பெர்சவரன்ஸ்: செவ்வாயில் உயிர்கள் உள்ளதா? - கண்டறிய கிளம்பியது நாசா விண்கலம் மற்றும் பிற செய்திகள்

பட மூலாதாரம், NASA / TWITTER
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் செவ்வாய் கோள் ஆய்வு திட்டத்தின் ஒரு பகுதியாக 'பெர்சவரன்ஸ்' விண் ஊர்தி நேற்று (ஜூலை 30) தனது பயணத்தை தொடங்கியுள்ளது.
ஒரு டன் எடை மற்றும் ஆறு சக்கரங்கள் உள்ள இந்த விண்ணூர்தி செவ்வாய்க் கோளில் உயிர்கள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளும்.
ஃபுளோரிடாவின் கேப் கெனவரல் விமானப்படைத் தளத்தில் இருந்து அட்லஸ் ராக்கெட் ஒன்றின் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட இந்த விண்ணூர்தி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் செவ்வாயில் தரை இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது பூமியிலிருந்து ரோபோட்டிக் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படும். சுமார் 40 கிலோமீட்டர் அகலமுள்ள ஜெசீரோ கிரேட்டர் (Jezero Crater) எனும் பள்ளத்தில் இதைத் தரையிறக்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது.
சுமார் 500 அடி ஆழமுள்ள இந்தப் பள்ளத்தில் ஒரு காலத்தில் கணிசமான அளவில் நீரோட்டம் இருந்தது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

பட மூலாதாரம், NASA
செவ்வாயில் தரையிறங்கிய பின்பு ஆராய்ச்சிகள் மட்டுமல்லாது செவ்வாயின் பாறைகள் மற்றும் மண்ணின் மாதிரிகளையும் பெர்சவரன்ஸ் சேகரிக்கும். அந்த மாதிரிகள் இந்த தசாப்தத்தின் இறுதிப் பகுதியில் பூமியை வந்தடையும்.
இதில் உள்ள 23 கேமராக்கள் செவ்வாயில் நுண்ணுயிர்கள் உள்ளனவா என்பதை அறிய உதவும். எனினும், பெர்சவரன்ஸ் கண்டுபிடிக்கும் முடிவுகளின் துல்லியத்தன்மை பூமியில் உறுதிசெய்யப்படும்.
சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சீனா ஆகிய நாடுகள் செவ்வாயை நோக்கி விண்கலங்களை செலுத்தியுள்ளன.
கடந்த 11 நாட்களில் பூமியிலிருந்து செவ்வாயை நோக்கி செல்லும் மூன்றாவது விண்கலமாக பெர்சவரன்ஸ் அமைந்துள்ளது.
புதிய கல்விக் கொள்கை - 20 முக்கிய அம்சங்கள்

பட மூலாதாரம், Getty Images
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் கல்விக்கு ஒதுக்குவது, தொழில்முறைக் கல்வி, நெகிழ்வான பாடத்திட்டங்கள், பாடங்களில் படைப்புச் சேர்க்கைகள், ஒருங்கிணைந்த தொழில் கல்வி மற்றும் உரிய சான்றிதழ்களுடன் பல்முனை நுழைவு, வெளியேறுதல், ஆய்வுகளுக்காக அதிக நிதி ஒதுக்குவது, ஐந்தாம் வகுப்பு வரை தாய் மொழிக் கல்வி, மும்மொழிக் கொள்கை, சமஸ்கிருதத்தை மைய நீரோட்டத்துக்குக் கொண்டு வருவது என பல விஷயங்கள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன.
விரிவாகப் படிக்க: புதிய கல்விக் கொள்கை 2020: இருபது முக்கிய அம்சங்கள்
அதிபர் தேர்தலை தள்ளிவைக்க டிரம்ப் யோசனை

பட மூலாதாரம், Reuters
இந்த ஆண்டு நவம்பர் மாதம் நடக்கவேண்டிய அமெரிக்க அதிபர் தேர்தலை கொரோனோ வைரஸ் தொற்றுப் பரவலால் ஏற்பட்டுள்ள சூழ்நிலையைக் காரணம் காட்டி தள்ளிவைக்கலாம் என்று யோசனை கூறியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.
கொரோனா வைரஸ் தொற்றினால், அதிக அளவில் தபால் வாக்குகள் பதிவானால், அதில் முறைகேடும் துல்லியமற்ற முடிவுகளும் வெளியாகும் என்று அவர் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா பொது முடக்கம்

பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாட்டில் ஆக்ஸட் 31ஆம் தேதிவரை கூடுதல் தளர்வுகளுடன் பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார். மாவட்டங்களுக்கிடையே செல்வதற்கு இ - பாஸ் முறை தொடர்ந்து நீடிக்கிறது.
இதுதவிர, ஆகஸ்ட் மாதத்தில் உள்ள அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் முழு ஊரடங்கு நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரிவாகப் படிக்க:தமிழ்நாட்டில் கொரோனா பொது முடக்கம்: ஆகஸ்ட் 31ஆம் தேதிவரை நீட்டிப்பு
இருளர் மாணவி தாக்கப்பட்ட சம்பவம் - மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

விழுப்புரம் மாவட்டத்தில் சாதி சான்றிதழ் கோரி விண்ணப்பித்த பழங்குடி இருளர் சமூகத்தைச் சேர்ந்த மாணவிக்கு எதிர்ப்பு தெரிவித்து அதே கிராமத்தைச் சேர்ந்த சிலர் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து நடந்த சம்பவத்திற்கு விளக்கம் கேட்டு மனித உரிமை ஆணையம் மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
விரிவாகப் படிக்க:சாதி சான்றிதழ் கோரியதற்காக தாக்கப்பட்ட இருளர் சமூக மாணவி - மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












