பெட்ரோலியக் கிணறு தீ: அசாமில் சுமார் 150 நாட்களாக நீடிக்கும் பயங்கரம், சுற்றுச்சூழல் ஆபத்து

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சச்சின் கோகோய்
- பதவி, பிபிசி மானிடரிங்
140 நாள்களுக்கு மேலாக அணைக்க முடியாமல் தொடர்ந்து எரிந்துகொண்டிருக்கும் அசாம் பெட்ரோலியக் கிணறு ஒன்றினால் சுற்றுச்சூழலுக்கு கடும் ஆபத்து விளையும் நிலை உருவாகியுள்ளது.
அத்துடன், அந்த எண்ணைக் கிணற்றை ஒட்டியுள்ள ஊர்களில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. தீன்சுகியா மாவட்டத்தில், பக்ஜன் என்ற இடத்தில் உள்ள இந்த எண்ணெய் வயல் ஆயில் இந்தியா லிமிட்டட் என்ற பொதுத்துறை நிறுவனத்துக்கு சொந்தமானது.
இந்தியாவில் இதுவரை எந்த ஒரு பெட்ரோலியக் கிணற்றில் ஏற்பட்ட தீயும் இவ்வளவு காலத்துக்கு தொடர்ந்து எரிந்ததில்லை என்கிறார்கள் வல்லுநர்கள். ஜூன் 9-ம் தேதி மூண்ட இந்த தீ 150 நாள்களை நெருங்கி தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது. இந்த இடத்துக்கு அருகில் உள்ள ஊர்களைச் சேர்ந்த மக்கள் பலர் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். ஏராளமானோர் வேறு பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
கணவரை இழந்து மூன்று பிள்ளைகளை வளர்த்து வரும் லாவண்யா சைக்கியா என்பவர் இப்படிப் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர். இவரது வீடும், குடும்பத்தைக் காப்பாற்ற உதவிய சிறிய கடையும் கொழுந்து விட்டெரியும் இந்த பிரும்மாண்ட நெருப்பில் நாசமாயின. இழந்த வீட்டையும், நாசமான கடையையும் மீண்டும் கட்டிக் கொள்ளலாம். ஆனால், காலம் சென்ற தம் கணவரின் புகைப்படங்கள் இந்த தீயில் சாம்பலானதால் இதயம் நொறுங்கிப் போயிருப்பதாக சொல்கிறார் லாவண்யா. பிள்ளைகள் தங்கள் தந்தையின் உருவத்தை நினைவுகூற இயலாமல் போகும் என்பதே இவரது கவலைக்கு காரணம்.
'கேஸ் ப்ளோ அவுட்' என்று சொல்லப்படும் எரிவாயு சீற்றத்தைத் தொடர்ந்து இந்த எண்ணெய்க் கிணற்றில் தீப்பற்றியது. எண்ணெய்க்கிணறுகளில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு திடீரென எண்ணெயும், எரிவாயுவும் பீச்சியடிப்பதே ப்ளோ அவுட் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. இந்த பக்ஜன் பெட்ரோலியக் கிணறு தீ விபத்தின் தாக்கத்தினால், அருகில் உள்ள ஊர்களைச் சேர்ந்த சுமார் 3 ஆயிரம் பேர் உடனடியாக அங்கிருந்து வேறு பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். அப்படி இடம் மாற்றப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் மீண்டும் திரும்பி தங்கள் ஊர்களுக்கே திரும்பிவிட்டனர்.
ஆனால், இந்தப் பெட்ரோலிய கிணற்றுக்கு மிக அருகில் உள்ள ஊர்களைச் சேர்ந்த ஏராளமானவர்கள் தாற்காலிக முகாம்களிலேயே இன்னும் தங்கியிருக்கின்றனர். "தொடர்ந்து எரியும் இந்த தீயால் ஏற்படும் வெப்பம், புகை, தீ எரியும் சத்தம் ஆகியவற்றால் இந்தப் பகுதி ஆபத்தானதாக மாறிவிட்டது.

பட மூலாதாரம், Getty Images
இந்தப் பிராந்தியத்தில் வசிக்கிற மக்களில் பலருக்கு பதற்றம், ஒற்றைத் தலைவலி, பசியின்மை, கண்கள் எரிவது போன்ற உடல் நலப்பிரச்சனைகள் ஏற்படுகின்றன," என்கிறார் உள்ளூர் பத்திரிகையாளர் நவன்திக் உராங்.இந்த தீ விபத்தால் முற்றிலும் வீடிழந்த 12 குடும்பங்களுக்கும் தலா ரூ.25 லட்சம் ரூபாய் உடனடி இழப்பீடு தரப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு மாதம் ரூ.50 ஆயிரம் வாழ்வாதார உதவியாகத் தரப்படுகிறது என்று கூறுகிறது ஆயில் இந்தியா கம்பெனி.
இந்தப் பிரச்சனையை விரைவில் தீர்க்கவேண்டும், இழப்பீடுகளை விரைவில் வழங்கவேண்டும் என்று கோரி உள்ளூர் மக்கள் சிலர் போராடி வருகிறார்கள். "வாழ்வாதாரத் தேவைகளுக்கான உடனடி இழப்பீடுதான் எண்ணெய் நிறுவனத்திடம் இருந்து வந்திருக்கிறது. வீடு, பயிர்கள் ஆகியவற்றுக்கு ஏற்பட்ட சேதத்துக்கு எந்த நிவாரணமும் இன்னும் வரவில்லை," என்கிறார் தந்தேஷ்வர் போரா என்ற 40 வயது விவசாயி. தீவிபத்து ஏற்பட்ட இடத்தில் இருந்து 1.5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தற்காலிக முகாமில் இவர் தங்கவைக்கப்பட்டுள்ளார்.
இந்த தீயை அணைக்கும் முயற்சியில் வெற்றிக்கு அருகில் இருப்பதாக சொல்கிறார்கள் ஆயில் இந்தியா கம்பெனி அதிகாரிகள். ஆனால், ஆரம்ப கட்டத்தில் இந்த தீவிபத்தை இவர்கள் கையாண்ட் விதம் குறித்துப் புகார்கள் உள்ளன. இந்த தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் இறந்த மூவரில் ஒருவர் அர்னாப் என்ற 25 வயது பொறியாளர்.
ஆயில் இந்தியா நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தவர். ஆயில் இந்தியா நிறுவனம் இந்த சிக்கலை கையாண்ட விதம் குறித்து அதிருப்தி தெரிவிக்கிறார் இறந்த அர்னாபின் தந்தை பிஜித் போர்தோலோய். அரசு மின் விநியோக நிறுவனம் ஒன்றில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் இவர்.
"எந்த சூழ்நிலையில் எங்கள் மகன் இறந்தான் என்பதில் எங்களுக்குப் பல கேள்விகள் உள்ளன. ஓப்பீட்டளவில் அர்னாப் அந்த நிறுவனத்தில் புதியவன். இது போன்ற சூழ்நிலைகளில் வேலை செய்வதற்கான தகுதியோ, அனுபவமோ இல்லாதவன்," என்கிறார் போர்தோலோய். ப்ளோ அவுட் என்று சொல்லப்படும் எரிவாயு சீற்றங்கள் உலகில் எல்லா இடத்திலும் உள்ள எண்ணெய், எரிவாயு தொழிலில் அரிதானவை அல்ல என்கிறது ஆயில் இந்தியா கம்பெனி. இந்த விபத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு என்பதை ஒப்புக்கொள்ளும் அந்த நிறுவனம், ஆனால், இந்த பாதிப்பு நிரந்தரமானவை அல்ல, சிறிது காலத்தில் மறைந்துவிடக்கூடியவை என்றும் கூறுகிறது.
இந்த எரிவாயு மற்றும் கண்டன்சேட் ஆகியவை இயல்பிலேயே ஆவியாகி, மழையில் அடித்துச் செல்லப்படக்கூடியவை. இவற்றால் சுற்றுச்சூழலில் நீண்டகால காற்று, நில மாசு பாதிப்புகள் இருக்காது என்கிறார் இந்த நிறுவனத்தின் முதுநிலை மக்கள் தொடர்பு மேலாளர் திரிதிவ் ஹசாரிகா.

பட மூலாதாரம், Getty Images
ஆனால், இந்த விபத்தினால் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் தாக்கத்தை மதிப்பிடும் வேலையில் ஈடுபட்டுள்ள அரசு சார்ந்த வல்லுநர் ஒருவர், இந்த விபத்தினால், உள்ளூர் சூழலியலுக்கு இந்த விபத்து அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக பிபிசியிடம் குறிப்பிட்டார்.
ஆனால், இவர் தமது பெயர் வெளியாவதை விரும்பவில்லை. இதனால் ஏற்படும் முழு பாதிப்பையும் மதிப்பிடும் பணி நடந்து வருகிறது. ஆனால், சம்பவத்தால் ஏற்படும் பாதிப்பை சரி செய்ய பல ஆண்டுகள் தேவைப்படும் என்றும் அவர் குறிப்பிடுகிறார். பல முக்கியமான பல்லுயிர்ப் பெருக்கத் தலங்கள் இந்த விபத்து நடக்கும் இடத்துக்கு அருகில் இருப்பதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
ஸ்னப்பிங் எனப்படும் வழிமுறை மூலம் நவம்பர் மத்தியிலேயே தீயை அணைத்துவிடமுடியும் என்று ஆயில் இந்தியா நிறுவனம் நம்பிக்கை கொண்டுள்ளது. ஆனால், இது போல நிர்ணயிக்கப்பட்ட பல காலக்கெடுக்கள் தவறிப்போயிருக்கின்றன.
"இந்த ஸ்னப்பிங் எனப்படும் முறையை நாங்கள் கடந்த காலத்தில் செய்து பார்த்ததில்லை. இந்த முறை கை கொடுக்கும் என்று நம்புகிறோம்" என்கிறார் நிறுவனத்தின் மக்கள் தொடர்பு மேலாளர் ஹசாரிகா.
பிற செய்திகள்:
- அர்னாப் கோஸ்வாமிக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் - நீதிமன்றத்தில் என்ன நடந்தது?
- அமெரிக்க தேர்தல் முடிவுகள்: எதிர்கட்சி மீது மோசடி குற்றச்சாட்டு - உச்ச நீதிமன்றம் செல்லும் டிரம்ப்
- கொரோனா வைரஸ்: உலகெங்கும் பாதிப்பு, பலி எண்ணிக்கை எவ்வளவு?
- அமெரிக்க அதிபர் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்: 5 முக்கிய தகவல்கள்
- அர்னாப் கோஸ்வாமி கைது: தாக்கப்பட்டார் என்கிறது ரிபப்ளிக் தொலைக்காட்சி - நடந்தது என்ன?
- வேல் யாத்திரை: பாதை மாற்றும் அரசியல் யாத்திரையா?
- அமெரிக்க அதிபர் தேர்தல் 2020: மூன்று சாத்தியமான முடிவுகள் என்னென்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












