தொ.பரமசிவன் உடல் பாளை இடுகாட்டில் தகனம் - வழிநெடுகிலும் மக்கள் அஞ்சலி

பட மூலாதாரம், R.R.Srinivasan
தமிழ்நாட்டு பண்பாட்டியல் அறிஞர் தொ.பரமசிவன் கடந்த வியாழக்கிழமை உடல் நலக்குறைவால் காலமான நிலையில், அவரது பாளையங்கோட்டையில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வெள்ளக்கோவில் ஈடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.
அவரது உடல் பாளையங்கோட்டை யாதவர் வீதியில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் , இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், தமிழ் ஆர்வலர்கள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து நடைபெற்ற அஞ்சலி கூட்டத்தில் மே 17 இயக்கத்தின் திருமுருகன்காந்தி, கவிஞர் அறிவுமதி, எழுத்தாளர் கோணாங்கி, பூ உலகின் நண்பர் சுந்தர்ராஜ், கவிஞர் முத்துகிருஷ்ணன் உள்பட 50க்கும் மேற்பட்டோர் புகழஞ்சலி உரை நிகழ்த்தினர்.
அதில் பேசிய பலரும் தொ.ப.விற்கு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி நடந்திருக்க வேண்டும் , ஆனால் அதற்கான அரசு தற்போது இல்லை என தெரிவித்தனர் இதைத்தொடர்ந்து, அவரது உடல் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு வெள்ளக்கோவில் இடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது. வழிநெடுகிலும் மக்கள் திரண்டிருந்து அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
முன்னதாக, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் (பொறுப்பு) மதுக்கூர் ராமலிங்கம், பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் கூட்டாக விடுத்த அறிக்கை:
மூத்த தமிழறிஞரும் ஆழ்ந்த பெரியாரியச் சிந்தனையாளருமான அய்யா தொ.பரமசிவன் அவர்களின் மறைவு தமிழ் ஆய்வுலகுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். உறுதிமிக்க பெரியாரியவாதியான அவர் தற்செயலாக பெரியாரின் நினைவுநாளிலேயே காலமாகியிருக்கிறார்.

சிவகங்கை மாவட்டம், இளையாங்குடியில் டாக்டர் ஜாகிர் உசேன் கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றிய நாட்களில் கல்லூரி ஆசிரியர் சங்கமாகிய மூட்டாவின் இணைச்செயலாளராகப் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றுள்ளார். மூட்டா இயக்க வரலாற்றின் மிக முக்கியமான போராட்டமான ஜாகிர் உசேன் கல்லூரிப்போராட்டத்தில் முன்னணிப்பாத்திரம் வகித்தவர். அவருடைய முனைவர் பட்ட ஆய்வேடாக அழகர்கோவில் பற்றிய ஆழமான ஆய்வு அப்போது வெளிவந்தது.
பின்னர், மதுரை தியாகராசர் கலைக்கல்லூரியில் பணி தொடர்ந்த காலத்தில் அவருடைய "அறியப்படாத தமிழகம்" உள்ளிட்ட முக்கியமான நூல்கள் வெளிவந்தன. சின்னச்சின்னக் கட்டுரைகளில் இதுவரை நாம் அறிந்திராத தகவல்களுடன் நாம் பார்த்திராத புதிய கோணங்களில் அவருடைய சிந்தனை வீச்சைத் தமிழகம் கண்டது. அவருடைய ஆய்வுக்கட்டுரைகள் பலவும் மார்க்சிய ஆய்வுநெறியின்பாற்பட்டவையாக இருப்பதைக் காணலாம்.

பட மூலாதாரம், Dayalan (Dayalan Shunmuga/FB)
நாட்டுப்புறத் தெய்வங்கள் மீது தமிழ்ச்சமூகத்தின் கவனத்தைத் திருப்பிய முன்னோடிகளில் ஒருவராகத் திகழும் தொ.ப. அவர்களின் பண்பாட்டு அசைவுகள், உரைகல், தெய்வம் என்பதோர், சமயங்களின் அரசியல் போன்ற நூல்வரிசை இந்துத்துவ அரசியலுக்கு எதிரான வலுவான வரலாற்றுக் குறிப்புகளைக் கொண்டவை.
யார் இந்த தொ.ப? அறிந்துகொள்ள:தொ.பரமசிவன் மறைவுக்கு தலைவர்கள், அறிஞர்கள் அஞ்சலி: இந்த பண்பாட்டு அறிஞர் சாதித்தவை என்ன?
அவரோடு உரையாடும் சில மணித்துளிகளில் அவர் வெளிப்படுத்தும் அறிவின் விசாலமும் அவரது நினைவாற்றலும் வியப்பளிப்பவை. நூல்களில் கற்றவற்றைத் தமிழ் நிலப்பரப்பில் வீதிகளில் நின்று இதோ பாருங்கள் இதுதான் சங்க இலக்கியம் சொன்ன சேதி என்று ஓர் இணைப்பை ஏற்படுத்திக்கொண்டே இருந்தவர். தொல்லியல் ஆய்வுகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தவர். தமிழ் வைணவம், தமிழ்ச்சமணம் எவ்விதம் வட இந்திய மரபுகளிலிருந்து வேறுபட்டது என்பதை கண்டு சொன்னவர்.
பின்னர், அவர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பொறுப்பேற்றார். பேராசிரியராகவும் ஒரு நிர்வாகியாகவும் அவர் நேர்மையின் இலக்கணமாக வாழ்ந்தார் என்று இன்றுவரை அவரது சக பேராசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.
கருத்து வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின்பால் தோழமைப்பூர்வமான உறவை தன் இறுதிநாள்வரை கொண்டிருந்தவர். செம்மலர், புதுவிசை உள்ளிட்ட முற்போக்கு இதழ்களில் பல கட்டுரைகளை எழுதியவர். நெல்லையில் ஒவ்வோராண்டும் நடைபெறும் கலை இலக்கிய இரவுகளில் முதல் வரிசையில் அமர்ந்திருப்பார். தமுஎகசவின் பல பயிலரங்குகளில், நிகழ்வுகளில் பங்கேற்று ஆக்கப்பூர்வமான பங்களிப்பைச் செலுத்தியவர்.
சுற்றுச்சூழல் இயக்கங்களோடு தன்னை மனப்பூர்வமாக இணைத்துக் கொண்டவர்.
பணத்துக்கும் புகழுக்கும் ஒருபோதும் மயங்காத, எதற்காகவும் தன் கருத்துக்களில் சமரசம் செய்துகொள்ளாத மிகப்பெரும் தமிழறிஞராக இறுதிவரை எளிய வாழ்வையே வாழ்ந்தவர். நாட்டின் பன்முகத்தன்மையை அழித்து ஒற்றைத்துவப்படுத்தும் வரலாற்று மோசடிகள் அரசின் துணையோடு விஷமெனப் பரவும் இக்காலத்தில் வரலாற்றின் உண்மைத்தன்மையை துணிவுடன் எடுத்துரைக்க முன்னிலும் கூடுதலாய் தேவைப்பட்ட முனைவர் தொ.ப. காலமாகியுள்ளார். அவரது ஆய்வுநூல்களையும் அறிவார்ந்தச் செயல்பாடுகளையும் பரவலாக்குவதே அவருக்குச் செலுத்தப்படும் பொருத்தமான அஞ்சலியாக அமையுமென தமுஎகச கருதுகிறது. மதிக்கத்தக்க பங்களிப்பினைச் செய்து காலமாகிற தமிழறிஞர்களையும் கலை இலக்கிய ஆளுமைகளையும் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யும் நடவடிக்கையை இவரிலிருந்தேனும் தொடங்க வேண்டுமென தமிழக அரசை தமுஎகச கேட்டுக்கொள்கிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அவருடைய மறைவால் துயருற்றிருக்கும் அவரது இணையர், மகன், மகள், பேரக்குழந்தைகள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் அனைவருக்கும் இரங்கல் தெரிவிப்பதாகவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
பிற செய்திகள்:
- சிசுவின் கோவிட் இறப்பு மீது சந்தேகம்: சிக்கலாகுமா முஸ்லிம் பெற்றோர் வழக்கு?
- பிரமாண்ட பனிப்பாறை உடைவதால் உயிரினங்களைத் தொடரும் ஆபத்து
- நடராஜன் குழந்தையைப் பார்க்கப் போகவில்லை, விராட் கோலி போகிறார்: கவாஸ்கர் விமர்சனம்
- கொரோனா தடுப்பூசியை இஸ்லாம் ஏற்கிறதா? முஸ்லிம் நாடுகளில் தீவிர விவாதம் #FACTCHECK
- அர்னாப் கோஸ்வாமி நடத்திய ரிபப்ளிக் டிவி நிகழ்ச்சிக்கு பிரிட்டனில் அபராதம்
- பிரிட்டனுடன் கைகோர்த்து 36 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்திய ஏர்டெல் குழுமம்
- தண்டனை பெற்ற சம்பந்தி, மேலாளர், ஆலோசகருக்கு மன்னிப்பு வழங்கிய டிரம்ப்
- கொரோனா வைரஸ்: உலகெங்கும் பாதிப்பு, பலி எண்ணிக்கை எவ்வளவு?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












