`தமிழ்நாட்டில் தமிழ் இல்லை என்றால் வேறு எந்த நாட்டில் இருக்கும்?` - கேள்வி எழுப்பிய நீதிபதிகள்

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தமிழ் மொழி

பட மூலாதாரம், Getty Images

"தமிழகத்தில் தமிழுக்கு இடமில்லையா?"

தமிழ்நாட்டில் தமிழ் இல்லை என்றால் வேறு எந்த நாட்டில் இருக்கும் என சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர் என்ற செய்தியை வெளியிட்டுள்ளது தினத்தந்தி நாளிதழ்.

தமிழ் வழியில் படித்து டிஎன்பிஎஸ்சி குரூப் -1 தேர்வு எழுதுவோருக்கு 20% இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. பலர் இடஒதுக்கீட்டை முறைகேடான வழியில் பெறுவதாக மதுரையை சேர்ந்த சக்திராவ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு, தமிழகத்தில் தமிழில் படித்தவர்கள் அருகி மருகி வருகின்றனர். தமிழில் படித்தவர்களை ஊக்குவிக்க வழங்கப்படும் சலுகைகள் தவறாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழ் வழியில் படித்தவர்கள் பள்ளியிலிருந்தே தமிழ் வழி பயின்றவர்களா? என கேள்வி எழுப்பினர். பட்டப்படிப்பு மட்டும் தமிழ் வழியில் படித்தால் போதுமா?.தமிழ்நாட்டில் தமிழ் இல்லை என்றால் வேறு எந்த நாட்டில் இருக்கும்.

தமிழ்வழி இடஒதுக்கீட்டை முறைப்படுத்தும் வரை குரூப்-1 தேர்வு நடைமுறைக்கு ஏன் இடைக்கால தடை விதிக்கக்கூடாது? என்றும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர் என விவரிக்கிறது அச்செய்தி.

"இந்திய பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட முன்னேற்றம்"

பிரகாஷ் ஜவ்டேகர்

பட மூலாதாரம், Getty Images

நாட்டின் பொருளாதாரம் எதிர்பார்த்ததைவிட வேகமாக வளர்ந்து வருவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் தெர்வித்துள்ளார் என்கிறது தினமணியின் செய்தி.

இதுதொடர்பாக புதன்கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், சரக்கு ரயில் போக்குவரத்து மூலமான வருவாய் உயர்ந்துள்ளது. சரக்கு - சேவை வரி வருவாய் அதிகரித்துள்ளது. அந்நிய நேரடி முதலீடு அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் மின்சாரத்துக்கான தேவை 12 சதவீதம் அதிகரித்துள்ளது. நடப்பாண்டில் இயல்பான அளவுக்கு பருவமழை பெய்தது. ரயில்களும் முழுமையாக இயக்கப்படவில்லை அப்படியிருந்தும் மின்சாரத்துக்கான தேவை அதிகரித்துள்ளது.

இது உற்பத்தித் துறை வளர்ச்சி கண்டு வருவதைக் காண்பிக்கிறது என விவரிக்கிறது அச்செய்தி.

மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச்செயலாளர் உத்தரவு

மக்கள் கூட்டம்

பட மூலாதாரம், Getty Images

கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில், பண்டிகை காலத்தில் கூட்டம் கூடுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலர் க.சண்முகம் அறிவுறுத்தி உள்ளார் என்கிறது இந்து தமிழ் திசையின் செய்தி.

தமிழக தலைமைச் செயலர் க.சண்முகம் தலைமையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் உடனான ஆய்வுக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று காணொலி மூலம் நடைபெற்றது. இதில், மாவட்டங்களில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதில் பேசிய தலைமைச் செயலர், "தமிழகத்தில் கரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. மாவட்ட ஆட்சியர்கள் தங்கள் மாவட்டத்தில் கரோனா தொற்றை முழுமையாக கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தீபாவளியை முன்னிட்டு, கூட்டம் கூடுவதை தவிர்க்க போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்." என தெரிவித்தார் என்கிறது அச்செய்தி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: