் இல்லை என்று கேட்டுக் கடை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மது போதையிலிருந்த 3 பேரும் திடீரென ஆத்திரமடைந்து கடையிலிருந்த பொருட்களை உடைத்துள்ளனர். அப்போது அவர்களைத் தடுக்க முயன்ற ஊழியர்களையும் தாக்கியுள்ளனர்.
பிறகு கடை ஊழியர்கள் அவர்களை பிடிக்க முயன்ற போது 3 பேரும் அங்கிருந்து தப்பிச்சென்றனர். இந்த சம்பவம் குறித்து அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் நாராயணன் புகார் தெரிவித்தார். இதன் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், பேக்கரியில் தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
இதுகுறித்து அரியாங்குப்பம் காவல் நிலைய ஆய்வாளர் புருஷோத்தமன் கூறுகையில், "மது போதையிலிருந்த மூன்று பேரும் கடை மாறி பேக்கரியில் ஒட்டகப் பாலில் டீ கேட்டு தகராறு செய்துள்ளனர். அந்த பேக்கரிக்கு எதிரே ஒட்டகப் பால் விற்கும் மற்றொரு கடை உள்ளது. ஆனால் இவர்கள் மூவரும் குடி போதையில் கடை மாறி பேக்கரிக்கு சென்று, ஒட்டகப் பால் கேட்டு ஊழியர்களைத் தாங்கி அங்கிருந்த பொருட்களைச் சேதப் படுத்தியுள்ளனர். தற்போது அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளோம்," எனத் தெரிவித்துள்ளார்.
"தமிழக சட்டமன்ற தேர்தலில் நல்லவர்களுடன் கூட்டணி" - கமல் ஹாசன்

பட மூலாதாரம், Getty Images
தமிழக சட்டமன்ற தேர்தலில் நல்லவர்களுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைக்கும் என்று அக்கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், கட்சியின் அரசியல் உத்தி எதுவாக இருக்கும் என்று கேட்டபோது, "பழிபோடும் அரசியலாக இல்லாமல், வழிகாட்டும் அரசியலாக இருக்கும் என்று நம்புகிறோம்," என்று கூறினார்.
கடந்த சில மாதங்களில் ஒரு லட்சம் பேர் மக்கள் நீதி மய்யத்தில் புதிதாக சேர்ந்துள்ளனர். கட்சியின் வேட்பாளர் தேர்வு நடந்து வருகிறது என்று கமல் ஹாசன் தெரிவித்தார்.
பாஜகவின் பேரணியை அனுமதிக்க முடியாது - உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி உத்தேசித்துள்ள வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அப்போது தமிழக அரசு சார்பில், கொரோனா பரவல் அச்சுறுத்தல் தீவிரமாகும் வேளையில், இந்த யாத்திரைக்கு அனுமதி கொடுக்க இயலாது. இந்த யாத்திரையின் திட்டம், அதில் எவ்வளவு பேர் பங்கெடுப்பார்கள், யாத்திரையில் பங்கெடுப்போர் எங்கு தங்குவார்கள் போன்ற விவரங்களைப் பாரதிய ஜனதா கட்சி குறிப்பிடவில்லை. இத்தகைய நிலையில், அந்த யாத்திரைக்கு அனுமதி வழங்குவது இயலாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு வியாழக்கிழமை விசாரித்து உத்தரவு பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாடு முழுவதும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நவம்பர் 6 முதல் டிசம்பர் 6ஆம் தேதிவரை வேல் யாத்திரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
திருத்தணியில் தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ள இந்த யாத்திரை, திருச்செந்தூரில் வரும் டிசம்பர் 6ஆம் தேதி நிறைவு பெறுகிறது.
இந்த விவகாரத்தில் வேல் யாத்திரைக்கு அனுமதி கோரி பாரதிய ஜனதா கட்சியும், அதற்கு தடை விதிக்கக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட சில அமைப்புகளும் தமிழகக் காவல்துறை தலைமை இயக்குநரிடம் மனு அளித்துள்ளன.
இதற்கிடையே, இதே விவகாரத்தில் யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரி செந்தில்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
வேல் யாத்திரைக்கு அனுமதி கொடுத்தால், கொரோனா தொற்று அதிகரிக்கும் என்றும் பாபர் மசூதி இடிப்பு தினத்தில் யாத்திரை நிறைவு பெறவிருப்பது சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கும் வழிவகுக்கலாம் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
பிற செய்திகள்:
- அர்னாப் கோஸ்வாமிக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் - நீதிமன்றத்தில் என்ன நடந்தது?
- இந்தியாவில் நீண்ட காலம் தொடர்ந்து எரியும் பெட்ரோலியக் கிணறு: சுற்றுச்சூழல் ஆபத்து
- `தமிழ்நாட்டில் தமிழ் இல்லை என்றால் வேறு எந்த நாட்டில் இருக்கும்?` - கேள்வி எழுப்பிய நீதிபதிகள்
- அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் சமன் ஆனால் என்னாகும்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












