நரசிம்மராவை நினைவு கூர வேண்டிய கட்டாயம் சோனியா காந்திக்கு தற்போது ஏற்பட்டது ஏன்?

நரசிம்ம ராவ்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், அனில் ஜைன்
    • பதவி, மூத்த பத்திரிக்கையாளர், பிபிசிக்காக

(இந்தக் கட்டுரையில் இருப்பவை கட்டுரையாளரின் சொந்தக் கருத்து. இவை பிபிசியின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்.)

முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ் இறந்து கிட்டத்தட்ட ஒன்றரை தசாப்தங்களுக்குப் பிறகு, காங்கிரஸ் தலைமை அவரை நினைவுகூர்வது காலத்தின் கட்டாயம் என்றே கூற வேண்டும்.

சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் நரசிம்ம ராவின் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவின் போது அவரைக் 'கட்சிக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர்' என்றும் 'கற்றறிந்த தலைவர்' என்றும் கூறியுள்ளனர். அவரது துணிச்சலான தலைமையையும் பாராட்டினர்.

ஒரு பிரதமராக, அவரின் சாதனைகளைப் பற்றி குறிப்பிடுகையில், இரு தலைவர்களும் தனித்தனி செய்தியில், "பொருளாதாரம் குறித்த அவரது தொலைநோக்கு மற்றும் துணிச்சலான முடிவுகளின் மூலம் நாட்டை ஒரு புதிய சகாப்தத்திற்குக் கொண்டு சென்று, நவீன இந்தியாவிற்கு ஒரு புதிய வடிவம் கொடுத்தார்" என்று குறிப்பிட்டுள்ளனர்.

ஐந்து ஆண்டுகள் நாட்டின் பிரதமராகவும், அதே நேரத்தில் காங்கிரஸ் தலைவராகவும் இருந்த நரசிம்மராவ், பிரதமர் பதவியில் இருந்து விலகிய பின் எட்டு ஆண்டுகள் உயிருடன் இருந்தார். பிரதமர் பதவிக்காலம் முடிந்து அவர் வாழ்ந்தபோது கட்சி ஒரு போதும் அவரைக் கொண்டாடவில்லை.

மாறாக, அந்தக் கால கட்டத்தில், அவர் கட்சியால் புறக்கணிக்கப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டார். மரணத்திற்குப் பிறகும் கூட, கட்சியிடமிருந்து மரியாதை மற்றும் அங்கீகாரத்தைப் பெற அவருக்கு ஒன்றரை தசாப்தங்கள் ஆகியுள்ளன.

நரசிம்மராவை நினைவு கூர வேண்டிய கட்டாயம் சோனியா காந்திக்கு ஏற்பட்டது ஏன்?

பட மூலாதாரம், EPA

காங்கிரசின் முதல் குடும்பத்துக்கு, மறைந்த பிரதமரின் மரணத்திற்கு ஒன்றரை தசாப்தங்களுக்குப் பிறகு இவ்வளவு வலுவாக அவரை நினைவுகூர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது, இதற்கு காரணம் என்ன?

காங்கிரஸில் ராவ் அல்லது வேறு ஒரு தலைவர் புகழின் உச்சிக்குச் செல்லும்போது அவரை சோனியா காந்தி பாராட்டுவது என்பது கற்பனைக்கு அப்பாற்பட்ட நிகழ்வு.

அரசியல் எதிரிகளின் அன்பு

உண்மையில், ராவின் பிறந்த நாள் நூற்றாண்டை முன்னிட்டு, ஆந்திரம் மற்றும் தெலங்கானாவில், பிராந்தியக் கட்சிகளும், பாரதிய ஜனதாவும் அவரது பாரம்பரியத்தை அரசியல் ரீதியாகப் பயன்படுத்த முயற்சிக்கத் தொடங்கிய விதம், காங்கிரஸ் தலைமைக்கு அதன் முன்னாள் தலைவர் மீதான தனது பார்வையை மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியது.

இதற்கு முன், அதிகாரப்பூர்வமாக, அவரது பிறந்த நாள் அல்லது நினைவு நாள் நிகழ்ச்சி என்று எதுவும் ஏற்பாடு செய்யப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Banner image reading 'more about coronavirus'
Banner

இதுவும் ஒரு வகையான சந்தர்ப்பவாதம் மற்றும் நாட்டில் காலாவதியாகிப் போன அடையாள அரசியலை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் என்றும் கூறலாம். இறந்தபின் முற்றிலுமாக மறக்கப்பட்ட ராவ், அடையாள அரசியல் காரணமாக தனது பிறந்த நாள் நூற்றாண்டில் திடீரென வெளிச்சத்திற்கு வந்துள்ளார்.

அவரது பெயரைப் பயன்படுத்தி, தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ், தனது அரசியல் களத்தை வலுப்படுத்த முன்முயற்சி எடுத்துள்ளார். ராவ் நினைவாக, தெலங்கானா அரசின் சார்பில், ஆண்டு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதாகவும், அவரது நினைவை நிரந்தரமாக்குவதற்காக ஒரு நினைவுச்சின்னம் அமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

நரசிம்மராவை நினைவு கூர வேண்டிய கட்டாயம் சோனியா காந்திக்கு ஏற்பட்டது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

இந்த சந்தர்ப்பத்தில், கே.சி.ஆர் அரசு செய்தித்தாள்களில் முழு பக்க விளம்பரங்களை வெளியிட்டது. அதில் ராவ், 'தெலங்கானாவின் மகன், இந்தியாவின் பெருமை' என்று குறிப்பிடப்பட்டது.

1977ல் தேசிய அரசியலில் பிரவேசிக்கும் முன்பு, பிரிக்கப்படாத ஆந்திர மாநிலத்தில் பல ஆண்டுகளாக ராவ் அமைச்சராகவும், முதல்வராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராவின் பிறப்பிடம் தெலங்கானா என்பதாலும் அவர் தெலுங்கு பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், முதலமைச்சர் கே.சி.ஆரின் நோக்கம், ராவ் மூலம் தெலுங்கர் உணர்வுகளைப் பயன்படுத்தித் தனது மாநிலத்தின் பிராமணர்களைக் கவர்ந்திழுப்பதாகும்.

தெலுங்கு தேசம் கட்சிக்கும் நோக்கம் இதுவேயாகும். அதனால்தான் அக்கட்சி, ராவுக்கு பாரத ரத்னா விருது கொடுத்து கௌரவிக்க வேண்டும் என்று கோரியுள்ளது. தெலங்கானா மற்றும் ஆந்திராவில் பாஜகவும் தனது களத்தைத் தயார் செய்ய விரும்புவதால், பிரதமர் நரேந்திர மோதியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தெலங்கானா மற்றும் ஆந்திர பயணங்களின் போதெல்லாம், வாழ்நாள் முழுவதும் காங்கிரஸ்காரராக இருந்த ராவை நினைவு கூர மறப்பதில்லை.

காங்கிரஸை ஒரு குடும்பக் கட்சி என்று அவர்கள் சாடும் அதே வேளையில், ராவின் பெருமையை வலியுறுத்தி, காங்கிரஸ் கட்சி இவரை இருட்டடிப்பு செய்து அவமானப்படுத்தியதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.

இரு மாநிலங்களிலும் மக்களவை மற்றும் சட்டமன்றத்திற்கு நடந்த தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி மோசமாகத் தோல்வியடைந்துள்ளது, இந்த இரு மாநிலங்களிலும் தோல்வி அடைந்ததற்கு ராவ் புறக்கணிப்பு ஒரு காரணமாக இருக்கவில்லை என்றாலும் தற்போதைய சூழ்நிலையில், இந்த மாநிலங்களில், தெலங்கான ராஷ்டிர சமிதி, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சி, பாஜக ஆகிய கட்சிகளைத் தனியாக எதிர்த்துப் போராட வேண்டிய நிலையில் காங்கிரஸ் உள்ளது.

இந்த அனைத்துப் போட்டிக் கட்சிகளும் ராவ் மீது கொண்டுள்ள அன்பின் காரணமாக, அந்த முன்னாள் பிரதமரை மரணத்திற்குப் பின் தத்தெடுக்க காங்கிரஸ் தலைமையும் முடிவு செய்துள்ளது.

நரசிம்மராவை நினைவு கூர வேண்டிய கட்டாயம் சோனியா காந்திக்கு ஏற்பட்டது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

இதன் வெளிப்பாடாக, முதலில் தெலங்கானா காங்கிரஸ் கமிட்டி, ராவ் பிறந்த நாள் நூற்றாண்டில் ஆண்டு முழுவதும் நிகழ்ச்சிகளை ஒழுங்கமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் தொடக்கம் குறித்து வெளியிடப்பட்ட செய்தியில் அவரது பங்களிப்பு முழுமையாகப் பாராட்டப்பட்டுள்ளது.

இதன் மூலம், பிரதமராக அவர் செய்த சாதனைகள் காங்கிரஸின் சாதனைகளேயன்றி வேறில்லை என்பதை வெளியிட முயற்சிக்கிறது.

மீண்டும் அவப்பெயர் பெறும் காங்கிரஸ்

இருப்பினும், இவையெல்லாம், காங்கிரஸின் பெயரைக் காப்பாற்றப் போதுமானதாக இல்லை. ராவின் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவிற்கான ஓராண்டு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டுமென்ற உத்தரவு, தெலங்கானா காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் மறைந்த பிரதமர் மற்றும் கட்சியின் தேசியத் தலைவரின் புகழ் ஒரு மாநிலத்திற்குள் மட்டும் அடக்கப்பட்டுள்ளது. ராவின் ஆளுமை அகில இந்திய அளவில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ராவ், அடிப்படையில் தெலுங்கு மொழி பேசுபவர். ஆனால், இந்தி மற்றும் ஆங்கிலம் தவிர, தமிழ், கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பங்களா, உருது, சமஸ்கிருதம் போன்ற பல மொழிகளில் அவர் தேர்ச்சி பெற்றிருந்தார். இது மட்டுமல்லாமல், தனது சொந்த மாநிலமான ஆந்திராவைத் தவிர, மகாராஷ்டிரா மற்றும் ஒடிசாவிலிருந்தும் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

வரைபடம்

உலகம் முழுவதும் உறுதி செய்யப்பட்ட தொற்றுகள்

Group 4

முழுமையாக பார்க்க பிரௌசரை அப்டேட் செய்யுங்கள்

ஆதாரம்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், தேசிய பொது சுகாதார முகமைகள்

கடைசியாக பதிவு செய்யப்பட்டது 5 ஜூலை, 2022, பிற்பகல் 1:29 IST

இந்திரா காந்திக்கு அடுத்ததாக, மூன்று மாநிலங்களில் இருந்தும், மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட, காங்கிரஸின் இரண்டாவது தலைவராக ராவ் இருந்தார். எனவே காங்கிரஸ் அவரது பிறந்த நாள் நூற்றாண்டு விழாவை தேசிய அளவிலான கொண்டாட்டங்களாக அறிவித்திருந்தால் அரசியல் ஆதாயம் கிடைத்திருக்கக்கூடும்.

135 ஆண்டுகாலப் பாரம்பரியம் மிக்க ஒரு கட்சி, ஏராளமான சரித்திர நாயகர்களை உறுப்பினர்களாக கொண்டிருந்த ஒரு கட்சி, இன்று, மகாத்மா காந்தியைத் தவிர ஒரே ஒரு (நேரு-காந்தி) குடும்பத்தின் மறைந்த தலைவர்களை மட்டுமே நினைவு கூரும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாக காங்கிரஸ் தலைவர்களே கூட கருதுகிறார்காள்.

காங்கிரஸை எதிர்க்கும் கட்சிகள், காங்கிரஸை ஒரு குடும்பக் கட்சி என்று அழைப்பதற்கான காரணம் இதுதான், அதனால்தான் சுதந்திரப் போராட்ட காலத்தின் பல காங்கிரஸ் தலைவர்களை பாஜக தனது கருத்தியல் மூதாதையர்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்கிறது.

நரசிம்மராவை நினைவு கூர வேண்டிய கட்டாயம் சோனியா காந்திக்கு ஏற்பட்டது ஏன்?

பட மூலாதாரம், PIB

பாஜக-வுக்கும் காங்கிரஸுக்குமான வேறுபாடு

மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, அப்போது உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் படேல், ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு இக்கொலையுடன் தொடர்புள்ளது என்ற அடிப்படையில் அந்த அமைப்புக்குத் தடை விதித்தார் என்பது உலகறிந்த உண்மை. இதே போல் சுபாஷ் சந்திர போஸ், 1938இல் காங்கிரஸ் தலைவரான பின்னர், இந்து மகாசபை நிகழ்ச்சிகளில் பங்கேற்க காங்கிரஸாருக்குத் தடை விதித்தார். ஆனால் பாஜக இந்த இருவரையும் தங்களின் சித்தாந்தத்தின் பாரம்பரியத்துடன் இணைத்துப் பார்க்கத் தயங்குவதில்லை.

இது மட்டுமல்லாமல், எந்த மாநிலத்திற்குச் சென்றாலும், பிரதமர் நரேந்திர மோதி பெரும்பாலும் தனது உரையில் அந்த மாநிலத்தின் பெரிய காங்கிரஸ் தலைவர்களை, காங்கிரஸ் கட்சியே மறந்து போன காங்கிரஸ் தலைவர்களைக் குறிப்பிட்டுப் பாராட்டத் தவறுவதில்லை. உதாரணமாக, அஸ்ஸாமில், கோபிநாத் போர்டோலோய், உத்தரப்பிரதேசத்தில் சவுத்ரி சரண் சிங் மற்றும் ஹரியானாவில் உள்ள சவுத்ரி தேவி லால் போன்றோரைத் தங்களது சித்தாந்தத்துடன் இணைத்துப் பார்க்கவும் தயங்குவதில்லை.

நரசிம்மராவை நினைவு கூர வேண்டிய கட்டாயம் சோனியா காந்திக்கு ஏற்பட்டது ஏன்?

சர்தார் படேல், சுபாஷ் சந்திர போஸ் போன்றவர்களை ஏற்றுக்கொள்ள பாஜக தயங்காதபோது, இந்த மூத்த தலைவர்களை மரியாதையுடன் நினைவு கூர்வதில் காங்கிரசுக்கு என்ன சிக்கல் என்ற கேள்வி எழுகிறது.

சர்தார் படேல் மற்றும் சுபாஷ் சந்திர போஸ் மட்டுமல்ல. வாழ்நாள் முழுவதும் காங்கிரஸிலேயே இருந்து நவீன இந்தியாவை உருவாக்குவதில் பங்களித்தும், காங்கிரஸால் மறக்கப்பட்ட, சுதந்திர போராட்ட வீரர்களின் நீண்ட பட்டியலே உள்ளது.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியால், நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி போல, அரசியலமைப்பு சபையின் தலைவரும் நாட்டின் முதல் ஜனாதிபதியுமான டாக்டர் ராஜேந்திர பிரசாத் அல்லது நாட்டின் முதல் கல்வி அமைச்சர் மௌலானா ஆசாத் ஆகியோரின் பிறந்த நாள் அல்லது நினைவு நாள் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதாக நினைவில்லை.

காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தியோ ராகுல் காந்தியோ லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்த நாள் அல்லது நினைவு நாளன்று, அவரது கல்லறைக்குச் சென்று மரியாதை செலுத்தியதாகக் கண்டதுமில்லை கேட்டதுமில்லை.

தேசிய அளவில் மட்டுமல்ல, பிராந்திய அளவிலும், தங்கள் மாநிலத்தில் மிகச் சிறந்த ஆளுமைகளாக விளங்கி, கட்சியை வலுப்படுத்தி, தேசிய அரசியலிலும் பாராட்டத்தக்க பங்களிப்பைச் செய்த காங்கிரஸ் தலைவர்களுக்கும் பஞ்சமில்லை.

இந்த வரிசையில், உத்தரப்பிரதேசத்தின் சம்பூர்ணானந்த், சந்திரபானு குப்தா, சவுத்ரி சரண் சிங், கமலாபதி திரிபாதி, ஹேமாவதிநந்தன் பஹுகுணா மற்றும் பிஹாரின் ஸ்ரீகிருஷ்ண சிங், கிருஷ்ணா வல்லப் சஹாய், போலா பாஸ்வான் சாஸ்திரி, கேதார் பாண்டே, லலித் நாராயண் மிஸ்ரா போன்றவர்கள் நினைவு கூரத்தக்கவர்கள். ஆனால், இவர்களின் பெயரைக் கூட கட்சி குறிப்பிட்டதில்லை.

மண்டல் கமிஷனுக்கு தலைமை வகித்த பிந்தேஸ்வரி பிரசாத் மண்டல் காங்கிரசில் இருந்தபோது பிகார் முதல்வராக இருந்தார்.

பின்னர் அவர் காங்கிரஸை விட்டு வெளியேறி தனது பழைய சோசலிஸ்ட் கட்சி மற்றும் பின்னர் ஜனதா கட்சிக்குச் சென்றார். ஆனால் இன்று நாடு முழுவதும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அரசாங்க வேலைகள் கிடைத்து வருகின்றன.

கல்வி நிறுவனங்களில் 33 சதவீத இடஒதுக்கீட்டோடு அவரது பெயர் தொடர்புடையது, ஆனால் காங்கிரஸ் அவரை ஒருபோதும் நினைவில் வைத்திருக்கவில்லை.

இதேபோல், மத்தியப் பிரதேசத்தில் துவாரகா பிரசாத் மிஸ்ரா, ரவிசங்கர் சுக்லா, பிரகாஷ்சந்திர சேதி, ஷியாம்சரன் சுக்லா மற்றும் அர்ஜுன் சிங், ராஜஸ்தானில் மோகன்லால் சுகாடியா, ஜெயநாராயண் வியாஸ், ஹரிதேவ் ஜோஷி, மஹாராஷ்டிராவில், யஷ்வந்த்ராவ் சவான், வசந்த்ராவ் நாயிக், வசந்த் தாதா பாட்டில், கர்நாடகாவில் எஸ் நிஜலிங்கப்பா, தேவ்ராஜ் அர்ஸ், ஆந்திராவில், டி பிரகாசம், பிரம்மானந்த ரெட்டி, தமிழ்நாட்டில் ராஜகோபாலாச்சாரி, காமராஜர், எம் பக்தவத்சலம், ஒடிசாவில் ஹரேகிருஷ்ணா மஹ்தாப், நவகிருஷ்ணா சௌத்ரி போன்ற பிரகாசமான தலைவர்களின் வரலாறு உள்ளது. இவர்களைத் தங்கள் கட்சியின் அடையாளமாக காங்கிரஸ் உரிமை கொண்டாட முடியும்.

பாஜகவுக்குப் பெருமையாகத் தோளுயர்த்திக்கொள்ள இவ்வளவு பெரிய பெயர்கள் இல்லை. ஆனால், காங்கிரஸ் தலைமை, தனது குடும்பப் பாரம்பரியத்துக்கு வெளியில் உள்ள தற்போதைய தலைவர்களைக் கூடக் குறைத்தே மதிப்பிட முயற்சிக்கிறது.

நரசிம்மராவை நினைவு கூர வேண்டிய கட்டாயம் சோனியா காந்திக்கு ஏற்பட்டது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

காங்கிரஸின் கைவிலங்குகள்

சுதந்திரப் போராட்டத்தின் போது நாடு சந்தித்த சவால்கள் போலவே இப்போதும் சந்தித்து வருவதாக காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறுகிறார். எந்த விழுமியங்களின் அடிப்படையில் சுதந்தரப் போர் நடத்தப்பட்டதோ அந்த விழுமியங்கள் இன்று ஆபத்தில் இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.

தற்போதைய சவால்களை ராகுல் காந்தி உண்மையில் உணர்ந்திருந்தால், அந்தச் சவால்களை அவர் எவ்வாறு எதிர்கொள்ள விரும்புகிறார் என்பதுதான் இப்போது எழும் கேள்வி.

காங்கிரஸ் தற்போது அதன் வரலாற்றின் மிக மோசமான கட்டத்தை கடந்து வருகிறது என்பது உண்மைதான், கருத்தியல் ரீதியாகவும் திசை மாறிவருகிறது. தலைமை ஏற்படுத்தும் நெருக்கடியும் இது திசைதிருப்பலுக்கு பலியாகிறது, தலைமை குறித்த நெருக்கடியையும் அக்கட்சி எதிர்கொண்டு வருகிறது.

நீண்ட காலமாக ஆட்சியில் இருந்ததால், வெகுஜன இயக்கத்தின் போராட்ட மனோபாவம் அதன் தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடையே உருவாகவில்லை. இது தவிர, பிராந்திய மற்றும் வகுப்பு ரீதியிலன அபிலாஷைகளையும் அடையாளங்களையும் வெறுப்புடனே பார்க்கும் மனநிலையிலிருந்தும் காங்கிரஸ் இன்னும் முற்றிலும் விடுபடவில்லை என்பதும் ஓர் உண்மை.

இவற்றையெல்லாம் மீறி, எதிர்க்கட்சி என்ற பெயரில், இன்று பாஜகவின் சவாலுக்கு எதிராக போட்டியிடக்கூடிய ஒரே கட்சியாகவும் காங்கிரஸ் மட்டுமே உள்ளது. ஏனெனில் அது நாடு தழுவிய நிறுவன அமைப்பைக் கொண்டிருப்பதால், நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் அதன் தொண்டர்கள் உள்ளனர்.

இன்று நாடு உண்மையிலேயே ஒரு கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறது என்பதையும், சுதந்தரப் போராட்டத்தின்போது உருவாக்கப்பட்ட தேசிய விழுமியங்கள் ஆபத்தில் உள்ளன என்பதையும் ராகுல் காந்தி உண்மையாக உணர்ந்திருந்தால், காங்கிரஸ் கட்சி என்ற ஒற்றைக் குடையின் கீழ் சுதந்தரத்துக்காகப் போராடிய அந்த வீரத் தலைவர்களையும் அவர்கள் சாதனைகளையும் பாரம்பரியத்தையும் தனது கட்சியுடன் இணைத்துக் கொள்ள முன்வர வேண்டும்.

கருத்தியல் வேறுபாடுகள் அல்லது ஆளுமை மோதல் காரணமாக சுதந்தரத்திற்குப் பிறகு காங்கிரஸிலிருந்து பிரிந்த இடதுசாரி, சோஷலிச தலைவர்கள் பற்றிய கண்ணோட்டத்தையும் அவரது கட்சி மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்.

ராவை ஓரளவிற்கு ஏற்றுக்கொள்வதன் மூலம் காங்கிரஸ் பாரம்பரியத்துடன் கட்சியைத் தொடர்புபடுத்த முயன்றது போலவே, மற்ற மாநிலங்களிலும் மறைந்த காங்கிரஸ் தலைவர்களின் மரபுடன் கட்சியை இணைக்க ஏதேனும் முன்முயற்சி எடுக்குமா என்பதுதான் இப்போது எழும் கேள்வி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: