தமிழக தேர்தல் 2021: காங்கிரஸ் பலத்தை மிகை மதிப்பீடு செய்கிறாரா ராகுல் காந்தி? - தமிழ்நாடு அரசியல்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பரணி தரன்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கு இப்போதே பாரதிய ஜனதா கட்சியும் திமுகவும் தேர்தல் பிரசார வியூகங்களை வகுக்கத் தொடங்கிய வேளையில், முதல் கட்டமாக தேர்தல் வியூக ஆரம்பநிலை கூட்டத்தை காணொளி வாயிலாக திங்கட்கிழமை நடத்தியிருக்கிறார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.
காங்கிரஸ் கட்சியில் நிரந்தர தலைவர் இல்லாததால், அதன் தற்காலிக தலைவர் பதவியில் சோனியா காந்தி தொடர்கிறார். இந்த நிலையில், அடுத்த தலைவரை கட்சியின் பொதுக்குழு தீர்மானிக்காத நிலையில், தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலையொட்டி ஆரம்பநிலை கூட்டத்தை ராகுல் காந்தி நடத்தியிருப்பது முக்கிய அரசியல் கட்சிகளின் கவனத்தையும் ஈர்த்திருக்கின்றன.
சில வாரங்களுக்கு முன்பு சென்னைக்கு வந்திருந்த காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குண்டுராவ், வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியிலேயே தொடரும். தேர்தலில் போட்டியிடும் இடங்களை கூடுதலாக கேட்டு நிர்பந்திக்க மாட்டோம் என்று பேசினார். இந்த தகவலை செய்தியாளர்களிடமும் அவர் பகிர்ந்து கொண்டார்.
அவரது கருத்து மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியில் உள்ள தலைவர்களுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியிருந்தாலும் அதுவே கள யதார்த்தம் என்றும் அரசியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
சமீபத்தில் நடந்து முடிந்த பிகார் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்கள் வழங்கப்பட்டபோதும், அந்த கட்சியால் பெரிய அளவில் வெற்றியைப் பெறமுடியவில்லை.
காங்கிரஸ் அங்கம் வகித்த கூட்டணிக்கு தலைமை தாங்கிய ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தேஜஸ்வி தோல்வியைத் தழுவினார். ஆனாலும், அவரது கட்சி தனிப்பெரும்பான்மை எதிர் கட்சியாக அம்மாநில சட்டமன்றத்தில் வலுவான நிலையில் இருக்கிறது.
இந்த நிலையில்தான் கள அடிப்படையில் சட்டமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடன் பேசப்படும் என்ற குண்டுராவ், தொகுதிகள் குறித்து நேர்மையாகவும் வெளிப்படையாகவும் பேச்சு நடத்தப்படும். கடும் போட்டி நிலவும் 100 தொகுதிகளில் திமுகவுக்கு காங்கிரஸ் உதவிகரமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
இந்தப்பின்னணியிலேயே ராகுல் காந்தி அழைப்பு விடுத்த காணொளி கூட்டத்தில், கட்சிக்குள் நிலவும் கசப்புணர்வு, வேறுபாடுகளைக் கலந்து மூத்த தலைவர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.

பட மூலாதாரம், Getty Images
முரண்களை மறந்து சங்கமித்த தலைவர்கள்
அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள் கே.சி. வேணுகோபால், முகுல் வாஸ்னிக், தமிழகத்துக்கான மேலிட பொறுப்பாளர் குண்டுராவ், முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், மாநில தலைவர் கே.எஸ். அழகிரி, தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர். ராமசாமி, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் ஏ. செல்லக்குமார், மாணிக்கம் தாகூர், முன்னாள் தலைவர்கள் கே.வி. தங்கபாலு, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், சு. திருநாவுக்கரசர், எம்.கிருஷ்ணசாமி, சுதர்சன நாச்சியப்பின், ஜோதிமணி, சி.டி. மெய்யப்பன், செயல் தலைவர்கள் கே. ஜெயக்குமார், எம்.கே. விஷ்ணு பிரசாத், மயூரா ஜெயக்குமார், மோகன் குமாரமங்கலம் உள்ளிட்டோர் காணொளி கூட்டத்தில் பங்கேற்றனர்.
இத்தனை தலைவர்களும் ஒரே இடத்தில் ஒரே நோக்கத்துக்காக சங்கமித்திருந்தது கடந்த சில ஆண்டுகளில் நடந்திராத அசாதாரண நிகழ்வாகவே கருதப்படுகிறது.
சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில், மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசின் செயல்பாடு, தமிழ்நாட்டில் தமிழ் மொழியின் தனித்துவத்துக்கு எதிரான அக்கட்சியின் செயல்பாடு, நீட் தேர்வு திணிபபு, விவசாயிகள் சட்டங்களால் ஏற்படும் பாதிப்புகள் போன்றவை குறித்து பரப்புரை மேற்கொள்ளும் உத்திகள் பற்றி விவாதித்ததாக அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி அறிக்கை வாயிலாக கூறியுள்ளார்.
ஆனால், மாநிலத்தில் ஆளும் அதிமுக அரசின் மக்கள் விரோத செயல்பாடுகள் தொடர்பாக விரிவான வகையில் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்களிடம் அறிவுறுத்தப்பட்டதாக அதில் பங்கெடுத்த தலைவர்கள் பலரும் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர்.
கட்டுப்பாடு விதிக்கும் கட்சித் தலைமை
இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பல முக்கிய தேர்தல் விவகாரங்கள் குறித்து ஊடகங்களிடம பேசக்கூடாது என்று காணொளி நிகழ்வில் பங்கேற்றவர்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டிருப்பதாக பிபிசி அறிந்தது.
இருந்தபோதும், பொதுவான தேர்தல் பரப்புரைக்கு அடித்தளமாக ராகுல் காந்தி முன்னெடுத்த இந்த முயற்சி அமைந்ததாக பிபிசி தமிழிடம் பேசிய விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.
"இந்த கூட்டத்தில் நிறைவுரையாற்றிய ராகுல் காந்தி, கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இல்லை என்றாலும் வலிமை மிக்க இயக்கமாக இருக்கிறது. கடுமையாக உழைத்தால் கட்சியை மேலும் வலுப்படுத்தலாம்" என்று அறிவுரை வழங்கியதாக மாநில தலைவர் கே.எஸ். அழகிரி கூறுகிறார்.
தமிழக தேர்தல் களத்தைப் பொறுத்தவரை, 2011ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸுக்கு 63 இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதில் 5 இடங்களில் மட்டுமே அக்கட்சி வென்றது.
2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 41 தொகுதிகள் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், 8 இடங்களில் மட்டுமே அக்கட்சி வென்றது.
இந்த படிப்பினையை எல்லாம் காங்கிரஸ் கட்சி உணர்ந்திருக்குமானால், அது உண்மையிலேயே கள யதார்த்த அடிப்படையில் வரவிருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்கிறார் சென்னையில் உள்ள மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன்.
காங்கிரஸ் கட்சியை தமிழ்நாட்டில் உண்மையிலேயே வலுப்படுத்த ராகுல் காந்தி விரும்பினால், அவர் டெல்லியில் உட்கார்ந்து கொண்டு காணொளி வாயிலாக கட்சிக் கூட்டங்களை நடத்துவதற்கு பதிலாக வரும் ஜனவரி மாதம் முதல் குறைந்தது இரண்டு மாதங்களுககாவது தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்து கள யதார்தத்தை உணர்ந்து தேர்தலுக்கு கட்சியை தயார்படுத்த வேண்டும். ஆனால், அதை செய்வதற்கு அவரும் தயாரில்லை, அதற்கு அந்த கட்சியினரும் தயாராக இல்லை என்பதே களத்தில் உள்ள உண்மை என்றும் குபேந்திரன் சுட்டிக்காட்டுகிறார்.
ஆனால், இந்த வாதத்தை ஏற்க மறுக்கும் மாணிக்கம் தாகூர், தமிழ்நாட்டில் மதத்தின் பெயரால், மத மொழி உணர்வுகளை சிறுமைப்படுத்தி குறுக்கு வழியில் மக்களைக் கவர பாஜக முயலும் வேளையில், மக்களின் மத உணர்வுகளையும் மொழி உணர்வுகளையும் மதிக்கக் கூடிய கட்சியாக காங்கிரஸ் உள்ளது. அந்த உணர்வுகளுக்கும் அவற்றை போற்றும திமுக போன்ற திராவிட கட்சிகளுக்கும் மக்களுக்குமான இணைப்புப் பாலமாக காங்கிரஸ் உள்ளது என்று கூறுகிறார்.
திமுகவினரின் மனக்குமுறல்கள்
"தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு வங்கி குறைவாக இருக்கலாம். அதிக இடங்களில் வெற்றி பெறாமல் இருக்கலாம். ஆனால், காங்கிரஸ் கட்சி இடம்பெற்ற அணியே அதிக இடங்களில் வென்றிருக்கிறது என்பதற்கு கடந்த கால உதாரணங்கள் உள்ளன," என்றும் மாணிக்கம் தாகூர் தெரிவிக்கிறார்.
2016ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 41 இடங்களில் 8இல் காங்கிரஸ் வென்றது. அதில் 20 இடங்கள் திமுகவிடம் இருந்திருந்தால் கூட தங்களுடைய அணி வென்று ஆட்சியை பிடித்திருக்கும் என்று இப்போதும் சில திமுக தலைவர்கள் கூறி வருகிறார்கள்.
ஆனால், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட 9 தொகுதிகளில் 8 இடங்களில் காங்கிரஸ் வென்றது. தேனி தொகுதியில், அந்த பகுதிக்கு அறிமுகமே இல்லாத ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை களமிறக்கியது காங்கிரஸ் தலைமை.
அந்த தொகுதியில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி..எஸ். ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். கட்சியின் வேட்பாளர் தேர்வில் சரியான வியூகத்தை வகுக்காததே இந்த முடிவின் பிரதிபலிப்பு என்று இதையும் திமுகவினர் சுட்டிக்காட்டுகிறார்கள்.
இதேவேளை, இந்த தேர்தல் வெற்றியை தனக்கான செல்வாக்கின் அடையாளமாக காங்கிரஸ் கட்சி கருதுமேயானால் அது அந்தக் கட்சி தன்னைப் பற்றி இல்லாத ஒரு உயர்வு நிலையை கற்பனை செய்து வருவதாகவே கருத முடியும் என்கிறார் பத்திரிகையாளர் குபேந்திரன்.

பட மூலாதாரம், Getty Images
பாஜக கனவு பலிக்காத தமிழகம்
காரணம், "2019ஆம் ஆண்டு தேர்தலில் இந்திய அளவில் பாஜக கூட்டணி கணிசமான இடங்களை கைப்பற்றியிருந்தாலும், அதன் பிரசாரம் செல்லுபடியாகாத ஒரே மாநிலமாக தமிழ்நாடே இருந்தது" என்கிறார் அவர்.
"அந்த தேர்தலில் மத்தியில் ஆளும் பிரதமர் மோதிக்கு எதிரான அலையும், மாநிலத்தில் ஆளும் அதிமுக அரசு மீதான கோப உணர்வுடன் சேர்ந்து திமுகவுக்கு சாதகமாக விழுந்த வாக்குகள், அதன கூட்டணியில் இருந்த காங்கிரஸுக்கு விழுந்தன என்பதே யதார்த்தம். இதை காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.பி ஆனவர்கள் கண்டிப்பாக அறிவார்கள்" என்றும் குபேந்திரன் குறிப்பிடுகிறார்.
இத்தகைய சூழலில் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கைக்கு முன்னுரிமை கொடுக்காமல் வெற்றி பெறும் இடங்களை மட்டுமே தேர்வு செய்து அதில் மட்டுமே வேட்பாளர்களைக் களமிறக்கி கடுமையாக போராடினால் மட்டுமே ராகுல் காந்தியின் எதிர்பார்ப்பை அக்கட்சியினரால் நிறைவேற்ற முடியும் என்கிறார் குபேந்திரன்.
கட்சித் தலைமை பீடத்தில் இருப்பவர்கள் கீழறங்கி மக்களையும் கட்சித் தொண்டர்களையும் சந்தித்து உற்சாகப்படுத்த வேண்டும். ஆனால் அத்தகைய வழக்கத்தை காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அரசியலை கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக கவனித்து வரும் பத்திரிகையாளர் என்ற வகையில் என்னால் காண முடியவில்லை என்கிறார் அவர்.

பட மூலாதாரம், Getty Images
பாஜக மேலிட வியூகம்
வட மாநிலங்களில் பலவற்றில் அரசியல் ஆதிக்கம் செலுத்தும் பாஜக அதன் பார்வையை தென் மாநிலங்கள் பக்கம் திருப்பியிருக்கிறது.
சமீபத்தில் மேயர் தேர்தலை எதிர்கொள்ளும் ஹைதராபாத் நகரில, அதிக வார்டுகளை கைப்பற்றும் நோக்குடன் வேட்பாளர்களை ஆதரித்து ஒரு நாட்டின் உள்துறை அமைச்சராக இருப்பவர், உத்தர பிரதேசத்தின் முதல்வராக இருப்பவர் நேரடியாக வந்து பிரசாரம் செய்திருக்கிறார்கள்.
ஒரு மேயர் பதவிகைக் கைப்பற்றவே அக்கட்சியினர் தீயாய் வேலை செய்யும்போது கையில் கிடைக்கும் எல்லாவித வாய்ப்பையும் பயன்படுத்தி எப்படியாவது அடிமட்டத்தில் இருந்து இடங்களைக்கைப்பற்ற வேண்டும் என்பதில் பாஜகவினர் உறுதி காட்டி வருகிறார்கள்.
இத்தகைய ஒரு மனப்பான்மை காங்கிரஸ் கட்சியில் இருக்கிறதா? என்று கேள்வி எழுப்புகிறார் பத்திரிகையாளர் குபேந்திரன். எனவே, தங்களைப் பற்றி அதிகமாக நினைத்துக் கொள்ளாமல் மாற்றத்தை மாநிலத்தில் மட்டும் எதிர்பார்க்காமல் கட்சியின் மேல் மட்டத்திலும் தலைவர்கள் மட்டத்திலும் கொண்டு வந்தால்தான் காங்கிரஸ் கட்சி சாதகமான முடிவுகளை எதிர்பார்க்கலாம். இல்லையென்றால் தோல்வி என்பது அக்கட்சியினருக்கு தமிழகத்தில் தவிர்க்க முடியாத ஒன்றாகி விடும் என்றும் அவர் எச்சரிக்கிறார்.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












