பால் தினகரன்: கணக்கில் வராத 118 கோடி பணம், 4.7 கிலோ தங்கம் மீட்பு

பட மூலாதாரம், Facebook
இன்று (24 ஜனவரி 2021, ஞாயிற்றுக்கிழமை) இந்தியாவில் உள்ள சில முக்கிய நாளிதழ்களிலும் அவற்றின் இணையதளங்களிலும் வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.
பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித் துறையினர் மூன்று நாட்களாக நடத்திய சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.118 கோடி முதலீடுகள், 4.7 கிலோ தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
"கோவை காருண்யா பல்கலைக்கழக வேந்தராக இருப்பவர் பால் தினகரன். 'இயேசு அழைக்கிறார்' என்ற அமைப்பின் தலைவராகவும் உள்ளார். இவருக்கு சொந்தமான பல்வேறு இடங்களிலும் வருமான வரித் துறை அதிகாரிகள் கடந்த 20-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை 3 நாட்கள் சோதனை நடத்தினர்.
சென்னையிலுள்ள 'இயேசு அழைக்கிறார்' அமைப்பின் தலைமை அலுவலகம், பால் தினகரனின் வீடு, கோவை காருண்யா பல்கலைக்கழகம் உள்ளிட்ட 28 இடங்களில் இந்த சோதனை நடந்தது. 200-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
'இயேசு அழைக்கிறார்' அமைப்புக்கு வந்துள்ள வெளிநாட்டு பண உதவிகள் மற்றும் வரி ஏய்ப்பு தொடர்பாக வந்த புகார்களின் பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டது. பால் தினகரனின் பிரசாரக் கூட்டங்களுக்கு வரும் வருமானத்தை கணக்கில் காட்டாமல் இந்தியா மற்றும் வெளிநாட்டில் வைத்திருப்பதும், இந்தியாவில் பெறப்பட்ட நிதியை இந்தியாவிலேயே கணக்கில் காட்டாமல் முதலீடு செய்துள்ளதும், வெளிநாட்டில் பெறப்பட்ட நிதியை வெளிநாட்டிலேயே பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்திருப்பதும் வருமான வரித் துறை சோதனையில் தெரியவந்துள்ளது.
மூன்று நாள் சோதனையின்போது கிடைத்த ஆவணங்களை ஆய்வு செய்ததில், கணக்கில் காட்டாமல் பல்வேறு நிறுவனங்களில் ரூ.118 கோடி முதலீடுகள் செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.
கோவை காருண்யா பல்கலைக்கழக விருந்தினர் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த 4.7 கிலோ தங்கத்தையும் அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். இதைத் தொடர்ந்து, பால் தினகரனுக்கு வருமான வரித் துறை சார்பில் சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது கனடாவில் இருக்கும் அவர், அடுத்த வாரம் சென்னை வருவதாக தெரியவந்துள்ளது. அவர் சென்னை வந்ததும் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மனில் வருமான வரித் துறை குறிப்பிட்டுள்ளது" என்று அந்த செய்தி கூறுகிறது.
ஜம்முவில் சர்வதேச எல்லை பகுதியில் 150 மீட்டர் நீள சுரங்க பாதை கண்டுபிடிப்பு

பட மூலாதாரம், Twitter
ஜம்மு மற்றும் காஷ்மீரில் கத்துவா நகரில் பன்சார் என்ற இடத்தில் அமைந்திருக்கும் சர்வதேச எல்லை பகுதியில் எல்லை பாதுகாப்பு படையினர் 150 மீட்டர் நீளம் மற்றும் 30 அடி ஆழம் கொண்ட சுரங்க பாதை ஒன்றை கண்டுபிடித்து உள்ளதாக தினத்தந்தியில் செய்தி வெளியாகியுள்ளது.
கடந்த 2020ம் ஆண்டு ஜூனில் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஹெக்சாகாப்டர் ஒன்று இதே பகுதியில் எல்லை பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் இருந்ததும் தெரிய வந்தது.
கடந்த 2019ம் ஆண்டு இந்த பகுதி வழியே கும்பல் ஒன்று இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றது. எல்லை பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தி ஊடுருவல் முயற்சியை முறியடித்தனர்.
இந்த சுரங்க பாதையானது சம்பா, ஹிராநகர் மற்றும் கத்துவா பகுதியில் கடந்த 6 மாதங்களில் கண்டுபிடிக்கப்பட்ட 4வது சுரங்க பாதையாகும். இதே போன்று ஜம்மு நகரில் மொத்தத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 10வது சுரங்க பாதை என எல்லை பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்குள் தவறுதலாக நுழைந்து கைதானவா்: 12 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா திரும்பினாா்

பட மூலாதாரம், Getty Images
கடந்த 2008-ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்குள் தவறுதலாக நுழைந்ததால் கைது செய்யப்பட்டு, அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்ட குஜராத்தைச் சோ்ந்த நபா் இந்தியா திரும்பினாா் என தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய ராணுவ அதிகாரிகள் கூறியதாவது:
குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டம் நானா தினாரா கிராமத்தைச் சோ்ந்தவா் இஸ்மாயில் சாமா (60). இவா் கடந்த 2008-ஆம் ஆண்டு கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்த போது தவறுதலாக பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்தாா். இதையடுத்து அந்நாட்டு ராணுவம் அவரை உளவாளி எனக் கருதி கைது செய்து, சிறையில் அடைத்தது.
அவரை விடுவிக்கும்படி அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் இஸ்லாமாபாத் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. அதனை விசாரித்த நீதிமன்றம் இஸ்மாயிலை விடுவிக்கும்படி உத்தரவிட்டது. இதையடுத்து அவா் இரு தினங்களுக்கு முன்பாக விடுவிக்கப்பட்டாா்.
அவா் வாகா - அட்டாரி எல்லை வழியாக வெள்ளிக்கிழமை பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் வந்தடைந்தாா். அவரை வரவேற்க அவரின் குடும்ப உறுப்பினா்கள் சிலா் வந்திருந்தனா். அவரிடம் மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அந்த நடவடிக்கைகள் முடிந்த பின்னா், அவா் குடும்பத்தினருடன் அனுப்பிவைக்கப்படுவாா் என ராணுவ தரப்பில் தெரிவித்திருப்பதாக, செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
- நிஜமாகும் திரைப்பட கதை: ஒருநாள் முதல்வராக இன்று பதவியேற்கிறார் 19 வயது மாணவி
- டீ கடையில் ராகுல் காந்தி: புது பாணி பிரசாரம் காங்கிரசுக்கு தேர்தலில் பலன் தருமா?
- லாலுபிரசாத் யாதவ் உடல் நிலையில் சிக்கல்: ஏர் ஆம்புலன்ஸ் மூலம் டெல்லி கொண்டுவரப்பட்டார்
- மனித உரிமை மீறலை விசாரிக்க இலங்கை ஜனாதிபதி நியமித்த குழு: தமிழர்கள் கருத்து என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












