தமிழ்நாட்டில் ஜனவரி 2ல் 4 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை

புதிய கொரோனா திரிபு

பட மூலாதாரம், Getty Images

தமிழகத்தில் 2021 புத்தாண்டு ஜனவரி 2ஆம் தேதி நான்கு மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறும் என மாநில சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி வரும் பட்சத்தில், அதை பயன்படுத்தும் வழிமுறைகள் இந்த ஒத்திகை நாளில் பின்பற்றப்படும். சென்னை நகரில் எழும்பூர் பகுதியில் இந்த ஒத்திகை நடைபெறும் என்று அவர் கூறினார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் மேலும் பேசிய அவர், பிரிட்டனில் உருவாகி உலகை பதற்றத்தில் ஆழ்த்தியுள்ள கொரோனா வைரசின் புதிய திரிபு தமிழ்நாட்டுக்கு வந்த ஒருவருக்கு இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். அதன் பண்புகள் எப்படி இருக்கும் என்பது தொடர்பாக ஆராய்ச்சி செய்யப்பட்டுவருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சமீபத்தில் பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பியவர்களில் 25 பேருக்கு கொரோனா வைரஸின் புதிய திரிபு தொற்றியுள்ளது உறுதி செய்யப்பட்டது என்றும் அவர்களில் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்றும் ராதாகிருஷ்ணன் கூறினார்.

மேலும் அவர், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, பொது மக்கள் கவனத்துடன் இருக்கவேண்டும், அதிக அளவில் ஒன்றுகூடி உணவு அருந்துவதை தவிர்க்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

''கொரோனா வைரஸ் புதிய திரிபு தொற்றியிருப்பது தமிழ்நாட்டில் ஒருவருக்குதான். அவருக்கு சிறப்பு சிகிச்சை அளித்துவருகிறோம். இந்த திரிபு வைரஸின் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை தற்போதுவரை உறுதியாக சொல்லமுடியவில்லை. முதலில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையைப் பின்பற்றினால் போதும் என மருத்துவ வல்லுநர்கள் மற்றும் நுண்மி ஆய்வாளர்கள் சொன்னார்கள்.

ஜெ.ராதாகிருஷ்ணன்

பட மூலாதாரம், facebook

படக்குறிப்பு, ஜெ.ராதாகிருஷ்ணன்

தற்போது மேலும் ஆய்வு நடந்துவருவதால், உடனடியாக என்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என சொல்லமுடியவில்லை. பொது மக்கள் முகக்கவசம் அணிந்துகொள்வது, கை கழுவுவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து பின்பற்றவேண்டும்,'' என்றார் ராதாகிருஷ்ணன்.

அதிகாரபூர்வமாக தடுப்பூசி அளிக்கப்படும்போது, முதலில் மருத்துவர்கள், சுகாதார துறையைச் சேர்ந்த ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவர்கள், அதன் பின்னர் 50 வயதுக்கு உட்பட்ட கூட்டு நோய் உள்ளவர்கள் என மத்திய அரசு வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றப்படும். அதற்கான ஒத்திகை ஜனவரியில் தமிழகத்தில் நடைபெறும் என்றார் அவர்.

பிரிட்டனில் இருந்து திரும்பிய 42 நபர்களின் மாதிரிகள் சோதனை கூடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன என்றும் பெங்களூரூவில் உள்ள இரண்டு தேசிய சோதனை மையங்களில் சோதனை செய்வதற்கான அனுமதியை மத்திய அரசிடம் கோரியுள்ளதாகவும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

"பிரிட்டனில் இருந்து கடந்த ஒரு மாதத்தில் 2080 பேர் தமிழகம் வந்துள்ளனர். 1,593 நபர்களை கண்டறிந்து, அவர்களுக்கு சோதனை செய்துள்ளோம். அவர்களில் 54 நபர்கள் லண்டன் திரும்பிவிட்டார்கள் என தெரிவிக்கிறார்கள். ஆனால் 487 கண்டறிவதில் சிரமம் உள்ளது. அவர்கள் பலரும் முகவரியை முழுமையாக கொடுக்கவில்லை என்பதால் கண்டறிவதில் சிக்கல் உள்ளது. சென்னை மற்றும் செங்கல்பட்டு தவிர பிற மாவட்டங்களில் அவர்கள் இல்லை என்பதை உறுதி செய்துள்ளோம். இந்த இரண்டு மாவட்டங்களில் காவல் துறை, உள்ளாட்சித்துறை மற்றும் சுகாதாரத்துறை பணியாளர்கள் அவர்களை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதற்காக தனி அமைப்பு ஒன்றை ஏற்படுத்தியுள்ளோம்," என்று அவர் கூறினார்.

சென்னையில் ஒரு சில ஹோட்டல்களில் சேர்ந்து சாப்பிட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து பேசிய அவர், ''ஒரு நட்சத்திர ஹோட்டலில் செஃப் ஒருவருக்கு கொரோனா இருந்தது. அவர் சமைத்த உணவை சாப்பிட்டவர்களுக்கு நோய் பரவியது. அதேபோல, பிரபல கல்லூரி ஒன்றில் பல மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை கருத்தில் கொண்டு, பொது மக்கள் கூட்டமாக கூடி சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும்,'' என்றார் அவர்.

மேலும், சென்னை ஓமந்தூரார் கொரோனா சிறப்பு மருத்துவமனையில், பெரிய அளவிலான முகக்கவசம் ஒன்றை வடிவமைத்துள்ளதாகவும், விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அந்த நிகழ்வு புத்தாண்டு பிறப்பின்போது திறந்துவைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

''பொது மக்கள் பாதுகாப்பாக புத்தாண்டை வரவேற்கலாம். கூட்டம் கூடுவதை தவிர்க்கவேண்டும். காவல்துறையினர் பல இடங்களிலும், கடற்கரை பகுதிகளிலும் சோதனை இடுகிறார்கள். மக்கள் தாங்களாக முன்வந்து பாதுகாப்போடு இருக்கவேண்டும். அரசு அறிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்றவேண்டும்,'' என்றார் அவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :