தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி: ‘நீட் தவறு என்றால் அதனை ஏன் பாஜக அரசு நீக்கவில்லை?’ #BBCExclusive

கே.எஸ்.அழகிரி

பட மூலாதாரம், K.S.Alagiri/Facebook

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் கூட்டணி, காங்கிரஸ் கட்சி கொண்டுவந்த திட்டங்களையே பா.ஜ.க. தொடர்கிறது என்ற விமர்சனம், தமிழ்நாட்டில் பா.ஜ.கவின் எழுச்சி, நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களையே காங்கிரஸ் கட்சி தலைமைக்கு தேர்வுசெய்வது ஆகியவை குறித்து பிபிசியின் செய்தியாளர் முரளிதரனிடம் பேசினார், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ். அழிகிரி. பேட்டியிலிருந்து:

கே. தற்போது மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் விவசாயச் சட்டங்களைக் காங்கிரஸ் கட்சி எதிர்ப்பது ஏன்?

ப. காங்கிரஸ் கட்சி மட்டுமல்ல. விவசாயிகள் எல்லோரும் எதிர்க்கிறார்கள். இதற்குக் காரணம் அரசியல் அல்ல. பா.ஜ.கவின் கூட்டணிக் கட்சியான ஷிரோண்மனி அகாலிதளத்தின் அமைச்சரே இந்த விவகாரத்தில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். நம் நாட்டில் இரண்டு ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் நிறையப் பேர் இருக்கிறார்கள். அவர்களால் ஒப்பந்த அடிப்படையில் விவசாயம் செய்ய முடியாது. அவர்கள் தங்கள் பொருளை விற்பனை செய்ய மிகப் பெரிய சந்தை தேவை. குறிப்பிட்டவர்களிடம்தான் பொருளை விற்க வேண்டிய நிலை வந்தால் அவர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். ஆகவே அரசின் கொள்முதல் நிலையங்கள் மிக முக்கியம். இதிலெல்லாம் மாற்றம் வராது என்கிறார் பிரதமர். மாற்றம் வராது என்றால் இந்த சட்டமே தேவையில்லையே.

தொலைத்தொடர்புத் துறையில் வெற்றிகரமாகச் செயல்பட்ட பிஎஸ்என்எல்லிற்கு 4 ஜி உரிமம் வழங்காமல் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. அதற்குப் பிறகு, அதிலும் வேண்டப்பட்ட ஒரு நிறுவனத்திற்கு சலுகைகள் வழங்கப்படுகின்றன. 130 கோடி மக்கள் உள்ள ஒரு நாட்டில், ஒரே ஒரு நிறுவனம் முடிவில் ஆதிக்கம் செலுத்தப்போகிறது. இதுதான் விவசாயத்திலும் நடக்கும். ஆகவேதான் எதிர்க்கிறோம்.

விவசாயிகள்

பட மூலாதாரம், Getty Images

கே. 1991ல் வந்த தாராளமயமாக்கத்தின் தொடர்ச்சிதானே இந்தச் சட்டம்? காங்கிரஸ்தானே அதைச் செய்தது? இப்போது ஏன் இதை எதிர்க்கிறீர்கள்?

ப. இதைப் போன்ற கேள்விகள் சரியானவையல்ல. தாராளமயமாக்கம் என்ற தத்துவம் உலகம் முழுவதும் இருக்கிறது. ஆனால், ஒவ்வொரு நாட்டிலும் அதற்கு ஒரு முகம் உண்டு. நமக்கு பல ஆண்டுகளுக்கு முன்பாகவே பொதுவுடமை ஆட்சியில் இருக்கிற சீனாவில், தாராளமயமாக்கல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால், அதற்கு அங்கே வேறு முகம். இந்தியாவில் வேறு முகம். இங்கு நடந்த தாராளமயமாக்கத்தால் வேலைவாய்ப்புகள் ஓரளவுக்குக் கிடைத்தன. அதை யாரும் மறுக்க முடியாது. ஆனால், செல்வம் ஒரு சிலரிடம்தான் சேர்ந்தது. இந்தியாவில் சுதந்திரத்திற்குப் பிந்தைய 60 ஆண்டுகளில் உலகப் பணக்காரர்கள் யாரும் உருவாகவில்லை. ஆனால், தாராளமயமாக்கத்திற்குப் பிறகு, உலகின் சிறந்த பணக்காரர்கள் இந்தியாவில் வந்துவிட்டார்கள். இதனால், மத்திய தர வர்க்கத்திற்கும் முதலாளிகளுக்கும் இடையிலான இடைவெளி பெரிதாகிவிட்டது. அதனால் தாராளமயமாக்கம் இந்தியாவில் சில பின்னடைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது என சில நிபுணர்கள் கருதுகிறார்கள். அதைத் தவறு எனச் சொல்ல முடியாது.

காங்கிரஸ் தாராளமயமாக்கலைக் கொண்டுவந்தபோது சில கட்டுப்பாடுகளை வைத்திருந்தார்கள். உணவுப் பொருட்கள் திறந்தவிடப்படவில்லை. தொலைத்தொடர்பை முழுமையாக தனியாருக்கு தாரைவார்க்கவில்லை. ஆனால், இந்த அரசில் இரண்டையுமே செய்துவிட்டார்கள். இரண்டுமே சாமானிய மக்களுக்கானவை.

கே. இதுபோலத்தான் நீட் தேர்வும். காங்கிரஸ் ஆட்சியில்தான் அந்தத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது அந்த விவகாரம் பெரிதாகி, அதனை எதிர்கிறீர்கள்...

ப. சரி, நாங்கள்தான் அறிமுகப்படுத்தினோம். தவறு என்றால் அதனை நீக்கிவிட வேண்டியதுதானே? நாங்கள் சொல்லும் எதையுமே பா.ஜ.க. அரசு ஏற்பதில்லை. இதை மட்டும் ஏற்றுக்கொண்டது ஏன்? இரண்டாவதாக இந்த விஷயத்தில் காங்கிரஸ் கட்சி தெளிவாக இருந்தது. நீட் தேர்வைப் பொறுத்தவரை, ஒரு மாநில அரசு விரும்பவில்லையென்றால் அதை நடத்த வேண்டியதில்லையென நாங்கள் நாடாளுமன்றத்திலேயே சொல்லியிருக்கிறோம். ராகுல் காந்தி தமிழ்நாடு வந்தபோது, செய்தியாளர் கூட்டங்களில் அதைத் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

பல மாநிலங்களில் அதை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். தமிழகத்திற்கு அது பொருத்தமாக வரவில்லை. பாடத்திட்டம் சமமாக இல்லாதபோது, தேர்வை ஒரே மாதிரி நடத்தக்கூடாது. அதுதான் பிரச்சனை.

மாணவி

பட மூலாதாரம், Getty Images

கே. அப்படியனால் நுழைவுத் தேர்வு என்பதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?

ப. நுழைவுத் தேர்வு நம்முடைய மாணவர்களுக்கு பொருத்தமாக இருக்க வேண்டும். எந்தச் சட்டமும் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் விலக்கிக்கொள்ள வேண்டும்.

கே. இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியில், ஆறு மாதத்திற்கு ஒரு முறை தலைவரைத் தேர்வுசெய்வது தொடர்பாக பிரச்சனை ஏற்படுகிறது. கூட்டங்களை நடத்துகிறார்கள். ஒரு தலைவரைத் தேர்வுசெய்வதே கட்சிக்குப் பிரச்சனையாக இருக்கிறதா?

ப. அது பிரச்சனையே அல்ல. இது எங்களுக்கு எதிரான அரசியல் கட்சிகள் சொல்லிவருகிற பிரச்சாரம். சோனியா காந்தியை ஒரு தற்காலிகத் தலைவர் எனச் சொல்லக்கூடாது. அவர் எப்படி தற்காலிகத் தலைவராக இருக்க முடியும்? அன்றைக்கு அறிவிக்கும்போது அடுத்த தலைவர் வரும்வரை அவர் இருப்பார் எனச் சொல்லப்பட்டது. அவருடைய உடல்நலத்தை மனதில்வைத்து இது சொல்லப்பட்டது. காங்கிரசில் உள்ள 100 சதவீதத் தொண்டர்கள், சோனியா காந்தியையும் ராகுல் காந்தியையும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

கட்சி ஊழியர்கள் யாரை ஏற்கிறார்களோ அவர்கள்தான் இருக்க முடியும். இன்னொருவர் வரவேண்டாம் என யாரும் சொல்லவில்லை. அதற்கான சூழல் இப்போது இல்லை.

சோனியா மற்றும் ராகுல்

பட மூலாதாரம், Getty Images

கே.காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் வர முடியுமா? ப. சிதம்பரத்தைப் போன்ற தலைவர்கள் இருக்கிறார்கள்..

ப. யார் வேண்டுமானாலும் வரலாம். பருவா, காமராஜர், நிஜலிங்கப்பா போன்றவர்கள் தலைவர்களாக இல்லையா? நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களைவிட, பிறர்தான் அதிக காலம் அக்கட்சியின் தலைவர்களாக இருந்திருக்கிறார்கள். தவிர, ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என அவர்களைச் சொல்வதே கொச்சைப்படுத்துவதாக இருக்கிறது. அந்தக் குடும்பத்தில் இருவர் கொலைசெய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் நாட்டிற்கும் கட்சிக்கும் ஊன்று கோலாக இருந்ததால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். வேறு யாராவது அப்படி தியாகம் செய்திருக்கிறார்களா? அப்படிப்பட்டவர்களுக்கு ஒரு வாய்ப்பு வந்தால் ஏன் அவர்களுக்குக் கூடாது என்று சொல்ல வேண்டும்? பத்தாண்டு காலம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சி இருந்தது. சோனியா காந்தி நினைத்திருந்தால் அவர் பிரதமராகியிருக்கலாம். அவரை பிரதமராக்க வேண்டுமென்று யாரும் கேட்கவில்லையே, ஏன்? சோனியா காந்திதான் பிரதமராக வரவேண்டுமென கருணாநிதி, லாலு பிரசாத் யாதவ் சொன்னார். கட்சி அவருக்கு ஆதரவளித்தது. இருந்தபோதும் அவர் பிரதமர் பதவியை மன்மோகன் சிங்கிற்குத்தானே கொடுத்தார். இதையெல்லாம் பார்க்க வேண்டும்.

கே. தற்போதைய அரசை பல பிரச்சனைகளில் காங்கிரஸ் கட்சி எதிர்க்கிறது. பல மாநிலக் கட்சிகளும் எதிர்க்கின்றன. ஆனால், இந்த எதிர்ப்புகளை ஒருமுனைப்படுத்தக்கூடிய அளவுக்கு காங்கிரஸ் பலமாக இல்லை..

ப. அப்படிச் சொல்ல முடியாது. காங்கிரஸ் கட்சியின் எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் சிறப்பாக செயல்படுகிறார்கள். ராகுல்காந்தி முக்கியப் பிரச்சனைகளைத் தொடர்ந்து சுட்டிக்காட்டிவருகிறார். இந்த கொரோனா தொற்று இருக்கிற காரணத்தால், தலைவர்களால் மக்களைச் சந்திக்க முடியவில்லை. அது எல்லோருக்கும் இருக்கிற குறை. எதிர்க்கட்சி என்பது கலவரம் செய்வதல்ல. கருத்து ரீதியான யுத்தம் நடத்த வேண்டும். இன்று விவசாயிகளின் பிரச்சனையைக் கையில் எடுத்திருக்கிறோம். தொடர்ந்து அக்டோபர் 14வரை அந்தப் போராட்டங்களை வைத்திருக்கிறோம். இதையெல்லாம் மறுக்க முடியாது. ஆட்சிக்கு எதிர்ப்பு என்பது சிறுகசிறுகத்தான் வலுப்பெறும்.

கே. இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் மாநிலத்தில் நடக்கவிருக்கிறது. இதே கூட்டணி தொடருமா? எந்தப் பிரச்சனையை முன்வைத்து தேர்தலைச் சந்திப்பீர்கள்?

ப. இந்தக் கூட்டணி தொடரும் அதில் யாருக்கும் எந்த சந்தேகமும் தேவையில்லை. மதசார்பின்மை, அ.தி.மு.க. அரசின் ஊழல், மாநில உரிமைகளை அவர்கள் விட்டுக்கொடுப்பது, பொருளாதார தோல்வி, சிறு,குறு தொழில்கள் பாதிக்கப்பட்டிருப்பது, விவசாய கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு கடன் அளிப்பதில்லை. இந்தப் பிரச்சனைகளை தேர்தல் களத்தில் முன்வைப்போம். மக்கள் மன்றத்தில் அவர்களுக்கு கடும் எதிர்ப்பு இருக்கிறது. எங்களுக்கு நிச்சயம் வெற்றிகிடைக்கும்.

கே. கடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தி.மு.க. கூட்டணியில் கூடுதல் இடங்களைக் கேட்டுப் பெற்றிருந்தாலும், மிகக் குறைந்த இடங்களையே வெல்ல முடிந்தது. ஆகவே இந்த முறை காங்கிரஸ் கட்சி அதிக இடங்களைக் கோர முடியாத அழுத்தம் இருக்கிறதா?

ப. இதெல்லாம் யூகங்களின் அடிப்படையிலான கேள்வி. நாடாளுமன்றத்தில் 9 இடங்களைக் கேட்டுப் பெற்று 8 இடங்களில் வெற்றிபெற்றுள்ளோம். சட்டமன்றத் தேர்தலிலும் பெரும்பாலான இடங்களில் வெற்றிபெறுவோம்.

கே. நீங்கள் மாநிலத் தலைவராக வந்த பிறகு, பலரையும் ஒருங்கிணைத்துச் செல்ல முயல்கிறீர்கள். ஆனாலும் கட்சிக்குள் பல அணிகள் செயல்படுவதாக செய்திகள் வருகின்றன..

ப. அணிகள் என்று ஏதும் கிடையாது. பல பிரபலமான தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் முகம் பிரகாசமாகத் தெரியத்தான் செய்யும். காங்கிரஸ் ஒரு கூட்டுத் தலைமை உடைய அரசியல் இயக்கம். பல தலைவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். ஆனால், எவ்வித மோதல்களும் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இல்லை.

கே. சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, நீங்கள் இடம்பெற்ற கூட்டணி வெற்றிபெற்றால், அது கூட்டணி அரசாக அமையுமா?

ப. கொள்கைகளை எல்லாம் கட்சித் தலைமை முடிவுசெய்யும். அனுமானமாக முடிவுசெய்யும். இரண்டு கட்சிக்கும் அனுபவம் வாய்ந்த தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் முடிவுசெய்வார்கள். நாடாளுமன்றத் தேர்தலில்கூட இடங்களை நான்கு மணி நேரத்தில் பிரித்து எடுத்துக்கொண்டோம். அந்த அளவுக்கு உடன்பாடு உள்ள கூட்டணி இது.

கே.எஸ் அழகிரி நேர்காணல்

கே. தமிழ்நாட்டில் தி.மு.க., அ.தி.மு.கவுக்கு எதிராக ஒரு தேசிய முகமாக தங்களை முன்னிறுத்திக்கொள்ள பா.ஜ.க. தீவிரமாகப் பணியாற்றிவருகிறது. அதில் கிட்டத்தட்ட வெற்றிபெற்றுவிட்ட தோற்றமும் கிடைத்திருக்கிறது. தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் இடம் பறிபோகிறதா?

ப. அவர்கள் காகிதப் புலிகள். அதைப்போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்த அவர்கள் முனைகிறார்கள். நானறிந்தவரையில், அப்படி ஒரு தன் முனைப்பு அந்தக் கட்சிக்குள் ஏற்பட்டிருப்பதாகவோ, மக்கள் அந்த இயக்கத்தை ஏற்றுக்கொண்டிருப்பதாகவோ நான் கருதவில்லை. பாரதீய ஜனதா வேரூன்றுவதற்கான வழிவகையே இந்த மாநிலத்தில் கிடையாது. ஏனென்றால் இங்குள்ள அரசியல் தளம் வேறு. அவ்வளவு எளிதாக மக்கள் வேற்றுமையை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இணைந்து வாழ வேண்டும் என்பதைத்தான் மக்கள் விரும்புகிறார்கள். மக்களைப் பிரித்தாளும் தத்துவத்திற்கு மக்கள் ஒருபோதும் செவிசாய்க்க மாட்டார்கள். ஒற்றை நாகரீகம், ஒற்றைக் கலாசாரம், ஒற்றை மொழி என்று சொல்லும் கட்சியை எப்படி தமிழகத்தில் ஏற்பார்கள். அவர்கள் சொல்லும் ஒற்றை மொழி இந்தி. அதைத் தமிழகத்தில் எப்படி ஏற்பார்கள்?

கே. கன்னியாக்குமரி தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும்போது அந்தத் தொகுதி காங்கிரசிற்குக் கிடைக்குமா?

ப. அந்தத் தொகுதியில் காங்கிரஸ் கட்சிதான் போட்டியிடும்.வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் கூட்டணி, காங்கிரஸ் கட்சி கொண்டுவந்த திட்டங்களையே பா.ஜ.க. தொடர்கிறது என்ற விமர்சனம், தமிழ்நாட்டில் பா.ஜ.கவின் எழுச்சி, நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களையே காங்கிரஸ் கட்சி தலைமைக்கு தேர்வுசெய்வது ஆகியவை குறித்து பிபிசியின் செய்தியாளர் முரளிதரனிடம் பேசினார், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ். அழிகிரி. பேட்டியிலிருந்து:

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :