தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன் பற்றி கவாஸ்கர்: 'இளம் வீரர் குழந்தையை பார்க்கப் போகவில்லை'

சுனில் கவாஸ்கர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சுனில் கவாஸ்கர்

ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்று பந்து வீச்சில் கலக்கிய தமிழ்நாடு வீரர் நடராஜனுக்கு ஆதரவாக காரசாரமான கருத்துகளை வெளியிட்டுள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர்.

ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தால் நடராஜன் தன் மகளைக் காணச் செல்லவில்லை, ஆனால் விராட் கோலி முதல் டெஸ்ட் போட்டிக்குப் பிறகு தன் குழந்தையைக் காணச் செல்கிறார். அணியில் ஒவ்வொருவருக்கும் ஒரு விதி என்று குறிப்பிட்டுள்ளார் கவாஸ்கர்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த நடராஜன், ஐபிஎல் 2020-ல் மிகச் சிறப்பாக பந்துவீசினார். எனவே இந்தியாவின் ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் இடம் பிடித்தார்.

முதல் முறையாக, இந்தியாவுக்குக் களம் இறங்கிய நடராஜன், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கேன்பராவில் நடந்த மூன்றாவது ஒரு நாள் போட்டியில் 10 ஓவர்களை வீசி 70 ரன்களைக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டிகளிலும் நடராஜனுக்கு வாய்ப்பு கிடைத்தது.

இந்தியா சார்பாக விளையாடிய முதல் டி20 போட்டியிலேயே நான்கு ஓவர்களை வீசி வெறும் 30 ரன்களைக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரையும் அசர வைத்தார் நடராஜன

இரண்டாவது டி20 போட்டியில் நான்கு ஓவர்களை வீசி 20 ரன்களைக் கொடுத்து இரண்டு விக்கெட்களையும், மூன்றாவது டி20 போட்டியில் நான்கு ஓவர்களை வீசி 33 ரன்களைக் கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தைய ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தைக் குறித்து, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர், ஸ்போர்ட் ஸ்டார் இதழில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.

அதில் நடராஜனை புகழ்ந்தும், நடராஜன் புதிதாகப் பிறந்த தன் மகளைக் கூடப் பார்க்காமல், ஐக்கிய அரபு எமிரேட்டில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து வரப்பட்டதையும் குறிப்பிட்டு இருக்கிறார்.

கவாஸ்கர் மேலும் கூறியுள்ளவை:

புதிய நபராக களமிறங்கி இருக்கும் நடராஜன் சிறப்பாக செயல்படுகிறார். டி20 போட்டிகளில் இந்த யார்க்கர் நிபுணர் அபாரமாக ஆடினார். ஹர்திக் பாண்டியா தனக்கு வழங்கப்பட்ட ஆட்ட நாயகன் விருதை இவரிடம் பகிர்ந்துகொண்டார்.

இவ்வளவு சீக்கிரம் இந்த வாய்ப்பு கிடைக்கும் என நினைக்கவில்லை' - வேகப்பந்து வீச்சாளர் நடராசன் பேட்டி

பட மூலாதாரம், Sunrisers/ FB

நடராஜன் ஐபிஎல் 2020-ல் விளையாடிக் கொண்டிருந்த போதே, முதல் முறையாக தந்தையானார். அவர் நேரடியாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து, ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். டி20-ல் அவரது அபாரமான ஆட்டத்தைக் கண்ட பிறகும் அவரை டெஸ்ட் போட்டிகளில் நெட் பவுலராக தொடர்ந்து இருக்கக் கூறியிருக்கிறார்கள்.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், ஒரு வடிவத்தில் போட்டியை வெல்லும் ஆட்டக்காரரை, இன்னொரு வடிவத்தில் நெட் பவுலராக வைத்திருக்கிறார்கள்.

நடராஜன் டெஸ்ட் போட்டிகள் முடிந்து, ஜனவரி மூன்றாம் வாரத்துக்குப் பிறகு தான், தன் மகளை முதன்முறையாகக் காணச் செல்ல முடியும்.

ஆனால் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலியோ, தன் குழந்தையைப் பார்க்க, முதல் டெஸ்ட் போட்டி முடிந்த உடனே சென்றுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார் கவாஸ்கர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :