ஐபிஎல் 2020: பந்துகளை தவறவிட்ட கோலி; சதம் அடித்த ராகுல் - 97 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி

கோலி

பட மூலாதாரம், BCCI / IPL

ஐபிஎல் தொடரின் ஆறாவது போட்டியில் நேற்று பஞ்சாப் மற்றும் பெருங்களூரு அணிகள் மோதிக் கொண்டன. இதில் பஞ்சாப் அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. எனவே பேட்டிங்கில் களமிறங்கிய பஞ்சாப் அணி 206 ரன்களை எடுத்து பெங்களூரு அணிக்கு 207 என்ற கடினமான இலக்கை நிர்ணயித்தது.

பஞ்சாப் அணியின் மயங்க் அகர்வால், நிக்கோலஸ் பூரன், மேக்ஸ்வெல் ஆகியோர் பெரிதும் ரன் ஏதும் எடுக்காத நிலையில், கேப்டன் கே.எல்.ராகுல் அதிரடியாக விளையாடி 132 ரன்களை எடுத்தார்.

அவர் 69 பந்துகளில் 14 பவுண்டரிகள், ஏழு சிக்ஸர்களை அடித்து தள்ளினார்.

அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்த பெங்களூரு

207 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணியில் பெரிதாக ரன் ஏதும் எடுக்கவில்லை. முதல் ஓவரிலேயே அந்த அணியின் தேவ்தட் ஒரே ஒரு ரன்னை மட்டும் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரின் ரன் ஏதும் எடுக்காமல் ஜோஷ் பிலிப் ஆட்டமிழந்தார்.

அதன் பிறகு அந்த அணியின் கேப்டன் விராட் கோலியும் பெரிதாக ரன் ஏதும் எடுக்காமல் ஐந்த பந்துகளில் ஒரே ரன்னை மட்டும் எடுத்து ஆட்டமிழந்தார்.

ஒரு கட்டத்தில் ஒன்பது ஓவர் முடிவில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து அந்த அணி வெறும் 60 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.

அந்த அணியின் வாஷிங்டன் சுந்தர் 27 பந்துகளில் முப்பது ரன்களை எடுத்து அணி 100 ரன்களை கடக்க உதவினார்.

கே.எல்.ராகுல்

பட மூலாதாரம், IndianPremierLeague/Twitter

சிறப்பாக விளையாடிய பஞ்சாப்

பஞ்சாப் அணியின் மயங்க் அகர்வால் 20 பந்துகளில் 26 ரன்களை எடுத்து ஆட்டமிழக்க, தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல், மயங்க் அகர்வாலை தொடர்ந்து வந்த பூரனுடன் இணைந்து சிறப்பாக ஆடினார். அந்த அணி 12ஆவது ஓவரில் 100 ரன்களை எட்டியது.

இந்த தொடரில் இதுவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு பிறகு 200 ரன்களை கடந்த அணி பஞ்சாப் அணியாக உள்ளது.

கோலியின் தவறு

கோலி

பட மூலாதாரம், BCCI / IPL

சிறப்பாக ஆடி ஆட்டமிழக்காமல் 132 ரன்களை எடுத்த கே.எல்.ராகுல்தான் பஞ்சாப் அணி வெற்றிபெற்றதற்கான முக்கிய காரணம். ஆனால் பெங்களூரு அணியின் கேப்டன் கோலி இரு முக்கிய தருணங்களை தவறவிட்டார்.

ஆம் கே.எல்.ராகுல் 83 ரன்களை எடுத்திருந்த சமயத்தில் ஒரு கேட்சை கோலி தவறவிட்டார். அதன்பின் 6 ரன்கள் கடந்து மீண்டும் கே.எல்.ராகுலின் பந்தை தவறவிட்டார் விராட் கோலி.

இந்த இரு வாய்ப்புகளுக்கு முன்னரே கே.எல்.ராகுல் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்திருந்தாலும், ஆட்டமிழக்காமல் 132 ரன்கள் எடுத்து அணியின் மொத்த ரன்களை அதிகரித்ததற்கு இந்த வாய்ப்புகள் ஒரு முக்கிய காரணம். ஃபீல்டிங்கில் செய்த தவறை பேட்டிங்கில் சரி செய்வார் கோலி என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

ஆட்டத்தின் முடிவுக்கு பிறகு பேசிய கோலி, "அவர்களை நாங்கள் 180 ரன்களுக்கு நிறுத்தியிருக்க வேண்டும். சில நாட்களில் சிறப்பாக விளையாடுவோம். சில நாட்களில் ஆட்டம் சரியாக இருக்காது. ஆனால் முன்னேறி கொண்டே செல்ல வேண்டும். இம்மாதிரியான தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்," என தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :