ஆர்யா ராஜேந்திரன்: கேரளாவின் இளம் மேயராக தேர்வாகும் 21 வயது மாணவி

பட மூலாதாரம், ARYA RAJENDRAN
இந்தியாவின் கேரளா மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் முடவன்முகல் வார்டு கவுன்சிலர் ஆக தேர்வான ஆர்யா ராஜேந்திரன் என்ற 21 வயது மாணவியை மேயர் பதவிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேர்வு செய்திருக்கிறது.
திருவனந்தபுரம் நகரில் உள்ள ஆல் செயின்ட்ஸ் கல்லூரியில் பி.எஸ்.சி. கணிதவியல் துறையில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் ஆர்யா ராஜேந்திரன். இவர், இந்திய மாணவர் சங்கத்தின் மாநில குழு உறுப்பினராக இருக்கிறார்.
இந்நிலையில் கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில், 100 இடங்களில் 51 இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது.
அங்கு 35 இடங்களுடன் எதிர்கட்சி வரிசையில் பாரதிய ஜனதா கட்சி உள்ளது. காங்கிரஸ் மற்றும் ஐக்கிய ஜனநாயக முன்னணி 10 இடங்களுடன் மூன்றாமிடத்தில் உள்ளன. மாநகராட்சியில் நான்கு சுயேச்சை கவுன்சிலர்கள் உள்ளனர்.
இந்த தேர்தலில் முடுவன்முகல் வார்டில் போட்டியிட்ட ஆர்யா ராஜேந்திரன், ஐக்கிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் ஸ்ரீகலாவை 2,872 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுறச் செய்தார்.
முன்னதாக, சுகாதார நிலைக்குழு தலைவர் புஷ்பலதா, ஆசிரியர் யூனியன் தலைவர் ஏ.ஜி. ஒலியெனா, ஜமீலா ஸ்ரீதரன் ஆகியோரை தங்களின் மேயர் வேட்பாளர்களாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னிறுத்த பரிசீலித்து வந்தது. இதில் புஷ்பலதாவும் ஒலியெனாவும் தேர்தலில் தோல்வியுற்றனர். இந்த நிலையில், ஓய்வு பெற்ற அரசு ஊழியரான ஜமீலாவுக்கு பதிலாக 21 வயது மாணவி ஆர்யா ராஜேந்திரனை மேயர் பதவிக்கு தேர்வு செய்ய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமை முடிவு செய்தது.

பட மூலாதாரம், ARYA RAJENDRAN
கட்சியின் சிறார் பிரிவு அமைப்பான பாலசங்கத்தின் மாநில தலைவராகவும் பொறுப்பு வகிக்கும் ஆர்யா ராஜேந்திரன் பகுதி கமிட்டி உறுப்பினராகவும் இருப்பதால் அவரது செயல்பாடுகளுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு காணப்படுகிறது.
இதைக் கருத்தில் கொண்டும் இளைஞர்களை ஈர்க்கும் வகையிலும் இளம் மாணவியான ஆர்யா ராஜேந்திரனை மேயர் பதவிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேர்வு செய்திருக்கிறது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நான் ஒரு கல்லூரி மாணவி மற்றும் தங்களுடைய பிரதிநிதி படித்தவராக இருக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்த்தார்கள். அதனால், எனக்கு அவர்கள் வாய்ப்பு அளித்திருக்கிறார்கள். கட்சியின் தேர்வுக்கு கட்டுப்பட்டு மேயர் பதவியை சிறந்த முறையில் ஆற்றுவேன்," என்று தெரிவித்தார்.
அரசியல் பணிகளுக்கு இடையே தனது கல்லூரி படிப்பை முடிக்க ஆர்யா ராஜேந்திரன் திட்டமிட்டிருக்கிறார்.
ஆர்யாவின் தந்தை ஒரு எலக்ட்ரீஷியன், தாய் எல்ஐசி ஏஜென்ட்.
திருவனந்தபுரம் மேயர் ஆக ஆர்யா பதவி ஏற்கும்போது அவர் இந்தியாவின் மிகவும் இளம் மேயர் ஆக கருதப்படுவார். இதற்கு முன்பு மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், 21 வயதில் கவுன்சிலர் ஆனார். 27 வயதில் அவர் நாக்பூர் முனிசிபல் மேயர் ஆக பதவியேற்றபோது இளம் மேயர் ஆக கருதப்பட்டார்.
பிற செய்திகள்
- ரஜினி உடல்நிலை: ஹைதராபாத் மருத்துவனையில் தொடரும் சகிச்சை
- தொ.பரமசிவன் உடலுக்கு அரசு மரியாதை வழங்க கோரிக்கை
- இந்திய விவசாயிகள் தொடர்ந்து ஏழைகளாக இருப்பது ஏன்?
- கொரோனா சிகிச்சையில் இனப் பாகுபாடு குற்றம்சாட்டிய அமெரிக்க பெண் மருத்துவர் பலி
- புதுச்சேரி புத்தாண்டு கொண்டாட்டம்: ஆதரிக்கும் நாராயணசாமி, எதிர்க்கும் கிரண் பேடி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












