கிரண்பேடி vs நாராயணசாமி மோதல்: இடையில் சிக்கித் தவிக்கும் புதுவை அதிகாரிகள்

கிரண்பேடி

பட மூலாதாரம், J. Countess

    • எழுதியவர், நட்ராஜன் சுந்தர்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த மே மாதம் இறுதி வரை 100க்கும் குறைவாகவே இருந்தது. ஆனால், கடந்த இரண்டு மாதங்களில் கொரோனா தொற்று 3 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதற்கிடையே, புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு தொடர்ந்து நிலவி வருகிறது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஆளும் கட்சிக்கு எதிராக துணைநிலை ஆளுநர் செயல்படுவதாகக் கூறி ஆட்சியாளர்கள் பல்வேறு காலகட்டங்களில் எதிர்ப்பும், போராட்டமும் நடத்தியுள்ளனர்.

2014ஆம் ஆண்டு புதுச்சேரி மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டபோது, அப்போதைய துணைநிலை ஆளுநராக இருந்த வீரேந்திர கட்டாரியா களத்தில் இறங்கி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் பிரச்சனைகளைக் கேட்டறிந்தார்.

அதனால், அப்போதைய புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கும் ஆளுநருக்கும் மோதல் ஏற்பட்டது. பின்னர், ஆளும் கட்சி சார்பில் ஆளுநருக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இதே மோதல் போக்கு 2016ஆம் ஆட்சி பொறுப்பேற்ற காங்கிரஸ் அரசுக்கும், துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்ட கிரண்பேடிக்கும் இடையே நான்கு ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அரசியல் விமர்சகர் இளங்கோவன்
படக்குறிப்பு, அரசியல் விமர்சகர் இளங்கோவன்

"ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதியான முதல்வரும், மத்திய அரசின் நேரடி நிர்வாகியாக வரும் ஆளுநரும் வாகனத்தின் இரண்டு சக்கரம் போன்றவர்கள். குடியரசுத் தலைவரால் ஆளுநருக்குக் கொடுக்கப்படும் அதிகாரங்களை கொண்டு, மக்கள் பிரதிநிதிகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கக் கூடாது. அதேபோன்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்களும் மத்திய அரசால் நியமனம் செய்யப்படும் ஆளுநரின் செயலை தடுக்கக்கூடாது," என்கிறார் அரசியல் விமர்சகர் இளங்கோவன்.

இவர்களுக்கு இடையே நடக்கும் மோதல் போக்கால், அதிக அளவில் பொதுமக்கள் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர் என்று கூறும் இளங்கோவன், இதன் விளைவை கொரோனா பேரிடர் காலத்தில் அனைவராலும் பார்க்க முடிகிறது என்று கூறுகிறார்.

"ஆரம்பக் காலத்தில், கொரோனா தொற்று ஏற்பட்ட சூழலில் ஆளுநர் சமூக வலைதளத்தில் மட்டுமே அவரது கருத்தைப் பதிவிட்டுக் கொண்டிருந்தார். அப்போது, மக்கள் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டிய கட்டாயம் இருப்பதால், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் களத்தில் நேரடியாகச் சென்று தீவிரமாகத் தடுப்பு பணிகளை மேற்கொண்டனர். ஆனால், இதுபோன்ற காலங்களில் கூட ஆளுநர் மக்களுக்காக இறங்கிவந்து ஆட்சியாளருக்குத் துணை நிற்கவில்லை. ஆனால், தற்போது அதிகாரிகளை மட்டும் குறை கூறுகிறார்.

நாராயணசாமி

பட மூலாதாரம், Hindustan Times

தற்போது, இரு தரப்பினரும் கொரோனா தொற்று‌ பரவுகின்ற நெருக்கடியான பேரிடர் காலச்சூழலில் மக்கள் நலனை மனதில் கொண்டு பிரச்சனைகள் குறித்து நேரடியாக பேச வேண்டும்," என்கிறார் இளங்கோவன்.

மன உளைச்சலுக்கு ஆளாகும் அதிகாரிகள்

அதிகாரப் போட்டி காரணமாகப் புதுச்சேரியில் நிறைய அதிகாரிகள் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். அதில் குறிப்பிட்டுச் சொன்னால், 2017ஆம் ஆண்டு முதலியார்பேட்டை பகுதியில் காலி மனைகளைச் சுத்தம் செய்யுமாறு நகராட்சி ஆணையருக்கு கிரண் பேடி உத்தரவிட்டிருந்தார்.

அப்போது, அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தனக்கு தகவல் தெரிவிக்காமல் தனது தொகுதியில் ஆலோசனைக் கூட்டம் நடத்துவதாகக் கூறி புதுச்சேரி நகராட்சி ஆணையர் மீது சபாநாயகரிடம் உரிமை மீறல் புகார் அளித்தார். இதன் பின்னர், நகராட்சி ஆணையர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். நீண்ட போராட்டத்திற்கு பிறகு அந்த அதிகாரி அதிகாரமில்லாத பதவியில் பணியமர்த்தப்பட்டார்.

அண்மையில் நடந்த சம்பவத்தில், சுகாதாரத்துறைக்கு ஆய்விற்குச் சென்ற துணைநிலை ஆளுநர் கிரண் பேடி , கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த சுகாதாரத்துறை துணை இயக்குநர் மற்றும் மருத்துவர்களிடம் கடுமையான பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால், கிரண் பேடிக்கு எதிராக சுகாதாரத்துறை மற்றும் மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர்.

நிர்வாக ரீதியாக ஆளுநருக்கே முதன்மையான பொறுப்புகள் உள்ளது என்று கூறுகிறார் புதுச்சேரியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், பேராசிரியருமான ராமதாஸ்.
படக்குறிப்பு, நிர்வாக ரீதியாக ஆளுநருக்கே முதன்மையான பொறுப்புகள் உள்ளது என்று கூறுகிறார் புதுச்சேரியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், பேராசிரியருமான ராமதாஸ்.

"புதுச்சேரியில் இரண்டு அதிகார மையங்கள் இருப்பதால் யாருடைய உத்தரவை செயல்படுத்துவது என்பதிலும் அதிகாரிகளுக்கு குழப்பம் ஏற்படுகிறது. ஆளுநரின் உத்தரவுபடி செயல்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது உரிமை மீறல் வழக்கு தொடுத்து ஆட்சியர்கள் அலைகழிக்கின்றனர். அதுவே முதல்வரின் உத்தரவுப்படி நடந்ததால் அதிகாரிகளை அழைத்து ஆளுநர் கேள்வி எழுப்புவது தொடர்கதையாக நடைபெற்று வருகிறது," என்று கூறுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

"ஆட்சியாளர் மற்றும் நிர்வாகத்தில் ஏற்படும் மோதல் போக்கால், மக்கள் நலத் திட்டங்கள் பாதிக்கப்படும் போது, மக்கள் நேரடியாக அதிகாரிகளிடம் கேள்வி எழுப்புகின்றனர். இதனால், பதில் சொல்லமுடியலால் புதுச்சேரி அதிகாரிகள் பெருமளவு மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

மேற்கொண்டு ஆளுநர் ஆய்வு செல்லும்போது, அங்கேயே உடனடியாக தீர்வை எதிர்பார்ப்பது தவறானது. நடக்கும் தவறு குறித்துத் தெரிந்தால், அதற்குத் தனிப்பட்ட முறையில் அழைத்து அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், அனைவரின் முன்னிலையில் அதிகாரிகளைக் கடுமையான வார்த்தைகளால் பேசும்போது அது அவர்களுக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது," என்கிறார் அரசியல் விமர்சகர் இளங்கோவன்.

புதுச்சேரியில் யாருக்கு அதிகாரம்?

"மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் ஆளுநர் இருவரின் உத்தரவையும் அதிகாரிகள் கேட்கவேண்டும். இதில் இருவரும் ஒன்றிணைத்து செயல்பட வைப்பது என்பது முக்கியமானது. ஆனால், நிர்வாக ரீதியாக ஆளுநருக்கே முதன்மையான பொறுப்புகள் உள்ளது," என்று கூறுகிறார் புதுச்சேரியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், பேராசிரியருமான ராமதாஸ்.

சமூக செயல்பாட்டாளர் சக்திவேல்
படக்குறிப்பு, சமூக செயல்பாட்டாளர் சக்திவேல்

மேலும், சமூக செயல்பாட்டாளர் சக்திவேல் கூறுகையில், "மக்களின் நலனை மனதில் கொண்டு இறங்கிப் போக வேண்டிய கட்டாயம் ஆட்சியாளருக்கு இருக்கிறது. இதற்கு முன்பு புதுச்சேரியில் இதைப்போன்று இணக்கமாக ஆளுநருடன் ஆட்சியாளர்கள் இருந்திருக்கின்றனர்.

அவ்வாறு இல்லாமல், இரு தரப்பிலும் அதிகார முனைப்போடு செயல்பட்டால் மோதல்தான் நீடிக்கும். மக்கள் ஆட்சியருக்கு வாக்களித்திருக்கின்றனர், ஆகவே மக்களுக்கு நல்லது செய்ய வேண்டுமென்றால், ஆளுநரிடம் சென்று ஆட்சியாளர்தான் கேட்கவேண்டும். ஆனால், இதற்கு வளைந்து கொடுக்காமல் இருந்தால், இந்த பிரச்சனை நீடித்துக்கொண்டே தான் இருக்கும்," எனத் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: