கொரோனா சிகிச்சை: சென்னை மருத்துவமனையில் உயிர் பிழைத்த குஜராத் மருத்துவர்

மருத்துவர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மருத்துவர்

இந்திய நாளிதழ்கள் மற்றும் அவற்றின் இணைய பக்கங்களில் வெளியான சில முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

தினமணி: சென்னை மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று உயிர் பிழைத்த குஜராத் மருத்துவர்

கொரோனா தொற்றால் நுரையீரல் முழுமையாக பாதிக்கப்பட்ட குஜராத் மருத்துவருக்கு சென்னை மருத்துவா்கள் உயா் சிகிச்சையளித்து மறுவாழ்வு அளித்துள்ளதாக தினமணி செய்தி கூறுகிறது.

இதுகுறித்து எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனையில் தலைமை செயல் அதிகாரி ஹரீஷ் மணியன் கூறியதாவது:

குஜராத் மாநிலம், சூரத்தைச் சோ்ந்தவா் சங்கேத் மேத்தா, எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

மயக்க மருந்தியல் நிபுணரான அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சூரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் முதலில் அனுமதிக்கப்பட்டாா். சில நாள்களில் நோய்த் தொற்று தீவிரமடைந்து அவரது நுரையீரல் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து வெண்டிலேட்டா் மற்றும் எக்மோ சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்டது. ஆனால், அது பலனளிக்கவில்லை. இதையடுத்து சென்னை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் விமானம் மூலம் அவா் அழைத்துவரப்பட்டாா்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் வந்த அவருக்கு மருத்துவக் குழுவினா் தீவிர சிகிச்சை அளித்தனா். இதனிடையே, சங்கேத் மேத்தாவுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன.

அதன் பயனாக, அவரது நுரையீரலின் செயல்பாடு சற்று மேம்படத் தொடங்கி முழுமையாக செயல்பட ஆரம்பித்தது.

அதைத் தொடா்ந்து தற்போது எக்மோ சிகிச்சையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளாா். சங்கேத் மேத்தாவால் இப்போது இயற்கையாக சுவாசிக்க முடிகிறது. அடுத்த சில நாள்களுக்கு அவரது உடல் நிலை கண்காணிக்கப்படும். அதன் பிறகு அவரை வீட்டுக்கு அனுப்புவது குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர்: கொரோனாபாதித்தபெண்ணுக்குஒரேபிரசவத்தில் 4 குழந்தை

குழந்தை

பட மூலாதாரம், Getty Images

உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதித்த கர்ப்பிணி பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தை பிறந்துள்ளதாக தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது. உ.பி மாநிலம் தியோரியா மாவட்டம் கவுரி பஜார் பகுதியில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த 26 வயது பெண் செவ்வாயன்று கோரக்பூரில் உள்ள பி.ஆர்.டி., மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது.

மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவ பணியாளர்கள் அடங்கிய குழு அப்பெண்ணை கவனித்து வந்தனர். புதனன்று அவர் நான்கு குழந்தைகளை ஒரே பிரசவத்தில் பெற்றெடுத்தார்.

குறிப்பிட்ட தேதிக்கு முன்னதாகவே அவருக்கு பிரசவம் நடந்துள்ளது. அதில் மூன்று குழந்தைகள் ஆரோக்கியமாக உள்ளன. ஒரு குழந்தை சுவாச கருவி உதவியுடன் சிகிச்சையில் உள்ளது.

இதுபோன்று நடப்பது மிகவும் அரிதானது என கூறியுள்ள மருத்துவர்கள், பிரசவம் சவால் மிகுந்ததாக இருந்தது என்றனர். பிரசவ தேதிக்கு முன்னரே குழந்தை பிறந்ததால் அவை 980 கிராம் முதல் 1.5 கிலோ கிராம் வரையிலான எடைகளுடன் இருந்ததாக தெரிவித்தனர். நான்கு குழந்தைகளின் மாதிரிகளும் கொரோனா பரிசோதனைக்காக நுண்ணுயிரியல் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

டைம்ஸ் ஆஃப் இந்தியா: ‘கவனமாக செலவு செய்யும் இந்தியர்கள்’ – ஆய்வு

பணம்

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவில் கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டு மக்கள் பலரும் செலவு செய்ய ஆரம்பித்து விட்ட போதிலும் பெருந்தொற்றுக்கு பிறகு மிக கவனமாக பணத்தை செலவு செய்வதாக கருத்துக் கணிப்பில் கலந்துகொண்ட 90 சதவீத மக்கள் தெரிவித்துள்ளதாக டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஸ்டான்டர்ட் சார்ட்டட் வங்கி நடத்திய ஆய்வில் 76 சதவீத இந்தியர்கள் கொரோனா பாதிப்பின் பொருளாதார தாக்கத்தை அடுத்து தாங்கள் கவனமாக செலவு செய்யத் தொடங்கி உள்ளதாக தெரிவித்துள்ளனர்

ஹாங்காங், இந்தியா, இந்தோனேசியா, கென்யா, சீனா, உள்ளிட்ட 12 நாடுகளில் மொத்தம் 12 ஆயிரம் பேரிடம் இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.

அதில் உலக அளவில் 64 சதவீத மக்கள் ஆன்லைன் ஷாப்பிங்கை தேர்வு செய்ய, இந்தியாவில் 78 சதவீத மக்கள் ஆன்லைன் ஷாப்பிங்கை தேர்வு செய்வது தெரிய வந்துள்ளது

மேலும் பணமாக இல்லாமல் செயலி அல்லது ஆன்லைன் வழியாக செலவு செய்யும் நாடுகள் பட்டியலிலும் இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :