ரஹி சர்னோபட் : ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய துப்பாக்கி சுடும் வீராங்கனை

ரஹி சர்னோபட் மகாராஷ்டிரத்தின் கோல்ஹாபூரைச் சேர்ந்தவர். சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டிகளில் பல சாதனைகளைப் படைத்து தலைப்புச் செய்தியாகிக் கொண்டிருக்கிறார்.
கடந்த 2019-ம் ஆண்டு ஜெர்மனி முனிச் நகரத்தில், சர்வதேச துப்பாக்கி சுடும் சம்மேளனம் நடத்திய உலக துப்பாக்கி சுடும் போட்டியில், 25 மீட்டர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றதால், 2021-ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்கு தேர்வு செய்யப்பட்டார். இவர் துப்பாக்கி சுடுதல் விளையாட்டில் சாதித்தமைக்காக, மத்திய அரசு இவருக்கு அர்ஜுனா விருது வழங்கி கெளரவித்தது.
பற்றிய நெருப்பொன்று...
ரஹி சர்னோபட், கோல்ஹாபூரில் பள்ளி நாட்களில் தேசிய மாணவர் படையில் இருந்த போது, அவருக்கு துப்பாக்கிகள் அறிமுகமாயின. நான் நன்றாக துப்பாக்கி சுடுவேன், துப்பாக்கியை ஏந்தி நிற்கும் போது ஏதோ ஒரு வகையான பெருமித உணர்வு ஏற்பட்டதாக கூறுகிறார்.
ஆனால் உண்மையில், துப்பாக்கிச் சுடுதல் மீது ஆர்வம் ஏற்பட்டது, தன் சக பள்ளி மாணவியான தேஜஸ்வினி சாவந்த் 2006-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற போதுதான் எனக் கூறுகிறார் ரஹி.
தேஜஸ்வினி பதக்கம் வென்றது அவ்விளையாட்டு குறித்து மேலதிகமாகத் தெரிந்து கொள்ளத் தூண்டியது என்கிறார். அதன் பிறகு தான், தன் ஊரில் துப்பாக்கி சுடுதல் தொடர்பாக என்ன மாதிரியான வசதிகள் இருக்கின்றன என்பதைத் தெரிந்து கொள்ளத் தொடங்கினார்.
எதிர்கொண்ட சவால்கள்
கோல்ஹாபூரில் துப்பாக்கிச் சுடுதலுக்குத் தேவையான உட்கட்டமைப்புகளோ தீவிர பயிற்சியை மேற்கொள்ளப் போதுமான வசதிகளோ இல்லை என்பதை விரைவில் உணர்ந்தார் ரஹி சர்னோபட். இதனால் ஏற்பட்ட வெறுப்புணர்வை, தன் பயிற்றுநரிடமும் பகிர்ந்து கொண்டதாகக் கூறுகிறார் ரஹி. ஆனால் ரஹியின் பயிற்றுநரோ, இருக்கும் வசதி குறைபாடுகளை நினைத்து வருத்தப்படாமல், திறனை மேம்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தினாராம்.
ரஹி சர்னோபட்டின் பெற்றோர்கள், அவருக்கு முழுமையாக ஒத்துழைத்தார்கள். இந்த தொடக்க கால வெறுப்புணர்வு, அவரின் கனவைக் கலைத்துவிடக் கூடாது என்பதை உறுதி செய்தார்கள். கோல்ஹாபூரைவிட கூடுதல் வசதிகளைக் கொண்ட மும்பையில், ரஹி அதிக காலத்தை செலவிடத் தொடங்கினார்.
இருப்பினும் பிரச்சனைகள் தொடர்ந்தன. பயிற்சிக்குத் தேவையான துப்பாக்கிகள் மற்றும் குண்டுகளை இறக்குமதி செய்வதில் சிக்கல்கள் ஏற்பட்டன. இருப்பினும் தன் நம்பிக்கையைக் கைவிடவில்லை அவர். அவரின் கடின உழைப்பு பல்வேறு தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் பதக்கங்களாகப் பலன் கொடுக்கத் தொடங்கியது.
நெத்தியடி

உள்நாட்டுப் போட்டிகளில் ரஹி சர்னோபட்டின் அசாத்திய செயல்பாட்டைக் கண்டவர்கள், அவரை சர்வதேசப் போட்டிகளில், இந்தியா சார்பாக கலந்து கொள்ளத் தேர்வு செய்தார்கள். 2008-ம் ஆண்டு புனேவில் இளையோர் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இவர் பெற்ற தங்கப் பதக்கம் இவரின் தொடக்க கால முக்கிய வெற்றிகளில் ஒன்று. அதனைத் தொடர்ந்து, ஒலிம்பிக் போட்டிகள், காமன்வெல்த் போட்டிகள், ஆசியப் போட்டிகள், சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் சம்மேளனத்தின் போட்டிகள் என பல போட்டிகளிலும் இந்தியா சார்பாக கலந்து கொள்ளத் தொடங்கினார்.
ஒரு விளையாட்டு வீராங்கணையாக, ரஹி சில கடினமான சூழல்களை எதிர்கொண்டிருக்கிறார். ஆனால் ஒவ்வொரு முறையும் வலிமையாக அதிலிருந்து மீண்டு வந்திருக்கிறார். 2015-ம் ஆண்டு ஏற்பட்ட ஒரு காயம் அவரின் முன்னேற்றத்தில் பெருந்தடையை ஏற்படுத்திய போது விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிடலாமா என்று கூட ஆலோசித்தார்.
அந்தச் சிந்தனைகளை எல்லாம் ஒழித்துக் கட்டிவிட்டு, 2018-ம் ஆண்டு ஜகார்தாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் பெற்று மீண்டும் தன் வருகையைப் பதிவு செய்தார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் தனியாக தங்கம் வென்ற முதல் இந்தியப் பெண் துப்பாக்கிச் சுடும் வீராங்கனை என்கிற பெருமையையும் பெற்றார்.
அதனைத் தொடர்ந்து 2019-ம் ஆண்டில், சர்வதேச துப்பாக்கி சுடுதல் சம்மேளனம் நடத்திய உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்று டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை உறுதி செய்தார்.
2018-ம் ஆண்டு மத்திய அரசு, அவருக்கு அர்ஜுனா விருது வழங்கி கெளரவித்தது. இந்த விருதை வாங்குவது அவர் வாழ்நாளின் மகிழ்ச்சியான தருணங்களின் ஒன்று எனக் குறிப்பிடுகிறார்.
தற்போது ரஹி சர்னோபட், ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல வேண்டும் என இலக்கு வைத்திருக்கிறார். அடுத்து ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதைப் பெறுவதற்கான ஒரு முக்கிய போட்டியாளராக தான் இருக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் ரஹி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












