கொரோனா தடுப்பூசி போட இன்று ஒத்திகை - களப்பயிற்சிக்கு தயாராகும் மாநிலங்கள்

கொரோனா

பட மூலாதாரம், SOPA IMAGES

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிக்காக முழுமையாக தயார் நிலையில் இருக்குமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களையும் இந்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

இன்று (ஜனவரி 2) அனைத்து மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் தடுப்பூசி பணிகளுக்கான ஒத்திகை மேற்கொள்ளப்படும் என்று அரசு கூறியுள்ளது.

ஒவ்வொரு மாநிலத்தின் தலைநகரிலும் குறைந்தது மூன்று இடங்களில் இந்த ட்ரை ரன் எனப்படும் ஒத்திகை நடத்தப்படும். சில மாநிலங்களில் கடினமான பகுதிகளில் அமைந்துள்ள மாவட்டங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

மத்திய சுகாதார செயலர் ராஜேஷ் பூஷண் மாநிலங்களின் முதன்மை செயலர்கள், தேசிய சுகாதார இயக்க அதிகாரிகள் மற்றும் மாநில சுகாதாரத்துறையின் அதிகாரிகளுடன் காணொளி மாநாடு நடத்தியதாகவும், இதற்கான ஆயத்தங்களின் நிலை பற்றி மறு ஆய்வு செய்ததாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஒத்திகை ஏன்?

புதிய கோ-வின் மொபைல் செயலியின் செயல்பாட்டை கண்டறிவதே இந்த ஒத்திகையின் நோக்கம் என்று அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, திட்டமிடல் மற்றும் தடுப்பூசி போடும் செயல்முறைக்கும் இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படும். இது களத்தில் பணிபுரியும் மக்களின் நம்பிக்கையை அதிகரிக்கும்.

டிசம்பர் 20 ஆம் தேதி வெளியிடப்பட்ட செயல்பாட்டு வழிகாட்டுதல்களின்படி அனைத்தும் செய்யப்படும். தடுப்பூசி அளிக்க தேர்ந்தெடுக்கப்படும் 25 பேரை பொறுப்பதிகாரி அடையாளம் காண வேண்டும். கோ-வின் செயலியில் இந்த த்தகவல்கள் அனைத்தையும் பதிவேற்றும்படி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கேட்டுக்கொள்ளப்படும். இவை அனைத்தும் ஒரு ஒத்திகை நடவடிக்கை போல இருக்கும். உண்மையான தடுப்பூசி யாருக்கும் வழங்கப்படாது.

இந்தியாவில் இதுவரை எந்த தடுப்பூசிக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. ஒத்திகையின் நோக்கம் யாருக்கும் தடுப்பூசி கொடுப்பதில்லை. தடுப்பூசி வரும்போது, இந்த செயல்முறை சரியாக வேலை செய்யுமா இல்லையா, என்ன மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்பதை புரிந்துகொள்வதே இதன் நோக்கம்.

நாடு முழுவதும் சுமார் 96,000 தடுப்பூசி வழங்குநர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்று அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"தடுப்பூசி வழங்க நாங்கள் தயாராக உள்ளோம் என்று நாட்டின் மிகப்பெரிய அலுவலகத்தில் இருந்து கூறப்படும்போது அது தன்னம்பிக்கையைத் தருகிறது. அனைத்து சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளும் தங்களால் முடியும் என்று ஆர்வமாக இருப்பதாக நான் கருதுகிறேன்," என்று சி.எஸ்.ஐ.ஆர் தலைமை இயக்குநர் டாக்டர் சேகர் மாடே கூறியுள்ளார்.

நான்கு மாநிலங்களில் முன்னதாக நடைபெற்ற ஒத்திகை

கொரோனா

பட மூலாதாரம், Getty Images

நாட்டின் நான்கு மாநிலங்களில் அதாவது அசாம், ஆந்திரா, குஜராத் மற்றும் பஞ்சாபில் , கோவிட் -19 தடுப்பூசி வழங்கல் ஒத்திகை டிசம்பர் 28 ஆம் தேதி திங்கட்கிழமை தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெற்றது.

ஆந்திராவில் கிருஷ்ணா மாவட்டம்; குஜராத்தில், ராஜ்கோட் மற்றும் காந்திநகர்; பஞ்சாபில் லுதியானா மற்றும் ஷாஹீத் பகத் சிங் நகர் (நவான்ஷஹர்) மற்றும் அசாமில் சோனித்பூர் மற்றும் நல்பாரி ஆகிய இடங்களில் இது நடத்தப்பட்டது.

இந்த ஒத்திகை வெற்றிகரமாக இருந்தது என்றும் மாநிலங்கள் வழங்கிய சில ஆலோசனைகள் இதில் சேர்க்கப்படும் என்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது..

டிரை ரன் என்றால் என்ன?

இது ஒரு ஒத்திகை போன்றது. கோவிட் -19 தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் அதை எவ்வாறு மக்களுக்கு போடவேண்டும்? இதற்கான ஏற்பாடுகள் என்ன? இந்த விஷயங்கள் அனைத்தும் சோதிக்கப்படுகிறது.

இதன் மூலம் தடுப்பூசி வழங்கலின் போது என்னென்ன தடைகள் ஏற்படுகிறது, அவை எவ்வாறு அகற்றப்பட வேண்டும் என்பதையும் நாம் அறியலாம். இது mock drill என்றும் அழைக்கப்படுகிறது.

இதன் பிறகு இந்த தடுப்பூசி 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், ஏற்கனவே பிற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.

மாநிலங்களில் இதன் தரவுத்தளங்கள் உருவாக்கப்படுகின்றன. மக்கள் பதிவு செய்யப்படுவார்கள். பின்னர் தடுப்பூசி வழங்கலின் தேதி, நேரம் மற்றும் மையம் குறித்து அவர்களுக்கு தெரிவிக்க ஒரு செய்தி அனுப்பப்படும்.

போக்குவரத்தை பொருத்தவரை இந்தத்தடுப்பூசிகள் முதலில் மாநிலத்திற்கும் பின்னர் பிராந்தியங்கள் மற்றும் மாவட்ட தலைமையகங்களுக்கும் அதன் பின்னர் சுகாதார மையங்களுக்கும் கொண்டு செல்லப்பட வேண்டும்.

கோ-வின் என்ற ஐ.டி தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தின் மூலம், தடுப்பூசி வழங்கலின் முழு வேலையும் செயல்படுத்தப்படும்.

தடுப்பூசியின் இந்த ஒத்திகையில் உண்மையான தடுப்பூசி பயன்படுத்தப்படாது. தடுப்பூசி தவிர பிற செயல்முறை அனைத்தும் உண்மையான அடிப்படையில் சோதிக்கப்படும்.

மக்கள் பதிவு எவ்வாறு நடைபெறும்?

கொரோனா

பட மூலாதாரம், Getty Images

கொரோனா தடுப்பூசி கொடுக்கப்பட வேண்டியவர்களின் பதிவு, முதலில் "கோ-வின்" தளத்தில் செய்யப்படும்.

கோ-வின் என்பது வலைதளம் மற்றும் செயலி ஆகிய இரு வடிவங்களில் இருக்கும். தடுப்பூசியை முதலில் பெற வேண்டிய மக்களின் தரவு ஒவ்வொரு மாநிலத்திலும் ஏறக்குறைய தயாராக உள்ளது. பதிவின் போது செல்பேசி எண் மற்றும் புகைப்பட அடையாள அட்டை தேவைப்படும். இதற்கு பல விருப்பத்தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன.

இந்த ஒத்திகையின்போது, கோ-வின் செயலியில் பயனாளிகள் பதிவு செய்யப்படுவார்கள். இந்த செயலியில் பதிவு செய்யும் நடவடிக்கையின் போது பிரச்னைகள் ஏற்படாமல் இருக்கும் வழிமுறைகள் ஆராயப்படுகின்றன.

தடுப்பூசி போட்ட பிறகு, இந்த செயலி மூலம் சான்றிதழும் கிடைக்கும். இது தவிர இந்த ஒத்திகையில் தடுப்பூசி எங்கு போடப்படும், அந்த மையங்கள் எவ்வாறு அடையாளம் காணப்படும் என்பதும் ஆராயப்படுகிறது.

இந்த பயிற்சியின் மூலம், தடுப்பூசி வழங்கலின் முழு செயல்முறையும் பரிசோதிக்கப்பட்டு ஆராயப்படும்.

மையம் எப்படி இருக்கும்?

தடுப்பூசி போடப்படும் மையங்கள், மூன்று அறைகள் கொண்டதாக இருக்கும். அதில் முதலாவது அறை, காத்திருப்பு அறையாக இருக்கும். அங்கு அடையாள சரிபார்ப்பு பணி நடைபெறும்.

இரண்டாவது அறை, தடுப்பூசி போடப்படும் பகுதியாக செயல்படும். மூன்றாவது அறை தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு அதன் பயனர் சிறிது நேரம் தங்குவதற்கானதாக இருக்கும். அங்கு அவரது உடலில் ஏற்படும் மாற்றங்கள் கண்காணிக்கப்படும். ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ உதவி வழங்க ஏதுவாக இந்த வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசி பணிகளுக்காக ஒவ்வொரு மையத்திலும் ஐந்து பேர் இருப்பார்கள்.

இதற்கு முன்பு இப்படி நடந்துள்ளதா?

கொரோனா தடுப்பூசிக்கான தற்போதைய ஒத்திகையை ஆயத்த மதிப்பீடு என மருத்துவர்கள் அழைக்கிறார்கள்.

இரண்டு-மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் ஒரு தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசி இயக்கம் நடந்தது. அப்போது 9 மாதங்கள் முதல் 10 வயது வரை குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அவர்களின் எண்ணிக்கை, இந்திய மொத்த மக்கள்தொகையில் 25 சதவீதமாகும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :