ரஜினிகாந்த் அரசியல் கட்சி: "அரசியலுக்கு வரவில்லை; தேர்தலுக்கு வருகிறார் ரஜினி"

ரஜினி அரசியல்

பட மூலாதாரம், Getty images

    • எழுதியவர், ராஜன் குறை
    • பதவி, எழுத்தாளர்

(கட்டுரையில் இடம் பெற்றுள்ளவை கட்டுரையாளரின் கருத்துகள். இவை பிபிசி தமிழின் கருத்துகள் அல்ல. -ஆசிரியர்)

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறார் என்று கூறுவது தவறு; அவர் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் பங்கேற்கப் போகிறார் என்பதுதான் சரியான தகவல். ஊடகங்கள் இரண்டையும் வேறுபடுத்தி பார்க்காமல் குழப்புகின்றன. முதலில் இதை தெளிவாக புரிந்துகொள்வோம்.

அரசியலில் ஈடுபடுவது என்பதன் பொருள் என்னவென்றால் ஒரு கட்சியை, அமைப்பை உருவாக்குவது. கட்சியின் முன்னணி குழுவினர் அதன் கொள்கைகளை, கோட்பாடுகளை வகுப்பது; கட்சி அணியினரிடையே அவற்றை விவாதித்து, அனைவரும் புரிந்துகொள்ளும்படி செய்வது. அவற்றை செழுமைப்படுத்துவது.

கட்சி அணியினரின் துணையுடன் அந்த கொள்கை, கோட்பாடுகளை பிரசாரம் செய்வது. இந்த கொள்கை கோட்பாடு என்பது பகுதி நலன் சார்ந்ததாகவும் இருக்கலாம்; பகுதி நலனும் பொதுநலனும் இணைந்ததாகவும் இருக்கலாம்.

அரசியல் செயல்பாடு என்பது அடிப்படையில் அரசியல் கட்சியின் செயல்பாடுதான். மக்களுடன் ஒவ்வொரு கிராமத்திலும், ஊரிலும் கட்சிக்காரர்கள் கொள்ளும் உறவுதான், அந்த பகுதி மக்களின் நலனுக்கு உழைப்பதுதான் அரசியல். தேர்தல் என்பது அப்படி பணியாற்றும் கட்சியினர் ஆட்சி செய்ய முற்படுவது. கட்சிதான் சுவர் என்றால், சித்திரம் என்பது ஆட்சி. சுவரில்லாத சித்திரங்கள், அரசியல் கிடையாது.

பிற கட்சிகளின் அரசியல் அணிகள்

உதாரணமாக, திராவிட முன்னேற்ற கழகம் 1949ஆம் ஆண்டு துவங்கப்பட்டாலும், கட்சிக்கான கிளைகளை உருவாக்கி, கட்சி அமைப்பை கட்டுவதற்கு இரண்டாண்டுகள் எடுத்துக்கொண்ட பிறகு, 1951 ஆம் நடந்த முதல் மாநில மாநாட்டில்தான் கட்சியின் சட்ட திட்டங்களை நடைமுறைக்கு கொண்டுவந்தது. அதன் பிறகு உறுப்பினர் சேர்க்கை அதிகரிக்கப்பட்டு, மேலும் பல கிளைகள் அமைக்கப்பட்டன.

தொடர்ந்து மாவட்ட மாநாடுகள், கூட்டங்கள், கொள்கை விளக்க பயிற்சி வகுப்புகள் நடந்தன. பல்வேறு கோரிக்கைகளுக்காக கட்சி தொடர்ந்து போராடியது. கட்சி அமைப்பை உருவாக்குவதே, கோரிக்கைகளை முன்னெடுப்பதே, போராடுவதே அரசியலாக விளங்கியது. தேர்தல் பங்கேற்பு என்பது அதற்கெல்லாம் அதற்கு ஐந்தாண்டுகளுக்குப் பிறகு நிகழ்ந்தது.

கம்யூனிஸ்டு கட்சிகள் தொழில்கள் சார்ந்து தொழிற்சங்கங்களை, கட்சி அணிகளை, உருவாக்குவன. வெகுஜன அமைப்புகளும் இவற்றை ஒட்டியே செயல்படும்.

கட்சியின் முக்கிய அரசியல் பணி அந்தந்த அணியினரின் நலன்கள், கோரிக்கைகளுக்காக போராடுவது. தேர்தலில் பங்கேற்பது என்பது அதற்கு உதவுவதற்குத்தான். உழைப்பவர்களிடமே அதிகாரம் இருக்கவேண்டும், முதலீட்டியக் குவிப்பும் அதிகாரக் குவிப்பும் உழைப்பாளர்களை சுரண்டக்கூடாது என்ற உன்னத தத்துவத்தின் அடிப்படையில் செயல்படும் கொள்கைக் கூட்டம் அது.

ரஜினி அரசியல்

பட மூலாதாரம், Getty images

மக்களுக்கு அதை புரிந்துகொள்ளும் பக்குவம் இல்லாததால் தேர்தல்களில் அவை முக்கிய சக்தியாக இல்லாமல் இருக்கலாம்; ஆனால் அரசியலில் அவர்களுக்கு மிக முக்கியமான இடம் உண்டு. தேர்தல் வேறு, அரசியல் வேறு.

விடுதலை சிறுத்தைகள் கட்சியோ சமூகத்தில் மிகவும் ஒடுக்கப்பட்ட தலித் மக்களின் விடுதலைக்காக, மேம்பாட்டுக்காக செயல்பட உருவாக்கப்பட்ட கட்சி. ஒவ்வொரு பகுதியிலும் அன்றாடம் ஜாதி ஒடுக்குமுறைக்கு, வன் கொடுமைகளுக்கு எதிராக களத்தில் செயல்படுவது அக்கட்சியின் நோக்கம்.

அந்த அரசியலை வலுப்படுத்தவே சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் பங்கேற்கிறது. அதன் உயிர்மூச்சு அன்றாட உரிமைப் போராட்டம்தான். பிற தலித் இயக்கங்களும் அப்படித்தான்.

அ.இ.அ.தி.மு.க என்னதான் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என்று தலைமை வழிபாட்டு அரசியல் செய்தாலும் அதன் கட்சி அமைப்புதான் அதன் அரசியல் பலம்.

ஒவ்வோர் ஊரிலும் தி.மு.க கட்சியினருக்கு எதிர்முனையில் இயங்குபவர்களைக் கொண்டது அந்த கட்சி. எல்லா தொழில்களிலும் போட்டிபோடுவர்கள் ஒருவர் அந்த கட்சியில் இருந்தால், மற்றவர் இந்த கட்சியில் இருப்பார்.

தி.மு.கவின் கொள்கைகள், கோட்பாடுகள் பலவற்றை அ.தி.மு.க. பிரதியெடுத்தாலும், அந்தக் கட்சியின் அணியினர், தி.மு.கவை எதிர்ப்பவராக இருப்பார்கள். இதன் காரணமாக, ஒரு கட்சியிலிருந்து விலகி மற்ற கட்சியில் சேர்வதும் அடிக்கடி நிகழ்கிறது.

ஏன், பாரதிய ஜனதா கட்சி என்பதுகூட ராஷ்டிரfய ஸ்வயம் சேவக் என்ற தொண்டர் அணியினை அடிப்படையாகக் கொண்ட கட்சிதான். இந்து மத அடையாளம், சனாதன பெருமிதம், மீட்புவாத பிற்போக்கு தேசியம், இஸ்லாமிய எதிர்ப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட இந்துத்துவ தேசியவாத அமைப்புதான் ஆர்.எஸ்.எஸ். எலும்பு, நரம்பு, சதையெல்லாம் அதுதான். அதன் மேலே போர்த்தப்பட்ட தோல்தான் பாரதீய ஜனதா கட்சி.

அரசியல் என்பதே எதிரிகள் x நண்பர்கள் பிரிவினைதான்

சுருக்கமாகச் சொன்னால் கட்சி அமைப்பு, கட்சி அணியினர், அவர்கள் கொள்கை பற்று, ஆகியவைதான் அரசியல். அவற்றுடன் சேர்ந்து யாருக்கு எதிராக செயல்படுகிறார்கள் என்பதும் மிக முக்கியமானது. அரசியல் என்பதே எதிரி, நண்பன் என்ற வித்தியாசத்தின் கட்டுமானம்தான் என்று சொன்னார் கார்ல் ஷ்மிட் என்ற அறிஞர்.

ஆர்.எஸ்.எஸ்ஸை பொறுத்தவரை, தேசத்தின் உள்முரண்களை பேசும் எல்லோருமே எதிரிகள்தான். ஒன்றிய அரசு, மாநில அரசு இடையிலான அதிகாரப் பகிர்வை பேசும் கட்சிகள் எல்லாம் எதிரிகள்; வர்க்க முரணை பேசும் கம்யூனிஸ்டுகள் பிறவி எதிரிகள்; இஸ்லாமியர்கள் தேச விரோதிகள். இவர்கள் எல்லோருக்குமே பாரதீய ஜனதா கட்சியின் ஒற்றை இந்து அடையாள பாசிசம் எதிரி.

இந்த பின்னணியில் பார்த்தால் ரஜினிகாந்திற்கு கட்சி அமைப்பை உருவாக்குவதில் ஆர்வம் இல்லை. ஜனவரியில் அல்ல, தேர்தல் அறிவித்த பிறகுகூட அவர் கட்சி தொடங்கலாம். ஏனெனில் கட்சிக்கு கொள்கை, கோட்பாடு என்று எதுவும் கிடையாது. அதையெல்லாம் கேட்டால் அவருக்கு தலை சுற்றும்.

ஆன்மீக அரசியல் என்று சொல்வது ஓர் உள்ளீடற்ற சொல்லாட்சி. தன்னலமற்ற பொதுநல சேவை என்று வைத்துக்கொண்டால் அதைத்தான் அனைத்து கட்சிகளும் கூறுகின்றன. ரஜினிகாந்த் தன் கட்சி யாரை எதிர்த்து செயல்படுகிறது என்று சொல்ல மாட்டார். யார் நண்பர்கள் என்று சொல்லமாட்டார். எல்லாருக்கும் பொதுவான ஜாதி,மத, அரசியல் பேதங்களை கடந்த ஆன்மீக நல்லாட்சி அரசியல் என்பார். அதன்பொருள் "அரசியலே எதுவும் கிடையாது. நான் நிறைய சினிமாவில் நடித்து உங்களை மகிழ்வித்தேன். எனக்கு ஓட்டுப்போடுங்கள்" என்பதுதான்.

ரஜினி

பட மூலாதாரம், Getty Images

முதலிலேயே கட்சி தொடங்கினால் கட்சிக்குள் ஏற்படும் கோஷ்டி மோதல்கள், பதவிப் போட்டிகளை சமாளிக்கும் பொறுமையெல்லாம் அவருக்கு கிடையாது. மக்களிடையே பணியாற்ற வேண்டும் என்றால் மக்கள் கோரிக்கைகளுக்காக போராடுவது என்பதே அவருக்கு பிடிக்காது. அரசுக்கு எதிராக போராடுவது மகா பாவம் என்று நினைப்பவர். எனவே கட்சி கிளைகள், உள்கட்சி தேர்தல்கள் என்று எதுவும் நடக்காது.

பாரதிய ஜனதா கட்சி, அர்ஜுனமூர்த்தி என்ற ஆர்.எஸ்.எஸ்காரரை கட்சி அமைப்பை உருவாக்க டெபுடேஷனில் அனுப்பியுள்ளது. அவர் கட்சியை பார்த்துக்கொள்வார். ரஜனியின் வேலை தேர்தல் வந்த பிற்கு வாய்ஸ் கொடுப்பது; தன் வேட்பாளர்களுக்கு ஆதரவு தரச்சொல்லி கேட்பது. அவ்வளவுதான்.

ஆட்சிக்கும் வர மாட்டார்

சரி, கட்சியில்தான் ஆர்வமில்லை; ஆட்சி செய்யவாவது முன்வருவாரா என்று பார்த்தால் அதிலும் ரஜினிக்கு ஆர்வம் கிடையாது. தினமும் இரவு - பகலாக அரசு பணிகளை மேற்கொண்டு, எதிர்க் கட்சியினர் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லிக்கொண்டு வாழ்வதை நினைத்தால் அவருக்கு அபத்தமாக இருக்கிறது. “சீ.சீ அதெல்லாம் எனக்கு சரிவராது” என்று கல்யாண மண்டபத்தில் பத்திரிகையாளர் கூட்டம் போட்டு வெளிப்படையாக கூறினார்.

அவரால் பத்து நிமிடத்திற்கு மேல் பொறுமையாக யார் கேள்விக்கும் பதில் சொல்ல முடியாது. பிறர் பேசுவதையெல்லாம் பொறுமையாகக் கேட்பார். அவருக்கு தோன்றியதை செய்வார். அதற்கு விளக்கம் கொடுப்பது, விவாதம் செய்வதெல்லாம் அவருக்கு பிடிக்காது. அதாவது எது அரசியலின் உயிர்மூச்சோ அந்த விவாதம், விளக்கம், தர்க்கம் எதுவும் அவருக்கு பிடிக்காது.

இந்த பாசிச மனோபாவத்தால்தான் அவருக்கு நரேந்திர மோதியை மிகவும் பிடிக்கிறது. பத்திரிகையாளர் சந்திப்பே நிகழ்த்தாத அரசியல்வாதிகளை அவர் ரசிக்கிறார். ஆனால் அவரால் அப்படிக்கூட ஆட்சி பொறுப்பை ஏற்கமுடியாது. எனவே அவர் ஆட்சி செய்ய வேறு ஒருவரைத்தான் நியமிப்பார். அதாவது ரஜினி நிறுத்தும் வேட்பாளர்கள் பெருவாரியாக வெற்றி பெற்றுவிட்டால், அர்ஜுனமூர்த்தி போன்ற ஒருவரை ஆட்சியில் அமர்த்துவார். அமர்த்திவிட்டு பாபா படம் போல இமயமலைக்கு செல்வார். ஆட்சிக்கு ஏதாவது பிரச்னை வந்தால் மீண்டும் வந்து குரல் கொடுப்பார்.

ஆட்சியும் செய்யமாட்டார், மக்கள் பணியும் செய்யமாட்டார், கட்சி அணிகளையும் உருவாக்க மாட்டார் என்றால் அவர் அரசியலுக்கு வரவில்லை என்றுதான் பொருள். லாட்டரி சீட்டு வாங்குவதுபோல நேரடியாக தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்துவார். மக்கள் ரஜினி மோகத்தில் ஓட்டளித்து அவர்களை தேர்ந்தெடுத்தால் ஆட்சியாளர்களை நியமித்து ஆட்சி நடத்த ஏற்பாடு செய்வார். அதையெல்லாம் அர்ஜுன்மூர்த்தியோ, குருமூர்த்தியோ, அமித்ஷா வோ பார்த்துக்கொள்வார்கள்.

ரஜனி என்னும் பிராண்ட்

கோல்கேட் கம்பெனி பற்பசை தயாரிக்கிறது. நீங்கள் அங்காடியில் போய் பார்த்தால் பல பெயர்களில் பற்பசைகள் இருக்கும்; அவற்றில் பல கோல்கேட் தயாரிப்பாக இருக்கும். Ultrabrite, Maxfresh, Maxwhite, Total Care என்றெல்லாம் பல பெயர்களில் இருக்கும். சமீபத்தில் சால்ட் என்று ஒன்றை அறிமுகப்படுத்தினார்கள்.

அது போல ஆர்.எஸ்.எஸ் - தமிழகத்திற்கென்றே ஒரு பிரத்யேக பிராண்டாக ரஜினிகாந்த்தை அறிமுகம் செய்துள்ளது. டிசம்பருக்குள் எவ்வளவு முகவர்கள் கிடைக்கிறார்கள் என்று பார்த்துக்கொண்டு உற்பத்தியில் முதலீடு செய்வார்கள். ஊடகங்களுக்கு கொண்டாட்டம். ஏகப்பட்ட விளம்பரங்கள் கிடைக்கும். ஆனால் கோல்கேட் போல இல்லாமல் இந்த ஆர்.எஸ்.எஸின் ரஜினி பிராண்ட் தமிழ் சமூகத்தை சீரழித்துவிடும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: