பாரத் பந்த்: விவசாயிகளுக்கு ஆதரவாக கடலில் இறங்கிப் போராடிய மீனவர்கள் - தமிழ்நாடு நிலவரம் என்ன?

மத்திய அரசு கொண்டு வந்த மூன்று விவசாய சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக அறிவிக்கப்பட்டுள்ள பாரத் பந்த் என்ற முழு அடைப்புப் போராட்டம் தமிழ்நாட்டில் கலவையான தாக்கத்தையே ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை, விவசாயிகளுக்கு ஆதரவாக ஒரு ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்கிறார் பிபிசி தமிழ் செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதன்.
திருச்சியில் மூடப்பட்டிருந்த காய்கறி சந்தை

பட மூலாதாரம், BBC/Jayakumar
திருச்சியில் காய்கறிச்சந்தை முழுவதும் மூடப்பட்டிருந்தது என்கிறார் பிபிசி தமிழின் ஜெயக்குமார் சுதந்திரபாண்டியன்.
திருச்சியில் விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்டவை ஆர்ப்பாட்டம் நடத்தின.

திருச்சி பேருந்து நிலையத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பினரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அந்த அமைப்பின் பிரபல பாடகர் கோவன் தலைமையில் கலைக் குழுவினரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
விவசாயிகளுக்கு ஆதரவாக மீனவர்கள் போராட்டம்

இந்திய அரசின் புதிய விவசாய சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், இதற்காக டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் ராமேஸ்வரம் அடுத்த பாம்பனில் மீனவர்கள் போராட்டம் நடத்தினர்.

பாம்பன் வடக்கு கடற்கரை பகுதியில் பாரம்பரிய விசைப்படகு மீனவர்கள் கடலில் இறங்கி இதற்காக ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் புதிய விவசாய சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், 2020 மீன்பிடி சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இது தவிர, தங்கச்சிமடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மீனவ பெண்கள் தங்கச்சிமடம் வலசை பஸ் நிறுத்தத்தில் இருந்து ஊர்வலமாக சென்று தர்கா பேருந்து நிலையத்தில் மறியல் போராட்டம் நடத்தினர்.புதுவையில்
விவசாயிகளுக்கு ஆதரவாக புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் அன்றாட வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பேருந்து, ஆட்டோ இயக்கப்படவில்லை. மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர் என்கிறார் புதுவை செய்தியாளர் நடராஜன் சுந்தர்.
புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ், திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உட்பட மதசார்பற்ற கட்சிகள் மற்றும் அனைத்துத் தொழிற்சங்கங்கள் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தன.

இதையடுத்து இன்று புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த முழு அடைப்பு காரணமாக புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், டெம்போ, ஆட்டோ உள்ளிட்டவைகளை இயக்கப்படவில்லை.
தனியார் வர்த்தக நிறுவனங்கள், காய்கறி சந்தைகள் உள்படப் புதுச்சேரியில் உள்ள அனைத்து கடைகளும் முழுவதுமாக மூடப்பட்டன. இந்த முழு அடைப்பு காரணமாக தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரி நகரம் மற்றும் கிராமப் பகுதிகள் அனைத்திலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.இதனைத் தொடர்ந்து புதுச்சேரி பேருந்து நிலையம் அருகே காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் உட்பட அனைத்து கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டதிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பங்கேற்றார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் நாராயணசாமி, "கார்ப்பரேட்டுகளுக்கு இந்த விவசாயத்தை கொடுப்பதற்காக, மோதி அரசு செயல்பட்டு வருகிறது. இதை நாங்கள் முழுமையாக எதிர்க்கிறோம். இந்த போராட்டத்தில் புதுச்சேரி காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் மற்றும் மத சார்பற்ற அமைப்புக்கள் அனைத்தும் ஒற்றுமையாக இருக்கிறோம்.
பாராளுமன்றத்தில் ஜனநாயக விதிமுறையை மீறி, பாராளுமன்ற ஜனநாயகத்தை மிதித்து மோதி அரசு நிறைவேற்றிய இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளேன். இந்த சட்டத்தை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்," என முதல்வர் தெரிவித்தார்.
மதுரையில் ஆர்ப்பாட்டம்

முழு அடைப்புக்கும், டெல்லி விவசாயிகள் போராட்டத்துக்கும் ஆதரவாக மதுரை பாண்டிபஜார் பகுதியில் திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

விவசாயிகளுக்கு ஆதரவாக அரசு ஊழியர்கள் மழையில் நனைந்தபடி ஆர்ப்பாட்டம் வேளாண் சட்டதிருத்த மசோதாவை திரும்ப பெற கோரியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக அரசு ஊழியர்கள் சங்கமான ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கொட்டுமழையிலும் நனைந்தபடி போராட்டத்தில் ஏராளமானோர் ஈடுபட்டனர்.
கோவையில் சரி பாதி கடைகள் மூடல்
கோவையில் முழு அடைப்புக்கு ஆதரவாக சரிபாதி கடைகள் மூடப்பட்டிருந்ததாக கூறுகிறார் செய்தியாளர் ஹரிஹரன்.

விவசாயிகளுக்கு ஆதரவாக கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
கோவை மாவட்டத்தை பொறுத்தவரை நகரப் பகுதியில் இயங்கி வந்த 50 சதவீத கடைகள் மூடப்பட்டுள்ளன. அரசு போக்குவரத்து மற்றும் தனியார் போக்குவரத்து சேவைகள் இயங்கி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.
மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகள், மளிகை கடைகள் மற்றும் காய்கறி அங்காடிகள் போன்ற வேளாண் உற்பத்தி சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் முழுவதுமாக கடையடைப்பில் ஈடுபட்டுள்ளன.
கோவியில் விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சியினரும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். கோவை ரயில் நிலையம் முன்பு எஸ்டிபிஐ கட்சியைச் சேர்ந்த 70 க்கும் மேற்பட்டோர் ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்களை தடுப்பதற்காக போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் ரயில் நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து எஸ்டிபிஐ கட்சியினர் போராட்டம் செய்தனர். அவர்களை அப்புறப்படுத்த முயல்கையில் போலீசாருக்கும் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்டிபிஐ கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
இதேபோன்று கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் அன்னூர் பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மக்கள் நீதி மையம் கட்சியினர், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் சங்கத்தினர், மக்கள் அதிகாரம் அமைப்பினர், மின்வாரியத்துறை ஊழியர்கள் தொழிற்சங்கத்தினர் மற்றும் எஸ்ஆர்எம்யு அமைப்பினரும் இன்று போராட்டம் நடத்தினர்.
நீலகிரி மாவட்டத்தில் முக்கிய பகுதிகளில் மட்டுமே சில கடைகள் மூடப்பட்டுள்ளன. பேருந்துகள் இயக்கமும் இயல்பு நிலையிலே உள்ளது. திமுக, காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிற செய்திகள்:
- இந்தியாவின் புதிய நாடாளுமன்றம்: கட்டுமானத்தை தொடங்க உச்ச நீதிமன்றம் தடை
- கொரோனா தடுப்பூசி: இந்தியாவில் அவசர அனுமதி கோரி விண்ணப்பம்
- தலித் பெண் சடலத்தை பொது வழியில் கொண்டுசெல்வதை தடுத்த சாதி இந்துக்கள்
- கமலா ஹாரிஸ் இந்திய விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தாரா?
- சோசலிசம் குறித்து அம்பேத்கரின் கருத்து என்ன? - வெளிச்சத்துக்கு வராத பக்கங்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












