நிவர் புயலின் தாக்கம் தமிழகத்தில் எப்படி இருக்கும்? வானிலை ஆய்வு மையம், 'தமிழ்நாடு வெதர்மேன்' சொல்வது என்ன?

மழை

பட மூலாதாரம், Getty Images

வங்கக் கடலில் உருவாகவுள்ள புதிய புயலுக்கு `நிவர்` என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

  • தெற்கு வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்துள்ளதால், நிவர் புயல் வருகிற 25ஆம் தேதி தமிழகத்தை தாக்கும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.
  • நிவர் புயல் தமிழகத்தை தாக்கும் சாத்திய கூறுகள் உள்ளன என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள், மாமல்லபுரம்- காரைக்கால் இடையே குறைந்த பலத்துடன் கரையை கடக்கும் என்று தெரிவித்துள்ளனர். இதனால், 50 கி.மீட்டரில் இருந்து 75 கி.மீ. வரையில் காற்று வேகமாக வீசக்கூடும் என்றும் கடல் பகுதியில் 62 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்றும் வீசும் என்றும் தெரிவித்துள்ளனர்.
  • தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த மழைக்கும் வாய்ப்பு உள்ளதால், நவம்பர் 25-ந்தேதி வரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
  • நிவர் புயல் காரணமாக, 23-ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால் ஆகிய பகுதிகளில் கனமழை இருக்கும் என்று கணித்துள்ள அதிகாரிகள், 24-ம் தேதி புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் காரைக்கால், நாகப்பட்டினம், கடலூர், அரியலூர், பெரம்பலூர் பகுதிகளில் மிக அதிக கனமழை இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
  • ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், புதுச்சேரி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களிலும் கன மழை முதல் மிக கனமழை இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
  • நவம்பர் 25-ம் தேதி டெல்டா மாவட்டங்களான கடலூர், கள்ளக்குறிச்சி, புதுச்சேரி, விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, அரியலூர், பெரம்பலூர், காரைக்கால் ஆகிய பகுதிகளில் மிக அதிக கனமழை இருக்கும். திருச்சி, நாமக்கல், கரூர், ஈரோடு, தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, சிவகங்கை, ராமநாதபுரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் அதிக கனமழை பெய்யும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.நவம்பர் 26-ம் தேதி தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
  • நவம்பர் 24ஆம் தேதி தமிழகத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், நவம்பர் 25ஆம் தேதி சிவப்பு நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
  • புயல்கள் பெரும்பாலும் மக்களின் வீடுகளையும், சொத்துக்களையும் கடுமையாக சேதப்படுத்தக்கூடும். இது போன்ற நேரங்களில் சாதுர்யமாக செயல்பட வேண்டியது அவசியம். அதனால் குடிக்க உகந்த நல்ல நீரை போதுமான அளவுக்கு பாதுகாப்பாக சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

`நிவர் புயல் இரண்டு விதமாக கரையைக் கடக்கலாம்`

வானிலை அறிவிப்பு சுயாதீனமாகக் கணித்துவரும் `தமிழ்நாடு வெதர்மேன்` பிரதீப் ஜான், தன் வலைத்தளத்தில், நிவர் புயல் இரண்டு விதமாக கரையைக் கடக்கலாம் எனச் சொல்லி இருக்கிறார்.

India Meteorological Department • Tropical cyclone • Cyclone

பட மூலாதாரம், Imd

விதம் 1:

வேதாரண்யம் மற்றும் காரைக்காலுக்கு மத்தியில், 24 - 25 நவம்பர் தேதிகளில் நிவர் புயல் கரையைக் கடக்கலாம்.

காற்றின் வேகம் மணிக்கு 70 - 80 கிலோமீட்டர் வேகத்தில் வீசலாம். திருவாரூர், திருச்சி, நாமக்கல், சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர், கடலூர், பாண்டிச்சேரி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் மிக கன மழை பெய்யலாம்.

நாகப்பட்டினம், தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், காரைக்கால் போன்ற மாவட்டங்களில் கண மழை பெய்யலாம்.

விதம் 2:

காரைக்கால் மற்றும் சென்னைக்கு மத்தியில், 24 - 25 நவம்பர் 2020 தேதிகளில் நிவர் புயல் கரையைக் கடக்கலாம்.

மணிக்கு 120 - 150 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசலாம். கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், காரைக்கால், பெரம்பலூர், அரியலூர் போன்ற மாவட்டங்களில் மிகக் கண மழை பெய்யலாம்.

கடலூர், பாண்டிச்சேரி, விழுப்புரம், சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, செங்கல்பட்டு கண மழை பெய்யும் எனச் சொல்லி இருக்கிறார் பிரதீப் ஜான்.

மேலும் நவம்பர் 24ஆம் தேதி தமிழகத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், நவம்பர் 25ஆம் தேதி சிவப்பு நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

புயல்கள் பெரும்பாலும் மக்களின் வீடுகளையும், சொத்துக்களையும் கடுமையாக சேதப்படுத்தக்கூடும். இது போன்ற நேரங்களில் சாதுரியமாகச் செயல்பட வேண்டியது அவசியம். அதனால் குடிக்க உகந்த நல்ல நீரை போதுமான அளவுக்கு பாதுகாப்பாகச் சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :