ரஜினியின் ஆன்மிக அரசியல், மத அரசியல் அல்ல: தமிழருவி மணியன்

பட மூலாதாரம், Getty Images
ரஜினிகாந்தின் ஆன்மிக அரசியலுக்கும், மத அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என ரஜினி தொடங்கவுள்ள கட்சியின் மேற்பார்வையாளர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினியுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருந்த தமிழருவி மணியன், அவர் தொடங்கவுள்ள கட்சியின் பெயர், சின்னம் பற்றிய விவரங்களை அவரே அறிவிப்பார் என்றும் ரஜினியின் கட்சியால் தமிழகத்தின் பெரிய எழுச்சி ஏற்படும் என்றும் கூறினார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை பேசிய அவர், தமிழகத்தில் மாற்று அரசியலை முன்வைக்கப் போகும் ரஜினி, 234 தொகுதியிலும் போட்டியிடவேண்டும் என பொது மக்கள் விரும்புவார்கள் என்றும் ஆனால், அவர் எங்கே போட்டியிடுவார் என அவரே பின்னர் தெரிவிப்பார் என்றும் கூறினார்.
''இந்தியாவில் மகாத்மா காந்திதான் முதன்முதலில் ஆன்மீக அரசியலை பற்றி பேசினார். அந்த அரசியலைதான் ரஜினி பின்பற்றப்போகிறார். திமுக மற்றும் அதிமுக கட்சிகளை பற்றி பேசுவதை விட தனது கட்சியால் என்ன செய்யமுடியும், தமிழகத்தில் எப்படி முன்னேற்றத்தை கொண்டுவரலாம் என்பதுதான் ரஜினியின் அரசியல்.
அவரின் அரசியல் என்பது மற்றவர்களை விமர்சனம் செய்வதை விடுத்து, எந்த ஒரு மதம், சாதி என குறிப்பிட்ட குழுவுக்கு ஆதவராக இருப்பதை விடுத்து, அனைத்து மக்களுக்குமான அரசியலை முன்னெடுப்பதாக இருக்கும். இதற்கு மக்கள் ஒத்துழைப்பு அளித்தால் அப்போது அவர் சொன்ன அற்புதம், அதியசம் நடைபெறும். மக்கள் அவருக்கு ஆதரவு தருவார்கள் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை,'' என்றார் அவர்.
முந்தைய காலங்களில் ரஜினி உள்ளிட்ட பல நடிகர்களை தாம் விமர்சித்து பேசியதாகவும், தற்போது ரஜினியைப் போல பற்றற்ற நபரை சந்திக்கவில்லை என்பதால், அவரோடு இணைந்து பணியாற்றவுள்ளதாகவும் கூறினார் மணியன். அதோடு, காந்திய மக்கள் மன்றம் என்ற தமது அமைப்பை ரஜினியின் கட்சியுடன் இணைப்பதாகவும் அவர் கூறினார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:








